காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா - 59     

பாப்லோ எஸ்கோபாரின் ‘காட்ஃபாதர்’ வாழ்வில் மிகப்பெரிய வில்லன் யாரென்றால், கொலம்பிய பாதுகாப்புத் துறையின் ஜெனரலாக இருந்த மைகுவேல் மாஸாதான். பாப்லோவின் மீது சுமத்தப்பட்ட பல்வேறு அபாண்டங்களுக்கு இவரே காரணம். முக்கியமான அரசுத்துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு கூலிப்படைத் தலைவன் கணக்காக பணியாற்றியிருக்கிறார். அவர் செய்த பல படுகொலைகளின் பழி பாப்லோ மீதுதான் விழுந்தது. பாப்லோ மறைந்து பல வருடங்களுக்குப் பிறகே மைகுவேல் மாஸாவின் சுயரூபம் கொலம்பியாவுக்குத் தெரியவந்தது.

முப்பதாண்டுகளுக்கு முன்பு முற்பகல் செய்ததற்கு சமீபத்தில்தான் பிற்பகல் விளைந்து, கொலைவழக்கு ஒன்றில் அவருக்கு முப்பதாண்டு காலம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு அநியாயங்களையும், அட்டூழியங்களையும் செய்த மாஸாவுக்கு அமெரிக்காவின் பரிபூரண ஆசி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1989 - 90 காலக்கட்டங்களில் பாதுகாப்புத்துறை கொலம்பிய தெருக்களில் நடத்திய வெறியாட்டம் இன்றளவும் நினைவுகூறப்பட்டு வருகிறது.

அரசியல்வாதிகள் பலருமே போதை உள்ளிட்ட பல்வேறு முறைகேடான தொழில்களில் கொழித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் கமிஷன் வாங்கிக்கொண்டு, அவர்கள் செய்த குற்றங்களையும் கார்டெல்கள் கணக்கில் எழுதினார் மாஸா. போதைத் தொழில் நடத்துவதாக பொய்க்குற்றம் சாட்டப்பட்டு பல்லாயிரம் அப்பாவிகள் சிறைகளுக்குச் சென்றனர். அரசியல் எதிரிகள் அத்தனை பேரையும் மாஸாவை வைத்து மிரட்டிக் கொண்டிருந்தனர் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள்.

சட்டத்தின் பேரால் மாஸா செய்துகொண்டிருந்த அட்டூழியங்களை பலமுறை அரசிடம் ஆதாரபூர்வமாகக் கொண்டு சென்றார்கள் பாப்லோவின் ஆட்கள். எந்தப் பயனும் இல்லை. பாப்லோ, இதுபோல தனக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுவதைத் தடுக்க மாஸா ஒரு போடு போட்டார். “நான் நேர்மையான அதிகாரி. என்னை விலைக்கு வாங்க பாப்லோ எஸ்கோபார் முயற்சிக்கிறார். எவ்வளவு கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் நான் நேர்மையின் பாதையிலிருந்து தவறமாட்டேன்..!”

இந்த அறிக்கையை வாசித்து பாப்லோ, வாய்விட்டுச் சிரித்தார். “இந்த மாஸா மட்டும் நம்மளை மாதிரி கார்டெல் வெச்சி நடத்தியிருந்தான்னா, உலகத்துலேயே நம்பர் ஒன் மாஃபியாவா அவன்தான் இருந்திருப்பான்!” என்று குஸ்டாவோவிடம் சொன்னார். வாரம் தவறாமல் தன்னைக் கொல்ல பாப்லோ முயற்சிப்பதாக மாஸா குற்றம் சாட்டிக் கொண்டே இருந்தார். அதற்கு சாட்சியங்களை உருவாக்க தன் மீது தானே பொய்யான தாக்குதல்களை நடத்திக் கொண்டார். கையிலோ, காலிலோ பொய்யாக கட்டு போட்டுக் கொண்டு, மருத்துவமனையில் சேர்ந்துவிட்டு, பாப்லோ குழுவினர் நடத்திய தாக்குதலில் தான் மயிரிழையில் உயிர் பிழைத்ததாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

கொலம்பியாவில் வெடிகுண்டு கலாசாரம் உச்சத்தில் இருந்த நேரம் அது. மாஸாவின் கார் ஒரு குண்டு வெடிப்பில் தூள்தூளானது. அதில் அவர் இல்லை. அவருடைய பாதுகாவலர்கள் ஏழு பேர் உடல் சிதறிப் போனார்கள். “பார்த்தீர்களா, பாப்லோ நிகழ்த்தும் கொடுமையை. நல்லவேளை, நான் கடைசி நிமிடத்தில் காரில் ஏறாததால் உயிர் தப்பினேன்...” என்று மாஸா முதலைக்கண்ணீர் வடிக்க, பாப்லோ டென்ஷனாக நகம் கடிக்க ஆரம்பித்தார். குஸ்டாவோவிடம் சொன்னார்.

“குண்டு வெடிச்சா எப்படி இருக்கணும்னு பார்க்குறதுக்கு நம்ம ஜெனரல் ரொம்ப ஆசைப்படுறாரு. செஞ்சி காட்டிடுவோமா?”டிசம்பர் 1989. பாதுகாப்புத் துறையின் தலைமை அலுவலகம். அக்கம் பக்கத்தில் நிறைய அரசு அலுவலகங்கள். தனியார் அலுவலகங்களும் ஏகத்துக்கும் இருந்தன. எப்போதும் ஜனநாட்டமாட்டம் கசகசவென்று இருக்கும். வாகனங்கள் வந்து கொண்டும், போய்க்கொண்டும் இருக்கும். பாதுகாப்புத் துறை அலுவலக வாசலில் பெரிய இரும்பு கேட் ஒன்று உண்டு.

அதன் இருபக்கமும் ஆயுதமேந்திய காவலர்கள் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு தெருவில் வருவோர், போவோரைக் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். அன்று காலை வழக்கம்போல மைகுவேல் மாஸாவின் கருப்புநிற சொகுசு கார் காம்பவுண்டுக்குள் நுழைகிறது. அவருக்கு சல்யூட் அடித்துவிட்டு கேட்டை மூடுவதற்கு காவலர்கள் தயாராகிறார்கள். அப்போது அலுவலகத்துக்குள் இருந்து ஒருவன் ஓடிவருகிறான். கேட்டுக்கு வெளியே வந்த அவன், நல்ல சப்தம் எழுப்பி விசில் அடிக்கிறான்.

அவனுடைய விசில் சப்தம் எழுந்த அடுத்த பத்து வினாடியில் அதிவேகத்தில் பெரிய பஸ் ஒன்று இரும்பு கேட்டை இடித்துத் தள்ளிவிட்டு வளாகத்துக்குள் நுழைகிறது. இந்த பஸ்ஸின் புயல்வேக வருகையைக் கவனித்துவிட்ட, வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் தன்னுடைய காரை எடுத்து வந்து கட்டடத்தின் வாயிலுக்கு முன்பாக நிறுத்தினார். பஸ், அந்தக் கார் மீது மோத, ‘டமால்’.

கொலம்பியாவில் அரசுக்கும், கார்டெல்களுக்கும் இடையே நடந்துகொண்டிருந்த போரில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு இதுதான். அந்த பஸ்ஸில் சுமார் 3,500 கிலோ எடையுள்ள வெடி மருந்து இருந்தது. பாதுகாப்புத் துறை கட்டடத்தின் பாதி அப்படியே சரிந்தது. ஒருவேளை அந்த போலீஸ்காரரின் கார் குறுக்கிட்டிருக்கா விட்டால் முழுக்கட்டடமும் சிதறியிருக்கும். “அந்த வளாகத்தின் நெடிய சுவர் முழுக்க, இரத்தத்தால் வர்ணம் அடிக்கப்பட்டிருந்தது...” என்று அந்த சம்பவத்தை அப்போது நேரடி ரிப்போர்ட் செய்த நாளிதழ் ஒன்று எழுதியது.

பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் பணியாற்றியவர்கள், பொதுமக்கள் என்று சுமார் 50 பேர் சம்பவ இடத்திலேயே சிதறி பலியானார்கள். எங்கும் மரண ஓலம். பல நூறு பேர் கை, கால்களை இழந்து கதறிக் கொண்டிருந்தார்கள். உடனடியாக போலீஸும், இராணுவமும் வந்துவிட்டது. ஆம்புலன்ஸ்களின் சைரன் சப்தம் அந்தப் பகுதியையே அலறவைத்தது. காயம் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நகரில் இருந்த மருத்துவமனைகள் போதவில்லை. சில அரசுக் கட்டிடங்களையே தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றி நிறைய பேருக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார்கள்.

நாடு முழுக்கவும் இருந்து மருத்துவர்கள் தலைநகருக்கு அவசரப் பணிகளுக்காக அழைக்கப்பட்டார்கள். இதெல்லாம் நடந்துகொண்டிருக்கும்போதே கார்டெல் முக்கியஸ்தர்கள் எஸ்கேப் ஆக ஆரம்பித்தார்கள். பாப்லோ, அவரது குடும்பத்தையும் நெருங்கிய சகாக்களின் குடும்பத்தினரையும் உடனடியாக வேறு வேறு ரகசிய இடங்களுக்கு அனுப்பி வைத்து விட்டார். பாதுகாப்புத் துறை கட்டடம் மீதான தாக்குதலில் இறந்தவர்களின் பெயர்களை டிவியில் சொல்ல ஆரம்பித்தார்கள்.

பாப்லோ மட்டுமின்றி, ஒட்டுமொத்த கொலம்பியாவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பெயர் அந்தப் பட்டியலில் இல்லை. யெஸ். எல்லோருக்கும் வில்லனான மைகுவேல் மாஸாவை இந்த முறையும் அதிர்ஷ்டம் கைவிடவில்லை. கட்டடத்தின் பின்பக்கமாகத்தான் அவரது அலுவலக அறை இருந்தது. அந்த அறையின் சுவர்கள் குண்டுகூட துளைக்க முடியாத வலிமையான இரும்புத் தகடுகளால் அமைக்கப்பட்டிருந்தன. கட்டடத்தின் முன்பக்கம்தான் பெருமளவு சேதம் என்பதால்,

லேசான அதிர்ச்சியை மட்டுமே தன்னுடைய அறையில் உளர்ந்தார் மாஸா. சிறு கீறல் கூட இல்லாமல் வெளியே வந்து டிவிக்கு பேட்டியளித்தார். “என்னுடைய தளத்தில் நான் மட்டுமே இப்போது கடவுள் அருளால் உயிரோடு இருக்கிறேன். என் நேசத்துக்குரிய அலுவலக சகாக்கள் அத்தனை பேரையும் இழந்துவிட்டேன். இந்த பெரும் அழிவுக்குக் காரணமானவர்கள் ஒருவரைக்கூட நான் உயிரோடு விடமாட்டேன்...”

(மிரட்டுவோம்)

ஓவியம் : அரஸ்