COFFEE TABLE



ஜிம் பார்ட்டீஸ்

‘ஃபிட்னஸுக்காக ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யறேன்...’ என்கிற பெயரில் சிலர் அடிக்கின்ற லூட்டிகளை மொத்தமாகத் தொகுத்து சின்னதொரு வீடியோவாக்கியிருக்கிறார் கரன் ஜேல். காமெடி குலுங்கும் அந்த வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘Types of Stupid People at Gym I Karan Jale’ என்ற தலைப்பில் அவர் பதிவிட, லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து வைரலாக்கி வருகின்றனர்.

ஹோம்லி ராய்

உற்சாகத்தில் பூரிக்கிறார் ராய் லட்சுமி. மலையாளத்தில் மம்முட்டியுடன் அவர் நடித்த ‘ஒரு குட்டநாடன் ப்ளாக்’ ஓணம் அன்று ரிலீஸ் ஆவதுதான் அந்த மகிழ்ச்சிக்குக் காரணம். தமிழில் ‘நீயா 2’வில் கிளாமராக நடித்திருக்கும் ராய்க்கு ஹோம்லி கேரக்டர்கள் மீது பிரியம் வந்திருக்கிறது. மம்முட்டியுடன் செம ஹோம்லியான ஸ்டில் ஒன்றை சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் தட்டிவிட, ஹோம்லி ராய்க்கு லைக்ஸ்கள் குவிகின்றன.

துணிச்சல்

பாகிஸ்தானின் முக்கிய நகரமான லாகூரில் மழை ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறது. கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு பெரு மழை அங்கே பெய்திருக்கிறது. சாலைகள் எல்லாம் ஏரிகளாக காட்சியளிக்கின்றன. வெள்ளப்பெருக்கு வீடுகளையும் விட்டுவைக்கவில்லை. ஆறு பேர் இதுவரை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருக்கின்றனர். விஷயம் இதுவல்ல. உயிரைத் துச்சமென மதித்து, மிதவையின் துணையுடன் வெள்ளத்தில் இறங்கி, லாகூரில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை உலகுக்குத் தெரிவித்திருக்கிறார் நிருபர் ஒருவர். ‘‘நான் நீச்சல் குளத்துக்கு நடுவில் மிதக்கவில்லை. சாலையின் மீது இருக்கிறேன்...’’ என்கிற அவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

பவர் பேங்க்

ஆப்பிள் போன் பயனாளிகள் சொல்கின்ற முக்கிய குறை, ‘பவர் பேங்க் சரியாக வேலை செய்வதில்லை...’ அல்லது ‘பவர் பேங்க் மூலம் சார்ஜ் பண்ண ரொம்ப நேரமாகுது...’ என்பதுதான். இந்தக் குறையை நிவர்த்தி செய்ய ஐ போனுக்கு என்று பிரத்யேகமான பவர் பேங்க்கை வடிவமைத்திருக்கிறது ‘பெல்கின்’ நிறுவனம். 10,000mAh திறன் கொண்ட இந்த பேங்க்கில் இரண்டு போர்ட்டுகள் உள்ளன. லைட் வெயிட்டுடன் இரண்டு வருட உத்தரவாதம் கொண்ட இந்த பவர் பேங்க்கின் விலை ரூ.4,200.

தியாகங்கள்

பிரிட்டனின் இளைய சமுதாயம் ஸ்மார்ட்போனுக்காக எதையெல்லாம் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறது என்பதைப் பற்றிய ஆய்வறிக்கைதான் ஹாட் டாக். ‘‘ஆறு அறிவில் ஓர் அறிவு போனால்கூட பரவாயில்லை...’’ என 23 சதவீதத்தினரும், ‘‘குடியை விட்டுவிடுகிறேன்...’’ என 38 சதவீதத்தினரும், ‘‘உடலுறவு கூட வேண்டாம்...’’ என்று 15 சதவீதத்தினரும் சொல்லியிருக்க, 10 சதவீதத்தினர் ‘‘ஒரு விரலைக்கூட இந்த நவீன கருவிக்காக தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம்...’’ என்று சொல்லி அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறார்கள். இந்தியாவிலும் இப்படி ஓர் ஆய்வு செய்து உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வாருங்கள்!              

- குங்குமம் டீம்