ரஃபேல் விமான பேரம் : ஆட்டம் காண்கிறதா பாஜக ?



ஆட்டிப் படைக்கிறதா காங்கிரஸ்..?

“ர ஃபேல் போர் விமான பேரத்தில் ரூ.1.30 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழலில் பிரதமர் மோடி சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று  உறுதியாக நம்புகிறோம்...” என்று கடந்த சில வாரங்களாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முழங்கி வருகிறார்.“மோடி நேர்மையின்   சின்னம். உலகத்தலைவர். அவர் மீது குற்றம் சாட்ட ராகுலுக்கு எந்தத் தகுதியும் கிடையாது...” என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள்  பேசி வருகிறார்கள்.

இந்த ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அப்படி என்ன முறைகேடு..? ஏன் இந்தச் சவால்கள்? மறுப்புகள்..?

நம்மிடம் போதுமான நவீன ரக விமானங்கள் இல்லை. பயன்பாட்டில் இருக்கும் MIG-21 வகை விமானங்கள் அதிகப்படியான விபத்துகளைச்  சந்தித்திருந்தன. இப்போது பயன்பாட்டில் இருக்கும் மிக்-21 மற்றும் மிக்- 27 ஆகிய போர் விமானங்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில்  பயன்பாட்டில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட உள்ளன என்பதால் மிகப்பெரிய அளவில் நமது விமானப்படையை நவீனப்படுத்த வேண்டும்  என்று 2000ம் ஆண்டு முதலே அரசிடம் சொல்லிக் கொண்டிருந்தது இந்திய விமானப் படையின் தலைமை.இதன் விளைவாக  மன்மோகன்சிங் அரசு போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான முயற்சிகளை எடுத்தது. இதன்படி, டஸால்ட் ஏவியேஷன், யூரோ  ஃபைட்டர் உட்பட ஆறு சர்வதேச நிறுவனங்கள் மத்திய அரசிடம் கேட்பு விலையை முன்வைத்தன. உலகின் மிகப் பெரிய ராணுவ வணிகம்  என்று சொல்லப்பட்ட இந்த டெண்டரை கடும் போட்டிகளுக்கிடையே கைப்பற்றியது ரஃபேல்.

ரஃபேல் ஒப்பந்தம் கடந்த 2007ல் காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2012ல் அந்த நிறுவனத்துடன் மேற்கொண்ட  ஒப்பந்தத்தில் 126 ரஃபேல் போர் விமானங்கள் ரூ.52,000 கோடிக்கு பேசி முடிக்கப்பட்டது. அதன்படி 2015க்குள் 18 விமானங்கள் போர்  முனைக்குத் தயார் நிலையில் இந்தியாவில் தரையிறக்கப்பட வேண்டும். எஞ்சிய 108 விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்  நிறுவனத்துடன் இணைந்து ‘தொழில்நுட்பம் பரிமாற்ற’ ஒப்பந்தம் அடிப்படையில் பிரான்ஸின் டஸால்ட் நிறுவனம் (ரஃபேல் விமான
தயாரிப்பு நிறுவனம்) இந்தியாவில் உற்பத்தி செய்துதர வேண்டும்... என்பது இந்த ஒப்பந்தத்தில் மிக முக்கியமான விதி.

இந்த விதிகளின்படி போர் விமானம் செய்யத் தேவையான அனைத்து டெக்னாலஜியையும் பொதுத் துறை நிறுவனமான HAL  நிறுவனத்திடம் அளிக்க வேண்டும். அதன் மூலம் நாமே தேவைப்படும் விமானத்தை உருவாக்கும் திறனை வளர்த்துக்கொள்ளமுடியும்.நீண்ட நாள் தாமதமானாலும் நாட்டின் விமானப்படையின் தேவைக்கும், விமான உற்பத்திக்கும் வேலை வாய்ப்புக்கும் உதவும் என  எல்லோரும் கருதிய நேரத்தில் கொடுக்க வேண்டிய ஆர்டர் நிறுத்தி வைக்கப்பட்டது.
 
காரணம், இந்திய அரசியலில் மட்டுமே நிகழக்கூடிய ஆச்சரியங்களில் ஒன்றான, இந்த ஒப்பந்த விவகாரம் உச்சகட்டத்தை நெருங்கிக்  கொண்டிருந்த போது வெடித்த சில ஊழல்கள்... அதனால் எழுந்த அரசியல் பிரச்னைகள்... கடைசி ஆண்டில் ஆட்சி இருக்கும் தருவாயில்  மிகப் பெரிய முடிவு எடுக்க வேண்டாம் என்று அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி  வைத்தார்.பாஜக அரசு 2014ல் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், இந்த விமானக் கொள்முதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி சிறப்புக்  கவனம் செலுத்தினார். பிரான்ஸுக்கு 2015, ஏப்ரல் 15ல் விஜயம் செய்த மோடி, அந்நாட்டரசிடம் இருந்து, தயார் நிலையில் 36 ரஃபேல்  போர் விமானங்களை இந்தியா வாங்கவுள்ளதாக அறிவித்தார்.

இதையடுத்து, பிரான்ஸிடமிருந்து சுமார் ரூ.60,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் 2016,  செப்டம்பர் 23ல் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சுமார் ரூ.12,600 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.  ஆனால், புதிய ஒப்பந்தத்தில் எச்ஏஎல் உடன் தொழில் நுட்பப் பரிமாற்றம் தொடர்பான ஷரத்துகள் இல்லை.பழைய ஒப்பந்தப்படி 126  விமானங்கள் ரூ.90,000 கோடிக்கு வாங்க இருந்ததைக் கைவிட்டு வெறும் 36 விமானங்களை ரூ.60,000 கோடிக்கு முதல் கட்டமாக வாங்க  முடிவு செய்யப்பட்டது.

இதன்படி ஒரு விமானம் ரூ.714 கோடிக்கு வாங்குவதற்கு பதில் ரூ.1611 கோடிக்கு வாங்கவிருக்கிறோம். அதாவது இருமடங்குக்கும் மேல்  விலை கொடுத்து குறைவான எண்ணிக்கையில் விமானங்களை வாங்கப் போகிறோம். இதைத்தான் ஊழல் என்கிறார் ராகுல்அவர்  சுட்டிக்காட்டும் மற்றொரு விஷயம் நமது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விமான உற்பத்தி தொழில்  நுட்பங்களை ரஃபேல் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற விதி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக இந்த விமானங்களின் உதிரிப் பாகங்களைத்  தயாரிக்க இந்திய நிறுவனங்களைப் பயன்படுத்த வேண்டும்... அந்த நிறுவனங்களை டஸால்ட் ஏவியேஷன் நிறுவனமே தேர்ந்தெடுக்கலாம்  என்று ஒப்பந்தம் போடப்பட்டது!

இதன்படி இந்த ரஃபேல் விமானங்களின் உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் ரூ.21,000 கோடிக்கான ஒப்பந்தத்தை அனில் அம்பானியின்  ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துக்கு  டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் வழங்கத் தீர்மானித்திருக்கிறது. இந்நிலையில், ஒப்பந்த  அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவதற்கு சுமார் 10 நாட்களுக்கு முன்புதான் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம்  தொடங்கப்பட்டதாகவும், இந்த ஒப்பந்தம் அதற்கு கிடைக்க மத்திய அரசு உதவியுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.இதற்கு ‘டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் தாங்கள் விரும்பும் எந்த இந்திய நிறுவனங்களுக்கும் ஆர்டர்களை வழங்கலாம் என்பது  ஒப்பந்தம்… அது அவர்களது உரிமை. இந்திய அரசுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பில்லை...’ என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  பதிலளித்தார்.

‘ரஃபேல் போர் விமானத்தை இந்தியாவில் தயாரிக்கும் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்க்கும்படி இந்திய அரசு தான்  பரிந்துரைத்தது!’ என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அன்றைய பிரான்ஸ் பிரதமர் ஹாலண்டே அண்மையில் கூறியிருப்பது இந்த  விவகாரத்தில் எழுந்திருக்கும் அதிரடி திருப்பம்‘காங்கிரஸ் ஆட்சியின் போது விமானங்கள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட  இருந்தன.அந்த விலை நிலவரம் விமானங்களின் விலைக்கு மட்டுமே பொருந்தும். ஆனால், புதிய ஒப்பந்தத்தில் அனைத்து நவீன போர்க்  கருவிகளும் பொருத்தப்பட்டே புதிய விலை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, போர்க் கருவிகள் பொருத்தப்படாத விமானத்தின்  விலையையும், போர்க் கருவிகள் பொருத்தப்பட்ட விமானத்தின் விலையையும் ஒப்பிடுவது தவறு...’ என்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா  சீதாராமன்.

முதல் ஒப்பந்தந்ததில் இருந்ததைவிட அதிநவீன தொழில் நுட்ப வசதியினால் இந்த விலை என்றால் அதுதான் விலை மாற்றத்துக்  காரணம் என்று நாடாளுமன்றத்தில் சொல்ல என்ன தயக்கம்... என்பது காங்கிரஸின் அடுத்த கேள்வி. இந்த விவகாரத்தில் ஊழல் சந்தேக  பூதத்தைக் கிளப்பியிருக்கும் காங்கிரஸ் சொல்லும் மற்றொரு  விஷயம், கடந்த 2015ம் ஆண்டு, ஏப்ரல் 10ம் தேதி பிரதமர் மோடி பிரான்ஸ்  நாட்டுப் பயணத்தில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது பாரிஸில் இருந்தவர் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிமிட் டெட்(ஆர்.டி.எல்.)  நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி என்பது! இதை மத்திய அரசோ அல்லது ரிலயன்ஸ் நிறுவனமோ மறுக்கவில்லை! 2019  நாடாளுமன்றத் தேர்தலில் இந்த ஒப்பந்த விவகாரம் பாஜகவுக்கு சவாலாக இருக்குமா? காங்கிரஸ் கட்சிக்கு துருப்புச்சீட்டாக இருக்குமா?  பொறுத்திருந்து பார்ப்போம்.

-ரமணன்