சாதிப் படம் எடுக்கிறேனா? இயக்குநர் முத்தையா பளிச்



என்னவோ தெரியவில்லை... இயக்குநர் முத்தையாவை இணையத்தில் துவைத்து எடுக்கிறார்கள். ‘தமிழ் சினிமாவில் சாதியைத் தூக்கிப் பிடிக்கிறார், சொந்த சாதி அபிமானத்தை எல்லோர் மீதும் திணிக்கிறார்...’ என்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள். இயக்குநர் முத்தையாவிடம் கேட்டால் கொஞ்சம் ஆழ்ந்து யோசித்து விட்டு தன் நியாயத்தை எடுத்து வைக்கிறார்.

‘‘நம்ப மாட்டீங்க. நான் ஸ்ரீவில்லிபுத்தூரில் முருகன் டீ கடைக்காரர் பையன்தான். வாழ்க்கையில் அடித்தட்டு மக்களை ரத்தமும் சதையுமா பார்த்தவன். ஒரு வேளை சாப்பாட்டுல இருக்கிற உழைப்போட அருமை பெருமை எனக்குத் தெரியும். சக மனுஷங்க பாடு தெரியும். ஏழு வயதிலிருந்தே சினிமா கிறுக்குத்தான். எங்க ஊர்ல தீப்பெட்டிக்கு மேல் சீட்டு, கீழ் சீட்டு ஒட்டுவாங்க. தெருவாசலில் வரிசையாக பொம்பிளைங்க இருந்துகிட்டு, சீட்டு ஒட்டிக்கிட்டு கதை சொல்ல ஆரம்பிச்சா, அப்படியே அதுக்கு றெக்க முளைச்சு போய்க்கிட்டே இருக்கும்.

ஒரு பலாப்பழத்தை வெட்டி கூறு போட்டா அது கிட்டத்தட்ட 50 வீட்டுக்கு கை மாறும். ஐஸ்காரன் வந்தால், மொத்த ஐஸும் காலியாகி பாட்டுப்பாடி, மடி கனத்து, மணியடிச்சுக்கிட்டு போவான். சித்தி பக்கத்தில் இருந்து கேட்ட கதை அநேகம். ‘உழைக்கும் கரங்கள்’னு ஆரம்பிச்சால் எம்ஜிஆர் அழகு பத்தியும், லதா பவுசு பத்தியும் கதை கதையா கேட்டு இருக்கோம். எனக்கு படிப்பு கட்ட கடேசி. சினிமாதான் முதல்ல. இதுக்கு நடுவில ஹாக்கி பிளேயர். வெயிட் லிப்டிங்கில் கேட்டகிரி 1 வாங்கியிருக்கேன். அதனாலதான் உடம்பு இன்னும் கட்டுவிடாம இருக்கு.

அண்ணே, சினிமாவுல நம்ம ரூட்டே தனிண்ணே. எனக்கு இறுக்கி முறுக்கிட்டு நிக்குற ரெண்டு மூணு குடும்பங்கள் வேணும். ஆத்தா, அப்பத்தா, சித்தப்பு, அண்ணே, அக்கா, தம்பி, மச்சான், மதினின்னு ஒரு கும்பலே ஸ்பாட்ல நின்னாத்தான் நமக்கு வேலையே ஓடும். ஜீன்ஸ் பையனுக்கும், மிடி பொண்ணுக்கும் காதல் கதை சொல்லுங்கன்னா நான் அந்த இடத்திலேயிருந்து தப்பிச்சு ஓடி வந்துருவேன்...’’ வெள்ளந்தியாக பேசுகிறார் முத்தையா.
ஆனால், நீங்கள் சாதியை மறுபடியும் உயிர்ப்பிக்கிறீர்கள் என்கிறார்கள்...

அதுதான் எனக்குப் புரியலை. காரணமும் புரிபடலை. இந்த சமூகம்தான் ஆண்டாண்டு காலமாக சாதியை கட்டிப்பிடிச்சுக்கிட்டுத் திரியுது. நான் ஒரு கதை சொல்றேன். எனக்குத் தெரிஞ்ச வாழ்க்கையை எடுத்துக்கிறேன். கண்டு, கேட்டதை, உணர்ந்ததை சொல்றேன். அதைத்தான் எனக்கு முன்னாடியும் ஆண்டாண்டு காலமாக சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நான் என்ன புதுக்கோலமா போடுறேன்! வச்ச கோலத்தை கொஞ்சம் புள்ளி மாத்தி புதுக்கோலம் மாதிரி காட்டுறேன்.

எனக்கு முன்னாடி இப்படி படம் எடுத்த அத்தனை பேரையும் விட்டுபுட்டு என்னை மட்டும் ஏன் கார்னர் பண்றாங்கன்னு தெரியலை. இது என்ன அரசியலோ சத்தியமாக எனக்கு புரியலை. ஐந்து வருஷமா இப்படிதான் நான் படம் செய்வது மாதிரியும், முந்தி எதுவும் நடக்கலைங்கிற மாதிரியும் பேசிக்கிறாங்க. எத்தனை படங்கள் சாதிகளின் பின்புலத்தில் வந்திருக்கு? எல்லோருக்கும் ஞாபகம் இல்லையான்னு தெரியலை.
 
நான் எடுக்கிற படத்தில் நல்லவனையும், கெட்டவனையும் சமூகத்திடம் இருந்து எடுத்துக்கிறேன். கதை சொல்ல ஓர் இடம் வேண்டாமா, மக்க மனுஷங்க வேணாமா... எல்லாரையும் என் பக்கத்து ஆட்களா காட்டிட்டா பிரச்னை இல்லை. கெட்டவன்னு வேற யாரையும் சொல்லிட்டா சண்டைக்கு வந்து நிப்பாங்கன்னு பயமா இருக்கு. எனக்கு சாதியின் மீது பெருமை கிடையாது. அவங்க அவங்க நினைப்புதான் கோளாறாக இருக்குமோன்னு தோணுது.

நீங்கள் படங்களில் சமூகத் தலைவரின் சிலைகளைக் காட்டுவது காரணமா இருக்குமா?

‘குட்டிப் புலி’, ‘கொம்பன்’, ‘கொடி வீரன்’, ‘மருது’ன்னு மக்க மனுஷிகளைத்தானே காட்டினேன்? சிலைகளைக் காட்டலையே. பார்க்கிற மனுஷன் சாதியை எல்லாம் கேள்விக்குறியாக்குகிற புதுப்பழக்கம் எப்படி இங்கே வந்துச்சு... நாகரீகமும், படிப்பும் பெருகினா இதெல்லாம் மறையும்னா, இப்போ இன்னும் சாதிப்பித்து தலைதூக்குதே.

இப்ப ‘நெடுநல்வாடை’ பாத்திங்களா, ராசு மதுரவன் அண்ணன் படமெல்லாம் ஒரு பார்வை தெரியுமே, சிவாஜி சார் நடிச்சது எல்லாம் கண்ணுக்குப் படலையா! இந்த சாதியை கொண்டு வந்தது கடைசியில் இந்த முத்தையாதானா... வில்லிபுத்தூர்ல டீ வித்திட்டு, சென்னைக்கு வந்தது சாதி வளர்க்கவா? சினிமாவைப் பிடிச்சுப் போய்த்தானே வந்தேன். எனக்கு எதிரா ஏன் இப்படி கிளம்பியிருக்காங்கன்னு தெரியலை...
‘தேவராட்டத்’தில் கோரிப்பாளையத்தில் ஒரு கொலை நடக்கிறதா காமிச்சேன். அதுல தேவர் சிலையை காமிக்காமல் ஜம்ப் ஆக முடியுமா! முத்தையா எது செய்தாலும் தப்பா... சொல்லுங்க!

இனியென்ன செய்வீங்க..?

அடுத்து வர்ற புரடியூசர்கிட்டே கொஞ்சம் சிட்டி கதை எடுத்துக்கிறேன்னு சொல்லணும். வேற வழி! நம்மளை விடமாட்டாங்க போல. ஆனால், முத்தையான்னா நல்ல கிராமத்துக்கதை சொல்வான்னு எல்லா ஹீரோக்களுக்கும் தெரியுது. ‘சார், இப்படி ஒரு கதை சொல்லட்டுமா’ன்னு வேற கதை சொன்னா ‘‘கொம்பன்’ மாதிரி ஒரு கதை கொண்டு வா முத்து’ன்னு தட்டிக் கொடுத்து அனுப்புறாங்க. என்ன செய்யச் சொல்றீங்க..! ஒரு போலீஸ் கதையை எடுத்துடலாமான்னு யோசிக்கிறேன்!

உங்க ஹீரோக்கள் மூட்டை தூக்குறாங்க, ஆடு வெட்டறாங்க, புதுப்புது தொழில் செய்றாங்க...

அய்யா, சுத்திமுத்திப் பார்த்துத்தான் நான் படம் எடுக்கிறேன். உலகப்படம்ங்கிற சங்கதியெல்லாம் எனக்குத் தெரியாது. எங்க அப்பன் டீ கடை வைச்சிருந்தாரு. என் சொந்தக்காரங்க இப்ப பூ கடை வச்சிருக்காங்க. மதுரை பக்கம் பார்த்திங்கன்னா இப்ப நிறையப்பேர் கக்கூஸ் கட்டிட்டு உட்கார்ந்திருவாங்க. கொஞ்சம் சொல்ல ‘சீப்’பாகத்தான் இருக்கும்.

சைக்கிள் பார்க்கிங் வச்சிருப்பாங்க. காசு பின்னும். கக்கூஸில் சரியான வருமானம். ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் வந்தே ஆகணும், போயே ஆகணும். திருவிழா சமயத்தில் 5, 10 ரூபாய் கட்டணம் விழும். காசு அள்ளும். ஊர்ல ‘பீயில கிடைக்கிற காசும், பிச்சையெடுக்கிற காசும் நாறாது’ன்னு சொல்வாங்க. உழைக்க வெட்கப்படாமல் இங்கே உயிரை வைச்சுக்கிட்டுத் திரியறாங்க. இதுல சாதி எங்கே வந்துச்சு அண்ணே!            

நா.கதிர்வேலன்