கவிதை வனம்



வேறெதுவுமில்லை

அள்ளிக் கொடுத்த
அத்தனை காதலையும்
அபகரித்துக் கொண்டு
நிலையில்லாமல்
தவிக்கவிடுகிறாய் மனதை
தவணை முறையிலாவது
திருப்பிக் கொடுத்துவிடு
உன் நினைவுகளைத் தவிர
வேறெதுவுமில்லை என்னிடம்.

- சங்கீதா பிரபு
 

கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்  

காலையிலிருந்து
ஹோட்டல் என்ற
பெயர்ப்பலகையைக்
கையில் தூக்கியபடி
வெய்யிலைப் பொறுத்து
காற்றைப் பொறுத்து
பசி பொறுத்து
வாகனப் புகை பொறுத்து
கூட்டமெல்லாம்
முடிந்த வேளையில்
இப்பொழுதுதான்
கூலியெனக் கொடுத்த
மிச்ச உணவை
சாப்பிட அமர்ந்திருக்கிறார்
அப்பெரியவர்
கடையைச் சாத்து
கடையைச் சாத்து
என ரோந்து
சுற்றும் காவலர்களே
கொஞ்சம்
பொறுத்துக்கொள்ளுங்கள்.

- சௌவி