ரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர்



கே.என்.சிவராமன் 20

‘‘என்ன சொல்கிறீர்கள்..?’’பதற்றத்துடன் கேட்ட சிவகாமி அவன் மடியில் இருந்து எழுந்து அமர்ந்தாள். இம்முறை அவளை கரிகாலன் தடுக்கவில்லை. மாறாக,  ‘‘அங்குதான் ஹிரண்ய வர்மர் நமக்காகச் சேகரித்து வைத்திருக்கும் ஆயுதங்கள் இருக்கின்றன..!’’ என்பதை மீண்டும் அழுத்திச் சொன்னான்.‘‘ஆனால், சுரங்கத்தில் சற்று முன் ஆயுதக் குவியலை நாம் பார்த்தோமே...’’‘‘ஆம் கண்டோம்!’’ புன்னகைத்த கரிகாலன், அவளை இழுத்து  தன் மார்பில் சாய்த்துக் கொண்டான். சிவகாமியை அணைத்தபடி தன் கைகளை அவள் பின்பக்கம் கொண்டு சென்றவன், தளர்ந்திருந்த  கச்சையை இறுக்கி முடிச்சிட்டான்.‘‘அவை..?’’‘‘மாதிரிகள் சிவகாமி! சாளுக்கியர்களை ஏய்ப்பதற்காக ஹிரண்ய வர்மர் செய்த காரியம்!’’‘‘அவ்வளவு புத்திசாலியா அவர்..?’’ முகத்தை உயர்த்தி கண்களைச் சிமிட்டியபடி அவனை நேருக்கு நேர் பார்த்துக் கேட்டாள்!‘‘ம்... எடை  போட முடியாத அளவுக்கு!’’ புன்னகைத்தான் கரிகாலன்.

‘‘அதைத்தான் பார்த்தேனே...’’ சொல்லும்போதே அவள் முகம் வாடியது.சிவகாமியின் வதனத்தை தன் இரு கரங்களில் ஏந்தினான். அவள்  கருவிழிகளை விட்டு தன் கண்களை விலக்காமல் கேட்டான். ‘‘எதைப் பார்த்தாய்..?’’‘‘என்னைப் பற்றி உங்களிடம் பேசியதை...’’‘‘எப்போது பார்த்தாய்..?’’‘‘சுரங்கத்தைத் திறக்க பாறையின் மீது ஏறியபோது...’’‘‘உன்னைப் பற்றித்தான் சொன்னார் என்று எப்படிச்  சொல்கிறாய்..? ஆயுதங்கள் மாறி வைத்திருப்பதையும் தெரியப்படுத்தி இருக்கலாமே..?’’‘‘அதற்கு வாய்ப்பில்லை!’’ ‘‘புரியவில்லை  சிவகாமி...’’‘‘இதில் புரிவதற்கு என்ன இருக்கிறது..?’’ பெருமூச்சு விட்ட சிவகாமியின் முகம் சுருங்கியது. ‘‘நான் மோசக்காரி... பல்லவ  நாட்டை ஏமாற்ற வந்திருப்பவள்... என்னை நம்ப வேண்டாம்... என்றுதான் உங்களிடம் எச்சரித்தார்...’’‘‘அப்படி ஹிரண்யவர்மர் எதையும்  தெரிவிக்கவில்லை...’’

‘‘பொய்!’’ அவள் கண்களில் சிவப்பு ஏறியது. ‘‘எனக்குத் தெரியும்...’’ தன் கரங்களால் அவன் மார்பைக் குத்தினாள்.‘‘இது  தெரியப்படுத்தியது..!’’‘‘என் உடலா..?’’‘‘ஆம். உங்கள் தேகம்தான். அதற்கு முன்பு வரை என் சருமத்துடன் சர்வசாதாரணமாக ஈஷிய  உங்கள் உடல், அவர் பேசியபிறகு விலகியது; விலக்கியது; பட்டதும் சுருங்கியது...’’‘‘அப்படியானால் இப்போது மட்டும் ஏன் இப்படி  உன்னுடன் இழைகிறது...’’‘‘நீங்கள் ஆணல்லவா...’’ சொல்லும்போதே சிவகாமியின் குரல் தழுதழுத்தது. கண்களிலும் நீர் கோர்த்தது.‘‘அதாவது பெண்ணுடலைக் கண்டதும் மோகத்தில் பூக்கிறது என்கிறாய்... அப்படித்தானே..?’’பதில் பேசாமல் பார்வையைத் திருப்பினாள்.  கன்னங்களில் ஒரு கோடாக கண்ணீர் வழிந்தது.

‘‘பைத்தியக்காரி...’’ நெகிழ்ச்சியுடன் அவளை அள்ளி அணைத்தான். காற்றுப் புக வழியில்லாமல் அவள் ஸ்தனங்களை தன் மார்புடன்  இறுக்கினான். அழுத்தம் தாங்காமல் அவள் ஸ்தனங்கள் தட்டையாகி கச்சையை மீறி அவன் உடலுடன் ஒன்றின.குனிந்து அவள் கழுத்தில்  முத்தமிட்டான். ‘‘உன்னை அவர் எச்சரித்தது என்னவோ உண்மைதான் சிவகாமி. அச்சொற்கள் சில கணங்களுக்கு என்னுள்  எதிரொலித்ததும் நிஜம்தான். ஆனால், அதிலிருந்து மீண்டுவிட்டேன்...’’ கரிகாலன் பேசப் பேச அவன் நாசியிலிருந்து வெளியேறிய காற்று  அவள் கச்சைக்குள் சற்று நேரத்துக்கு முன் அழுத்தப்பட்ட ஸ்தனங்களுக்கு ஒத்தடம் கொடுத்தது!‘‘எதனால் மீண்டீர்கள்..?’’ கோபம் மறைந்து  குழைவுடன் கேட்டாள்.

‘‘வாய்மையை அறிந்ததால்...’’‘‘அடேங்கப்பா... அந்த நேர்மையை உணரச் செய்தவர் யாரோ..?’’‘‘உன் உடல்!’’சிவகாமியின் புருவங்கள்  உயர்ந்தன. ‘‘என் தேகமா..?’’‘‘ம்... இந்தப் பூவுடலேதான்... கள்ளம் இருக்கும் உடலின் வெளிப்பாடு தன் அன்புக்கு உரியவர்களிடம் இப்படி  உரையாடாது!’’‘‘அனுபவம் மிகுதியோ..?’’ சிவகாமியின் நாசி விடைத்தது.‘‘கோபம் கொள்ளாதே... வெறும் ஏட்டறிவுதான். அவை  அனுபவமானது இப்போதுதான்! நம்பு...’’ சொன்ன கரிகாலன் அவள் அதரங்களில் தன் உதட்டை ஒற்றி எடுத்தான். ‘‘உனக்குள் எரிமலை  ஒன்று புகைந்துகொண்டிருக்கிறது. அது அணைய வேண்டுமானால் உன் சபதம் நிறைவேற வேண்டும். அது என்ன சபதம் என்பதை நிச்சயம்  காலம் வரும்போது நீயே சொல்வாய் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதுவரை நானாக உன்னிடம் எதுவும் கேட்க மாட்டேன்...’’

‘‘இந்த ஞானோதயம் எப்போது பிறந்தது..? சுரங்கத்திலா..?’’‘‘அதற்கு முன்பே. ஆனால், அதை வெளிச்சமிட்டுக் காட்டியது சுரங்கத்தில் உன்  நடவடிக்கைகள்தான்...’’‘‘ஒருவேளை உங்களை மயக்க நான் நாடகமாடியிருக்கலாமே..?’’‘‘வாய்ப்பில்லை...’’ அவள் கருவிழிகளைத் தன்  நாக்கால் தொட்டு எடுத்தான். ‘‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!’’‘‘ம்க்கும்...’’ உதட்டைச் சுழித்த சிவகாமிக்கு பெரும் பாரம் இறங்கியது  போலிருந்தது. எதையும் விளக்கிச் சொல்லாமல் எல்லாவற்றையும் விளங்கிக் கொண்டான் என்பதே பெரும் நிம்மதி அளித்தது.அவன்  மார்பில் ஒன்றியபடியே அங்கிருந்த ரோமத்தை தன் விரல்களால் சுருட்டினாள். ‘‘சரி சொல்லுங்கள்...’’‘‘எதை..?’’ அவள் தலைக்  கேசத்துக்குள் தன் முகத்தைப் பதித்தான்.
 
‘‘மூங்கில் காடுகளில் நமக்கான ஆயுதங்களை ஹிரண்யவர்மர் சேகரித்து வைத்திருக்கிறார் என்பதை எப்படி அறிந்தீர்கள்..?’’‘‘குறிப்பால்  உணர்த்தினார்...’’‘‘என்ன குறிப்புகள் அவை..?’’ கேட்டவளுக்கு விடையளிக்காமல் அவள் உதட்டில் கை வைத்தான்.சிவகாமிக்குப் புரிந்தது.  அவன் மார்பை விட்டு விலகி, தன் செவிகளைத் திறந்தாள்.‘‘இந்தப் பக்கமாகத்தான் வந்தார்கள்...’’‘‘இங்குதான் இருக்கவேண்டும்...’’  ‘‘புரவிகளை விரட்டிவிட்டு நம்மை ஏமாற்றப் பார்க்கிறார்கள்...’’கலவையான ஒலிகள் எழுந்தன. கரிகாலன் கிளைகளை விலக்கினான்.  சாளுக்கிய வீரர்கள் அவர்கள் அமர்ந்திருந்த மரத்தின் பக்கமாக வந்துகொண்டிருந்தார்கள்.

இருவரும் கிளைகளுக்கு இடையில் ஒடுங்கி அமர்ந்தார்கள்.‘‘இந்த வனத்தைவிட்டு அவர்கள் வெளியேறக்கூடாது. சல்லடையிட்டுச்  சலியுங்கள். காட்டைச் சுற்றிலும் நம் வீரர்கள் காத்திருக்கிறார்கள். இருவரும் எப்படித் தப்பிக்கிறார்கள் என்று பார்ப்போம்!’’சொன்னவன்  வீரர்களுக்குத் தலைவனாக இருக்க வேண்டும். அவன் கட்டளைக்கு அடிபணிந்து வீரர்கள் நாலா பக்கமும் அகன்றார்கள்.பேச்சு சப்தம்  குறைந்ததும் சிவகாமி நாசுக்காக இலைகளைப் பிரித்துப் பார்த்தாள். மரத்தின் கீழும் சுற்றிலும் சாளுக்கிய வீரர்கள் யாருமில்லை.
‘‘எப்படி இங்கிருந்து வெளியேறுவது..?’’ குரலைத் தாழ்த்தினாள்.கரிகாலன் பதிலேதும் சொல்லாமல் கிளைகளின் நுனியைஆராய்ந்தான்.  ‘‘உங்களைத்தான்...’’ அவனை லேசாக சிவகாமி உலுக்கினாள். ‘‘அத்தனை வீரர்களையும் நம்மால் சமாளிக்க முடியும். கீழே குதித்து போர்  புரிவோமா..?’’

‘‘வேண்டாம் சிவகாமி. நம் ஆற்றலை வீணாக்க வேண்டாம்! சாளுக்கிய வீரர்களுடன் போர் புரிவதை விட அவர்களை இந்த  வனத்துக்குள்ளேயே அடைத்து வைப்பது நல்லது. நம்மைப் பின்தொடராமல் இருப்பார்கள்!’’ ‘‘அது சரிதான். ஆனால், நாம் எப்படி  வெளியேறுவது..?’’‘‘கபிலர் வழிகாட்டுதலில்!’’‘‘எந்த கபிலர்..?’’‘‘தமிழ் இனத்தின் பெருமைக்குரிய ஆசான்! இயற்கையின் நண்பர்! சங்க  காலத்தின் ஒளிவிளக்கு! ’’முணுமுணுத்தவனை கண்கள் விரிய பார்த்தாள். அவள் தோளைச் சுற்றி தன்கரங்களைப் பதித்தவன் முகத்துடன்  முகத்தை இழைத்து கிளை ஒன்றைச் சுட்டிக் காட்டினான். ‘‘நுனி வளைந்திருக்கிறது...’’‘‘ஆம்...’’‘‘இந்தக் கிளை மட்டுமல்ல... எல்லாக்  கிளைகளுமே!’’சுற்றிலும் பார்த்தாள். அவர்கள் அமர்ந்திருந்த மரம் மட்டுமல்ல... கண்களுக்குத் தட்டுப்பட்ட எல்லா மரங்களின் கிளை  நுனிகளும் வளைந்திருந்தன. ‘‘ஆம்...’’‘‘இப்படி இருந்தால்..?’’

‘‘குரங்குகள் இங்கு அதிகம் என்று அர்த்தம்! கபிலர் தன் பாடல்களில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்!’’சொன்ன சிவகாமியின் கன்னத்தில்  முத்தமிட்டான். ‘‘உறைக்கு ஏற்ற வாள் நீ! அவற்றைத்தான் நமக்கு சாதகமாகப் பயன்படுத்தப் போகிறோம்!’’ எப்படி என்று அவளும்  கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை. என்ன செய்யப் போகிறான் என்று எதிர்பார்த்தாளோ அதையே செய்தான். உதட்டைக் குவித்து  குரங்கு போல் கத்தினான்!அடுத்த கணம் எண்ணற்ற குரங்குகளின் கத்தல்கள் அந்த வனம் முழுக்க எதிரொலித்தன. அதைத் தொடர்ந்து  மரங்கள் சடசடத்தன. அசைந்தன.மரங்களின் அசைவை வைத்து சாளுக்கிய வீரர்கள் வாட்களை உருவியபடி அங்கும் இங்கும் பாய்ந்தார்கள். கரிகாலன் மீண்டும் தன் உதட்டைக் குவித்து குரங்கு போல் கத்தினான்! முன்பு போல் அல்ல... சற்றே வித்தியாசமாக!

அதைக் கேட்டு சிவகாமியின் கண்கள் விரிந்தன. ஏனெனில் இம்முறை அவன் கத்தியது அபயம் கேட்டு! அதாவது தான், ஆபத்தில்  இருக்கிறோம்... காப்பாற்றும்படி ஒரு குரங்கு மற்ற குரங்குகளுக்கு செய்தி சொல்லுமே... அப்படி!இதனையடுத்து அவர்கள் அமர்ந்திருந்த  மரங்களை நோக்கி குரங்குகள் வரத் தொடங்கின! வேறு குரங்கு அங்கு இல்லாததைக் கண்டு திகைத்தன!மீண்டும் சற்று முன்னர் கத்தியது  போலவே கரிகாலன் குரல் கொடுத்தான். அதனைக் கண்ட குரங்குகள் திகைத்தன. ஆக்ரோஷத்துடன் வாயைத் திறந்து பற்களைக் கடித்தன. அமைதியாக அவற்றின் செய்கைகளை ஆடாமல் அசையாமல் கரிகாலனும் சிவகாமியும் பார்த்தார்கள். அவற்றுள் தலைவன் போல்  காணப்பட்ட குரங்கு மெல்ல அவர்களை நெருங்கியது. மற்ற குரங்குகள் ஆளுக்கொரு திசையில் அமர்ந்து எப்போது வேண்டுமானாலும்  அவர்கள் மீது பாய்ந்து குதறக் காத்திருந்தன.

நெருங்கிய தலைவன் குரங்கை கரிகாலன் அணைத்துக் கொண்டான். அவனது உடல் மொழி அத்தலைவன் குரங்குக்குப் புரிந்தது. தன்னை  ஒப்புக் கொடுத்தது.மனிதர்களைப் போல்தான் விலங்குகளும். எப்படி சக மனிதனை நேசிப்பவர்களைப் பார்த்ததுமே மொழி தெரியாத  மனிதனும் புரிந்துகொள்கிறானோ அப்படித்தான் விலங்குகளும்! எந்த விலங்கின் சாஸ்திரியாக ஒரு மனிதன் இருந்தாலும் அவனை  ஒட்டுமொத்த விலங்குகளின் நண்பனாகத்தான் மற்ற மிருகங்கள் கருதும்.இந்த உண்மைதான் அப்போது அரங்கேறியது.தங்களைப் போல்  கத்தியவனும் அவனுடன் இருப்பவளும் அசுவ சாஸ்திரிகள் என்பதை அத்தலைவன் குரங்கு புரிந்துகொண்டது! குறிப்பாக அருகில்  அமர்ந்திருந்த பெண்ணின் மீதிருந்து வீசிய குதிரையின் வாசம், சற்று நேரத்துக்கு முன்னர் ஏதோ ஒரு புரவிக்கு அவர்கள் சிகிச்சை  அளித்ததை அத்தலைவனுக்கு உணர்த்தியது!

வாஞ்சையுடன் ஏறிட்ட தலைவன் குரங்கின் தலையை வருடியபடி தன் விரல்களால் கரிகாலன் கீழே சுட்டிக் காட்டினான். அந்தத் திக்கில்  அக்குரங்கும் தன் பார்வையைச் செலுத்தியது. சாளுக்கிய வீரர்கள் அப்படியும் இப்படியுமாக ஓடிக் கொண்டிருந்தார்கள்! குரங்குகளுக்குப்  புரியும் மொழியில், தாங்கள் வெளியேற வேண்டும் என்றான். தலையசைத்த தலைவன் குரங்கு சட்டென அருகிலிருந்த கிளைக்குத் தாவி  மற்ற குரங்குகளைப் பார்த்துக் கத்தியது! புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக அங்கிருந்த குரங்குகள் மரம் விட்டு மரம் தாவ ஆரம்பித்தன.கரிகாலனையும் சிவகாமியையும் பார்த்துவிட்டு தலைவன் குரங்கும் அவற்றுடன் சேர்ந்து கிளைகளில் பாய்ந்தது.‘‘நம்மை வீரர்கள்  நெருங்காதபடி இனி குரங்குகள் பார்த்துக் கொள்ளும் சிவகாமி! சாளுக்கியர்களின் பார்வையில் மரம் விட்டு மரம் தாவுவது குரங்குகள்தான்.  புரிந்ததா..?’’

தலையசைத்த சிவகாமி மேலிருந்த கிளையைப் பிடித்தபடி மெல்ல எழுந்தாள். தன் உள்ளங்கால்களால் நின்றிருந்த கிளையை  அழுத்தினாள்.‘‘கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு... என திசைகளை மாற்றிக்கொண்டே செல்லவேண்டும்! வனத்தின் முடிவில் தென் மேற்கு மூலையில் நாம் சந்திக்கலாம்! நீ தலைவன் குரங்கை பின்தொடர்ந்து செல் சிவகாமி! எந்தக் கிளை தாங்கும் என்பதை அது உனக்குத் தெரியப்படுத்தும்; வழிகாட்டும்! தேவைப்படும்போது தாவுவதற்கு கொடிகளைப் பயன்படுத்து! சருமத்தில் கீறல் விழாமல்  பார்த்துக் கொள்!’’திசைக்கு ஒருவராகப் பிரிந்து கிளைகளைப் பிடித்தபடி கிளைகளில் நடந்தும்; தலைகீழாகத் தொங்கியபடி கிளைகளைக்  கடந்தும்; கொடிகளால் மரம் விட்டு மரம் தாவியும் அந்தக் காட்டைச் சுற்றினார்கள்.

(தொடரும்)

ஓவியம்: ஸ்யாம்