96



நினைவுகளை மீட்டிப் பார்க்கும் காதலர்களின் ஆட்டோகிராஃப் பக்கங்களும், ஓர் இரவு அனுபவங்களுமே ‘96’.சொந்த ஊருக்குச் செல்லும்  விஜய் சேதுபதி படித்த பள்ளிக்குப் போக பழைய நினைவுகளில் மூழ்குகிறார். அங்கிருந்தே அவருடன் படித்த மாணவர்களின் சந்திப்புக்கு  ஏற்பாடு செய்கிறார். அவர்களில் த்ரிஷாவும் ஒருவர். அவர்கள் இருவரும் சந்திக்கும்போது காதல் நினைவுகளைப் பகிர்ந்துகொள்வதே கதை.முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி வரை சுள்ளென்று தைக்கும் வீர்யத்தில், நுணுக்கத்தில் சொல்கிறார் அறிமுக இயக்குநர் பிரேம்குமார்.  பாத்திரங்களின் தன்மையில் தெளிவிலிருந்து தெளிவிற்கே நகரும் வித்தை காட்டுகிறார்.விஜய்சேதுபதி அபாரம். கண்களிலே பேசுகிறார்.  ஏர்போர்ட்டில் அவரது மாணவர்கள் அவரின் கண்டிப்பை மீறி கிண்டல் செய்யும்போது தடுமாறுவது அதகளம்.

காதலியையும் உடன் வைத்துக்கொண்டு, மாணவர்களின் மீது காட்டும் கண்டிப்பு மெல்லியதாகும் கட்டம், ஏதோவொரு நினைப்பு ஓடிக்  கொண்டேயிருக்க த்ரிஷாவோடு நெகிழும் மனவோட்டத்தை முகத்தில் கொண்டு வருகிற சேது... க்ரேட்.பள்ளிக்கால காட்சிகளில் அவ்வளவு  நெருக்கம். இருவருக்கும் இடையில் அமைந்து விடுகிற அசல் நண்பர்கள். எப்போதாவது நேருக்கு நேர் பார்த்து விடும்போது அள்ளிக்  கொண்டு தரிசனம் காட்டும் வெட்கம், தள்ளி நின்றாலும் அருகிலிருக்கும் அன்பு, சாப்பிட்டதின் மீதியை உண்ணும் பெருமகிழ்ச்சி என காதல்  நதி பெருக்கெடுக்கிறது. அந்த சிறு பெண் த்ரிஷாவாக கெளரி அற்புதம். இளையராஜா பாடல்களை அவர் பாடும்போது வந்து சேர்கிற  முகபாவங்கள் இனிது. த்ரிஷாவை கல்யாணம் வரை பின் தொடர்ந்த விதத்தை சேதுபதி அடுக்கும்போது தெரிகிற நுணுக்கம், ஏக்கம், தீராத  காதல்... வெல்டன் சேதுபதி! அந்த சிறுவயது சேதுபதி ஆதித்யா அருமை.

த்ரிஷா முற்றாக வேறு இடம் வந்து சேர்கிறார். காதலன் தேடி கல்லூரிக்கு வந்திருக்கிறான் என்ற உண்மை புரிந்ததும் கழிவறைக்குள்  புகுந்து கதறி கண்ணீர் வடிப்பது, தான் உபயோகித்த பொருட்களை சேதுபதி சேகரித்து வைத்திருப்பதைப் பார்க்கும்போது காட்டும்  முகபாவனை... என அவரும் அடுத்த லெவல். ‘என்னை அப்படி பார்க்காதே’ என சேதுபதியின் முகத்தை மூடும் த்ரிஷா புதுசு. ‘ரொம்ப  தூரம் போயிட்டியா ராம்..?’; ‘உன்னை இறக்கி விட்ட இடத்திலேயே இருக்கேன் ஜானு...’ - கவிதையின் துளி.கொஞ்ச நேரமே வந்தாலும்  ஜனகராஜ், பகவதி பெருமாள், தேவதர்ஷினி, முருகதாஸ் கேரக்டரில் பொருந்துகிறார்கள். இரவு நேர சென்னை, தஞ்சையின் பள்ளிக்  காட்சிகள் என கண்முன் நிற்கிறது மகேந்திரன் ஜெயராஜு, சண்முகசுந்தரத்தின் கேமரா. கோவிந்த் வஸந்தாவின் இசையில் ‘காதலே  காதலே...’ அவ்வளவு ஃப்ரெஷ். இறுதிக் காட்சியில் மெல்லிய பின்னணி கனிவு.ரசிகர்களை காதலின் கனிந்த அன்பில் கரம் பற்றும்  முயற்சி.                             

-குங்குமம் விமர்சனக்குழு