இது பர்ஃபெக்ட் லீகல் த்ரில்லர்! தடம் ரகசியங்கள்




‘‘ஆர்யாவோட ‘மீகாமன்’ முடிச்சதும், அடுத்ததா சில கதைகள் தோணுச்சு. அதுல பெஸ்ட் ஸ்கிரிப்ட்டா எதை பண்ணலாம்னு யோசிக்கிறப்ப  ரியலா நடந்த ஒரு இன்ஸிடென்ட் பத்தி கேள்விப்பட்டேன். பயங்கர ஷாக் ஆகிடுச்சு. கற்பனையைக் காட்டிலும் உண்மை விநோதமானதுனு  சொல்வாங்க இல்லையா... அதை அந்த இன்ஸிடென்ட் உணர வைச்சது.

அப்படியொரு நிகழ்வு நிஜத்துல நடக்குமானு ஆராய்ச்சில இறங்கினப்ப உலகம் முழுக்க அப்படி நிறைய நடந்திருக்கறது தெரிய வந்தது. இது  இன்னும் அதிர்ச்சியைக் கொடுத்தது.இதை அப்படியே ப்ளாக் காமெடியா கொண்டு போகலாம்னு எழுத ஆரம்பிச்சு இப்ப legal த்ரில்லரா வந்து  நிக்குது! இந்த ‘தடம்’ படம் அருண் விஜய்யை மட்டுமில்ல, என்னையும் அடுத்தகட்டத்துக்கு கொண்டு போகும்...’’ நம்பிக்கையுடன்  பேசுகிறார் இயக்குநர் மகிழ்திருமேனி.   

அதென்ன அப்படி ஒரு கான்ஃபிடன்ட்?


கன்டன்ட் மீதான நம்பிக்கைதான். போஸ்ட் புரொடக்‌ஷன், மிக்ஸிங் நடந்த இடங்கள்... க்யூப், சென்ஸார்னு எல்லா இடங்கள்லயும்  படத்தைப் பார்த்து பிரமிச்சுட்டாங்க. இதுல லீகல் த்ரில்லர் மட்டுமில்ல... மனித மனங்களோட உன்னதங்களும் இருக்கு.எல்லார் கிட்டயும்  பெற்றோர் மீதான தாக்கம் உண்டு. இதை கமர்ஷியலா, விறுவிறுப்பா சொல்லியிருக்கோம். டிரெயிலரைப் பார்த்துட்டு பலரும், ‘அருண்  விஜய் இதுல சி.பி.ஐ. ஆபீசரா? இல்லை கிரிமினலா?’னு கேட்டாங்க! அந்த சஸ்பென்ஸை இப்பவே உடைக்க விரும்பல. படத்துல தான்யா  ஹோப், ஸ்மிருதினு ரெண்டு ஹீரோயின்கள். தான்யா, தெலுங்குல மூணு படங்கள் பண்ணியிருக்காங்க. ‘ஆனா, ‘தடம்’தான் என் முதல்  படம்’னு யூனிட்ல சொல்லி நெகிழ்ந்திருக்காங்க.

ஸ்மிருதி, தமிழ்ப் பொண்ணு. அப்புறம் பெப்சி விஜயன் மாஸ்டர், மீரா கிருஷ்ணன், யோகிபாபு, ஜார்ஜ் மரியானு கதைக்கு அவசியமான  ஆட்கள் இருக்காங்க. முக்கியமான ஒரு விஷயம்- ஒரு சர்ச்சையான கேரக்டர்ல ரொம்ப தைரியமா சோனியா அகர்வால் நடிச்சிருக்காங்க!  அவங்க போர்ஷன் பத்து நிமிஷங்கள் இருக்கும். ஆனா, அவங்க இல்லைனா இந்தக் கதை இல்ல! அதே மாதிரி இப்ப வர்ற படங்கள்ல  யோகிபாபு இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணிடலாம். அப்படி ஒரு பிசியான நடிகர். அடிப்படையில் அவர் ஒரு ரைட்டர்.  அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்தவர். இதுல காமெடில அசத்தியிருக்கார்.

‘தில்’, ‘தூள்’ படங்களின் கேமராமேன் கோபிநாத், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். நான் கௌதம்மேனன் சார்கிட்ட  அசோஷியேட்டா ஒர்க் பண்ணும் போது கோபிநாத் சார் பிசி கேமராமேன். என் முதல் படத்துலயே அவரோட ஒர்க் பண்ண விரும்பினேன்.  அது இப்பதான் கை கூடியிருக்கு.அறிமுக இசையமைப்பாளர் அருண்ராஜ் இசையமைச்சிருக்கார். மதுரைக்காரர். அவரோட  ‘தலைவணங்காதே தமிழா...’ தனிப்பாடல் பார்த்து இந்த வாய்ப்பை கொடுத்தோம். இசைச் செறிவும், சமுதாய உணர்வும் மிக்கவர். அவரது  பின்னணி இசை பேசப்படும்.

மறுபடியும் அருண் விஜய் காம்பினேஷன் ஏன்..?


ஆர்யாவுக்கும், அருண் விஜய்க்கும் ஒரு ஒற்றுமை உண்டு. ரெண்டு பேருமே இயக்குநருக்கான நடிகர்கள். என் படத்துல நடிக்கற  எல்லாருக்குமே கதை, எடுக்கப்போற ஷாட், அதுக்கான அவசியம்... எல்லாமே தெரியும். நான் கதையே சொல்லலைனாலும் ஆர்யாவும்,  அருண் விஜய்யும் என்னை நம்பி நடிக்க வருவாங்க! அப்படியொரு புரிதல் எங்களுக்குள்ள இருக்கு.‘தடையற தாக்க’ முடிச்சதும் நானும்  அருணும் மறுபடியும் படம் பண்ணலாம்னு நினைச்சிருந்தோம். உடனே அவருக்கான கதை அமையல. அவரும் அவரோட அடுத்த படத்தை  கமிட் பண்றதுக்கு முன்னாடி ‘உங்க புராஜெக்ட் ரெடினா, இதை தள்ளி வச்சுக்கறேன்...’னு சொல்லிட்டுத்தான் அடுத்த படத்துல நடிச்சார். அறிவழகன், அருண் காம்பினேஷனில் ‘குற்றம் 23’ உருவாக ஒருவகையில் நானும் காரணம். அவர் ஒரு மல்டி டேலன்டட் பர்சன்னு  எல்லாருக்கும் தெரியும். அதை அதிகாரபூர்வமா அறிவிக்கற படமா ‘தடம்’ இருக்கும்.

உங்க முதல் படம் ‘முந்தினம் பார்த்தேனே’ மாதிரி ரொமாண்டிக் காமெடியை எப்ப எதிர்பார்க்கலாம்?

அந்த படம் பார்த்தீங்களா..? நினைவு வைச்சு கேட்கறீங்களே! தேங்க்ஸ். சரியான புரொமோஷன் இல்லாததால அந்தப் படம் ரிலீசானதே  பலருக்குத் தெரியலை. பொதுவா ஸ்கிரிப்ட் எழுத உட்காரும்போது காமெடிகள்தான் நிறையத் தோணும். அதை எல்லாம் எழுதிடுவேன்.  அப்புறம் அடுத்த ஸ்டேஜுல ‘இந்த காமெடி வேணாம்... அந்த காமெடி வேணாம்’னு அதையெல்லாம் அடிச்சுகிட்டே போய் ஒரு கட்டத்துல  அந்த ஸ்கிரிப்ட் த்ரில்லரா வந்து நிக்கும்! சீக்கிரமே ஒரு ரொமாண்டிக் காமெடி ஜானரை என்கிட்ட எதிர்பார்க்கலாம்.த்ரில்லர் ஜானர்ல  எழுத்தாளரா நம்ம மேல கவனத்தை தக்க வைப்பது பெரிய சவால். பார்வையாளர்களை கட்டிப்போடணும். கதைல புதிய தளத்தைப் பத்தி  சொல்றப்ப புதுத் தகவல்களை சொல்லணும். ஒரு கேரக்டரை அறிமுகப்படுத்தறப்ப பின்னணியை சுவாரசியமா விளக்கணும். இது  எல்லாமே நம்பற மாதிரி இருக்கணும். இது ஸ்கிரிப்ட் ரைட்டரோட கடமை!

என்ன சொல்றார் அனுராக் காஷ்யப்..?


‘இமைக்கா நொடிகள்’ல அவருக்கு டப்பிங் பேசியிருக்கேன்! அனுராக் சார் ஒரு நல்ல ரைட்டர், டைரக்டர். அவர்கிட்ட பாராட்டு வாங்கினது  பெருமையா இருக்கு. அவரோட ‘பான்ச்’ படம் ஒரு க்ரைம் த்ரில்லர். 2003ல் வந்த படம். இன்னும் அது எங்கயும் ரிலீஸ் ஆகலை.  ஃபெஸ்டிவலுக்கான படமா கொண்டு வந்திருப்பார். அதைப் பார்க்கணும்னு அவர்கிட்ட விரும்பிக் கேட்டேன். டிவிடி அனுப்பறேன்னு  சொல்லியிருக்கார். ‘இமைக்கா நொடிகள்’ அஜய் ஞானமுத்துவும் ரொம்பவே பாராட்டினார். ‘என் மைண்ட்ல இருந்த வாய்ஸை பர்ஃபெக்ட்டா  கொண்டு வந்துட்டீங்க’னு சந்தோஷப்பட்டார். இப்படி இயக்குநரா, டெக்னீஷியனா இருக்கறவங்ககிட்ட பாராட்டு வாங்கினதை பெரிய  விஷயமா நினைக்கறேன்.

-மை.பாரதிராஜா