விண்வெளியில் மனிதர்கள்!



அசத்தும் இஸ்ரோ

நிலவை சோதித்து அதில் நீர் இருக்கிறதென இஸ்‌ரோ முதன்முதலில் நாசாவுக்கு முன் கண்டுபிடித்து உலகெங்கும் அப்ளாஸ் வாங்கியது.  இப்போது அடுத்த ப்ராஜெக்ட் மனிதர்களை நிலவுக்கே அனுப்பி வைத்து ஆராய்ச்சி செய்வது!இஸ்‌ரோ தனது பிரமாண்ட சாட்டி லைட்  சாதனைகளை ஆண்டுக்கு வெறும் ரூ.6 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் சாதித்துள்ளது. கடந்த சுதந்திர தினத்தன்று, பிரதமர் மோடி, “2022ம்  ஆண்டு இந்தியர்கள் விண்வெளியில் பறப்பார்கள்...” என பெருமிதமாக தன் கனவை வெளியிட்டார். நாற்பது மாதங்களில் இஸ்‌ரோ  இதற்கான திட்டங்களை தயாரித்து விடமுடியுமா... என்று கேள்வி கேட்டால், ஏன் முடியாது என்கிறது இஸ்‌ரோவின் தடதடக்கும்  அடுத்தடுத்த ஆராய்ச்சிகள்.

விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் கஹானி யான் விண்கலத்தின் திட்ட மதிப்பீடு ரூ.10 ஆயிரம் கோடி; 15 ஆயிரம் பேர்களுக்கு  வேலைவாய்ப்பும் உறுதி. விலங்குகளை விண்கலத்தில் அனுப்பி சோதிக்காமல் நேரடியாக வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் முதல்  நாடு, இந்தியா! ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டில் பூமியிலிருந்து 400 கி.மீ. தொலைவில் வீரர்களின் கலம் பத்து நாட்கள் அங்கு  நிறுத்தப்பட்டிருக்கும். இந்திய விமானப்படையிலிருந்து இந்த வரலாற்றுப் பயணத்திற்கான வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  இவர்களுக்கான பயிற்சி வெளிநாடுகளிலும் பெங்களூருவிலுள்ள விண்வெளி மருத்துவக் கழகத்திலும் நடைபெறும். இவர்களுக்கான  உணவை மைசூருவிலுள்ள மத்திய உணவுத்தொழில்நுட்பக் கழகம் தயாரித்துத் தர பொறுப்பேற்றிருக்கிறது.

திட்டம் வென்றால், ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நாடு என்ற பெருமைக்குரிய  பட்டியலில் இந்தியாவுக்கும் இடம் கிடைக்கும். சந்திரயான் 2 தயாரிப்பு 2007ம் ஆண்டு தொடங்கியது. 2011ம் ஆண்டு விண்

கலத்திற்கான தொழில்நுட்ப உதவிகளை (lander) தருவதாகக் கூறிய ரஷ்யா திடீரென கைவிரித்ததால்தான் திட்டம் தள்ளிப்போனது.  அடுத்தாண்டு ஜனவரி 3 அன்று சந்திரயான் 2-வை விண்ணில் ஏவ இஸ்‌ரோ திட்டமிட்டிருக்கிறது.

சந்திரயான் 2-வின் நோக்கம், பலரும்  அறியாத தெற்குப்பகுதி சந்திரப்பரப்பை ஆராய்வது. விண்கலத்திலுள்ள ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என மூன்று பகுதிகளையும் இந்திய  ஆராய்ச்சிக்குழுவே தயாரித்துள்ளது!  இதோடு செவ்வாய் கோளையும் ஆராய MOM (Mars Orbit Mission) திட்டத்துடன் ரெடியாக உள்ளது  இஸ்‌ரோ. ஒரு கி.மீ.க்கு 7 ரூபாய் (78 கோடி கி.மீ) என எகானமி ரூட்டில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செவ்வாய்க்கு விண்கலத்தை  அனுப்பவிருக்கிறது இஸ்‌ரோ. இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழக நிர்வாகங்களை கஹானியான் திட்டத்திற்கான சோதனைகளைச்  செய்ய இஸ்ரோ கோரியுள்ளது. கணக்கு போட்டு ஜெயிக்கிறோம்!            

- ச.அன்பரசு