கர்மம்... கர்மம்!



மீண்டும் ஒரு A டாகூட படம்!

யெஸ். மீண்டும் கிளம்பியிருக்கிறது ‘ஏ’டாகூடமான அடல்ட் கன்டன்ட் ஜானர். ‘ஹரஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு  குத்து’ கொடுத்த ‘வசூல்’ தைரியத்தில் இப்போது ரெடியாகியிருக்கிறது ‘யார் அந்த கருப்பு ஆடு?’. கதை, தயாரிப்பு, இயக்கம், ஹீரோ என  பல பொறுப்புகளைச் சுமந்திருக்கிறார் அறிமுக ஹீரோ விவன். ‘‘படத்தோட சில சீன்களைப் பாக்குறீங்களா ப்ரோ?’’ என பவ்யமாகக்  கேட்டபடி, தன் லேப்டாப்பில் ‘காவியத்தை’க் காட்டுகிறார்.

‘‘சென்சார்ல பார்த்துட்டு, ‘அடல்ட் கன்டன்ட் டயலாக்ஸ் ஓவரா இருக்கே... இதுக்கு கண்டிப்பா ‘ஏ’ சர்ட்டிஃபிகேட்தான் கொடுப்போம்...’னு  சொன்னாங்க. ‘அதான் எங்களுக்கும் வேணும்’னு சொன்னதும் ஷாக் ஆகிட்டாங்க!இது இளைஞர்களுக்கான படம். அவங்க மட்டும் படம்  பார்க்க வந்தா போதும்! ஓப்பனிங் சீனுக்கு டைரக்டர் பார்த்திபன் சார் வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கார்...’’ பரவசத்துடன் பேசுகிறார் விவன்.

ஆக்‌ஷுவலா யார் அந்த கருப்பு ஆடு?

ஹீரோதான். இது டிசம்பர் 31ம் தேதி மாலை ஆரம்பிச்சு நியூஇயர் காலைவரை ஒரு Barல நடக்கற கதை. போதைக்கு அடிமையானவன் அதுல இருந்து எப்படி மீள்கிறான் என்பதுதான் ஒன்லைன். முள்ளு மேல பட்ட சேலையை, சேலை கிழியாமல் சேஃபா  அதிலிருந்து எடுக்கறது மாதிரி ஸ்கிரிப்ட்டை கவனமா செதுக்கியிருக்கோம். போதைக்கு அடிமையான பார் ஓனரா நான் நடிச்சிருக்கேன்.  ஹீரோயின்களா சந்தனாவும், விக்னேஷாவும் நடிச்சிருக்காங்க. சந்தனாவுக்கு இதுல ‘தரமணி’ ஆண்ட்ரியா மாதிரி ஒரு நல்ல கேரக்டர்.

சிவபூஜைல புகுந்த கரடியா புதுமுகம் ராஜ் நடிச்சிருக்கார். சந்தனா, பெங்களூர் மாடல். ‘பர்மா’ படத்துல வில்லியா தன் திறமையைக்  காட்டினவங்க. விக்னேஷா, ‘நேற்று இன்று’ல விமல் ஜோடியா நடிச்ச பொண்ணு. ஒரு புரொமோஷன் பாடலுக்கு சுனிதா கோகோய்  டான்ஸ் ஆடியிருக்காங்க.சினிமா இண்டஸ்ட்ரீல எனக்கு கொஞ்சம் நண்பர்கள் உண்டு. ‘எங்கேயும் எப்போதும்’ சி.சத்யா ரெண்டு பாடல்கள்  இசையமைச்சுக் கொடுத்தார்.

மீதமுள்ள பாடல்களை ஸ்ரீனி பண்ணியிருக்கார். பா.விஜய், சினேகன் தலா ஒரு பாடலை எழுதியிருக்காங்க. ஜி.வி.பிரகாஷும், சைந்தவியும்  சேர்ந்து ஒரு பாடலைப் பாடியிருக்காங்க. இவங்க எல்லாருமே நட்புக்காக உதவயிருக்காங்க. பின்னணி இசையை நவீன்சாம்சன் பெஞ்சமின்  கவனிச்சிருக்கார். அதேபோல படத்துக்கு லி, சங்கர்னு இரண்டு ஒளிப்பதிவாளர்கள். இதில் ’லி’, கேமராமேன் மதி சாரோட அசிஸ்டென்ட்.  இன்னொருத்தரான சங்கர், ஆர்தர்வில்சன் சாரோட உதவியாளர். ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல படிச்ச ஆனந்தியோட எடிட்டிங் படத்துக்கு பலம்.

ஹீரோ, தயாரிப்பு, டைரக்‌ஷன்... சிரமமா இல்லையா..?


நடிகனாகும் கனவோடுதான் சென்னைக்கே வந்தேன். சொந்த ஊர் தேனி பக்கம் ஆண்டிப்பட்டி. எங்க ஊரைச் சுத்தி படப்பிடிப்பு நிறைய  நடக்கும். அதையெல்லாம் பார்த்து சினிமா ஆசை வந்தது. அப்புறம் வைரமுத்து, கஸ்தூரிராஜா ஊர்கள் பக்கத்துலதான் இருக்கு.  சென்னைக்கு போனா அவங்களை மாதிரி ஆகலாம்னு கிளம்பி வந்தேன்.நமக்கு ஒரு பிரேக் கிடைக்கணும்னா சுயபரிசோதனை முயற்சி  பண்ணித்தான் ஆகணும். இதை ‘சுப்ரமணியபுரம்’ல சசிகுமார் புரிய வைச்சார். அதில் அவரே நடிச்சு, தயாரிச்சு, இயக்கியிருப்பார். அவரோட  ப்ளஸ், மைனஸ் தெரிஞ்சு அவர் பண்ணினதால அந்தப் படம் பேசப்பட்டுச்சு.

அதேமாதிரி என் பலம், பலவீனமும் தெரிஞ்சு இந்த முயற்சில  இறங்கியிருக்கேன். கதையும் என் மனசிலேயே ஊறிப்போனதால இந்தப் படத்தை நானே தயாரிச்சு, இயக்க முடிவு பண்ணினேன். அடல்ட்  கன்டன்ட் ஜானரைப் பொறுத்தவரை பாலிவுட் இயக்குநரும் ‘இமைக்கா நொடிகள்’ வில்லனுமான அனுராக் காஷ்யப்தான் என் ரோல்மாடல்!  அவரோட ‘தேவ் டி’ ரொம்ப பிடிச்ச படம். அப்படி ஒரு முயற்சியாதான் என் படத்தையும் பார்க்கறேன்!        

-மை.பாரதிராஜா