காதைக் கடித்த போதை!
மேற்குவங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்திலுள்ள உத்தர்புராவைச் சேர்ந்தவர் சம்புநாத் தலி. கட்டுமானத் தொழிலாளியான இவர், வேலை முடிந்ததும் டாஸ்மாக்கில் தொண்டை வரை மதுவை இறக்கிவிட்டு நடைபாதையோரம் தூங்குவது வழக்கம். உறங்கும்வரை பொழுதுபோக்கு வேண்டுமே? அக்கம்பக்கத்து ஆட்களை வம்புக்கு இழுப்பார். அப்படித்தான் அன்றும் சம்புநாத் அலி, மதுபான கிறக்கத்தில் சலம்ப, தூங்க முடியாத தெருநாய்கள் பொறுக்கமுடியாமல் ஊளையிட்டு ஆட்சேபித்தன. ரத்த அழுத்தம் எகிறிப்போகுமளவு டென்ஷனான சம்புநாத், அதிரடியாக தன்னருகில் இருந்த நாயின் காதைக் கடித்துத் துப்பினார்!கடிபட்ட நாய் வேதனை பொறுக்காமல் கூக்குரலிட... அக்கம்பக்கத்து மக்கள் ஓடோடி வந்து சம்புவின் செவுளில் இரண்டு வைத்து போலீசில் ஒப்படைத்தனர்.நாய் ரிவென்ஞ் எடுத்தா என்னவாகும் சம்பு?
 ஊழலுக்கு தண்டனை நிவாரணநிதி!
லஞ்சம் வாங்கி ஊழல் செய்த முன்னாள் போலீஸ் அதிகாரிகளுக்கு சிபிஐ நீதிபதி பன்ச்குலா, கேரளாவுக்கு நிவாரண நிதி அளிக்கும் புதுமையான அபராத தண்டனையை விதித்துள்ளார். தனியார் கம்பெனிக்கு சென்ற ரெய்டில் அக்கம்பெனியினர் செய்த வரிமோசடிகளை அனில்குமார், அஜய்சிங், ரவீந்தர் தாகியா ஆகியோர் கண்டுபிடித்தனர். உடனே 30 லட்சம் அபராதம் விதிப்பதாக மிரட்டி, அத்தொகையைக் குறைக்க பத்தே பத்து லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். விஷயம் லீக்காகிவிட முதல் தவணையாக கம்பெனியினர் மூன்று லட்சம் தரும்போதே சிபிஐ அதிகாரிகள் மூன்று கருப்பு ஆடுகளையும் வசமாக மடக்கிப் பிடித்து கேஸ் போட்டுவிட்டனர். இந்த வழக்கில்தான் சிபிஐ வக்கீலே எதிர்பார்க்காதபடி நீதிபதி பன்ச்குலா நிவாரணநிதி தீர்ப்பளித்து அதிர வைத்துள்ளார்!
தேசியக்கொடி யாத்திரை!
குஜராத்தின் சூரத் நகரில் ஆயிரத்து நூறு அடி நீள பிரமாண்ட தேசியக்கொடியை ஏந்தி 72வது சுதந்திர தினத்தில் மக்கள் பேரணியாக நடந்து ஆச்சரியப்பட வைத்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஷான் இ திரங்கா என்ற இந்த யாத்திரையில் பயன்படுத்தப்பட்ட கொடி 1,100 அடி நீளமும், 9 அடி அகலமும் கொண்டது. அக்ராவல் அறக்கட்டளை ஒருங்கிணைத்த இப்பேரணி 5 கி.மீ தூரத்திற்கு நடைபெற்றது. 5 ஆயிரம் மீட்டர் துணியில் தேசியக்கொடியை உருவாக்க 200 பணியாளர்களின் உழைப்பும் 12 நாட்களும் தேவைப்பட்டதாம்.‘‘ஜெர்மனியிலிருந்து இறக்குமதியான இங்க்குகளை தேசியக்கொடிக்கு பயன்படுத்தியுள்ளோம். 150க்கும் மேற்பட்ட என்ஜிஓக்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியால் ‘மதங்களை விட தேசம் பெரியது’ என்ற குறிக்கோளை மக்கள் மனதில் உருவாக்க இந்த யாத்திரை உதவியுள்ளது...’’ என பூரிக்கிறார் அக்ராவல் அறக்கட்டளை தலைவர் தீபா கடியா.
தொகுப்பு: ரோனி
|