அந்த நிலாவதான் கையிலே புடிச்சேன்..!



“இது ஒரு மனிதன் எடுத்து வைக்கும் சிறு அடியாக இருக்கலாம். ஆனால், மனித குலம் எடுத்து வைத்திருக்கும் பேரடி!” ஜூலை 21, 1969ல் நிலவில் முதன்முறையாக காலடி வைத்ததுமே நீல் ஆம்ஸ்ட்ராங் சொன்ன வார்த்தைகள். காலம் காலமாக நிலாவில் ஆயா வடை சுட்டுக் கொண்டிருக்கிறது என்று சுட்டிக் காட்டி குழந்தைகளுக்கு சோறூட்டிக் கொண்டிருந்த மனித குலம் சிலிர்த்துக் கொண்டது. நிலவு மனிதனின் கனவு. நிலவு இல்லையென்றால் நமக்கு அமாவாசை, பெளர்ணமியே இல்லை. கவிஞர்கள் என்கிற இனமும் தோன்றியிருக்காது.

எழுபது ஆண்டுகளுக்கு முன்பு, மனிதனால் நிலவுக்கு போக முடியும் என்று யாராவது சொல்லியிருந்தால் அது மிகப்பெரிய ஜோக். இரண்டாம் உலகப் போருக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். இந்தப் போரை முன்னிட்டுதான் நவீன கண்டுபிடிப்புகள் ஏராளமாக உருவாகின. ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டை போரில் வீழ்த்த மனிதபலம் மட்டும் போதாது என்று உணர்ந்தது. கொத்துக் கொத்தாக மரணத்தை ஏற்படுத்தக் கூடிய புதிய கண்டுபிடிப்புகள் ஏராளமாக  இரவும், பகலுமாக தொழில்நுட்ப அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

போர் முடிந்தது. எனினும் கண்டுபிடிப்பாளர்களின் பசி தொடர்ந்தது. அமெரிக்கா, சோவியத் ரஷ்யா என்கிற இரு வல்லரசுகளின் பனிப்போரால் விளைந்த கொடுமைகள் ஏராளம் என்றாலும், கண்டுபிடிப்புகள் பலவும் மனிதகுலத்தின் அறிவியல் உணர்வை பன்மடங்கு பெருக்கியது. விண்வெளி ஆராய்ச்சிகள் மும்முரமானது. பூமியின் பாதையில் முதன்முறையாக ‘ஸ்புட்னிக்-1’ செயற்கைக்கோள் நிறுவப்பட்டு, விண்வெளி பந்தயத்தில் முதலாவதாக ஓட ஆரம்பித்தது ரஷ்யா. இதன் மூலமாக அணுகுண்டுகளை தங்கள் நாட்டின் மீது ரஷ்யாவால் சுலபமாக ஏவமுடியும் என்று அஞ்சியது அமெரிக்கா.

இந்த சாதனையின் விளைவாக ரஷ்யாவின் பக்கமாக வளர்ந்து வரும் நாடுகள் சேரத் தொடங்கின. அடுத்தடுத்து ரஷ்யா விண்வெளிக்கு அனுப்பிய லூனா வரிசை விண்கலங்கள், நிலவை நெருங்கி படங்கள் எடுத்து, அதுவரை நாம் காணாத நிலவின் பல பகுதிகளை நமக்கு படம் பிடித்துக் காட்டின. இதையடுத்து, தன்னுடைய இராணுவ ஆயுதங்களுக்கான ஆய்வை ஓரம் கட்டிவிட்டு அமெரிக்காவும் விண்வெளி ஆராய்ச்சி கோதாவில் இறங்கியது.

1950களின் இறுதியில் தொடங்கி அமெரிக்காவும், ரஷ்யாவும் மாறி, மாறி நிலவுக்கு விண்கலங்களை அனுப்பிக்கொண்டே இருந்தன. 1961ல் ரஷ்யாவின் யூரி காகரின் விண்வெளியில் பறந்த முதல் மனிதர் ஆனார். இதையடுத்து மனிதனை நிலவுக்கு அனுப்ப வேண்டும் என அமெரிக்கா முடிவெடுத்தது. இதிலாவது ரஷ்யாவை முந்திவிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் கென்னடிக்கு வெறியே ஏற்பட்டது. ரஷ்யத் தலைவர் குருஷ்சேவோ, நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் எதுவும் இப்போது இல்லை என்று அறிவித்து விட்டார்.

இதையடுத்து ஏவப்பட்ட பல்வேறு விண்கலங்களில் ரஷ்யர்களும், அமெரிக்கர்களும் நிலவுக்கு அருகாகச் சென்று வந்தாலும், எவரும் நிலவில் கால் பதிக்கவில்லை. அதற்காக அமெரிக்கா முயற்சித்த திட்டமொன்று 1967ல் விபத்தாகி, நிலவுக்குக் கிளம்ப இருந்த மூன்று விண்வெளி வீரர்கள் மரணமடைந்தனர். சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்ததின் அடிப்படையிலேயே 1969ல் வெற்றி கண்டது. அதைத் தொடர்ந்து நிலவில் மனிதன் பிரவேசிக்கும் முயற்சிகள் சில காலமே தொடர்ந்தது.

மொத்தமாகவே நிலவில் கால் பதித்த மனிதர்கள் ஒரு டஜன் பேர்தான். 1972க்குப் பிறகு மனிதனை அங்கே அனுப்பும் திட்டம் எதுவும் நடைபெறவில்லை. நிலவில் கால் பதித்தவர்களில் ஒருவர்கூட இன்று உயிரோடு இல்லை. மீண்டும் நிலவுக்கு செல்வோம் என்று இப்போதுதான் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கிறார். பெரும் பொருட்செலவு பிடிக்கும் நிலவை ஆராயும் திட்டங்களுக்கு பணம் ஒதுக்குவதற்கு அரசாங்கங்கள் தயங்கிக் கொண்டிருந்தன.

சோவியத் யூனியன், அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி கூட்டமைப்பு, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகியவை மட்டுமே இதுவரை நிலவை ஆராயும் திட்டங்களில் வெற்றி கண்டவை. 21ம் நூற்றாண்டு பிறந்த பிறகு சீனாவும், இந்தியாவும் நிலவினை ஆராய்வதில் மும்முரமாக இருப்பதைத் தொடர்ந்தே மீண்டும் அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் ஆர்வம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றன. இந்தியாவின் ‘சந்திராயன்’ திட்டம் பெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ‘சந்திராயன்-2’வை அனுப்ப இந்தியா திட்டமிட்டிருக்கிறது.

மனிதர்களில்லா கலங்கள், மனிதர்களோடு பயணித்த கலங்கள் என்று ஏகப்பட்ட முறை நிலவுக்கு நாம் அனுப்பியிருந்தாலும், நிலவின் இருண்ட பகுதியை இதுவரை ஆராயக்கூடிய வாய்ப்பு யாருக்கும் அமையவில்லை. முதன்முறையாக இப்போது சீனா ஏவியிருக்கக் கூடிய ‘குய்ஹியாவோ’, இந்தக் குறையைப் போக்கப் போகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்ட முறை நிலவு ஆராயப்பட்டிருக்கிறது. இதற்காக பல லட்சம் கோடிகளை உலகம் செலவழித்திருக்கிறது.

இவ்வளவு செலவழித்து அங்கிருந்து மண்ணையும், கற்களையும் எடுத்துக்கொண்டு வரவேண்டுமா என்கிற நியாயமான கேள்வி உங்களுக்கு எழலாம். ஆனால், நிலவுக்குள் புதைந்திருக்கும் ரகசியங்களுக்கு விலை மதிப்பே இல்லை. சும்மா பேச்சுக்குத்தான். பெட்ரோல் லிட்டருக்கு 80 ரூபாய் விற்கிறது. தங்கம், சவரன் ரூ.25,000. இதெல்லாம் நிலவில் கொட்டிக் கிடக்கும் பட்சத்தில் வாரிக்கொண்டு வர முடிந்தால் எவ்வளவு லாபம் என்று யோசித்துப் பாருங்கள்!

- யுவகிருஷ்ணா