தேனியில் இருந்துகிட்டே மெகா சீரியல்களுக்கு எழுதமுடியுது!



தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் ‘நாயகி’ வசனகர்த்தா நந்தன் ஸ்ரீதரன்

குடும்ப உறவுகளின் உன்னதத்தை உணர்த்திய ‘பொம்மலாட்டம்’, ‘பிரியமானவள்’, ‘தெய்வமகள்’, இப்போது ‘நாயகி’ ஆகிய  நெடுந்தொடர்களுக்கு வசனம் எழுதியவர், எழுதுபவர் நந்தன் ஸ்ரீதரன். பெரியதிரையில் ‘இராமேஸ்வரம்’, ‘மெய்காண்’ என பயணித்தவர்.  தேனியில் வசித்து வரும் நந்தனுக்கு போன் பண்ணினால், ‘காற்றினிலே வரும் கீதம்...’ என எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாளின் குரல்  இனிக்கிறது.‘‘என் உலகம் நண்பர்களால் ஆனது. இப்ப ஒரு டயலாக் ரைட்டரா உங்க முன்னாடி நான் நிற்கக் காரணமே அவங்கதான். குறிப்பா இயக்குநர்கள் செல்வம், தாமிரா, ரைட்டர்கள் எஸ்.குமரேசன், வே.கி.அமிர்தராஜ், பாஸ்கர் சக்தினு என்னைச் சுத்தி பெரிய நட்பு  வட்டமே இருக்கு.

அத்தனை பேருமே என் வளர்ச்சியில் அக்கறையுள்ளவங்க.என்னைப் பொறுத்த வரை சினிமா வேறு சீரியல் வேறுனு பிரிச்சுப்  பார்த்ததேயில்ல. எல்லாமே எழுத்துதான். ரெண்டு இடங்கள்லயும் எமோஷன்ஸ் ஒண்ணுதான். சிரிப்பும் அதேதான். என்ன... சினிமால  ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா சொன்னா எடுபடும். மெகா தொடர்கள்ல அதை ஆலாபனை செய்யணும். சினிமா கூட ஒப்பிட்டா சீரியல்ல  சுதந்திரம் உண்டு. நாற்பது பக்கங்களுக்குக் கூட வசனம் எழுத இங்க ஸ்கோப் உண்டு. மத்தபடி இரண்டுக்கும் பெருசா வித்தியாசமில்ல.  எங்க எழுதினாலும் எழுத்து எழுத்துதான்!’’உறுதியாகச் சொல்லும் நந்தன், இப்போது தேனியில் வசிக்கிறார்.

‘‘சொந்த ஊர் தேனி பக்கம் சின்னமனூர். பிற்காலப் பாண்டியர்கள் வரலாற்றுல எங்க ஊருக்கு தனி இடம் இருக்கு. சினிமாலயும்  சின்னமனூர் ஃபேமஸ். சினிமா பாடல் பெற்ற ஸ்தலமும் கூட! ஒரு காலத்துல பாட்டு சீன் எடுக்கணும்னா எங்க ஏரியாவுக்கு வருவாங்க.  ரொம்ப எளிமையான குடும்பத்துல வளர்ந்தேன். அப்பா, ஜானகிராமன். மின்சாரத் துறைல அடிப்படைத் தொழிலாளியா வேலைல சேர்ந்து  ஃபோர்மேனா உயர்ந்து ஓய்வு பெற்றவர். அம்மா, பாலாம்பாள். இல்லத்தரசி. நான் மூத்த பையன். எனக்கு ரெண்டு தம்பிங்க, ஒரு  தங்கை.சின்ன வயசுல இருந்தே கணக்கு மேல தீராத மோகம். அதனாலயே பி.எஸ்சி. மேத்ஸ் எடுத்தேன். அவ்வளவுதான். படிப்பு மேல  இருந்த ஆர்வமே போயிடுச்சு. பர்சனலாவும் வேற சில பிரச்னைகள். ரெண்டு செமஸ்டரோட படிப்பை பாதில விட்டுட்டேன்.

காலேஜ் படிப்பு தடைப்பட்டதும் அக்கம்பக்கத்துல இருந்த பத்தாவது, பனிரெண்டாவது படிக்கிற பசங்களுக்கு டியூசன் எடுத்தேன். அதுல  நல்ல பெயரும் எடுத்தேன். அவ்வளவு ஏன், பி.எஸ்சி. மேத்ஸ் படிக்கற பசங்களுக்கும் டியூசன் எடுத்தேன்னா பார்த்துக்குங்க. அப்பதான்,  படிப்புக்கும் அறிவுக்கும் தொடர்பே இல்லைனு புரிஞ்சுக்கிட்டேன்...’’ புன்னகைக்கும் நந்தன் ஸ்ரீதரன், இதன்பிறகு சிறுகதைகள் எழுத  ஆரம்பித்திருக்கிறார்.‘‘‘ஆனந்த விகடன்’, ‘தினமணிகதிர்’னு பல பத்திரிகைகள்ல என் சிறுகதைகள் வெளியாகியிருக்கு. நிறைய புக்ஸ்  படிக்க ஆரம்பிச்சேன். படிக்கப் படிக்க நான் எழுதினதெல்லாம் கதைகளே இல்லைனு தோண ஆரம்பிச்சது. எழுதறதை நிறுத்திட்டேன்!

தொடர் வாசிப்புக்கு அப்புறம் பக்குவம் வந்ததா நானே உணர்ந்தபிறகு திரும்பவும் எழுதத் தொடங்கினேன். ‘பாலம்’னு ஒரு தட்டச்சு  பத்திரிகை நடத்தினேன். வீதி நாடகக் குழுக்களோட நட்பு ஏற்பட்டது. பெண் சிசுக் கொலைக்கு எதிரா விழிப்புணர்வு நாடகம் உட்பட நிறைய  வீதி நாடகங்கள் எழுதினேன்...’’ என்று சொல்லும் நந்தனை சென்னைக்கு வரவழைத்தது இப்போது ‘வாணி ராணி’ சீரியலுக்கு ஸ்கிரிப்ட்  எழுதும் எஸ்.குமரேசன்.‘‘அவர் எங்க ஊர்க்காரர். நண்பர். ரெண்டு பேரும் சேர்ந்து வீதி நாடகங்கள் நடத்தியிருக்கோம். அவர் சென்னைக்கு  புறப்பட்டப்ப என்னையும் கூப்பிட்டார். அப்ப போக முடியலை. சென்னைக்கு அவர் போனதும் வரச் சொல்லி வற்புறுத்தினார். சரினு  கிளம்பிட்டேன்.

இயக்குநர் தாமிரா, ‘ராமேஸ்வரம்’ இயக்குநர் எஸ்.செல்வம், பாஸ்கர் சக்தி நட்பு கிடைச்சது. அப்புறம் தனியார் சேனலோட திரைக்கதை  டீம்ல இருந்தேன். நண்பர்கள் மூலமா மின் பிம்பங்கள் தயாரிச்ச ‘இணைகோடுகள்’ தொடருக்கு வசனம் எழுதினேன். என் முதல்  சின்னத்திரை பயணம் அதுதான். பாஸ்கர் சக்தி நண்பர் மட்டுமில்ல. நல்ல சகோதரர். அப்ப அவர் ‘கோலங்கள்’ல பிசி ரைட்டர். என்னை  தன் உதவியாளரா சேர்த்துக்கிட்டார். சின்னத்திரைக்கு எப்படி எழுதணும்னு கத்துக்கொடுத்தவர் அவர்தான். ரெண்டரை வருஷங்கள்  ‘கோலங்கள்’ல பயணிச்சிருக்கேன்..’’ என்ற நந்தனின் பேச்சு சினிமா பக்கம் திரும்பியது.

‘‘நண்பர் செல்வத்துக்கு ‘ராமேஸ்வரம்’ பட வாய்ப்பு கிடைச்சதும், ‘நீதான் வசனம் எழுதறே’னு சொல்லிட்டார்! அவர்கிட்டயே சினிமா  கத்துகிட்டேன். வசனம் எழுதினதோட உதவி இயக்குநராகவும் வேலை பார்க்க விரும்பினேன். அவரோ, ‘நீ அசிஸ்டெண்ட் இல்ல...  அசோசியேட்’னு கூடவே வைச்சுக்கிட்டார்.இதுக்குப் பிறகு செல்வம் ஒரு தெலுங்குப் படம் இயக்கினார். அதுலயும் அவர் கூடவே  இருந்தேன். ‘ராமேஸ்வரம்’ படத்தை தயாரிச்ச கம்பெனியே அடுத்து ‘மெய்க்காண்’ படத்தை தயாரிச்சது. மேஜர் ரவி இயக்கினார். அதுக்கும்  வசனம் எழுதினேன். ஆனா, அந்தப் படம் சில சூழல்களால ட்ராப் ஆச்சு.

அப்புறம் இயக்குநராகும் முயற்சில இறங்கினேன். இந்த நேரத்துல இயக்குநர் தாமிரா கூட நெருக்கமாச்சு. என் படைப்புகளை  பாரபட்சமில்லாம நேர்மையா விமர்சிப்பார்...’’ என்ற நந்தன், இதன்பிறகு மீண்டும் சீரியலுக்குத் திரும்பியிருக்கிறார். ‘‘நண்பர், இயக்குநர்  செல்வம், திரைக்கதை ஆசிரியர் வே.கி.அமிர்தராஜ் சார் மூலமா ‘பிரியமானவள்’ சீரியலுக்கு வசனம் எழுதினேன். அது ப்ரைம் டைம்  சீரியல். நல்ல பெயர் கிடைச்சது. ஆனா, சில காரணங்களால அதுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் ‘தெய்வமகள்’ கிடைச்சது. பிறகு  அமிர்தராஜ் சார் மூலமா ‘நாயகி’க்கு எழுதற வாய்ப்பு வந்தது. இப்ப வரை இயக்குநர் எஸ்.குமரன் - வே.கி.அமிர்தராஜ் டீம்ல நானும்  இருக்கேன் என்பதே சந்தோஷமா இருக்கு. குமரன் சார் அபாரமான திறமைசாலி.

நடிப்பு பத்தி அ.. ஆ... தெரியாதவங்களைக்கூட மெருகேற்றிடுவார். எந்த போர்ஷனை எப்படி பிரசன்ட் பண்ணணும்னு அவருக்கு நல்லாவே  தெரியும். அதனாலதான் ‘திருமதி செல்வம்’, ‘தென்றல்’, ‘தெய்வ மகள்’, இப்ப நாயகி’னு மெகா ஹிட் அடிச்சுக்கிட்டே இருக்கார்!’’ நெகிழும்  நந்தன், தேனியில் இப்போது வசிப்பதற்குக் காரணம் இருக்கிறது.‘‘என் மனைவி மீனாட்சி, இசைத்துறைல எம்.ஃபில். முடிச்சிருக்காங்க.  சென்னைல ஒரு ஸ்கூல்ல மியூசிக் டீச்சரா இருந்தாங்க. சென்னை மழை வெள்ளத்தப்ப எல்லார் மாதிரி நாங்களும் பல கஷ்டங்களை  அனுபவிச்சோம். அதுக்குப் பிறகு ஏனோ சென்னைல வசிக்கப் பிடிக்கல. சொந்த ஊருக்கே திரும்பிட்டோம்.

மீனாட்சியும் நானும் pet lovers. சென்னை வீட்ல நிறைய நாய்க்குட்டிகள் வளர்த்தோம். இப்ப, தேனியிலும் அது தொடருது. எங்களைச் சுத்தி  செல்லங்கள் இருக்கறதால குழந்தை இல்லை என்கிற ஏக்கம் எங்களுக்கில்ல! தேவைப்பட்டா சென்னைக்கு வந்துட்டுப் போறேன். ‘மேற்குத்  தொடர்ச்சி மலை’ லெனின்பாரதியும் என் நண்பர்தான். அந்தப் படத்தின் வெற்றி எனக்கு நம்பிக்கை கொடுத்திருக்கு!’’ என்று சொல்லும்  நந்தன் ஸ்ரீதரன், ‘தாழி’, ‘நந்தலாலா’ என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும், ‘ஆயிரம் நீர்க்கால்கள்’ என்ற ஒரு கவிதைத் தொகுப்பையும்  எழுதியிருக்கிறார்.            

-மை.பாரதிராஜா
படங்கள் :தேனி குமரன்