குயில்களும் கழுகுகளும்



மதன மாளிகையில்
மந்திர மாலைகளாம்
உதய காலம் வரை
உன்னத லீலைகளாம்...
டி.எம்.செளந்தரராஜ
னுடைய ஆண்மை செறிந்த கம்பீரக் குரலில் ஞானசேகரன் மேடையில் பாடியதை நான் மேடைக்கு முன்னால் கூட்டத்தோடு கூட்டமாக நின்று ரசித்துக் கொண்டிருந்தபோது, ஜேம்ஸ் வந்து என் தோளில் கை வைத்தான். ‘‘சின்னையா, அடுத்தது ஒங்க பாட்டுதான். ஸ்டேஜுக்கு வாங்க...’’

பேங்கோஸ் வாசிப்பதில் ஜேம்ஸ் ஓர் அசகாய சூரன். ‘ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்; நிலவில் குளிரில்லை...’ என்கிற எம்ஜிஆர். பாடலில் வருகிற நீளமான ஸோலோ பேங்கோஸ் அசத்தலை ஜேம்ஸ், முழங்கால்களுக்கிடையே இடுக்கிய தன் தோல் வாத்தியத்தில் வாசித்து அனைவரிடமும் அப்ளாஸ் வாங்குவான். ‘மதன மாளிகையில்...’ பேங்கோஸ் தாளம் இல்லையென்பதால் அவனும் மேடைக்கு எதிரே, என்னருகில் நின்று ஞானசேகரனை ரசித்துக் கொண்டிருந்தான். மேடையில் ஏறினேன். கலைந்திருந்த டையை சீர் செய்துகொண்டு, சீராயிருந்த தலைமுடியைக் கலைத்து விட்டுக் கொண்டு மைக்கைப் பிடித்தேன்.

‘சின்ன மாமியே, உன் சின்ன மஹலெங்கே
பள்ளிக்கு சென்றாலோ படிக்கச் சென்றாலோ
அட வாடா மருமக, என் அழகு மென்மத
பள்ளிக்கு தான் சென்றால் படிக்கத்தான் சென்றால்...’

நித்தி கனகரத்தினம் இலங்கைத் தமிழில் பாடியிருந்த பாடலை, அதே இலங்கைத் தமிழில், அதே பிசிறான உச்சரிப்போடு பாடி, மேடைக்கு முன்னே கூடியிருந்த ரெண்டாயிரத்திச் சொச்சம் தூத்துக்குடி ரசிகர்களை மெய்மறக்கச் செய்தேன். இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்படுகிற அந்த ஈழத்துப் பாப் இசைப்பாடல், தென்கோடித் தூத்துக்குடியில் அநியாயத்துக்கு பிரபலமாயிருந்தது. நான் பாடி முடித்ததும், ‘கொன்னுட்டீக சின்னையா’ என்று கை கொடுத்தான் டெல்லஸ். ட்ரிப்பிள் காங்கோவில் சித்துவேலைகள் செய்கிறவன் டெல்லஸ். ஜேம்ஸுக்குத் தம்பி.

இந்தத் தாள வாத்திய சகோதரர்களைத் தவிர, பியானோ மேதை விக்டர், கிட்டாரில் மேஜிக் செய்கிற பார்த்திபன், வயலின் விற்பன்னன் திவாகர், கிஷோர்குமாரின் குரலாயிருந்த காதர் பாட்சா, இந்திப் பாட்டு பாடுகிற பெங்காலிப் பையனான ரோஹித் குமார் ஷெட்டி, பி.பி.நிவாஸ் மற்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரலாயிருந்த வில்ஃப்ரட், விஸிட்டிங் பாடகனாயிருந்த லிங்கம், தபேலாவில் சடுகுடு விளையாடுகிற துரையரசன், எல்லோருமே அற்புதமான கலைஞர்களாயிருந்ததோடு அழகான, அன்பான மனிதர்களாயுமிருந்தார்கள்.

எல்லோருமே என் வயதையொத்த இளைஞர்கள். சிநேகபூர்வமாக ‘வா மக்கா, போ மக்கா’ என்றும், அதிலும் ஒருபடி மேலே போய் ‘என்னல, ஏதுல’ என்றும் அப்பட்டமான ஏகவசனத்தில் தங்களுக்குள்ளே பேசிக் கொண்டார்கள். ஆனால், என்னை மட்டும் ‘வாங்க போங்க’ என்றார்கள். பெயரைச் சொல்லி அழைக்காமல் ‘சின்னையா’ என்று மரியாதை கொடுத்தார்கள். சிநேகத்தையும் மீறிய மரியாதை. தூத்துக்குடியில், ஸ்பிக் என்கிற உலகத்தரமான உரத்தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தவன் நான் என்பது அந்த மரியாதைக்கு ஒரு காரணமாயிருந்திருக்கலாம்.

வாட்டசாட்டமாக, செக்கச்செவேலென்று, டெய்லி ஷேவ் மொழு மொழு முகத்தோடு, இந்திப் பட ஹீரோ மாதிரி இருந்தேன் என்பது ஒரு கூடுதல் காரணமாயிருந்திருக்கலாம். ‘ஜம்போ லைனர்ஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டிருந்த எங்களுடைய இசைக் குழுவுக்கு விக்டர் தலைவனாயிருந்தான். பியானோ மட்டுமின்றி, கிட்டார், அக்காடியன், வயலின் போன்ற எல்லா இசைக் கருவிகளிலும் புகுந்து விளையாடுகிற சகலகலா வல்லவன். எங்கள் எல்லோரை விடவும் வயதில் மூத்தவன் என்பதால் எங்களுடைய இசைக் குழுவில் என்னை உரிமையோடு பெயர் சொல்லி அழைக்கிற ஒரே கலைஞன்.

‘‘வர்ற சனிக்கிழம ராத்திரி எல்லாரும் ஃப்ரீயா வச்சிக்கிருங்க மக்கா, வெளியூர் ப்ரோகிராம் ஒண்ணு வந்திருக்கு...’’ என்று விக்டரிடமிருந்து ஓர் அறிவிப்பு வந்ததும் எல்லோருக்கும் ஒரே உற்சாகம். தூத்துக்குடி ஊருக்குள்ளயே பாடிப் பாடி போரடித்து விட்டது. தூத்துக்குடியை விட்டால் பக்கத்தில் நாசரேத் அல்லது மணப்பாடு. அதிகபட்சமாய்த் திருச்செந்தூர். ‘சரி, வெளியூர் என்றால் எந்த ஊர்?’ என்று என் மனதிலெழுந்த கேள்விக்கு, ‘‘பாஸ், வெளியூர்ன்னா, மெட்ராஸ்தான?’’ என்று சொல் வடிவம் கொடுத்து ஜேம்ஸ், விக்டரிடமிருந்து மண்டையில் செல்லமாக ஒரு குட்டு வாங்கிப் பத்திரப்
படுத்திக் கொண்டான்.

‘‘மெட்ராஸ்க்கெல்லாம் மொள்ளமாப் போவோம், அங்க ஏற்கனவே ஏ.வி.ரமணன், காமேஷ் ராஜாமணின்னு நாலஞ்சி ஆர்க்கெஸ்ட்ரா இருக்கு. நம்ம ஜம்போ லைனர்ஸ் அங்க போய்ப் பாடினா, பாவம் அவுகளுக்கெல்லாம் பொழப்பு கெட்டுப் போயிரும். எம்.எஸ்.விஸ்வநாதன் வேற கோவிச்சிக்குவார்...’’ என்று சிரித்தான் விக்டர். ‘‘முதல் கட்டமா இப்ப திருநெல்வேலிக்குப் போய்ட்டு வருவோம். ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர்கள் சங்கத்துலயிருந்து கூப்பிட்டுருக்காக. பப்ளிக் புரோகிராம். கன்னாபின்னான்னு ஏற்பாடு பண்ணியிருக்காக!’’

திருநெல்வேலியில், தேரோடும் கீழரத வீதியில், சாலையை மறித்து, பிரம்மாண்டமாயொரு மேடை போட்டிருந்தார்கள். ‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்...’ என்று ஞானசேகரன் டி.எம்.எஸ்ஸுடைய பக்திப் பாடலைப் பாடி இசை நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்த பின்னால், இஸ்லாமிய பக்திப் பாடல் ஒன்றைப் பாட வேண்டியது என் முறை. ‘அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் தக்குபீர் முழக்கம் கேட்டால் உள்ளம்இனிக்கும் மக்கமா நகரின் வழி சென்றால் வாழ்க்கை மணக்கும்...’

நாகூர் ஹனிஃபாவுடைய வெண்கலக் குரலில், மேடையிலிருந்த அனைத்துக் கலைஞர்களின் கோரஸ் பின்னணியோடு நான் பாடிய போது, சாதி மத பேதமின்றி ரசிகர் கூட்டம் ஆர்ப்பரித்தது. தொடர்ந்து, ‘மேரா நாம் ஜோக்கர்’, ‘பாபி’ முதலிய படங்களிலிருந்து இந்திப் பாடல்களைப் பாடியபோது, மொழி இன பேதமின்றி ரசிகர் கூட்டம் விசிலடித்தது. அப்படியெழுந்த விசிலொலிகளில் ஒரு விசிலுக்குரியவன், எனக்குத் தம்பியாகக் கருதப்பட்ட, சித்தி மகன் என்பதைப் பார்க்க ரொம்ப சந்தோஷமாயிருந்தது.

அன்றைக்கு எனக்காக விசிலடித்து இசையை ரசித்தவன், பிற்காலத்தில் என் மேலே வசை பாடப் போகிறவன் என்கிற ஆரூடம் அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவனுடைய அந்த வசையும், வில்லத்தனமும் இந்தச் சிறுகதைக்கு அவசியமில்லை என்பதால், அந்த எபிஸோடை ஓரங்கட்டி விட்டு மேலே தொடர்வோம். இசை நிகழ்ச்சி முடிந்த பின்னால், நள்ளிரவில், நியாஸ் ஹோட்டலில் பரோட்டா சால்னாவையும், டபுள் ஆம்லெட்களையும் ஒரு பிடி பிடித்துவிட்டு, விடிய விடிய தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தது மறக்கவே முடியாத ஒரு நிகழ்வு.

அந்த திருநெல்வேலி கச்சேரி தான் நான் மேடையேறிப் பாடிய கடைசி நிகழ்ச்சியாக அமைந்து போனது. அதன் பிறகு, சென்னைக்குப் புலம் பெயர்ந்தாக வேண்டிய நிர்ப்பந்தம். இனிமையான ஓர் இசை சகாப்தம் அன்றோடு முடிந்து போனது. பலப்பல மறக்க முடியாத மலரும் நினைவுகளை நினைவில் இருத்திக் கொண்டு சென்னைக்குப் புலம்பெயர்ந்த பின்னால், என் இசைத் தாகத்தைத் தணித்துக் கொள்வதற்கு, நம்ம க்ளப்புக்குள்ளேயே இசைத்துறையும், இசைத்துறைக்குள்ளே ஓர் இசைக் குழுவும் இருந்தன. க்ளப்பின் தலைவருடைய நியமனமாக, இசைத் துறைக்கு வருடத்துக்கொரு சேர்மன் என்றும் இருந்தது.

இளங்கண்ணன், ராஜசேகரன், சுந்தர், தேவநேசன், சோமு, அன்பழகி, வசந்தி, ஸ்ரீப்ரியா என்று பல பாடகர், பாடகிகள் க்ளப்பின் இசைக் குழுவில் இருந்தார்கள். எல்லோரும் பாடகர், பாடகிகள்தான். வாத்தியக் கோஷ்டியெல்லாம் கிடையாது. கிட்டார், அக்காடியன், வயலின், தபேலா, பேங்கோஸ், ட்ரிப்பிள் காங்கோ, டிரம்ஸ் என்று எதுவுமே கிடையாது. ப்யானோ? அட, ரசம் சாதம், மோர் சாதமே இல்லையென்கிறபோது மட்டன் பிரியாணி எப்படி இருக்கும்!

கேவலம், ஒரு கீ ேபார்டு கூடக் கிடையாது. கம்ப்யூட்டரில் கரோக்கே பின்னணி இசையை இசைக்க விட்டுத்தான் எல்லோரும் பாடினோம். ரஷ்யக் கலாசார மையத்திலும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் பெரிய அளவில் நடக்கிற நிகழ்ச்சிகளில் மட்டும் வெளியிலிருந்து தொழில்ரீதியான வாத்தியக் கலைஞர்களை அமர்த்திக் கொண்டோம்.

‘பம்பரக் கண்ணாலே காதல்
சங்கதி சொன்னாளே
தங்கச் சிலை போல் வந்து மனதைத்
தவிக்க விட்டாளே...’

என்று நான் மேடையில், சந்திரபாபுவின் குரலிலேயே பாடியபோது எல்லோரும் ரசித்துக் கை தட்டினார்கள். எல்லோருமா? இல்லை. சிலர் கை தட்டவில்லை. கை தட்டாதவர்களெல்லாம் ஆசனங்களிலிருந்து எழுந்து நடனமாடினார்கள்.

‘மூடித்திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது...’

என்று ஸ்ரீப்ரியாவும் நானும் டூயட் பாடினோம். நான் டி.எம்.செளந்தரராஜன், ஸ்ரீப்ரியா பி.சுசீலா. தூத்துக்குடி ஞானசேகரனிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டு கொண்டு நான் டி.எம்.எஸ். குரலில் பாடினேன். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் போய் பாடியதற்குப் பரிகாரமாக, முதியோர் இல்லங்களில் போய் பாடி, அவர்களை மகிழ்வித்தோம். ‘மக்களைப் பெற்ற மகராசி’ படத்தில் பி.பி.ஸ்ரீநிவாஸும், சரோஜினியும் இணைந்து பாடிய ‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா; உண்மைக் காதல் மாறிப் போகுமா...’ என்று அன்பழகியும் நானும் இணைந்து பாடியபோது, அந்த முதியோர் இல்லமே முழுமையாய் இளமைக் காலத்துக்குப் போய், திரும்பி வர மனசேயில்லாமல் ஒரு வழியாய் திரும்பி வந்து சேர்ந்தது.

டி.எம்.செளந்தரராஜனும், பி.பி.ஸ்ரீநிவாஸும் அரங்கத்தின் முன் வரிசையில் பார்வையாளர்களாக அமர்ந்திருக்க, அவர்கள் இருவரும் சேர்ந்து திரையில் பாடிய பாடலை அவர்கள் முன்னிலையிலேயே நானும் தேவநேசனும் பாடிக் கைதட்டல் வாங்கிய அதிசயம் கூட நிகழ்ந்தது. மேடை நிகழ்ச்சிகள், முதியோர் இல்ல விஜயங்கள் எல்லாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பாடகர்களெல்லாம் ரெண்டு மாசத்துக்கொருதரம் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் சந்தித்துக் கொள்வது வழக்கமாயிருந்தது.

அரைநாள் வாடகைக்கு ஓர் அறையெடுத்து, எல்லாப் பாடகர்களும் பாடகிகளும் ஒன்று கூடி, கரோக்கேயின் பின்னணி இசையோடு காலை முதல் மதியம் வரை மாறி மாறிப் பாடி முடித்து, பசி தீர மதிய உணவு உண்டு விட்டு பிரிவோம். அறை வாடகையையும், உணவுச் செலவையும் எல்லா பாடகர், பாடகி களும் சரிசமமாகப் பங்கிட்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏற்பாடு.

‘பாடலும் சாப்பிடலும்’ என்று பொருத்தமாய் இந்த பாடல் - கூடலுக்குப் பெயரிடப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் ‘Beats and Eats’, இந்தியில் ‘கானா க்ஹானா’. ஒரு முறை ‘கானா க்ஹானா’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலக்கட்டத்தில் நான் கொழும்பில், மாமியார் வீட்டிலிருந்தேன். செவ்வாய்க்கிழமை சென்னைக்குத் திரும்புவதற்கு விமான டிக்கெட் கைவசமிருந்தது. அதற்கு ரெண்டு நாள் முந்தி, ஞாயிற்றுக்கிழமையன்று ‘கானா க்ஹானா’ என்று, ஸ்ரீப்ரியாவிடமிருந்து இமெயில் வர, செவ்வாய்க்கிழமை கிளம்ப வேண்டியவன், ‘சண்டே ஃபிஷ் பிரியாணி’ என்று மாமி ஆசை காட்டியதற்குக்கூட மயங்காமல், டிக்கெட்டை முற்படுத்தி, சனிக்கிழமையே சென்னை வந்து சேரும் அளவுக்கு ஆர்வமும், உற்சாகமும், இசையில் ஈடுபாடும் இருந்தது எனக்கு.

இப்படி, நல்ல காரியங்களெல்லாம் ஆஹா ஓஹோவென்று நடந்து கொண்டிருந்தசமயம் யாருடைய கொள்ளிக் கண் பட்டதோ, நம்ம பார்ட்னராயிருந்த தேவநேசனுக்கு இருந்திருந்தாற்போலப் பித்தம் தலைக்கேறி விட்டது. அவன் ஏற்பாடு செய்திருந்த ஓர் இசை நிகழ்ச்சிக்கு, ஒத்திகைக்கு எனக்கு அழைப்பு வரவில்லை. ஒத்திகைக்கு அழைப்பில்லை என்றால், மேடையேற வாய்ப்பில்லை என்று அர்த்தம். தேவநேசனிடம் நான் விளக்கம் கேட்டதற்கு அவன், எனக்கு தருவதற்காக வினோதமான காரணமொன்றைக் கைவசம் வைத்திருந்தான் :

‘‘ஒன்னோட கொரல் சரியே இல்லடா. இது ஒரு டிக்கெட் புரோகிராம். பப்ளிக் எல்லாம் பாட்டுக் கேக்க வருவாங்க. அவங்க முன்னால மேடைல பாடறதுக்கு நீ அப்படியொண்ணும் விசேஷமான பாடகன் இல்ல. அப்புறம், இன்னொரு விஷயம்...’’ ‘‘எவ்வளவோ சொல்லிட்ட. இதையும் ஏன் மிச்சம் வச்சிருக்க... துப்பிரு!’’‘‘எங்கயாவது நீ ஆடிஷனுக்குப் போனா, பாஸாகவே மாட்ட!’’ ‘உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது? நிலைகெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்குத்தான் அது!’ என்று ‘சக்கரவர்த்தித் திருமகள்’ படத்தில் எம்ஜிஆரும், என்.எஸ்.கிருஷ்ணனும் பாடுகிற போட்டிப் பாட்டில் வரும்.

அந்த பயங்கரமான ஆயுதத்தை தேவநேசன் கைவசம் அல்லது வாய் வசம் வைத்திருந்தான். அந்த நாவாயுதத்தைப் பிரயோகித்து, என்னை இகழ்ந்தது மட்டுமல்லாமல், இசைக் குழுப் பாடகர்களையெல்லாம் வசியம் பண்ணித் தன் ஆளுமையின் கீழ் வைத்திருந்தான். சங்கத்தின் அந்த வருடத்துக்கு இசைத் துறைக்குச் சேர்மனாகவும் ஆகிவிட்டான். அவன் என்னை இழிவுபடுத்தி ஓரங்கட்டியதற்கு என்னுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கிற வகையில், தேவநேசன் சேர்மனாயிருக்கிற ஒரு வருட காலத்துக்கு, ‘கானா க்ஹானா’ உட்பட எந்த இசை நிகழ்ச்சியிலும் பங்கு கொள்ளாமல் புறக்கணிப்பது என்று முடிவு செய்து ஒதுங்கியிருந்தேன்.

என் ஒரு வருட அஞ்ஞான வாசம் நிறைவு பெற்று, தேவநேசனுடைய ஆதிக்கம் முடிவுக்கு வந்து, ராஜசேகரன் இசைத்துறைக்குச் சேர்மனாகப் பதவியேற்ற பிறகு, குரலைச் செருமிக் கொண்டு பாடுவதற்கு நான் தயாராயிருந்தபோது, ஸ்ரீப்ரியாவிடமிருந்து வந்திருந்த ஃபேஸ்புக் பதிவொன்றைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனேன்.

(அடுத்த இதழில் முடியும்)

- ஏ.ஏ.ஹெச்.கே.கோரி


பெண்ணைக் காப்பாற்றிய நாய்!

அமெரிக்காவில் அரிசோனாவைச் சேர்ந்த பாலா காட்வின் தனது இரண்டு ரெட்ரீவர் நாய்களுடன் காலை வாக்கிங் கிளம்பினார். சாலையில் திடீரென காட்வினின் காலருகே வந்த பாம்பை கவனித்து கடித்துக் குதறிய டாட் நாய், எஜமானியைக் காப்பாற்றி காயம்பட்டது. முகம் பாம்புக் கடியால் பணியாரமாக வீங்கி, கால் பெண்ட் ஆனாலும் எஜமானியைக் காத்த விசுவாசம், இணையத்தில்  ‘விசுவாசம் னா இதுதான்’ என லைக்ஸ்களைக் குவித்துவருகிறது.

ஸ்பைடர்மேனுக்கு வேலை!

பிரான்சில் குழந்தையை நான்கு மாடி ஏறி காப்பாற்றிய அகதி இளைஞர் மாமோடோ கசாமாவுக்கு புதிய வேலை ரெடி. குடிஉரிமை, துணிச்சலுக்கான தங்க மெடல் ஆகியவற்றை அளித்த பிரான்ஸ் அரசு, கசாமாவே எதிர்பார்க்காத புதிய பரிசாக அவருக்கு பாரிசிலுள்ள தீயணைப்புத் துறையில் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ளது. நான்காவது மாடியில் சிக்கிய குழந்தையை மீட்க கயிறு உட்பட எந்த உபகரணங்களும் இல்லாமல் ஏறிய கசாமாவுக்கு இதைவிட சிறந்த பணியைத் தரமுடியாது என பிரான்ஸ் அரசு கூறியுள்ளது.

மீல்ஸ் ரேட்டைக் குறைக்க பளார்!

மும்பையிலுள்ள செனபதி பாபத் சாலையில் பிரபல மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர் இயங்கிவருகிறது. தியேட்டரில் வழங்கும் உணவுப்பொருட்களின் விலையை குறைக்காததால் நவநிர்மாண் சேனா தொண்டர்கள் உதவி மானேஜரைச் சுற்றி நின்று சரமாரியாகத் தாக்கிய  வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியினர் செய்த பப்ளிசிட்டி நடவடிக்கை, இது சரியானதுதான் என கோஷ்டிகள் பிரிந்து வீடியோ குறித்து பட்டிமன்றம் நடத்திவருகின்றனர்.    

சாக்கடை அரசியல்!

கராச்சியைச் சேர்ந்த அயாஸ், ஓட்டு  வாங்கச் செய்த காரியம் மக்களை அதிர வைத்துள்ளது. சாலையில் தேங்கிய கழிவுநீரில் படுத்துக்கொண்டு அயாஸ் வாக்குச் சேகரித்ததுதான் இணைய வைரல் மேட்டர். கராச்சியில் சுயேச்சையாகப் போட்டியிடும் அயாஸ், கழிவுநீரில் படுத்தபடியும், அதனைக் குடிப்பது போலவும் போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிந்து பிரபலமாகிவிட்டார். கராச்சியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முரட்டு தேசபக்தி!

அமெரிக்காவைச் சேர்ந்த பாட்டி ஒருவர் 25 ஆண்டு களாக ஜூலை 4 அன்று அமெரிக்காவின் சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறார். இதில் ஆச்சர்யம் என்ன தெரியுமா? பனாமா நாட்டின் தேசியக்கொடியை உடையாக அணிந்து கொண்டாடி வருவதுதான்! 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பாட்டியின் பேரன் டேல் சீஸ்மன் இந்தத்தவறைக் கண்டுபிடித்துள்ளார். பாட்டியின் 25 ஆண்டு தேசப்பற்றை பனாமா நாட்டு குடிமகன்கள் பாராட்டி அவரின் புகைப்படத்தை வைரலாக்கியுள்ளனர்.