ஃபானி புயல் - ஒடிசா பாஸ்... தமிழகம் ஃபெயில்!‘‘என் வாழ்நாள் லட்சியமாக ஒடிசா மாநிலம் முழுவதும் சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆசைப்பட்டேன். நினைத்தபடியே அந்தப் பயணத்திற்கான அடித்தளம் நிறைவேறியது. அதனால், மாநிலம் முழுவதும் சைக்கிளில் ஒடிசாவைச் சுற்றி வருவேன். பயணம் எனக்கு ஒரு படிப்பினை கற்றுக்கொடுத்தது.

என் பயணத்தின்போது சில மனிதர்களிடம் இருந்த மனிதம் எனக்குள் நம்பிக்கையையும் மனஉறுதியையும் தந்துள்ளது...’’ என்று ஏகாந்தமான மனநிலையில் பேசினார் குணாராம் முர்மு என்ற இளைஞர். புவனேஸ்வரத்தில் உள்ள கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் இவர், தனது காலின் ஒரு பகுதியை இழந்த மாற்றுத்திறனாளி.

ஒடிசாவில் சமீபத்தில் ஏற்பட்ட ஃபானி புயலால், தான் படித்த கல்லூரியில் இருந்து 300 கி.மீ. தூரத்தில் உள்ள மயூர்பன்ஜ் மாவட்டத்தின் மதன்மோகன்பூருக்கு சைக்கிளில் இரவுபகலாக பயணித்தார். தகவல் தொடர்பு சாதனங்கள் முடக்கம்; ஏடிம் வேலை செய்யவில்லை; கையில் வெறும் 20 ரூபாய் மட்டுமே இருப்பு; நண்பர்கள் கோடை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர்.

குணாராம் முர்மின் தந்தை 2012ல் இறந்துவிட்ட நிலையில் கிராமத்தில் புயலில் சிக்கியிருக்கும் தாயின், சகோதரியின் நிலையை நினைத்து மனம் ெவதும்பி சைக்கிளின் பெடல்களை சிரமப்பட்டு மிதித்தார். கண்ணுக்கு எட்டிய தூரம் புயலின் கோரத்தாண்டவத்தால் பாதையும் இல்லை; மக்களும் இல்லை; மரங்களும், மின்கம்பங்களும், வீடுகளும், கூரைகளும், அடுக்குமாடி குடியிருப்புகளும் சரிந்து கிடந்தன.

வழியில் ஒருவர் அளித்த ஒரு பிளேட் உணவும், வனப்பகுதியில் படுப்பதற்கு இடமளித்த ஆரம்ப சுகாதார நிலையமும் குணாராம் முர்முவுக்குள் மனிதத்தை அடையாளப்படுத்தின.ஒருவழியாக புயலின் தாக்குதலுக்குப் பின் சொந்த கிராமத்திற்கு சென்றடைந்த குணாராம், வீட்டை இழந்து நிர்க்கதியாக நின்ற தன் தாயையும், சகோதரியையும் பார்த்து கண்கலங்கினார். ‘புயலில் இருந்து எப்படி உயிர் தப்பினீர்கள்?’ என்று அவரது பார்வை கேட்டது; முகாமில் தங்கியிருந்ததை தாய் தன் மவுன மொழியில் கூறினார்.

இப்படி, எத்தனையோ உயிர்கள் ஒடிசாவில் ஏற்பட்ட புயலில் உயிர் தப்பின. இதற்கெல்லாம் என்ன காரணம், எப்படி இத்தனை லட்சம் மக்கள் காப்பாற்றப்பட்டனர்... இதற்குப் பின்னால் யாரெல்லாம் இருந்தார்கள்..?  

இந்திய மாநிலங்களில் கடந்த நூறாண்டுகளில் சுமார் நூறு புயல்களால் தாக்குதலுக்கு ஆளான மாநிலம் ஒடிசா. ஆனால், இன்றோ ஃபானி புயல் விஷயத்தில் அம்மாநில அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஐநா முதல் உலகமே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறது.
1999 அக்டோபர் 29ல் ஜகத்சிங்பூரைத் தாக்கிய கடும் புயலுக்கு 9,688 பேர் உயிரிழந்தனர். ஆனால், ஃபானி புயல் தாக்கியதில் உயிரிழப்புகள் சுமார் 64
என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இதற்கு காரணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு சுமார் 11 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டதுதான்.‘‘ஒவ்வோர் உயிரும் முக்கியமானது...’’ என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மீட்பு மற்றும் நிவாரணக் குழுவுக்கு அறிவுறுத்தி இருந்தார். இழப்புகளுக்கு நிவாரண நிதியாக எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கினாலும், கடந்த சில ஆண்டுகளில் ஹுட்ஹுட், பைலின், டிட்லி, தானே, வர்தா, ஒக்கி, கஜா போன்ற புயல்களிலிருந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர், அனுபவ ரீதியாக அறிந்துகொண்ட பாடங்கள், ஃபானி புயலை அதிக உயிரிழப்பில்லாமல் எதிர்கொள்ள உதவின.

தவிர தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை, இந்திய தேசிய கடல்சார் தகவல்கள் மையம், தேசிய பேரிடர் உணர்வு மையம், கட்டட கட்டுமானப் பொருட்கள் மற்றும் கட்டுமான தொழில்நுட்பக் குழு, இந்திய தரக்கட்டுப்பாட்டுக் குழுமம், இந்திய தொழில்நுட்பக் கழகம், தேசிய கடல் ஆராய்ச்சி நிலையம், அரசுசாரா அமைப்புகள், மாநில மற்றும் மாவட்ட அளவில் செயல்படும் குழுக்களின் ஒருங்கிணைப்பும், மக்களின் ஒத்துழைப்புமே காரணம்.

இருந்தும், 11 மாவட்டங்களின் ஒட்டுமொத்த கட்டமைப்பே சிதைந்து நிர்மூலமாக இருப்பதால், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யக்கோரி மக்கள் இன்று வீதிக்கு வந்து பேராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப புயலின் போது காட்டிய வேகத்தைப் போல், மக்களுக்கான தேவைகளை போர்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. ஒடிசா மக்களின் நம்பிக்கை புதியதாகத்  துளிர்க்கட்டும்...!     

இது தமிழகத்தின் நிலை...

சமீபத்தில் வங்கக் கடலில் உருவாகி ஒடிசாவின் பூரி கரையைக் கடந்த ஃபானி புயலால், மணிக்கு 245 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாகக் கூறப்படுகிறது. முன்கூட்டியே மணிக்கு 200 - 300 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், 245 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி இருந்தாலும், உயிரிழப்புகள் மிகக் குறைந்தளவே இருந்தன.

இதே தமிழகத்தை தாக்கிய புயல்களின் காற்றின் வேகத்தை கணக்கிட்டால், அதிகபட்சமாக ஒக்கி புயல் மணிக்கு 185 கி.மீ. வேகத்தில் கரையைக்
கடந்தது. ஃபானி புயலோடு ஒப்பிட்டால், மணிக்கு 60 கி.மீ. காற்றின் வேகம் குறைவுதான். புயல் பாதிப்பு குறித்த முன்னேற்பாடுகளை சரியாகக் கையாளாததால் தமிழகத்தில் உயிரிழப்புகள் அதிகமாக நடந்துள்ளன என்பது கவலைக்குரிய விஷயமே. ஒடிசா அளவிற்கு புயலுக்கான பாடங்களை கற்றுக் கொள்ளாமல் இருப்பது, அரசின் மடமை என்றே கூறலாம்.

1994ல் வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த புயலுக்கு பெயர் வைக்கவில்லையே தவிர, அப்போது தாக்கிய அதிதீவிரப் புயலானது சென்னை - கடலூர் இடையே மணிக்கு 115 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது. இந்தப் புயலால் பெய்த கனமழைக்கு, தமிழகத்தில் 26 பேர் உயிரிழந்தனர்.

2008 நவம்பர் 25ல் வங்கக் கடலில் உருவான நிஷா புயல், 83 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது. தஞ்சை மற்றும் அதனைக் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, 189 பேர் உயிரிழந்தனர்.

2010ல் தென் சீனக் கடலில் உருவான ஜல் புயல், நவம்பர் 6ல் மணிக்கு 111 கி.மீ. வேகத்தில் சென்னை அருகே கரையைக் கடந்தது. இந்தப் புயலால் 54 பேர் உயிரிழந்தனர்.

2011ல் டிசம்பர் 28ல் இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் உருவான தானே புயல், மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடையே கரையைக் கடந்தது. இந்தப் புயலால் 46 பேர் உயிரிழந்தனர்.

2016ல் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான வர்தா புயல் டிசம்பர் 12ல் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் சென்னை புறநகர் பகுதியான பழவேற்காடு அருகே கரையைக் கடந்தது. சென்னையில் அதிக பாதிப்பை வர்தா புயல் ஏற்படுத்தியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது. இந்த வர்தா புயலுக்கு 30 பேர் உயிரிழந்தனர்.

2017ல் நவம்பர் 29, 30ல் மணிக்கு 185 கி.மீ. வேகத்தில் வீசிய ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 40க்கும் மேற்பட்ட மீனவர்கள், குமரி மீனவர்கள் 162 பேர் உள்பட 204 பேர் உயிரிழந்தனர். வீடு இடிந்தது உள்ளிட்டவற்றில் பாதிக்கப்பட்டு 25 பேர் உயிரிழந்தனர்.

2018, நவம்பர் 16ல் தாக்கிய கஜா புயலின்போது மணிக்கு 130 கி.மீ. காற்று வீசியது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 63க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

2012ல் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மையமாக உருவான நீலம் புயல், அக்டோபர் 31ல் மணிக்கு 83 கி.மீ. வேகத்தில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. 2013ல் டிசம்பர் 8ல் உருவான மடி புயல், மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி வழியாக கரையைக் கடந்தது.

2005 டிசம்பர் 7ம் தேதி மணிக்கு 101 கி.மீ. வேகத்தில் வேதாரண்யம் அருகே பானூஸ் புயல் கரையைக் கடந்தது. 2015 டிசம்பர் 2ம் தேதி வேதாரண்யம் மற்றும் புதுச்சேரிக்கு இடையே நாடா புயல் கரையைக் கடந்தது. மேற்கண்ட புயல்கள் உயிரிழப்புகளைப் பெரிதாக ஏற்படுத்தவில்லை என்றாலும், மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தன.

செ.அமிர்தலிங்கம்

சுப்புலட்சுமி