மயிலாப்பூர் ராயர்ஸ் மெஸ்



- திலீபன் புகழ்

வீடுகளில் பலகாரம் செய்து அடுக்குப் பானையில் வைப்பார்கள். அதை எடுத்து சாப்பிடும் போது அடுக்குப் பானையின் வாசம் அந்த பலகாரத்தில் மணக்கும். பலகாரம் தீர்ந்த பிறகும் அந்த அடுக்குப் பானையில் பல மாதங்கள் பலகார வாசனை இருந்த படியே இருக்கும். அப்படியான மணமும் சுவையும் அக்கறையும் நிறைந்ததுதான் ராயர்ஸ் மெஸ். சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் இருக்கும் அருண்டேல் சந்தில் பலகாலமாக வீற்றிருந்து மணம் வீசி வருகிறது இந்த மெஸ்.

அந்நியமாகத் தெரியும் என்பதால், சாப்பிட வருபவர்களை இங்கு ‘சார்’ என்று அழைப்பதில்லை. ‘டிபன் சாப்பிட்டீங்களாண்ணா? காபி குடிச்சேளாண்ணா...’ என்றுதான் கேட்கிறார்கள். பத்து பேருக்கு மேல் அமர முடியாத அறைக்குள் இயங்கி வரும் இந்த மெஸ், மயிலாப்பூரின் அடையாளங்களுள் ஒன்று! ‘‘ஆரம்பத்தில் ‘ராயர் கஃபே’னு இருந்துச்சு. இப்ப ராயர்ஸ் மெஸ். பேரை நாங்க மாத்தலை. எம்ஜிஆர் மாத்த வைச்சிட்டாரு.

அவர் முதல்வரா இருந்தப்ப, ‘சின்ன ஹோட்டல்களுக்கு, கஃபேனு பேரு வைக்கக் கூடாது; மெஸ்னுதான் வைக்கணும்’னு சட்டம் போட்டாரு. அப்ப மாத்தினோம். அவர் முதல்வர் பதவிக்கு வர்றதுக்கு முன்னாடி மெயின் ரோட்ல வந்து காருக்குள்ள உட்கார்ந்துக்கிட்டே எங்க கடை டிபனை வாங்கிச் சாப்பிடுவாரு. முதல்வரான பிறகும் கூட பார்சல் வாங்க ஆள் அனுப்புவார்...’’ என்கிறார் மூன்றாம் தலைமுறையாக இதை நடத்தி வரும் குமார்.

‘‘பூர்வீகம் விழுப்புரம் பக்கம் கரடிப்பாக்கம். கொள்ளுத் தாத்தா ஸ்ரீனிவாசராயர் 70 வருஷங்களுக்கு முன்னாடி மெட்ராஸ் வந்து டிபன் கடையை ஆரம்பிச்சார்! தாத்தா பத்மநாபன் திகட்டாத இயல்பான சுவைல சமைச்சார். இப்ப அப்பா அதே பக்குவத்துல செய்யறார். அவர்கிட்ட இருந்து அந்த சூத்திரத்தை நான் கத்துக்கிட்டு இருக்கேன்...’’ சிரிக்கிறார் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த மனோஜ் குமார்.

‘‘சந்துக்குள்ள இருந்தாலும் தேடி வந்து சாப்பிடற விஐபிஸ் இருக்காங்க. இதுல பெரும்பாலானவங்க சினிமா ஆட்கள். வி.கே.ராமசாமி, நாகேஷ்ல  தொடங்கி சிம்பு, சிவகார்த்திகேயன் வரை எங்க கஸ்டமர்ஸ்தான்! நடமாட முடிஞ்ச வரைக்கும் ‘துக்ளக்’ சோ இங்க வந்து சாப்பிட்டார். ஒரு முறை காலை ஆறு மணிக்கே சுப்ரமணியசுவாமி கடைக்கு சாப்பிட வந்துட்டாரு. நாங்க லேட்டாதான் வருவோம். அப்படி நாங்க வந்தப்ப வெளில பூரா போலீஸ். எங்களை உள்ளயே விடலை!

‘நாங்கதான் ஓனர்ஸ். உள்ள போய் நாங்க தோசை ஊத்துனாதான் நீங்க சாப்பிட்டுப் போக முடியும்’னு எவ்வளவோ எடுத்துச் சொன்னோம். கேட்கவே இல்ல. அப்புறம் சுப்பிரமணிய சுவாமியே வெளில வந்து எங்களை உள்ள கூட்டிட்டுப் போனாரு!’’ சிரித்தபடியே இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார் குமாரின் தம்பி மோகன். ‘‘கிரேஸி மோகன் இங்க அடிக்கடி வருவார். அவர் நாடகத்துல யாராவது அடிக்கடி ‘அண்ணா’னு சொன்னா, ‘என்னய்யா இது என்ன ராயர்ஸ் கஃபேயா’னு டயலாக்ல கிண்டலடிப்பார்.

அதே மாதிரி அவர் வசனம் எழுதற படங்கள்ல ஒரு இடத்திலாவது எங்க மெஸ்ஸை குறிப்பிடுவார்...’’ மலர்ச்சியுடன் புன்னகைக்கிறார் குமார். இட்லி, அடை, பொங்கல், ரவா தோசை. கூடவே ஒரு ஸ்வீட். இந்த குறைவான மெனுதான் எப்போதும். பரிமாறுவது, கல்லாவில் காசு வாங்கிப் போடுவது என சகல வேலைகளையும் குமார் செய்கிறார். தண்ணீர் கொடுப்பதும் இலை போடுவதும் அவர் மகன் மனோஜ்.

உதவிக்கு இருவர். இவ்வளவுதான் கடை. காலை ஆறு மணி முதல் பத்து மணி வரை. பிறகு மாலை மூன்று முதல் ஆறு மணி வரை... மெஸ் இயங்கும் நேரம் இது. கடைசி நிமிடம் வரை காத்திருந்து சாப்பிட்டுச் செல்பவர்கள் போலவே மணிக்கணக்கில் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்புபவர்களும் இருக்கிறார்கள்.‘‘கடையை விரிவுபடுத்தச் சொல்றாங்க.

ஆனா, எங்க வெற்றியே இந்த சின்ன கடைதான். குறைவா சமைக்கிறப்பதான் அந்தக்கால பக்குவத்துல சமைக்க முடியும். எப்படி நாங்க தலைமுறை தலைமுறையா சமைக்கிறோமோ அப்படி சாப்பிட வர்ற வாடிக்கையாளர்களும் தலைமுறை தலைமுறையா சாப்பிடறவங்கதான். பணம் மட்டும் முக்கியமில்ல...’’ அழுத்தமாகக் குறிப்பிடுகிறார் குமார்.           

ராயர் அடை தோசை

கடலைப் பருப்பு - 100 கிராம்.
துவரம் பருப்பு - 50 கிராம்.
பச்சரிசி - 50 கிராம்.
உளுந்து - ஒரு மேசைக்கரண்டி.
காய்ந்த மிளகாய் - 5.
பெருங்காயம் - கால் தேக்கரண்டி.
தேங்காய் - ஒரு மேசைக்கரண்டி.
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு.
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.

பக்குவம்: கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பச்சரிசி, உளுந்து என அனைத்தையும் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். அத்துடன் காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து குருணை பதத்துக்கு அரைத்து வைக்கவும். தேங்காயை சிறு சிறு பல்லாக நறுக்கி, அரைத்த மாவுடன் சேர்த்துக் கொள்ளவும். தோசைக் கல்லில் ஊற்றுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கறிவேப்பிலை, கொத்துமல்லி கலக்கவும். அடி கனமான தோசைக் கல்லில் வார்த்து எடுக்க வேண்டும். நான்ஸ்டிக் தாவாவில் அடை செய்தால் மாவு சரியாக வேகாது. அடி கனமான இரும்புக்கல் சுவையைக் கூட்டும்.

- ஆ.வின்சென்ட் பால்