ரூ.2500க்கு வாஷிங் மெஷின்!



விலையேற்றம் தவிர ஜிஎஸ்டி. ஆக, வீட்டுக்குத் தேவையான எந்தப் பொருளை வாங்கவேண்டுமென்றாலும் குறைந்தது ரூ.12 ஆயிரம்  வைக்கவேண்டிய நிலை. அபார்ட்மென்ட் வாழ்க்கையே பெரும்பாலான மக்களுக்கு விதிக்கப்பட்ட நிலையில் இடப்பாற்றாக்குறையை  சமாளிப்பது பெரும் சவாலாக இருக்கிறது. எனவே, அமர்ந்து துணி துவைக்க முடியாமல் வாஷிங்மெஷின் கட்டாயத்தைத் தாண்டி அவசியப்  பொருளாகி விட்டது.ஆனால், இதன் விலையோ நடுத்தர மக்களால் யோசித்துப் பார்க்க முடியாத தொகை. அதிலும் வேலைப் பளுவைக்  குறைக்க Fully Automatic வாஷிங்மெஷின் வாங்க நினைத்தால் அதன் ஆரம்ப விலையே ஒரு மாதச் சம்பளத்தை காவு வாங்குகிறது.

இந்நிலையில்தான் கோவை ரத்னபுரியைச் சேர்ந்த தேவி லட்சுமி வெட்கிரைண்டர் நிறுவன உரிமையாளர் முருகேசன், ரூ.2500க்கு வாஷின்  மெஷினை விற்பனை செய்கிறார்! ‘‘30 வருஷங்களுக்கு முன்னாடி ஒரு சின்ன கம்பெனியா இதை ஆரம்பிச்சேன். அப்புறம் கிரைண்டர்  தயாரிக்கிற நிறுவனமா வளர்த்தேன். இடைல இலவசமா கிரைண்டர் கொடுக்க ஆரம்பிச்சதும் என் தொழில் மொத்தமா படுத்துடுச்சு.  அன்றாடம் தொழில் செய்யவும், பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் கஷ்டப்பட்டேன். அப்பதான் இந்த வாஷிங் மெஷின் ஐடியா  வந்துச்சு. என்னால பெரிய கம்பெனிகள் தரும் அளவுக்கு ஆப்ஷன்ஸ் தரமுடியாது. ஆனா, அந்த மெஷின்களைக் காட்டிலும் தண்ணீர்  செலவும், மின்சாரச் செலவும் குறையும்படி கொடுக்க முடியும்னு நம்பி இதை உருவாக்கினேன்.

நினைச்ச மாதிரியே வந்திருக்கு! இந்த மெஷின்ல நீங்க ஒருமுறை துவைக்க வெறும் ஏழு நிமிடங்கள்தான் ஆகும். மத்த மெஷின்கள்ல  ஐம்பது நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரமாகும். சைசுலயும் இது சின்னது. அதனால இடத்தை அடைக்காது. ஒரு பெரிய சைஸ் குப்பைக்  கூடை அளவு அல்லது ஒரு 20லி கேன் வைக்கிற இடம் போதும். தூக்கி வைச்சு சுலபமா வேலை செய்யலாம்.இதை ஏன் சொல்றேன்னா,  ஒரு சில அபார்ட்மென்ட் வீடுகள்ல பாத்ரூம்ல நிக்கவே இடம் இருக்காது,

ஹால்ல வைச்சு துவைக்கிறப்ப அதை எடுத்துப்  பயன்படுத்துவாங்க. அப்படியான வீடுகளுக்கு இந்த மெஷின் பெரிய நிம்மதியைத் தரும். ஒரு வருட கேரன்டியும் இதுக்கு உண்டு!’’  என்கிறார் முருகேசன்.வாஷிங் மெஷின் தவிர கிரைண்டர், கிரைண்டர் மோட்டார்கள் மற்றும் வாஷிங் மெஷின், கிரைண்டர்  அக்ஸசரிஸ்களும் இவர்களிடம் உண்டு. சென்னை மேற்கு மாம்பலத்தில் இவர்களுக்கு கிளை இருக்கிறது. நேரில் வாங்க முடியாதவர்கள்  ஆன்லைனிலும் இந்த வாஷிங் மெஷினை வாங்கலாம்.        

- ஷாலினி நியூட்டன்
படங்கள் :  சதிஷ் தனபாலன்