வனத்துறை சார்ந்த படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்!



ஒருவழியாக +2 பொதுத் தேர்வு முடிந்துவிட்டது. அடுத்ததாக என்ன படிக்கலாம்? என்பதே மாணவர்கள் முன்னிருக்கும் மில்லியன் டாலர் கேள்வி. ஏனெனில், தேர்ந்தெடுக்கப்போகிற உயர்கல்விப் படிப்புகள்தான் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் காரணியாக அமையும். அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கே கல்வி என்பது மாறி, வேலைவாய்ப்பு பெறவும் வளமான எதிர்காலத்தை உருவாக்கவும் வழிவகை செய்யக்கூடியதாக ஆகிவிட்டது கல்வி. அதனால் உயர்கல்வி என்று வரும்போது மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் எதிர்காலத்தை மனதில் கொண்டு என்ன படிக்கலாம் என்ற தேடலில் கவனம் செலுத்துகிறார்கள்.

பொதுவாக மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்குத் தரும் முக்கியத் துவத்தை மாணவர்கள் மற்ற படிப்புகளுக்குக் கொடுப்பதில்லை.  தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளைக் கடந்து தொழில்வாய்ப்பளிக்கும் வெவ்வேறு படிப்புகளில் சேர்ந்தும் வாழ்வைச் செம்மையாக்கலாம். அப்படி ஒரு துறைதான் இயற்கை சார்ந்த வனத்துறை (Forestry) படிப்புகள்.
 
மனிதனுக்கும் வனத்துக்குமான உறவு மிகவும் தொன்மையானது. காடுகளின் இருப்பே மனிதனின் இருப்பை உறுதிசெய்கிறது என்ற கூற்று அறிவியல்பூர்வமாக ஆழமான அர்த்தத்தை வழங்கக்கூடியது. அதன் பொருட்டே வனத்துறை சார்ந்த படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. உலகெங்கிலும் வனத்துறை சார்ந்த பல்வேறு இளங்கலை, முதுகலைப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

உலகின் இன்றைய முக்கியப் பிரச்னைகளான புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றின் காரண காரியங்களை விளக்கி தீர்வைக் கோருகிறது வனத்துறை படிப்புகள். மேற்கூறிய பிரச்னைகளால் பாதிப்படையும் உயிர்ச்சூழல் மண்டலத்தைச் சமநிலைப் படுத்துவதையும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதையும், காடுகளின் அவசியத்தையும் போதிக்கிறது இப்படிப்புகள்.

Plantation Forestry, Social Forestry, Agro - Forestry, Ecology, Bio-Diversity, Tree Improvement, Forest Hydrology, Wood Science and Technology, Forest Goods and Service, Seed Technology, Forest Geo Informatics போன்ற துறைகளை உள்ளடக்கி வனத்துறைப் படிப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வழங்கப்படும் படிப்புகள்: சர்வதேச அளவில் பல முன்னணிக் கல்வி நிறுவனங்கள் வனத்துறை சார்ந்த பல்வேறு இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வழங்கிவருகின்றன.

இந்தியாவின் பல அரசு மற்றும் தனியார் கல்விநிறுவனங்கள், வேளாண் பல்கலைக்கழகங்கள் B.Sc. Forestry மற்றும் M.Sc. Forestry படிப்புகளை வழங்கிவருகின்றன. வனத்துறை சார்ந்த கிளைப் படிப்புகளான Horticulture, Wood Science and Technology, Forest Biology, Forest Genetic Resources போன்ற படிப்புகளும் வழங்கப்பட்டுவருகின்றன. மேலும் வனத்துறை நிர்வாகம் சார்ந்த ஃபாரஸ்ட் மேனேஜ்மென்ட் முதுகலை டிப்ளமோ படிப்புகளும் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளும் மத்திய, மாநில அரசுகளின் கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகின்றன.

கல்வித் தகுதி: வனத்துறை இளங்கலைப் படிப்புகளைத் தேர்ந்தெடுக்க விரும்பும் மாணவர்கள் +2-வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் போன்ற அறிவியல் பாடங்களை விருப்பப் பாடங்களாகத் தேர்ந்தெடுத்துப் படித்திருத்தல் வேண்டும். முதுகலை படிக்க விரும்புபவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல், வேளாண்மை, தோட்டக்கலை போன்ற துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் அவசியம்.

வேளாண் ஆராய்ச்சிக்கான இந்தியன் கவுன்சிலால் தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளின் அடிப்படையில் அரசுப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுவருகிறது. மற்ற கல்வி நிறுவனங்களில் நேர்முகத்தேர்வு மற்றும் கல்லூரிகளுக்கான பிரத்யேக நுழைவுத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

வேலைவாய்ப்புகள்: ஃபாரஸ்ட்ரி படித்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் எனப் பல தளங்களில் வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன. யு.பி.எஸ்.சி. நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இந்தியன் ஃபாரஸ்ட் சர்வீஸ், ஃபாரஸ்ட் கார்டு மற்றும் ஃபாரஸ்ட் ரேஞ்ச் ஆபீசர் என அரசுத் துறைகளில் ஃபாரஸ்ட்ரி படித்தவர்களுக்கான தேவை அதிகரித்துவருகிறது.

அரசு வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் தோட்டக்கலைக் கல்விநிறுவனங்களில் பேராசிரியர்கள் எனக் கல்வித்துறையிலும், மத்திய, மாநில அரசுகளின் ஆராய்ச்சி மையங்களிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன. Paper Manufacturing Company, Microfinance Organi-zations, Conservation Bodies, Packed Food Manufacturing Company, Pharmaceutical Company எனத் தனியார் நிறுவனங்களிலும் ஃபாரஸ்ட்ரி படித்தவர்களின் தேவை அதிகமாக உள்ளது. மொத்தத்தில் அறிவியல், கல்வி, சூழலியல், நிர்வாகம் போன்ற முதன்மைத் தளங்களில் ஃபாரஸ்ட்ரி  படித்தவர்களின் தேவை வருங்காலத்தில் அதிகமாகும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள்

*Indian Institute of Forest Management, Bhopal.
*Uttarkhand University of Horticulture & Forestry.
*College of Forestry, Kerala.
*Tamilnadu   Agricultural  University, Coimbatore.
*University of Agricultural Science, Dharwad.
*Haryana Agricultural University.
*Orissa University of Agriculture & Technology, Bhubaneshwar.
*Punjab Agricultural University, Ludhiana.

இவை மட்டுமல்ல, பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்களிலும் வனத்துறைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. மத்திய, மாநில அரசுகளின் வனத்துறைப் பணிகளில் சேர்வதற்கான வாய்ப்புகளை இப்படிப்புகள் நிச்சயம் வழங்கும்.

வெங்கட் குருசாமி