ருசியா சாம்பார் வைக்கத் தெரியலை!



நொந்து கொள்கிறார் சமந்தா

சந்தோஷத்தில் பூரிக்கிறார் சமந்தா. தெலுங்கு ‘ரங்கஸ்தலம்’ அவரை இருநூறு கோடி க்ளப்பில் சேர்த்திருக்கிறது. தமிழில் ‘இரும்புத்திரை’, ‘நடிகையர் திலகம்’ படங்கள் கொடுத்த வெற்றி... அடுத்து ரெடியாகி வரும் ‘சீமராஜா’ என அத்தனையும் சமந்தாவுக்கு லைக்ஸை குவித்து வருகிறது. ‘‘மேரேஜ் லைஃப் ஸோ ஸ்வீட்! அது என் முகத்துல தெரியறதா பலரும் சொல்றாங்க.

ஐ லவ் சினிமா. கல்யாணத்துக்குப் பிறகும் நடிக்கணும் என்பது conscious decision. இண்டஸ்ட்ரி லேயும், ஹீரோயினுக்கு கல்யாணமானா அவங்க கேரியர் முடிஞ்சுடும்னு ஒரு மித் இருக்கு. அதை முடிஞ்சளவு மாத்தணும்னு விரும்பினேன். புகுந்த வீட்ல எனக்கு சப்போர்ட்டா இருக்காங்க. அதனாலதான் கல்யாணமான மூன்றாம் நாளே என்னால ஷூட்டிங்ல கலந்துக்க முடிஞ்சுது...’’ புன்னகைக்கிறார் சமந்தா.

‘நடிகையர் திலகம்’ல ஜர்னலிஸ்ட்டா கலக்கியிருந்தீங்க..?

இதை பெருமையா நினைக்கிறேன். சாவித்திரியம்மா நடிப்பு ரொம்பப் பிடிக்கும். அவங்க ரியல் லைஃப், மிகப்பெரிய கதை. கடின உழைப்பு,வலி, வேதனை, புகழ், தோல்வி, துக்கம்னு அத்தனையும் கலந்த அல்டிமேட் ஸ்டோரி.

கல்யாணத்துக்குப் பிறகும் ஹிட்ஸ் குவிக்கிறீங்க...

தேங்க்ஸ். புகுந்த வீட்டு ஆதரவு இல்லைனா இது சாத்தியமாகி இருக்காது. ‘இந்தப் படத்துல இன்னும் பெட்டரா நடிச்சிருக்கணும்’னு என்னை நானே விமர்சனம் செய்யறப்பவும், ‘இல்ல... யூ ஆர் ராக்கிங்’னு என்கரேஜ் பண்றாங்க. அவங்களுக்கு  இந்த இண்டஸ்ட்ரி பத்தி நல்லா தெரியும். சமூக வலைத்தள பக்கங்கள்ல நடக்கிற விஷயங்களும் அறிவாங்க. ஒண்ணு தெரியுமா? வீட்ல நாங்க யாருமே சினிமா பத்தி பேசறதில்ல. அப்படியொரு எழுதப்படாத சட்டமே இருக்கு! மத்த ஒர்க் மாதிரி நடிப்பும் ஒரு வேலை. தட்ஸ் ஆல்.

யாருமே ‘நீ ஏன் அந்தப் படம் பண்ணினே? நீ ஏன் குண்டாயிட்டே..? அந்த கேரக்டர் ஏன் பண்ணினே...’னு என்னை யாரும் குறை சொல்லிடக் கூடாதுனு கவனமா இருக்கேன். முன்னாடி நடிச்ச படங்களைவிட இனி நடிக்கப் போற படங்கள்ல இதை தெளிவாவே நீங்க பார்க்கலாம். ஆண் சூப்பர் ஸ்டார்ஸ் எல்லாருமே கல்யாணத்துக்குப் பிறகும் நடிக்கிறாங்க. ‘மேரேஜுக்கு அப்புறம் ஏன் நடிக்க வந்தீங்க’னு அவங்ககிட்ட யாரும் கேட்கறதில்ல. அப்படியிருக்கிறப்ப ஹீரோயின்ஸ்கிட்ட மட்டும் ஏன் இந்தக் கேள்வி எழுப்பப்படுதுனு தெரியலை. ‘உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?’ என்கிற கேள்வி ஹீரோயின்ஸை நோக்கி கேட்கப்படாத காலம் நிச்சயம் வரும்.

ஃபாரீன்ல டூயட் ஆடறது உங்களுக்குப் பிடிக்காதாமே?

யெஸ். ‘இரும்புத்திரை’ல கதையோடு சேர்ந்த டூயட் இருந்தது. இதுமாதிரி இருக்கறதுதான் பிடிக்கும். அப்படியில்லாம திடீர்னு கதையை விட்டு விலகி சுவிட்சர்லாந்துல ஆடிப் பாடறது பிடிக்கறதே இல்ல. கதை நடக்கிற ஊர்லேந்து எப்படி திடீர்னு வெளிநாடு போக முடியும்னு ஆடியன்ஸ் மாதிரியே பலமுறை யோசிச்சிருக்கேன். படத்துல நடிக்க கதை கேட்கும்போது கூட கடைசில எத்தனை பாட்டு இருக்குனு மறக்காம கேட்பேன்! இன்னொரு விஷயம். போன வருஷமும் சரி, இந்த வருஷமும் சரி, படப்பிடிப்புக்காக வெளிநாடு போகல.

இதுல சின்னதா ஒரு சந்தோஷம். அந்தப் படங்கள்ல பாடல்கள் எல்லாம் கதைக்குள்ள வர்ற மாதிரி இருந்தது. இப்ப வர்ற இயக்குநர்கள் லாஜிக்கலா யோசிக்கிறாங்க. ‘இரும்புத்திரை’ல என்னை எக்ஸ்ட்ரா க்யூட்டான, புத்திசாலியா காண்பிச்சதுக்கு டைரக்டர் மித்ரனுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ். நான் சேலை கட்டி நடிக்கிற படங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கிறதா சொல்றாங்க. ஆக்சுவலா எனக்கும் இந்த உடைதான் சவுகரியமா இருக்கு. ஏன்னா, விஷால் மாதிரி உயரமான நடிகர்களோடு நடிக்கிறப்ப ஹை ஹீல்ஸ் போட்டு மேனேஜ் செய்துக்க முடியும்!

புகுந்த வீட்ல சமைக்க ஆரம்பிச்சிட்டீங்களா?

பின்னே..! ஆனா, நம்மூர் இட்லி, தோசை, சாம்பார் மாதிரி என்னால சமைக்க முடியலை! இந்தியா முழுக்க பல இடங்கள்ல ஷூட்டிங் போயிருக்கேன். இட்லி, தோசை, சாம்பாரை பலரும் கேட்டு வாங்கறதையும் பார்த்திருக்கேன். ஆனாலும் நம்மூர் ருசி எங்கயும் இல்ல! இதை எப்படியாவது என் கை பக்குவத்துல கொண்டு வந்துடணும்னு மெனக்கெட றேன். வரவே மாட்டேங்குது. ஆனா, எப்படியும் ஒருநாள் இந்த ருசியை கொண்டு
வந்துடுவேன்!

என்ன சொல்றார் ‘சீமராஜா’ சிவகார்த்திகேயன்?

நான் திரையுலகுக்கு வந்து 8 வருஷங்களாகுது. தமிழ்ல இப்பதான் வில்லேஜ் ரோல் பண்றேன்னு நினைக்கிறேன். நல்ல ரோல். சிவா, பொன்ராம் சார் ஷூட் கலகலப்பா போகுது. இதுக்கு மேல ‘சீமராஜா’ பத்தி பேச முடியாது! ரிலீஸ் சமயத்துல விரிவா பேட்டி தர்றேன்!  

- மை.பாரதிராஜா