போலீஸ் தேர்வா...போலித் தேர்வா?



தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய குளறுபடிகள்

ஜோஷனா

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் 2017 - 2018ம் ஆண்டுக்கான இரண்டாம் நிலைக் காவலர் தேர்வை இப்போது நடத்திக்  கொண்டிருக்கிறது. இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர், தீயணைப்புக் காவலர் அனைத்துக்கும் சேர்த்து இந்தத் தேர்வு  நடத்தப்படுகிறது. இதில் நடைபெறும் குளறுபடிகள் இந்தத் தேர்வு போலீஸ் தேர்வா, போலித் தேர்வா என்ற ஐயத்தை பொது மக்கள்  மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.சீருடைப் பணியாளர்களின் தேர்வின்போது முதல் கட்டமாக எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில் தகுதி  பெற்றவர்களை அடுத்த கட்டமாக உடற்தகுதித் தேர்வுக்கு அழைப்பார்கள்.

நடந்து முடிந்த 2017 - 18ம் ஆண்டுக்கான எழுத்துத் தேர்வில் வரலாறு காணாத அளவுக்குக் குளறுபடிகள் நடந்துள்ளதாக தேர்வு  எழுதியவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்தத் தேர்வில் கேட்கப்பட்ட எண்பது கேள்விகளில் எட்டு கேள்விகள் தவறானவை என்று தேர்வு  நடத்திய சீருடைப் பணியாளர் தேர்வு வாரியமே அறிவித்துள்ளது! இதனையடுத்து ஐந்து கேள்விகளுக்கு ஏ, பி, சி, டி என எந்த ஆப்ஷனைத்  தேர்ந்தெடுத்திருந்தாலும் அதற்கு முழு மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு கேள்விக்கு பி அல்லது டி இரண்டில் எதை  விடையாகக் குறித்திருந்தாலும் அதற்கு முழு மதிப்பெண்; இன்னொரு கேள்விக்கு ஏ, சி, டி என மூன்று ஆப்ஷன்களில் எதைத் தேர்வு  செய்திருந்தாலும் முழுமையான மதிப்பெண்; இன்னொரு கேள்விக்கு பி அல்லது சி என்ற இரண்டில் எந்த விடையைத் தேர்வு  செய்திருந்தாலும் முழுமையான மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படி மொத்தமுள்ள கேள்விகளில் பத்து சதவிகித கேள்விகளைத் தவறாகக் கேட்டிருப்பதன் காரணம்தான் புரியவில்லை. இது  திட்டமிட்டு நடந்ததா, அறியாமல் நடந்த பிழையா என்றும் தெரியவில்லை. பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்கள் வாழ்வின் கனவு என்று  கலந்து கொள்ளும் ஒரு போட்டித் தேர்வில் ஏன் இத்தனை அலட்சியம்?பள்ளிக்கூடத் தேர்வுகளில் கேள்வித்தாள் தவறாவதும் அதற்கு  மதிப்பெண்கள்வழங்கப்படுவதையும் ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தொழில்முறையான ஊழியர்களைத் தேர்வு செய்யும்போது  முறையான தகுதியும் திறமையும் உள்ளதா எனக் கண்டறிய வேண்டியது அவசியமல்லவா..?    

ஒரு போட்டித் தேர்வில் கேள்விகளைத் தவறாகக் கேட்டு விட்டு, எல்லோருக்கும் மதிப்பெண் என்று சொல்வதன் மூலம் தகுதியும்  திறமையும் உள்ளவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா..? எந்த உழைப்பும் இல்லாதவர்களுக்கும் மதிப்பெண்கள் போய் சேர்வதால் அவர்களும்  போட்டியில் அடுத்த நிலைக்கு வந்து தகுதியானவர்களுக்குச் சமமாக நிற்க மாட்டார்களா..? தகுதிக்கும் திறமைக்கும் வசதி வாய்ப்புக்கும்  தொடர்பில்லை. அதனால்தான் இப்படியான போட்டித் தேர்வுகள் வைக்கப்பட்டு திறமைகள் கண்டறியப்படுகின்றன. அப்படியிருக்க, கேள்வித்  தாளையே தவறாக வடிவமைத்தால் திறமை என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு லாபிகள் மூலமும் பரிந்துரைகள் மூலமும் தகுதியற்றவர்கள்  பணிகளில் நுழைவதற்கான வாய்ப்பு உருவாகிவிடுகிறதே..?

போலீஸ், தீயணைப்பு போன்ற பணிகளுக்கான சீருடைப் பணியாளர் தேர்வுகள் மக்களின் அடிப்படையான பாதுகாப்போடு தொடர்புடையவை.  இவற்றில் அலட்சியமாகவும் பொறுப்பின்மையோடும் நடந்துகொண்ட அதிகாரிகள் யார் யார் என்று முறையாக விசாரித்து அவர்கள் மேல்  நடவடிக்கை எடுக்க வேண்டும்... இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு, அழுத்தங்கள் ஏதும் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்ய  வேண்டும் என்கிறார்கள் தேர்வு எழுதிய மாணவர்கள்.ஏற்கெனவே, இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் கேள்வித்தாள் குளறுபடிகள்  நடந்திருந்தது நினைவிலிருக்கும். அதில் சுமார் நாற்பத்தொன்பது கேள்விகள் தவறாக இருந்ததால் ஒரு கேள்விக்கு நான்கு மதிப்பெண் என  மொத்தம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்றம் பரிந்துரைத்த இந்த மதிப்பெண்களை  உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

இப்படி போட்டித் தேர்வுகளில் மாறி மாறி நம் அரசுகள் செய்துகொண்டிருக்கும் குளறுபடிகள் எதிர்காலத் தலைமுறையினரின் பாதுகாப்பான  வாழ்வையே அச்சுறுத்தலுக்கு கொண்டு செல்கின்றன என்பதை ஆட்சியாளர்களோ அதிகாரிகளோ உணர்கிறார்களா..?  ஏற்கெனவே கல்வி  வணிகமயமாகிவிட்ட சூழலில் போட்டித் தேர்வுகளையும் மத்திய அரசு வணிகமாக மாற்றிக் கொண்டிருக்கின்றது. அதன் விளைவுதான் நீட்  போன்ற தேர்வுகள். இப்போது மாநில அரசும் இந்தக் குளறுபடிகள் வாயிலாக போட்டித் தேர்வுகளைச் சிதைக்கும் நடவடிக்கைகளில்  ஈடுபட்டிருப்பது வேதனையான விஷயம்.