நீட்டால் பழிவாங்கப்பட்ட மொழிப்போர் தியாகியின் பேத்தி!



ஆம். தமிழ் மொழிக்காக உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகி அரங்கநாதனின் பேத்தி கோமதிக்குத்தான் இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கிறது. இத்தனைக்கும் பனிரெண்டாம் வகுப்பில் அவர் 1121 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். சென்னை விருகம்பாக்கத்தில் தன் அப்பாவின் பெயர் தாங்கிய ‘அரங்கநாதன் தெரு’வில் சிறிய கூரை வீட்டில் வசிக்கிறார் அன்பழகன். இதே வீட்டில்தான் அரங்கநாதன் அய்யாவும் வாழ்ந்தார் என்பது வெறும் குறிப்பல்ல!

‘‘தாத்தா இறந்ததை பாட்டி மல்லிகாவால தாங்கிக்க முடியலை. அந்தத் துயரமே அவரது மனநிலையை பாதிச்சுடுச்சு. அப்ப  அப்பா அன்பழகனுக்கு மூணு வயசு. அப்பாவையும் சேர்த்து தாத்தாவுக்கு மூணு பசங்க. எல்லாரையும் தாய்வழி உறவினர்கள்தான் பார்த்துக்கிட்டாங்க...’’ என்று சொல்லும் கோமதி, பிறந்தது முதலே தன் பாட்டியைப் பார்த்து வருகிறார். ‘‘அரை மனநிலைல ஏதேதோ பேசுவாங்க. மனசுக்கு கஷ்டமா இருக்கும். அதனாலயே ஆறாவது படிக்கிறப்ப மருத்துவர் ஆகணும்... பாட்டி மாதிரி இருக்கிறவங்களுக்கு உதவி செய்யணும்னு முடிவு பண்ணினேன். படிப்பு மட்டும்தான் நமக்கு ஒரே துணைனு புரிஞ்சுக்க அதிக நாள் எடுக்கலை.

விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா பள்ளில +2 படிச்சேன். பயோ மேத்ஸ் குரூப். அப்பா  டிவி  ஷோரூம்ல க்ளீனரா இருக்கார். அம்மா வீட்டைப் பார்த்துக்கறாங்க. டியூஷன் வைச்சு படிக்கிற அளவுக்கு வசதி இல்ல. அப்பாவுக்கு வர்ற குறைந்த ஊதியத்துலதான் நாங்க எல்லாரும் வாழ்ந்துட்டு இருக்கோம். அதனால பள்ளில சொல்லிக் கொடுக்கறதை உன்னிப்பா கவனிச்சு படிப்பேன். அப்பதான் நீட் பத்தி பள்ளில சொன்னாங்க. அதுக்காக அரசு தரும் பயிற்சில என்னையும் இன்னொரு பெண்ணையும் தேர்வு செஞ்சு ஓ.எம்.ஆர்.ல இருக்கிற சத்யபாமா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பினாங்க.

நாங்க போன இரண்டாம் நாளே, என் கூட வந்த பொண்ணு அங்க இருக்க முடியலைனு திரும்பிட்டாங்க. நான் 23 நாளும் அங்கயே இருந்து படிச்சேன். கல்லூரிப் பேராசிரியர்கள்தான் நீட்டுக்கான பாடத்தை எடுத்தாங்க. ஆங்கிலத்துலயே வகுப்பு நடந்ததால ஆரம்பத்துல புரிஞ்சுக்க கஷ்டமா இருந்தது. அப்புறம் சமாளிச்சுக்கிட்டேன். நீட் எழுத தைரியமும் வந்தது! எக்ஸாம் அப்ப என்ன மாதிரி டிரஸ் போட்டுக்கணும்... எதெல்லாம் எடுத்துட்டு போகக் கூடாதுனு தெளிவா சொல்லியிருந்தாங்க. அந்த விஷயத்துல எந்தப் பிரச்னையும் இல்ல.

ஆனா, தேர்வுல என்.சி.ஆர்.டி. புத்தகத்துல இருந்து கேள்விகள் கேட்டிருந்தாங்க. அந்தப் புத்தகத்தை நாங்க கண்ணால கூடப் பார்த்ததில்ல. படிச்ச பாடத் திட்டத்துல இருந்து 20 சதவிகிதத்துக்கும் குறைவாதான் வினாக்கள் இருந்தது. முடிந்த வரை நல்லா எழுதிட்டு வந்தேன். ஆனா, மருத்துவப் படிப்புக்கு போதுமான மதிப்பெண் நீட்ல கிடைக்கலை...’’ என்கிறார் கோமதி.

இந்தப் புள்ளியைத்தான் கல்வியாளர்கள் வட்டமிட்டுக் காட்டுகிறார்கள். என்.சி.ஆர்.டி. பாடங்களிலிருந்தே அதிகமான கேள்விகள் கேட்கப்படும் என்றால் அரசுப் பள்ளி களில் நடத்தப்படும் பாடங்களுக்கு என்ன மதிப்பு? இந்தியை நுழையவிட்டால் மாநில அரசுகளின் உரிமைகளில் மெல்ல மெல்ல மத்திய அரசு தலையிட ஆரம்பிக்கும் என்ற தொலைநோக்குப் பார்வையுடனேயே அரங்கநாதன் அய்யா அதை எதிர்த்தார். மொழிப்போர் தியாகியானார். அவர் எது குறித்து அச்சப்பட்டாரோ அது அவரது பேத்தியின் வாழ்க்கையிலேயே நடந்திருப்பதுதான் துயரம். என்றாலும் எக்காரணம் கொண்டும் தன் கனவிலிருந்து பின்வாங்க கோமதி தயாராக இல்லை. அடுத்த ஆண்டு நீட் தேர்வு எழுதி கண்டிப்பாக மருத்துவம் படிப்பேன் என உறுதியுடன் இருக்கிறார்.

இதற்கான பண உதவிக்காக அவர் தடுமாறியபோது திமுகவின் செயல் தலைவரான மு.க.ஸ்டாலின் அவர்கள் கோமதியை அழைத்து பயிற்சிக்கான மொத்த செலவையும் தாங்கள் ஏற்பதாகவும், நீட்டில் வெற்றி பெற்று மருத்துவம் படிக்க ஆரம்பித்ததும் கல்லூரிச் செலவையும் தாங்களே பார்த்துக் கொள்வதாகவும் உறுதி அளித்திருக்கிறார். ‘‘தாத்தாவை நினைச்சு ரொம்ப பெருமைப்படறேன்!’’ என்று நெகிழ்கிறார் கோமதி.

- திலீபன் புகழ்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்


மொழிப் போர்

மத்திய அரசு இந்தியைத் திணிக்க முற்பட்டபோது தமிழகமே இதற்கு எதிராகத் திரண்டது. போராடியவர்களில் பலர் அதிகம் படிக்காதவர்கள். என்றாலும் தாய்மொழிக் கல்வியே அறிவை பட்டை தீட்டி செழுமைப்படுத்தும் என்ற தெளிவு அவர்களுக்கு இருந்தது. அதனாலேயே முழுமூச்சுடன் எதிர்த்தார்கள். 1965, ஜனவரி 26 அன்று, இந்தி ஆட்சி மொழியாகும் என மத்திய அரசு முடிவெடுத்திருந்தது. தமிழே மூச்சாக வாழ்ந்த சிவலிங்கம் அன்றைய தினம் தன்னைத் தீக்கு இரையாக்கினார். அவரது தியாகம் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த அரங்கநாதனை உலுக்கியது. திராவிட இயக்கப் பற்றாளரான அவர், வீர விளையாட்டுகளைக் கற்றுத் தேர்ந்தவர். உடற்பயிற்சிக் கூடம் அமைத்து இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்து வந்தவர். தமிழ் மொழி மீது இந்தி ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க ஜனவரி 27 நள்ளிரவில் தீக்குளித்தார்.

அப்போது அவர் எழுதியிருந்த கடிதத்தில், ``இந்திக்கு வால் பிடிப்பவர்களே, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று சொல்லிவிட்டு இந்தியைப் புகுத்துகிறீர்களே! உங்களுக்கு இதோ நான் தரும் பரிசு! தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!’’ எனக் குறிப்பிட்டிருந்தார். அரங்கநாதனுக்கு அப்போது வயது 34. மனைவியும் மூன்று குழந்தைகளும் இருந்த நிலையில், தாய்மொழிக்காக இந்தத் தியாகத்தைச் செய்தார். எண்ணற்றவர்கள் இதனை அடுத்து மொழிப்போர் தியாகியானார்கள். மாநிலம் தழுவிய போராட்டத்தால் தங்கள் முடிவிலிருந்து மத்திய அரசு பின்வாங்கியது. இந்தித் திணிப்பு நிறுத்தப்பட்டது. அரங்கநாதன் அய்யாவின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள சுரங்க வழிச்சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது!