விதியை மிதியால் வெல்வோம்!



நியூஸ் வியூஸ்

“மோடி புண்ணியத்தாலே சைக்கிளுக்கு மாறிட்டோம்...” என்று நெட்டிஸன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். பின்னே?காஸ்ட்லி ஐட்டமான குவார்ட்டர் ரேட்டுக்கே ஒரு லிட்டர் பெட்ரோல் விலையும் இருக்கிறதென்றால் குடிமக்கள் வேற என்னதான்  செய்ய முடியும்?!சைக்கிள் மிதிக்க வேண்டியதுதான்.சரி. ஜாலி, கலாய்ப்பை எல்லாம் கொஞ்சம் ஓரம் கட்டி வைப்போம். சீரியஸாகவே  இன்றைய காலத்தின் தேவை சைக்கிள்.

மோட்டார் சைக்கிள், கார், பஸ், ஆட்டோரிக்‌ஷாவென்று போக்கு வரத்துக்கு நிறைய வசதிகள் வந்துவிட்ட காலத்தில் சைக்கிளா... ச்சே...  என்று நினைத்து விடாதீர்கள்.இன்றைய போக்குவரத்து நடந்து செல்வதற்குக் கூட வாகாக இல்லாத நிலை. ஆட்டோ ரிக்‌ஷாவைத்தான்  நாடவேண்டும். அதற்கும் அநியாயக் கட்டணம். டூவீலரை எடுத்தால், அதற்கு பெட்ரோல் போட்டு மாளாது.சைக்கிள் மட்டும் இருந்தால் ஒரு  மிதி மிதித்து விடலாம் இல்லையா?

அதனால்தான் மீண்டும் மிதிவண்டிக்கு மவுசு கூட ஆரம்பித்திருக்கிறது. மாநகராட்சிகளே ‘வாடகை சைக்கிள்’ திட்டமெல்லாம்  கொண்டுவருகிறது.சைக்கிள்தான் குறைந்த தூரப் போக்குவரத்துக்கு உகந்த சரியான வாகனமென்று ஐரோப்பாவிலும், சீனாவிலும்  முடிவுகட்டி விட்டார்கள். பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக மிதிமிதியென்று சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்த நாம்தான் அதை  நம் சோம்பேறித்தனம் காரணமாக ஒட்டுமொத்தமாக ஏறக்கட்டி வைத்துவிட்டோம். ஜிம்முக்குப் போய் சைக்கிள் மாதிரி ஏதோ ஒரு  உபகரணத்தை மிதிமிதியென்று மிதித்து உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கிறோம்.

வீட்டிலிருந்து சில கிலோ மீட்டர் தூரமே அருகிலிருக்கும் ரயில் நிலையத்துக்கோ அல்லது பஸ் நிலையத்துக்கோ செல்வதற்கு  குறைந்தபட்சம் 50 ரூபாயிலிருந்து 100 ரூபாயாவது செலவழிக்க வேண்டியிருக்கிறது.இந்த  தூரத்தைக் கடக்க நாம் பயன்படுத்தும்  பெட்ரோல் / டீசல் வாகனங்கள் வெளியிடும் புகை சுற்றுப்புறச்சூழலை கடுமையாக மாசுபடுத்துகிறது. பஸ்சுக்காகவும், ஆட்டோவுக்காகவும்  காத்திருக்கும் நேரமும் வீண். காத்திருக்கும் நேரம் மட்டுமின்றி சிக்னல்களிலும், போக்குவரத்து சிக்கல்களிலும் கூடுதல் நேரத்தைச்  செலவழித்து அலுவலகத்துக்கோ அல்லது செல்லவேண்டிய இடத்துக்கோ சரியான நேரத்தில் போய்ச்சேர முடியாத நிலை.சைக்கிள்  இருந்தால் ஈஸிதானே?

மேலும், சைக்கிள் ஓட்டுவதால் பயணத்தோடு சேர்ந்து உடற்பயிற்சியும் இலவசமாகக் கிடைக்கிறது. ஜிம்முக்கும், பயணத்துக்கும்  மாதாமாதம் ஆயிரங்களைக் கொட்டி அழத் தேவையில்லைதானே?சரி. சைக்கிளுக்கு மாறினால் வேறு என்னென்ன நன்மைகள்  கிடைக்கும்?நகரப் போக்குவரத்துச் சிக்கலைக் குறைக்கலாம். பெரும்பாலானவர்கள் சைக்கிளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் சிக்கல்  ஏது? காற்று மற்றும் ஒலியால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறைந்துவிடுமில்லையா?சுற்றுச்சூழல் சீரடைவதால் அனைவரும் சுத்தமான  காற்றை சைக்கிள் மிதிக்கும்போது சுவாசிப்பார்கள். சைக்கிள் மிதிப்பது உடற்பயிற்சிக்கு ஒப்பானது என்று மருத்துவர்களே  பரிந்துரைக்கிறார்கள்.

சிறுதூரப் போக்குவரத்துக்கு ஆகும் செலவு கட்டுப்பாட்டுக்குள் வருவதால் மக்கள் இந்தப் பணத்தை வேறு வகையில் உபயோகமாகச்  செலவழித்து தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும்.இன்று நகரங்களில் இருக்கும் பெரிய பிரச்சினை ‘பார்க்கிங்’.  இத்திட்டத்தால் பார்க்கிங் பிரச்சினையை முற்றாகக் களைய முடியும். இது நகரக் கட்டமைப்புக்கும் வசதியானது.கார், பஸ் போன்ற  வாகனங்களால் சாலை சீக்கிரம் பாதிப்படைகிறது. சைக்கிள்கள் அதிகம் செல்லும் சாலை நீண்டகாலத்துக்கு பாதிப்படையாமல் இருக்கும்.

இதனால் சேமிக்கப்படும் நேரத்தை மக்கள் பயனுள்ள வகையில் செலவழிக்க முடியும். கூடுதலாக வருவாய் ஈட்டவோ அல்லது  குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கவோ நேரம் நிறைய கிடைக்கும்.கடைசியாக, எந்திரம் போல இயங்கும் நம் வாழ்க்கையை சைக்கிள்  பயணம் மாற்றும்.சைக்கிள் மிதித்துக்கொண்டு தோழனோடு (அதிர்ஷ்டவசமாக தோழி இருந்தாலும்) ‘பசுமை நிறைந்த நினைவுகளே’ என்று  நாம் பாடிச்செல்லும் காட்சியை நினைத்துப் பாருங்கள். இனிக்கும்!                         

-யுவகிருஷ்ணா

எச்சரிக்கை!


லிகமென்ட் பிரச்னை இருப்பவர்கள், மூட்டுவலியோடு மல்லுக் கட்டிக்கொண்டிருப்பவர்கள் சைக்கிளைத் தவிர்க்க வேண்டும். பைக், கார்  மற்றும் பெட்ரோல் விலையேற்றத்தோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கவேண்டும் என்பது இயற்கை உங்களுக்கு விதித்திருக்கும் விதி.