அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்!தலபுராணம்

சென்னையில் நூலகம் என்றாலே கன்னிமாரா தான் நினைவில் நிழலாடும். அதற்கடுத்து பிரம்மாண்டமான அண்ணா நூலகத்தைக்  குறிப்பிடுவர். ஆனால், ஆங்கிலேயர்கள் உருவாக்கிய மிகப் பழமையான நூலகம் ஒன்று, இன்றும் நம்மிடையே உயிர்ப்பாக இருந்து வருவது  பலர் அறியாதது.இதன் பெயர், ‘Government oriental manuscripts library and research centre’ என ஆங்கிலத்தில் சொல்லப்படும் அரசினர்  கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம். அன்று கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றிய சில தனித்துவமிக்க ஆங்கிலேயர்களால் பழங்கால  ஓலைச்சுவடிகள் சேகரிக்கப்பட்டு வந்தன. இதைப் பாதுகாக்கும் பொருட்டு 1869ம் வருடம் உருவானதே இந்நூலகம்.  முதலில், இதன்  மூலகர்த்தாவாக விளங்கிய கர்னல் காலின் மெக்கன்சி பற்றி அறிவது அவசியம். இந்நூலகத்தின் தந்தை என்றே இவரைக் குறிப்பிடலாம்.  காரணம், அவர் சேகரித்த சுவடிகளே நூலகமாக மாறி நிற்கிறது.

ஸ்காட்லாந்தில் பிறந்த இவர், 1782ம் வருடம் ஒரு பொறியாளராக இந்தியா வந்து சேர்ந்தார். ‘‘ஆரம்பத்தில் கணிதத்தில் பெரும் ஈடுபாடு  கொண்டிருந்த மெக்கன்சியிடம் லார்டு நேப்பியர் என்பவர் தனது மூதாதையரும் கணிதவியலில் மடக்கை (Logarithm) என்பதைக்  கண்டறிந்தவருமான ஜான் நேப்பியரின் வாழ்க்கை வரலாற்றை எழுதும்படி பணித்தார். இந்தப் பணியில் இருக்கும் போதுதான் ஆதிகால  இந்து மக்களின் கணித முறையைப் பற்றி மெக்கன்சி அறிந்தார். லார்டு நேப்பியரின் இறப்பிற்குப் பின் மெட்ராஸ் எஞ்சினியர்ஸ் பிரிவில்  சேர்ந்தார்...’’ என ‘HISTORY OF THE CITY OF MADRAS’ நூலில் குறிப்பிடுகிறார் சி.எஸ்.ஸ்ரீனிவாசாச்சாரி.

மெட்ராஸ் வந்தவரை லார்டு நேப்பியரின் மருமகனான ஜான் ஸ்டோன் மதுரைக்கு அழைத்து தன் கம்பெனி பிரிவில் சேர்த்துக் கொண்டார்.  இங்குதான் அவருக்குப் பல பண்டிதர்கள், பிராமணர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் மூலம் பல்வேறு பழங்கால சடங்குகள்,  சம்பிரதாயங்கள், வரலாறுகள் பற்றி அறிந்து கொண்டார். இவை அவரது ஆர்வத்தை அதிகரிக்கவே கீழ்த்திசை நாடுகளைப் பற்றிய  தகவல்களைச் சேகரிப்பதை ஒரு பொழுதுபோக்காகத் தொடங்கினார். இவரது தொகுப்புப் பணிக்கு அந்தந்த ஊரைச் சேர்ந்தவர்கள் உதவினர்.   1782 முதல் 1818 வரை இலக்கியம், மருத்துவம், வரலாறு, சமயம், மக்களின் கலாசாரம், பண்பாடு சார்ந்து பல்வேறு பழங்கால  ஓலைச்சுவடிகள், நாணயங்கள், கல்வெட்டுகள், வரைபடங்கள், தொல்பொருட்கள் ஆகியவற்றைச் சேகரித்தார்.

இவைதான் பின்னாளில் இந்திய மக்கள் பற்றியும், வரலாறு, மொழி போன்றவற்றைப் பற்றியும் எழுத துணை புரிந்தன; உதவின. 1818ம்  வருடம் இந்தியாவின் முதல் தலைமை நில அளவையாளராக மெக்கன்சி நியமிக்கப்பட்டு கல்கத்தா அனுப்பப்பட்டார். செல்லும்போது தன்  சேகரிப்புகள் அனைத்தையும் கூடவே எடுத்துச் சென்றார். அங்கும் தன் சேகரிப்பைத் தொடர்ந்தவர், 1821ல் இறக்கும் வரை இந்தப் பணியில்  ஈடுபட்டார். தனியொருவராக 3 ஆயிரம் கல்வெட்டுகளைச் சேகரித்திருந்தார் என்பது மிகப்பெரிய விஷயம்! மெக்கன்சி இறந்ததும் இந்த  சேகரிப்பை எல்லாம் அவரது மனைவி பத்திரப்படுத்தினார். அதை அவரிடமிருந்து அன்றைய இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த  மார்க்விஸ் ஆஃப் ஹேஸ்டிங்ஸ் பரிந்துரையின் பேரில் கிழக்கிந்தியக் கம்பெனியினர் பத்தாயிரம் பவுண்டுகள் கொடுத்து வாங்கினர்.

மெக்கன்சி தொகுப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, பாரசீகம், அரபு உள்ளிட்ட 14 மொழிகளில் 16 வெவ்வேறு பிரிவுகள் இருந்தன.  இதை அட்டவணையாக வகைப்படுத்தியவர் கல்கத்தாவிலிருந்த ஆசியாடிக் சொசைட்டியைச் சேர்ந்த வில்சன். தொடர்ந்து மெக்கன்சியின்  சேகரிப்புகள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி லண்டனுக்கும், ஒரு பகுதி மெட்ராஸுக்கும், ஒரு பகுதி கல்கத்தாவிற்கும்  அனுப்பி வைக்கப்பட்டன. மெட்ராஸுக்கு அனுப்பப்பட்ட பகுதிதான் இன்று கீழ்த்திசை நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கீழ்த்திசை  நூலகம் உருவாக்கப்படுவதற்கு முன் 1828ம் வருடம் மெக்கன்சியின் சேகரிப்புகள் அன்றைய ‘College of Fort St.George’ எனப்படும்  ஆங்கிேலயர்களுக்கான கல்லூரி நூலகத்தில் வைக்கப்பட்டன. பின்னர், இவை 1830ம் வருடம் மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி வசம்  ஒப்படைக்கப்பட்டன. பிறகு, 1847ம் வருடம் கல்லூரி நூலகத்திடமே கொடுக்கப்பட்டன.

இதேபோல 1803 முதல் 1811 வரை இந்தியாவில் பயணம் மேற்கொண்ட டாக்டர் லேடன், தமிழ், தெலுங்கு, கர்நாடகப் பகுதிகளில் சுற்றித்  திரிந்து பல ஓலைச்சுவடிகளைச் சேகரித்திருந்தார். இவர் ஒரு மொழியியல் வல்லுநர். இவரது சேகரிப்பை 1837ம் வருடம் மெட்ராஸ் சிவில்  சர்வீஸில் இருந்த சி.பி.பிரவுன் என்பவர் கண்டறிந்தார். மட்டுமல்ல, கிழக்கிந்தியக் கம்பெனியிடம் எடுத்துரைத்து அதை வாங்கவும்  வழிகோலினார். முன்பைப் போலவே லேடனின் சேகரிப்புகளும் முதலில் மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டியிடம் கொடுக்கப்பட்டு பின்னர்  கல்லூரி நூலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. பிரவுனும் தன் பங்குக்கு ஆந்திரப் பகுதியில் பணியாற்றியபோது சேகரித்த தெலுங்கு மற்றும்  சமஸ்கிருத ஓலைச்சுவடிகளைக் கம்பெனியிடம் வழங்கினார். இதுவும் கல்லூரி நூலகத்திற்கு வந்தது.

பின்னர், பிரவுனின் சேகரிப்பைத் தொகுக்க மெட்ராஸ் அரசு வில்லியம் டெய்லர் என்பவருக்கு உத்தரவிட்டது. அதை அவர் வில்சன்  போலவே அட்டவணைப்படுத்தினார். இதன்பிறகு, வேப்பேரியைச் சேர்ந்த பாதிரியார் டி. ஃபோக்ஸ், ஓலைச்சுவடிகள் சேதமடைந்து  வருவதாகவும், அதைப் பாதுகாக்க முயற்சி எடுக்க வேண்டுமென்றும் அரசுக்குக் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து ஒரு குழு  அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைப்படி 1869ம் வருடம் மாநிலக் கல்லூரியின் சமஸ்கிருதப் பேராசிரியர் பிக்ஃபோர்டிடம் இவற்றைப்  பாதுகாக்கும் பொறுப்பு தரப்பட்டது. இதுதான் அரசினர் கீழ்த்திசை நூலகத்தின் ேதாற்றம். பின்னர், 1870ல் மெரினா எதிரே மாநிலக்  கல்லூரி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதும் அந்த வளாகத்திற்குள் இந்தத் தொகுப்புகள் வைக்கப்பட்டன.

1895ம் வருடத்துக்குப் பிறகு கோட்டையிலிருந்த  தலைமைச் செயலகக் கட்டடத்தினுள் ஒரு சிறிய அறையில் வைக்கப்பட்டது. பின்னர்  அடுத்த ஆண்டே மியூசியம் அருகேயுள்ள அரங்கக் கட்டடத்திற்குள் இந்தத் தொகுப்புகள் மாற்றப்பட்டன. நிறைவாக, 1938ம் வருடம்  மெட்ராஸ் பல்கலைக்கழக நூலகக் கட்டடத்தின் மேற்குப் பகுதிக்கு வந்து சேர்ந்தது. இரண்டாம் உலகப் போர் நடந்த நேரம், இந்தச்  சேகரிப்புகள் எல்லாம் திருப்பதியில் இருந்த ஸ்ரீவெங்கடேஸ்வரா ஆய்வு நிறுவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டன.  நான்காண்டுகள் கழித்து, போர் முடிந்ததும், மீண்டும் மெட்ராஸ் பல்கலைக்கழகத்திற்கு எடுத்து வரப்பட்டன. சுதந்திரத்துக்கு பிறகு,  மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதும், 1224 கன்னட  ஓலைச்சுவடிகள் மைசூருக்கும், 3335 தெலுங்கு ஓலைச்சுவடிகள்  ஹைதராபாத்துக்கும், 583 மலையாள ஓலைச்சுவடிகள் திருவனந்தபுரத்துக்கும் அனுப்பப்பட்டன. மீதியுள்ளவை இந்த நூலகத்திலேயே  பாதுகாக்கப்பட்டன. கடந்தாண்டு இந்நூலகம் சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து அண்ணா நூலகத்தின் ஏழாவது மாடிக்கு மாற்றப்பட்டு  இன்று புதுச்சூழலில் தனித்துவமாக இயங்கி வருகிறது.          

-பேராச்சி கண்ணன்
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்/ராஜா


இன்று நூலகம்...


*    ஆசியாவின் நம்பர் ஒன் ஓலைச்சுவடி நூலகம் இதுவே.
*    இந்நூலகம் தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 32 பேர் பணி செய்கிறோம்.
*    இசை, ஓவியம், சிற்பம், கட்டடம், ஜோதிடம், மருத்துவம் என 19 வகையான பிரிவுகளில் தமிழ் ஓலைச்சுவடிகள் உள்ளன.
*     தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, உருது, அரபு, பாரசீகம் என ஓலைச்சுவடிகள் மட்டும் 50 ஆயிரத்து 180  உள்ளன. தவிர, அச்சுகளில் உள்ள கையெழுத்துப் பிரதிகள் மட்டும் 22 ஆயிரத்து 134 ஆகும். மொத்தமாக 72 ஆயிரத்து 314 சுவடிகளும்,  கையெழுத்துப் பிரதிகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
*     தவிர, குறிப்புதவி அச்சு நூல்கள் மட்டும் 25 ஆயிரத்து 373 உள்ளன. இதில், சமஸ்கிருத அச்சு நூல்கள் மட்டும் 5 ஆயிரம்.
*    அன்று ஆங்கிேலயர்களுக்காக எழுதப்பட்ட ஆங்கிலம் டூ தமிழ் அகராதி, காலின் மெக்கன்சி சேகரித்த தொல்காப்பிய  ஓலைச்சுவடி, சீவகசிந்தாமணி, சிவலிங்க வடிவிலான திருவாசகம், சமஸ்கிருத மகாபாரதம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட அரிய  ஓலைச்சுவடிகளும் இருக்கின்றன.
*    ஓலைச்சுவடிகளில் உள்ள அரிய தகவல்களை எல்லாம் 470 புத்தகங்களாக வெளியிட்டுள்ளோம். இதில், ஜோதிடத்தில் ஆறு  லக்னங்கள் பற்றி விரிவான நூல்களும் அடங்கும்.
*     சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் ஓலைச்சுவடிகளை வாசிப்பது பற்றி ஒரு  டிப்ளமோ கோர்ஸ் நடத்துகின்றன. அவர்களின் செய்முறைத் தேர்வு மூலம் 600 புத்தகங்கள் வெளியே வந்துள்ளன.
* இங்கே தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், உருது பண்டிதர்கள் உள்ளனர். ஓலைச்சுவடிகள் படிக்க, மொழிபெயர்க்க இவர்கள் மக்களுக்கு  உதவுவார்கள். இதற்காக பத்து பேர் பணி செய்கின்றனர்.
*     வெளிநாடுகளிலிருந்தும், வடஇந்தியாவிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் ஆய்வுக்கு இங்கே  வருகிறார்கள். அவர்கள் ஆய்வுக்  கடிதத்தைக் கொடுத்தாலே போதும். இலவசமாகவே ஸ்கேன் பண்ணித் தருகிறோம். ஒரே ஒரு நிபந்தனை மட்டும்தான். அது புத்தகமாகப்  போடும்போது இங்கிருந்து இந்தக் காப்பியைப் பெற்றோம் என ஒப்புகை அளிக்க வேண்டும். தவிர, ஐந்து புத்தகங்கள் இலவசமாகக்  கொடுக்க வேண்டும்.
*     அரசு அளித்த நிதி மூலம் ஓலைச்சுவடிகளை ஸ்கேன் செய்து டிஜிட்டலாக்கி வருகிறோம். விரைவில், இணையதளத்தில்  பதிவேற்ற இருக்கிறோம். இதனால், எந்தப் பகுதியிலிருந்தும் ஒருவர் இலவசமாக இதை எடுத்துப் பயன்படுத்தலாம்.
*     இப்போது 47 லட்ச ஓலைகளை ஸ்கேன் செய்துள்ளோம். தனி வெப்சைட் உருவாக்கி உள்ளோம். இதற்கான பணி 2012ல்  இருந்து நடந்து வருகிறது.
*    தவிர, ஓலைச்சுவடிகளை மைக்ரோ பிலிமாக மாற்றும் பணிகளும் நடந்து வருகிறது. இதன்படி எட்டு லட்சம் ஓலைகளை  மைக்ரோ பிலிமாக மாற்றி உள்ளோம். இது முந்நூறு வருடத்திற்கு பாதுகாப்பாக இருக்கும்.
*     ஓலைச்சுவடிகளை லெமன் கிராஸ் ஆயில் மூலம் பாதுகாத்து வருகிறோம். ஒவ்வொரு வருடமும் இந்தப் பணி  மேற்கொள்ளப்பட்டு சுவடிகள் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது.
*     அரசின் நோக்கமே இங்குள்ள ஓலைச்சுவடிகளை புத்தகமாகக் கொண்டு வரவேண்டும் என்பதே! அதற்கான உதவிகளை நாங்கள்  செய்கிறோம். ஏனெனில், பொதுமக்களிடம் மட்டும் 3 லட்சம் ஓலைச்சுவடிகள் இருப்பதாக அரசின் ஆய்வுத் தகவல் சொல்கிறது.
*     இதனால், பொதுமக்கள் கேட்டால் நேரடியாகப் போய் அவர்களிடம் உள்ள ஓலைச்சுவடிகளைப் பெற்று அதை பாதுகாக்க  உதவுகிறோம். இலவசமாகவே இந்தப் பணியை மேற்கொள்கிறோம். எங்களை ஸ்கேன் எடுக்க அனுமதித்தால் எடுத்துக் கொள்வோம்.  இல்லையெனில் பாதுகாக்கும் பயிற்சி மட்டும் அளிப்போம். இது நம் சொத்து. அழியக் கூடாது என்பதே எங்கள் குறிக்கோள்.
*     குறிப்பாக, எங்கள் பணி ஓலைச்சுவடிகளைச் சேகரித்தல், பாதுகாத்தல், அதை நூல்களாக வெளியிடுதல், ஓலைச்சுவடிகளைப்  பாதுகாக்கும் பயிற்சி அளித்தல் ஆகும்
- என்கிறார் இந்நூலகத்தின் நூலகரான சந்திரமோகன்.