எகிப்து பிரமிடுகளில் புத்த மத நடுகல்!
உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் 17 வயது இந்திய ஆராய்ச்சியாளர்
பதினான்கு வயதில் அமெரிக்க - கனடா கல்லூரிப் பாடங்களைப் படித்து ஐந்துக்கு நான்கு புள்ளிகளை - அதாவது 99% - பெறுவது என்பது சாதாரண நிகழ்வு அல்ல. இந்த சாதனையைத்தான் அலகாபாத்தைச் சேர்ந்த அரிஸ் அலி நிகழ்த்தியிருக்கிறார்! இப்படிப்பட்ட புத்திசாலிப் பிள்ளையைப் பெற்றவர்கள் தங்கள் மகனை சர்வதேச அளவில் டாக்டராகவோ எஞ்சினியராகவோ ஆக்கி புகழ் பெறவே விரும்புவார்கள். ஆனால், அரிஸ் அலியின் பெற்றோர் அப்படிச் செய்யவில்லை. அவர் போக்கிலேயே அவர் படிக்க சுதந்திரம் கொடுத்தார்கள். விளைவு, தன் 17வது வயதில் இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையிலான அகழ்வாராய்ச்சி அறிக்கையைப் பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களில் சமர்ப் பித்து பாராட்டுதலைப் பெற்றிருக்கிறார் அரிஸ் அலி.
குறிப்பிட்ட நடுகல் ஒன்று எகிப்தின் சக்காராவிலுள்ள ஜோசரின் பிரமிடுக்கு எப்படி வந்தது என்பதைக் குறித்து தேடத் தொடங்கிய அரிஸ் அலியின் பயணம் இன்று அவரை சர்வதேச அளவில் குறிப்பிடத்தகுந்த நபராக உயர்த்தியிருக்கிறது. ‘‘மவுரிய பேரரசரான அசோகர், தென்கிழக்கு ஆசியா, கொரியா, ஜப்பான், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் புத்த மதத்தைப் பரப்ப துறவிகளை அனுப்பியது போலவே எகிப்துக்கும் அனுப்பினார். அந்த அடையாளங்களை எகிப்தில் கண்டறி வதுதான் என் ஆராய்ச்சியின் நோக்கம்...’’ என புன்னகைக்கிறார் அரிஸ் அலி.
சமஸ்கிருதம், பிராமி மொழிகளைக் கசடறக் கற்றிருக்கும் இவர், வேதங்களை எகிப்து சித்திர எழுத்துக்களாக மாற்றி, மர்மங்களைக் கண்டறிய இரவு பகலாக உழைத்து வருகிறார். இந்த அர்ப்பணிப்புதான் தில்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ‘Egyptian Buddhism’ என்ற கண்காட்சியுடன் உரையும் நிகழ்த்த இவருக்கு துணை புரிந்துள்ளது. இதில் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜே.டி.கில், எழுத்தாளர் நயன்ஜோத் லகிரி ஆகியோர் கலந்துகொண்டது விழாவின் முக்கியத்துவத்துக்கு சாட்சி.
‘‘12ம் வகுப்பு மாணவரான அரிஸ் அலி, எம்ஏ மாணவர்களுக்கு பாடம் நடத்துவது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். ஆனால், ஜீனியஸான அவருக்கு இது சர்வசாதாரணமான செயல்...’’ என வியக்கிறார் தேசிய அருங்காட்சியகத்தின் தலைவரான பி.ஆர்.மணி. எகிப்திலுள்ள கெய்ரோ அருங்காட்சியகத்தைப் பார்வையிடவும், நூல்களை வாசிக்கவும், அங்குள்ள தொல்பொருட்களைப் பார்வையிடவும் அரிஸ் அலிக்கு ஸ்பெஷல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சினாலி, பெர்னாவா (உ.பி.), ராகிகார்கி (அரியானா), பின்ஜோர் (ராஜஸ்தான்) உள்ளிட்ட இடங்களிலும் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆதரவுடன் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார் அரிஸ் அலி. பனிரெண்டு வயதிலேயே கலாசாரத் துறையின் கல்வி உதவித் தொகைகளை வென்ற இவருக்கு, மூன்றரை வயதில் அகழ்வாராய்ச்சி குறித்த ஆர்வம் அரும்பியிருக்கிறது! தன் பெற்றோருடன் நேபாளத்துக்கு சுற்றுலா சென்றவர் அங்குள்ள அசோக ஸ்தூபங்கள், பசுபதிநாத் கோயிலைப் பார்த்து வியந்திருக்கிறார். வீடு திரும்பியதும், தான் கண்டதை அப்படியே தத்ரூபமாக டிஷ்யூ பேப்பரில் வரைந்து பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
மகனது ஆர்வத்தைப் புரிந்து கொண்டவர்கள் லக்னோவுக்கு குடிபெயர்ந்து மான்டிசோரி பள்ளியில் அவரைச் சேர்த்தனர். அரிஸ் அலியும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தன் வரலாற்று ஆர்வத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், தன் அகழ்வாராய்ச்சிக்காக எகிப்துக்கு இவர் பயணப்படுவது தனது சொந்த செலவில்தான் என்பது! சக்காராவில் இவர் கண்ட தர்மசக்கர குறியீடு, புத்த துறவிகள் எகிப்து வந்து பணியாற்றியிருக்கிறார்கள் என்பதற்கான நிரூபணச் சான்று. என்றாலும் ஆராய்ச்சி அடிப்படையில் இதை நிறுவும் வேலையில்தான் இப்போது இறங்கியிருக்கிறார்.
- ச.அன்பரசு
|