18 வயதில் இயக்குநர் ஆனேன்!



தன் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார் சுந்தர் கே.விஜயன்

மெகா தொடர் இயக்குநர்களில் சுந்தர் கே.விஜயனுக்கு தனியிடம் உண்டு. சன் டிவியில் வெளியான ‘குங்குமம்’, ‘ஜன்னல்’, ‘ஊஞ்சல்’, ‘அண்ணாமலை’, ‘நிறங்கள்’, ‘அலைகள்’, ‘செல்வி’, ‘அரசி’ என அவர் இயக்கிய சூப்பர் ஹிட் தொடர்களின் லிஸ்ட் நீளமானது. நடிகர் திலகம் சிவாஜியை வைத்து அதிக படங்கள் இயக்கிய கே.விஜயனின் மகன்தான் இவர் என்பதை உலகம் அறியும். ‘‘உண்மையிலேயே எங்கப்பா தான் எனக்கு மிகப்பெரிய ப்ளஸ்...’’ என்றுதான் பேசவே ஆரம்பிக்கிறார் சுந்தர் கே.விஜயன்.

‘‘ஒரு இயக்குநரா என் பயணம் பெரியதிரைல ஆரம்பிச்சது. ‘ரேவதி’, ‘வெளிச்சம்’, ‘என்னருகே நீ இருந்தால்’னு மூணு படங்களை அடுத்தடுத்து டைரக்ட் பண்ணினேன். ஆனா, சினிமால சரியான பிரேக் கிடைக்கல. அந்த டைம்ல என் உறவினர் முரளிதர், ‘சன் டிவினு புதுசா ஒரு சேனல் வந்திருக்கு. அதுல ஒரு வீக்லி தொடர் தயாரிக்கப் போறேன். நீதான் அதை டைரக்ட் பண்றே’னு சொன்னார். அந்த வாய்ப்பை சந்தோஷமா ஏத்துகிட்டு சில்க் ஸ்மிதாவை வைச்சு ‘பார்வைகள்’ இயக்கினேன். சன்ல வெளியான முதல் தொடர் அதுதான்!’’ மலர்ச்சியுடன் சொல்கிறார் சுந்தர் கே.விஜயன்.

‘‘அந்த சீரியலை சினிமா மாதிரியே பாட்டு, நீச்சலுடையில் சில்க்னு கமர்ஷியலா பண்ணியிருப்பேன். அப்புறம்தான் டிவி என்பது வீட்டு டிராயிங் ரூம் மீடியானு புரிஞ்சுது. பிறகு இயக்கின தொடர்கள்ல சினிமா மாதிரி செய்யறதை தவிர்த்தேன். அப்பா கே.விஜயன், திருச்சி பொன்மலை ரயில்வேல எலட்ரீஷியனா இருந்தவர். நடிப்புல அவருக்கு ஆர்வம் அதிகம். ரயில்வே வேலைகளுக்கு இடைல நாடகங்கள்ல நடிப்பார். அம்மா சகுந்தலை கே.விஜயன், பரத நாட்டியக் கலைஞர். இரண்டு பேரும் ஸ்டேஜ் ஷோக்கள்ல அறிமுகமாகி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.

சின்னச் சின்ன கேரக்டர்கள்ல சினிமால நடிச்சபிறகு தான் அப்பா இயக்குநரானார். கறுப்பு வெள்ளை காலத்துல அவர் இயக்கிய முதல் படம், ‘காவல் தெய்வம்’. சிவகுமாரும் லட்சுமியும் அதுலதான் அறிமுகமானாங்க. சிவாஜி சார் மெயின் ரோல் பண்ணியிருப்பார். அதுக்கு அப்புறம் நடிகர் திலகத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி அவர் நடிச்ச 28 படங்களை இயக்கினார். தன் வாழ்நாள்ல அப்பா 68 படங்களை டைரக்ட் செய்திருக்கார். நூறு படங்கள்ல நடிச்சிருக்கார்...’’ என அப்பாவைக் குறித்து வியப்புடன் பேசுபவர், மூத்த மகனாக பிறந்ததில் தனக்குப் பெருமையே என்கிறார்.   

‘‘எனக்கு ஒரு தம்பியும், இரண்டு தங்கைகளும் இருக்காங்க. அப்பாவைப் பார்த்து எனக்கும் சினிமா ஆசை வந்தது. படிப்பு ஏறலை. ‘இதுக்காக கவலைப்படாதீங்க. சுந்தர்கிட்ட ஏகப்பட்ட திறமைகள் இருக்கு. சினிமாவை அவனுக்கு கத்துக் கொடுங்க’னு எங்க ஸ்கூல் அலமேலு டீச்சர் ஒருநாள் அப்பாகிட்ட சொன்னாங்க. உண்மைல அது ஆசீர்வதிக்கப்பட்ட நேரமா இருக்கணும். இதுக்குப் பிறகுதான் தன் உதவியாளரா அப்பா என்னைச் சேர்த்துக்கிட்டார். அப்ப எனக்கு வயசு 16.

‘சட்டம்’, ‘விதி’, ‘ஓசை’, ‘மங்கம்மா சபதம்’ படங்கள்ல ஒர்க் பண்ணினேன். ‘விடுதலை’ல கோ - டைரக்டர். அப்பா சிவாஜி சார் போர்ஷனை ஷூட் பண்றப்ப ரஜினி - விஷ்ணுவர்த்தன் சார் போர்ஷனை நான் எடுப்பேன்...’’ என நினைவுகூரும் சுந்தர் கே.விஜயன், வாழ்க்கையில் தனக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜி சார்தான் என்கிறார்.

‘‘என் ஒர்க்கை ‘பந்தம்’ படப்பிடிப்புல பார்த்தவர், ‘என் அடுத்தபடத்தை நீதான்டைரக்ட் பண்ற’னு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இப்படித்தான் 18 வயசுல இயக்குநராகி ‘ரேவதி’யை இயக்கினேன். கே.பாக்யராஜ் சார் நடிப்புல அப்பா ‘ரத்தத்தின் ரத்தமே’ இயக்கிட்டிருந்தப்ப இடைல திடீர்னு காலமாகிட்டார். அப்பா சார்புல அந்தப் படத்தோட சில போர்ஷன்ஸை டைரக்ட் பண்ணினேன்...’’ சொல்லும்போதே சுந்தர் கே.விஜயனுக்கு குரல் உடைகிறது. சுதாரித்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

‘‘முதல் படமான ‘ரேவதி’க்கு நல்ல வரவேற்பு கிடைச்சதால, அடுத்து கார்த்திக், ரஞ்சனியை வைச்சு ‘வெளிச்சம்’ இயக்கினேன். ஓரளவு போச்சு. மூணாவது படமான ‘என்னருகே நீ இருந்தால்’க்குப் பிறகு வாய்ப்பு வரலை. பிரேக்குக்காக தவிச்சேன். இந்த இடைப்பட்ட காலத்துல எனக்கு திருமணமாச்சு. அத்தை பெண் காமினியை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மேரேஜுக்கு சுரேஷ் பாலாஜி சார், பூர்ணம் விஸ்வநாதன் மட்டுமே வந்தாங்க...’’ இடைவெளிவிட்டவர் சில நொடிகளுக்குப் பின் தொடர்ந்தார்.

‘‘பெரியதிரைல எதிர்பார்த்த பிரேக் சின்னத்திரைல கிடைச்சது. ‘பார்வைகள்’ சக்சஸ் ஆனதும் ‘பந்தம்’, ‘ஸ்மைல் ப்ளீஸ்’, ‘கேள்வியின் நாயகனே’, ‘என் பெயர் ரெங்கநாயகி’, ‘ஒத்திகை’, ‘மடிசார் மாமி’, ‘ஜன்னல்’, ‘ஊஞ்சல்’, ‘குகன்’, மைக்ரோ மேக்ரோல ‘நிறங்கள்’, ‘மவுனம் ஒரு பாஷை’, ‘யாழினி’னு வரிசையா சீரியல்கள் இயக்கினேன்.

‘அலைகள்’ என்னை உச்சத்துக்கு கொண்டு போச்சு. ‘சித்தி’யும் அதுவும் ஒரே காலகட்டத்துல டெலிகாஸ்ட் ஆச்சு. இந்த இரண்டு சீரியல்களுக்குத்தான் கடுமையான போட்டி. இந்த நேரத்துல சுஜாதா விஜய குமார் மேம் தயாரிப்புல குஷ்பு நடிச்ச ‘குங்குமம்’ தொடரை இயக்க வாய்ப்பு வந்தது. தயங்கினேன். ‘உங்களால் முடியும்’னு விகடன் சீனிவாசன் சார் க்ரீன் சிக்னலும் நம்பிக்கையும் கொடுத்தார். ரெண்டும் நல்ல ரீச். அப்புறம் ‘ஜனனி’ பண்ணினேன். ராடனுக்காக ‘அண்ணாமலை’ பண்ணும் வாய்ப்பு வந்தது. ராதிகா மேமுக்காக 501வது எபிசோடுல இருந்து ஆயிரமாவது எபிசோடு வரை இயக்கினேன்.

தொடர்ந்து ராடன்ல ‘செல்வி’, ‘அரசி’ தவிர தெலுங்கு, கன்னடத்திலும் தொடர்கள் இயக்கியிருக்கேன்...’’ என்று சொல்லும் சுந்தர் கே.விஜயன், தன் உயிரைக் காப்பாற்றியவர் ராதிகா மேம் என்கிறார். ‘‘‘செல்வி’ ஷூட்டுக்காக இலங்கை போயிருந்தப்ப என் பையன் ஈஸ்வரையும் கூட்டிட்டுப் போனேன். கொழும்புல இருந்து கதிர்காமம் வரை படப்பிடிப்புக்கான ஷெட்யூலை ரெடி பண்ணியிருந்தேன்.

இதைப் பார்த்த ராதிகா மேம், ‘ஷூட் பண்ண ஈசியா இருக்கும்’னு அந்த ஷெட்யூலை அப்படியே ரிவர்ஸ்ல மாத்தி அமைச்சாங்க! நாங்க ஷூட்டிங் நடத்திட்டிருந்தப்ப சுனாமி வந்தது. ஏற்கனவே நான் போட்ட ஷெட்யூல்படி படப்பிடிப்பு நடந்திருந்தா யூனிட்ல எல்லார் உயிரும் போயிருக்கும்! ராதிகா மேம்தான் எங்க எல்லாரையும் காப்பாத்தினாங்க!’’ தனிப் புத்தகமே எழுதும் அளவுக்கு அனுபவம் கொண்ட இவரது சீடர்கள்தான் இன்று சின்னத்திரையில் பிசியாக இருக்கும் ஒ.என்.ரத்னம், செல்வம், சுந்தரேஸ்வர், தங்கப்பாண்டியன், அப்துல் உள்ளிட்டோர்.

பெருமையுடன் இதைக் குறிப்பிடும் சுந்தர் கே.விஜயனின் மகன் ஈஸ்வர் எம்பிஏ முடித்துவிட்டு இப்போது சிங்கப்பூரில் போக்குவரத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். மகள் ஷிவானி, பள்ளி மாணவி. ‘‘கூடிய சீக்கிரத்துல இரண்டு மெகா தொடர்களை இயக்கப் போறேன்’’ என்று உற்சாகம் குறையாமல் சொல்கிறார்!

- மை.பாரதிராஜா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்