சாமி 2



பெற்றோரைக் கொன்றவர்களை அழித்தொழிக்கும் சாமியின் தாண்டவமே ‘சாமி 2’.ஊரறிய வெற்றி பெற்ற ‘சாமி’யின் இறுதிக்  காட்சிகளிலிருந்தே படம் தொடங்குகிறது. விக்ரமையும், கர்ப்பிணியான அவரது காதல் மனைவியையும் பாபிசிம்ஹா ஒரு மழை இரவில்  வெட்டிக் கொல்கிறார். கடைசி நேரத்தில் குழந்தை காப்பாற்றப்பட, தில்லியில் வளர்ந்து ஐ.பி.எஸ் ஆகி நெல்லைக்கே திரும்பிவருகிறார்  விக்ரம். அங்கேயிருந்து வில்லன்களை வேரோடு கருவறுக்கும் படலம் தொடங்குகிறது. படிப்படியாக தடயங்கள் இல்லாத சந்தர்ப்பங்களை  வரவழைத்துக்கொண்டு எதிரிகளை விக்ரம் அழிப்பதே கதை.

டைரக்டர் ஹரியின் ஆயுதப்பட்டறையில் போட்டு பதப்படுத்தி வெடித்த ஆக்‌ஷன் அணுகுண்டு ‘சாமி 2’. காரசார மசாலா கலக்கி, விர்ரென  வெடித்துச் சிதறும் ஆக்‌ஷனைப் பார்க்க விரும்பினால், ஆஹா ஆனந்தம்!அதிரடி நாயகனாகவும், வளர்த்தவர்களிடம் மரியாதை  காட்டுபவராகவும் இரும்பு உடம்பில் நிறையவே வித்தியாசம் காட்டுகிறார் விக்ரம். ஆக்‌ஷன், சென்டிமென்ட், காதல், சதி, உளவு, வியூகம்  என்று ஷிஃப்ட் போட்டு பறக்கும் கதையில் அவரே பர்ஃபெக்ட் பிட். கோபத்தை, குரோதத்தை, உடல்மொழியில் பல மடங்கு வேகப்படுத்திக் காட்டும் பாய்ச்சலிலும் விக்ரம் பெரும் சாகசம். இறங்கி அடிக்கும் காட்சிகளில் திமிறும் உடற்கட்டு எதைச் செய்தாலும் நம்ப  வைக்கிறது.

சற்றே கனம் கூடி, பெரிய விழிகளில் கிறக்கம் புகுத்தி அசரடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். அவர் திரையில் கொஞ்சும்போதெல்லாம் நெஞ்சம்  அள்ளுகிறார். ஃபாரீன் லொகேஷன் பாடலில் இன்னும் பொருந்துகிறார் கொஞ்ச நேரமே வந்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் அழகு. அவரின்  நடன அசைவுகளில் தனிப்பட்ட நளினம்.கோட்டா சீனிவாசராவிற்கு வாரிசாக பாபிசிம்ஹா அட்டகாசம். ஹரியின் போதனை அவரிடம்  நன்றாக வேலை காட்டியிருக்கிறது. அதே உறுமலும், வேகமுமாக, நமக்கே ஆத்திரம் வரும்படியான கேரக்டரில் பின்னுகிறார்.

சூரி தில்லியில் ஆரம்பித்து திருநெல்வேலி வரை காமெடி செய்தாலும் மகிழ வேண்டிய தருணங்கள் மிஸ்ஸிங்.தேவிஸ்ரீபிரசாத்தின்  இசையில் ‘அதிரூபனே’வும், ஸ்டைல் காட்டும் ‘புது மெட்ரோ ரயிலும்’ மட்டுமே கேட்ச்சிங். ஆனால், பின்னணியில் மனிதர் வேகம்.  வெங்கடேஷ் அங்குராஜ் ஒளிப்பதிவில் படம் முழுவதும் பதற்றமும், ஆக்‌ஷனும் அசரடிக்கிறது. லாஜிக் கேள்விகள் லோடு லோடாக  எழுகின்றன. ஆனால், அதையெல்லாம் காது கொடுக்கவோ, யோசித்துப் பார்க்கவோ, நமக்கு டைரக்டர் ஹரி வாய்ப்பே தருவதில்லை.  படத்தின் வைப்ரேஷன் அந்த மாதிரி.ஆக்‌ஷன், வேகம், பரபரப்பு ஆகிய மூன்றும் இந்த ‘சாமி’க்கு பலம்!

-குங்குமம் விமர்சனக்குழு