டிசம்பர் சீசன்னாலே கோபம் வருது...
ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் பரதக் கலைஞர் ஷோபனா ரமேஷ்
‘‘தியாகராஜர் திதி அப்ப திருவையாறுல அவரோட அருமையான கீர்த்தனைகள்ல சிலதை மட்டும் தேர்ந்தெடுத்து கச்சேரிகள்ல பாடுவாங்க. அப்படி மகாகவி பாரதியார் பிறந்தநாள் அப்ப நவரச பாவங்களுடன் ஒரு பரதாஞ்சலி செலுத்தலாம்னு தோணிச்சு. டிசம்பர் 11 அன்று அவரது வாழ்க்கைச் சுருக்கத்தோட தன்னம்பிக்கை துள்ளும் ‘எந்தையும் தாயும்...’, ‘மனதில் உறுதிவேண்டும்...’ மாதிரி பாடல்களைக் கொண்டு இந்த பரதாஞ்சலியை 24 வருஷங்களா நடத்திட்டு இருக்கோம்.
குறிப்பிட்ட இடம்னு இல்ல. கிடைக்கிற இடங்கள்ல எல்லாம் பரதம் பயிலும் குழந்தைகளின் நடனம் சிறக்க இதை நடத்துவது சந்தோஷமா நிறைவா இருக்கு. பாடகர்கள் ஓ.எஸ்.அருண், சுதா ரகுநாதன், உன்னிகிருஷ்ணன்னு பலரும் இந்த முயற்சியை ஊக்குவிக்கறாங்க...’’ நெகிழ்வும் மகிழ்வுமாக பேசுகிறார் கலைமாமணி ஷோபனா ரமேஷ். பரதக் கலைஞர், தொழில் முனைவர், சமூக சேவகி என பன்முகமாக ஜொலிப்பவர். ‘‘அட்வகேட் நண்பர் ரவியாலதான் பாரதியார் பாடல்கள் மேல தனிப்பிரியம் வந்தது. தன்னை பல்லக்குல தூக்கிட்டு வரணும், தன் தேசபக்திப் பாடல்களை ஜமீன்தார்கள் கேட்டு ரசிக்கணும்னு அவர் ஆசைப்பட்டிருக்கார்.
ஆனா, தங்களைப் புகழ்ந்து பாடறதைத்தான் ஜமீன்தார்கள் விரும்பியிருக்காங்க. பாரதியாரின் இந்த நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றும் முயற்சியா பரதாஞ்சலில அவரது உருவச் சிலையை பல்லக்குல சுமந்து வந்தபடி நடனமாடறோம். என் தோழி சாந்தி வெங்கடேஷ், இன்னும் ஒருபடி மேலே! ‘பாரதி ஃபவுண்டேஷன்’ ஆரம்பிச்சு நூற்றுக்கணக்கான கிராமங்களின் வளர்ச்சிக்கு உதவறாங்க...’’ கண்களில் அபிநயத்துடன் சொல்லும் ஷோபனா, ‘கூரியர் சர்வீஸை’ 30 வருடங்களுக்கு முன்பே சென்னையில் தொடங்கியிருக்கிறார்.
‘‘டான்ஸ் புரோகிராமுக்காக ஒருமுறை லண்டன் போயிருந்தேன். அங்கதான் கூரியர் சர்வீஸ் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். 1985ல போஸ்டல் சர்வீஸ்தான் நம்மூர்ல பிரபலம். இந்த சூழல்ல ஒரு கார் ஷெட்டுல ‘ஏர் பேக்’ கூரியர் கம்பெனியை ஆரம்பிச்சேன். போஸ்டல் சட்டப்படி நாங்க ‘லட்டர்’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது. ‘டாகுமென்ட்’னுதான் சொல்லணும். அப்ப ஒருநாளைக்கு நான்கைந்து ஆர்டர்கள் எங்களைத் தேடி வந்தாலே பெரிய விஷயம்.
மெல்ல மெல்ல நம்மூர்ல கூரியர் சர்வீஸ் பரவலாச்சு. எனக்கும் அதுல ஆர்வம் போயிடுச்சு! கிடைத்த அனுபவங்களை வைச்சு ‘ஸ்பெக்ட்ரா’ நிறுவனத்தைத் தொடங்கினேன். செக்யூரிட்டி, ஹவுஸ் கீப்பிங்குக்கான மேன் பவர் நிறுவனம் அது. தமிழகம் முழுக்க கிளைகள் உண்டு. இந்த நிறுவனம் வழியா பள்ளிப் படிப்பைத் தாண்டாதவங்க, குடிகாரக் கணவனால் பாதிக்கப்பட்ட பெண்கள், திருநங்கைகள்னு பலருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துட்டு இருக்கோம்!’’ புன்னகைப்பவர் தஞ்சை மண்ணில் பிறந்து வளர்ந்தவர் என்பதில் பெருமிதம் கொள்கிறார்.
‘‘பூர்வீகம் பாலக்காடு. அப்பா வேதநாராயணன், ஐஏஎஸ் அதிகாரி. அம்மா ஜெயலட்சுமி. அப்பா தஞ்சாவூர் கலெக்டரா இருந்தப்ப நான் பிறந்தேன். அம்மாவுக்கு பரதம் பிடிக்கும். என்னை டான்சராக்கினது அவங்கதான். தஞ்சை சரஸ்வதி மஹால்ல என் அரங்கேற்றம் நடந்தது. அப்புறம் சென்னை வந்துட்டோம். இங்க சரஸ்வதி டீச்சர்கிட்ட நடனப் பயிற்சியைத் தொடர்ந்தேன். சென்னையிலும் ஓர் அரங்கேற்றம் நடந்தது! டாக்டர் கலைஞர், வழூவூரார் மாஸ்டர் தலைமைல அந்த அரங்கேற்றம் சிறப்பாக நடந்தது.
பாடகர் பாலமுரளி கிருஷ்ணா சார், சரஸ்வதி டீச்சர் கூட உலகம் முழுக்க பயணப்பட்டிருக்கேன். நடனங்கள் ஆடியிருக்கேன். பாலமுரளி கிருஷ்ணா சாரோட 14 வருடங்கள் பழகினது யாருக்கும் கிடைக்காத கொடுப்பினை! ரியல் ஜீனியஸ். ரிகர்சலே பண்ண மாட்டார். அவர் விரல் நகம் கடிக்க ஆரம்பிச்சா தீவிரமா சிந்திக்கிறார்னு அர்த்தம். ஒருமுறை கச்சேரிக்காக கும்பகோணம் போயிருந்தோம். திரும்பி வர்றப்ப அரியலூர் ஸ்டேஷன்ல இறக்கி விட்டுட்டாங்க. நள்ளிரவு ஒரு மணிக்குதான் ரயில். நாங்க 11 மணிக்கே ஸ்டேஷன் வந்துட்டோம். கும் மிருட்டு. பெரிய ஆலமரத்துக்குப் பின்னாடி நெத்தி நிறைய விபூதியோடு ஸ்டேஷன் மாஸ்டர் எட்டிப் பார்த்தார். வேற ஈ, காக்கா கூட அங்க இல்ல.
அந்த நிசப்தமான தருணத்துல தன் அப்பா எப்பவோ கத்துக் கொடுத்த அஷ்டபதி பாட்டு ஒண்ணு திடீர்னு சாருக்கு நினைவு வந்தது. பல வருஷங்களா ஞாபகத்துக்கு வராத பாட்டு அது! போதாதா... உற்சாகமாகி பிளாட்பாரத்துலயே பாலமுரளி கிருஷ்ணா சார் பாட ஆரம்பிச்சிட்டார்! டக்குனு நானும் அங்கயே அபிநயம் பிடிச்சு ஆட ஆரம்பிச்சிட்டேன். மறக்கவே முடியாத அனுபவம் அது...’’ என சிலிர்க்கும் ஷோபனா, டிசம்பர் சங்கீத சீசன் என்றாலே கோபமாகிறார்.
‘‘வெளிநாட்டுல வாழற தமிழர்கள் டிசம்பர் சீசன்ல தங்கள் குழந்தைகள் இங்க வந்து சபாக்கள்ல பாடணும், ஆடணும்னு விரும்பறாங்க. அதுக்காக ஜூன் மாசத்துல இருந்தே சபாக்களை புக் பண்ண ஆரம்பிக்கறாங்க. டொனேஷன்ஸையும் அள்ளி அள்ளிக் கொடுக்கறாங்க. அவங்களுக்கு பணம் ஒரு விஷயமில்ல. ஆனா, இங்கயே பிறந்து, வளர்ந்து கலை தாகத்தோடு இருக்கறவங்களுக்கு சீசன்ல பாடவும் ஆடவும் சபாக்கள் கிடைக்கிறதில்ல. ‘ஆல்ரெடி புக் ஆகிடுச்சு’னு சபாக்கள் தோளைக் குலுக்கறாங்க...’’ ஆதங்கப்படுபவர் சினிமாவிலும் நடித்திருக்கிறார்.
‘‘அந்தக் காலத்துல என் சொந்தக்காரங்க படம் தயாரிச்சிருக்காங்க. அதனால திரைத்துறை பத்தி தெரியும். சுந்தர் சி. நடிச்ச ‘ஐந்தாம்படை’ல சிம்ரனின் பாட்டு டீச்சரா நடிச்சேன். நடிப்பு நமக்கு சரிப்படாதுனு தெரிஞ்சுது. ஏன்னா, 5 நிமிஷங்கள் வந்துட்டுப் போற சீனுக்காக நாள் முழுக்க காத்திருக்கணும். அத்தனை வேலைகளையும் விட்டுட்டு அப்படி காத்திருப்பது எனக்கு சரியா படலை. எனக்குனு தனி கேரவன் கொடுத்தாங்க. ஆனா, அதுல அடைந்து கிடக்க முடியலை...’’ என்று சொல்லும் ஷோபனா, இப்போது மயிலாப்பூரிலுள்ள டான்ஸ் ஸ்கூல் ஒன்றுக்கு டிரஸ்டியாக இருந்து வருகிறார். கணவர் ரமேஷ், இப்போது இல்லை. மகன் அர்ஜுன் சிட்னியில் வசிக்கிறார். இதுதவிர இவருக்கு ஏராளமான வளர்ப்பு மகன் / மகள்கள் உண்டு. தன் மாணவர்களை அப்படித்தான் உரிமையுடன் அழைக்கிறார்!
- மை.பாரதிராஜா படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|