ரைட்...ரைட்...



- எஸ்.ராமன்

செய்தி(கள்): பழுதடைந்த நிலையில் பெரும்பான்மையான அரசு பஸ்கள்; அரசு பஸ்கள் நவீனமயமாக்கப்படும். இந்த இரண்டையும் மிக்ஸ் செய்தபோது மண்டைக்குள் எரிந்த பல்பு(கள்) இவை!

புஷ்ஷிங் அப்பாயின்ட்மென்ட்

பழுதடைந்த பஸ்களை இயக்கித் தள்ளுவது போர்க்களம் போன்றது. எனவே போர்க்காலங்களில் ராணுவத்தில் பணியாற்ற வீட்டுக்கு ஒரு நபர் என்ற கட்டாய சட்டம் போடுவது போல், போக்குவரத்து போர் பணிக்கும் அந்த மாதிரி சட்டம் இயற்றலாம். ஒவ்வொரு குடும்பத்திலும் வாட்டசாட்டமான ஓர் இளைஞர் பஸ்ஸைத் தள்ளும் பணிக்கு நியமிக்கப்படுவார். ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு பேருந்தை தள்ளிக்கொண்டே போவது இவர்களின் பணி.  

இதனால், ‘வாட்டசாட்ட’ வேலை வாய்ப்புகள் பெருகும். வேலை இல்லாமல் வீட்டில் வீடியோ கேம்ஸ் விளையாடி பொழுதைக் கழிக்கும் இளைஞர்களை, ‘தண்டச்சோறு, தடிமாடு’ என ஏசும் குரல்கள் பிரேக் டவுன் ஆகி, குடும்ப நல்லுறவுகள் ஸ்டார்ட் ஆகி நகரும். பஸ் தள்ளும் பணியில் இருக்கும் மகனைப் பற்றி, ‘என் பையன் ரொம்ப புஷ்ஷிங் டைப்’ என்று பெற்றோர் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்! சிக்ஸ் பேக், செவன் பேக் போல், ‘புஷ் பேக்’ என்ற புதிய உடல் பேக் ஸ்டைல் உருவாகும். இவர்கள் புஷ்ஷியும் பஸ் நகரவில்லை என்றால், அவர்கள் தோளிலேயே பஸ் பயணிகளை ஏற்றி அனுப்பி விட இது உதவியாக இருக்கும்! தவிர வருங்கால ஒலிம்பிக்ஸில் பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெறுபவர்களைத் தயார்படுத்த இது ஒரு நல்ல பயிற்சிக் களமாக அமையும். இந்தத் திட்டத்துக்கு ‘புஷ்கரம்’ என பெயர் சூட்டலாம்!  

நவீன பீரங்கி

பதினாறு அடி நீள அகலத்துக்கு புகை மண்டலத்தை கக்கி, மாசுக் கட்டுப்பாட்டை மீறும் பஸ்கள் எழுப்பும் பட்... பட்... டுப்... டுப்... டமால்... டுமீல்... டர்... புர் போன்ற நவீன வெரைட்டி ஒலிகள் போர்க்களத்தில் பயணிப்பது போன்ற உணர்வுகளை உண்டாக்கும். இந்த மாதிரி வெரைட்டி ஒலி வசதி படைத்த பஸ்களை இந்திய - பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தி நாட்டுப் பாதுகாப்புக்கு அவற்றை பயன்படுத்தலாம்! இந்த ஜீவன்கள் எழுப்பும் எங்கும் கேட்டிராத பயங்கரமான ஒலிகளை, நவீன பீரங்கிச் சத்தம் என நினைத்து பாகிஸ்தான் ராணுவம் தன் ஒலியை அடக்கி வாசிக்க ஆரம்பிக்கும்! எதிரிகளை நடுங்க வைக்கும் இந்தத் திட்டத்துக்கு, ‘சத்ரு நாசன்’ என பெயரிட்டு ‘பஸ்ஸே முழங்கு’ என சவுண்ட் விடலாம்!

சிக்ஸருக்கு சியர்ஸ்

கிரிக்கெட் மைதானம் போல பஸ்களிலும் சியர் கேர்ள்ஸை ஏற்பாடு செய்யலாம். சரியான சில்லறை கொடுத்து கண்டக்டரிடம் எந்த திட்டும் வாங்காமல் பயணி டிக்கெட் பெறுவது, பஸ் ஸ்டாப்பில் பஸ் நிறுத்தப்படுவது, கண்டக்டர் தன் சீட்டிலிருந்து எழுந்து நகர்ந்து பயணிகளுக்கு டிக்கெட் கொடுப்பது, பஸ்ஸுக்குள் போதிய இடமிருந்தும் கண்டக்டர் டபுள் விசில் கொடுத்து பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் பயணிகளை கடுப்பேற்றாமல் இருப்பது, கண்டக்டரின் செல்ல(!) கூவல் இல்லாமலேயே பயணிகள் முன்நோக்கி நகர்வது, இட ஒதுக்கீடுகளுக்கு மதிப்பு கொடுப்பது...

என அரிய ‘சிக்ஸர்’ நிகழ்ச்சிகளின்போது, சியர் கேர்ள்ஸ் வேப்பிலையைக் கையில் ஏந்தி நடனமாடி சாதனையாளர்களை ஊக்குவிக்கலாம்! வேப்பிலைக் காற்றால் பயணிகளின் உடலும், நடனத்தால் மனதும் சியர் ஆவது உறுதி. பயணிகள் அனைவரும் சியர் கேர்ள்ஸ் கடைக் கண் பார்வையில் உலவ வேண்டும் என ஆசைப்படுவார்கள் என்பதால் படிக்கட்டுப் பயணம் என்ற சாகசமே அழிந்துவிடும். சியர் கேர்ள்ஸ் திட்டம் படிப்படி யாகத்தான் அறிமுகப்படுத்தப்படும் என்பதால், சியர் பஸ்களில் பயணம் செய்ய பல மாதங்களுக்கு முன்பே முன் பதிவுகள் முடிந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்! இந்தத் திட்டத்திற்கு ‘வேகன் நர்த்தனா’ என பெயர் சூட்டி குதூகலிக்கலாம்!

பெட் கட்டு... கொண்டாடு!

ஒவ்வொரு பஸ் கிளம்பும்போதும், ‘அது மறுமுனைக்கு போய்ச் சேருமா... எந்தத் தெரு முனையில் பிரேக்டவுன் ஆகும்’ என்பது போன்ற மில்லியன் டாலர் கேள்விகளை ஒட்டி குதிரை ரேஸ் போல் பஸ் ரேஸ் பெட்டிங் கட்ட பெட்டிங் மையங்களை நிறுவலாம்! பெட்டிங் கட்டியவர்கள், தாங்கள் பெட் கட்டிய பழுதான பஸ்களுக்கு மாலை மரியாதை செய்து ஆங்காங்கே கூட்டமாக நின்று, ‘கமான்... கமான்’ என்று குரல் எழுப்பி கொண்டாட்ட மூடில் இருப்பார்கள் என்பதால் நகரமே எப்போதும் விழாக்கோலம் பூண்டிருக்கும்!

தங்கள் அபிமான பஸ்களோடு பெட்டாளர்கள் செல்ஃபி எடுத்து சந்தோஷப்படலாம். மேட்ச் ஃபிக்ஸிங் போல் பஸ் ஃபிக்ஸிங் வம்பு தும்புகள் முளைக்கலாம். பெட்டிங் வருமானத்தை வாகனத்தின் பிரேக், கிளட்ச், ஸ்டியரிங் வீல் ஆகிய உதிரிப் பாகங்களின் நிலையை மேம்படுத்த பயன்படுத்தலாம்! வருமானம் அதிகரிக்கும் இந்தத் திட்டத்துக்கு ‘ஐஸ்வர்யம்’ என பெயரிட்டு கல்லா கட்டலாம்!

பரிகார ஃபைனான்ஸ்

‘இந்த பஸ் சரியாகப் போய்ச் சேருமா... சேராதா..?’ என்ற சில்லறைத்தனமான சந்தேகத்தை கண்டக்டரிடம் கேட்கும் அப்பாவிப் பயணிகள், ‘எனக்கு என்ன ஜோசியமா தெரியும். சாவு கிராக்கி... வந்துட்டாங்க...’ என அவரிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் அவலத்தை நீக்க அரசாங்கமே ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பிலும் ஒரு ஜோசிய சேவை மையத்தை உருவாக்கலாம்! சம்பந்தப்பட்ட பஸ், கண்டக்டர், டிரைவர் மற்றும் பயணியின் ஜாதகங்களை அலசி, பொருத்தம் பார்த்து, பயணி போக வேண்டிய இடத்துக்கு பஸ் போய்ச் சேருமா என்று அவர் பலன் சொல்வார்!

‘இன்றைய தினப் பலன்படி, நீங்க நடு ரோட்ல நிற்கணும்! அதுக்கு இந்த பஸ்ல ஏறித்தான் ஆகணும்!’ என நேரடியாக பலன் சொல்லும் ஜோசியர்கள் குறைவு என்பதால் இவர்கள் பெரும்பாலும் பயணிகளின் ‘பயண தோஷத்துக்கான’ பரிகாரங்களை வாரி வழங்குவார்கள். முழு பஸ்ஸை சேற்றில் மறைப்பது போல், பழுதடைந்ததால்தான் பஸ்கள் சரியாக ஓடுவதில்லை என்பதை விட்டுவிட்டு, பயணிகளின் ஜாதகக் கோளாறுதான் அதற்கான மூலகாரணம் என்பதை முன்னிறுத்திப் பேசி நம்பவைக்கும் கலையில் இவர்கள் பயிற்சி பெற்றிருப்பார்கள்!

டாக்டரிடம் சொல்வது போல், ‘தோஷ நிவர்த்திக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை’ என்று ஜோசியரிடம் வசமாகும் அப்பாவிகள் அதிகம் என்பதால், அந்தச் செலவுகளை ஃபைனான்ஸ் செய்வதற்கு வங்கிப் பிரதிநிதிகளுக்கும் அந்த மையத்தில் ஒரு சீட் வழங்குவது நல்லது! இதனால் தேசப் பொருளாதாரம் மேம்படும். ‘ஜோசிய யோஜன்’ என இந்தத் திட்டத்துக்கு பெயர் சூட்டி கட்டம் கட்டலாம்!