இதுதாம்பா FASHION



என்னயா இந்தப் பொண்ணு இப்படி டிரெஸ் பண்ணியிருக்கு..? அட டிரெஸ் கூட ஓகே. அதென்ன முள்ளம்பன்றி படுத்த மாதிரி முடி..?’ சென்ற வாரம் முழுக்க பிரியங்கா சோப்ராவின் லேட்டஸ்ட் புகைப்படம் குறித்துதான் இணையம் முழுக்கவே இப்படி நக்கலும் நையாண்டியும் பறந்தன.

ஆனால், அந்த ஃபேஷன் ஷோவின் கான்செப்டே இப்படிப்பட்ட நக்கலுக்குதான் என்கிறது Met Gala குழு!‘காலா காஸ்டியூம் இன்ஸ்டிடியூட்’ ஒவ்வொரு வருடமும் சிவப்பு கம்பள சந்திப்பு ஒன்று நடத்துவார்கள். அதில் பிரபல காஸ்டியூம் டிசைனர்கள் பங்கேற்று தங்கள் திறமையைக் காட்டுவார்கள். இதில் வரும் பணத்தை நியூயார்க் நகரின் உதவித்தொகை பெறும் மெட்ரொபோலிடன் ஆடைகள் வடிவமைப்பு இன்ஸ்டிடியூட்டின் வளர்ச்சிக்கு வழங்குவார்கள்.

முக்கியமான விஷயம், ஆண்டுதோறும் இந்த சிவப்பு கம்பளத்துக்கு தனி தீம் கொடுப்பார்கள் என்பதுதான். ஸோ, இதை அடிப்படையாக வைத்தே டிசைனர்கள் வேலை செய்ய வேண்டும்.அப்படி இந்த வருடம் கொடுக்கப்பட்ட தீம், செயற்கை மற்றும் மிகைப்படுத்தப்பட்ட காதல் (love of the unnatural: of artifice and exaggeration)! எல்லாமே அதிக செயற்கையாக, காண்பவரை வியப்பில் ஆழ்த்தி மிரட்ட வேண்டும்.

இதனால்தான் இதில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா இப்படி முள்ளம்பன்றி தலைமுடியுடன் போஸ் கொடுத்தார்! பிரியங்கா மட்டுமல்ல, இதே ஷோவில் பங்கேற்ற லேடி காகா ஒரு பெரிய மூட்டை போல் உடையணிந்து ஒவ்வொரு உடையாக பிரித்து கடைசியில் செக்ஸியாக நின்றார்! சர்ச்சை நாயகி கிம் கர்தாசியன் உடல் முழுக்க உடையே இல்லாமல் தண்ணீர் சொட்டச் சொட்ட வந்து நின்றால் எப்படி இருக்கும்... என்ற பாணியில் உடை அணிந்து பார்ப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தினார்!

செலின் டயான் 52 மாஸ்டர் பீட்கள், 18 பேனல்களாக உருவாக்கப்பட்ட கவுனை அணிந்திருந்தார். கார்டி பி 30 ஆயிரம் இறகுகளால் பொருத்தப்பட்ட அரக்கு நிற உடையில் வந்திருந்தார். இந்த உடையை வடிவமைக்க 35 டிசைனர்கள் இணைந்து மூவாயிரம் மணி நேரம்உழைத்தார்களாம்!இந்த ஷோவில் பில்லி போர்டர் அணிந்து வந்த கோல்டன் பறவை லுக் முதலிடமும், லேடி காகாவின் மூட்டை போன்ற உடை இரண்டாமிடமும் பிடித்திருக்கிறது! ஆத்தி... இங்கயும் இப்படி வந்துடுமா?!   

ஷாலினி நியூட்டன்