ரத்த மகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர்



கே.என்.சிவராமன் - 3

எப்பேர்ப்பட்ட சிக்கலான சூழ்நிலையியலும் புத்தியை மிகத் தெளிவாக நிறுத்திக்கொண்டு செயல் புரியக்கூடிய ஆற்றல் உடையவன் என்றும், அதிர்ச்சி என்றால் என்னவென்றே அறியாதவன் என்றும் பெயர் வாங்கியிருந்த கரிகாலனின் நுண்ணறிவுகூட அன்றைய இரவின் ஐந்தாம் நாழிகையில் தன் முன் நின்றவனின் முகத்தைக் கண்டதும் ஒரு கணம் துணுக்குறவே செய்தது. யாரை எதிர்பார்த்தாலும் இந்த மனிதனை எதிர்பார்க்கவில்லை என்பதற்கு அடையாளமாக கரிகாலனின் மனம் அப்பால் இருந்த நாவாய்கள் போலவே இப்படியும் அப்படியுமாக அசைந்தது.

ஏதேதோ சிந்தனைகள் சிற்றலைகள் போலவே அவன் மனதைத் தாக்க ஆரம்பித்தன. நீருக்கடியில் உதைத்துக் கொண்டிருந்த அவன் கால்கள் கூட கடந்த கால வரலாற்றை நிகழ்காலத்துக்கு அழைத்து வந்து எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறதோ என கவலைப்பட்டன. அனைத்துக்கும் காரணமாக இருந்த அந்த மனிதனின் முகத்தில் மட்டும் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. அந்தத் தோற்றமே கரிகாலனை இயல்புக்குக் கொண்டு வந்தது.

கழுத்தை நெரித்துக் கொண்டிருந்த தன் விரல்களை நிதானமாக விலக்கினான். ‘‘மன்னிக்க வேண்டும்...’’ என அடுத்து அவன் பேசியபோது கூட சாந்தமே நிரம்பி வழிந்தது.‘‘எதற்கு மன்னிப்பு கரிகாலா... என் கழுத்தை நெரித்ததற்கா?’’ ‘எப்படி என்னை நீ இனம் கண்டாயோ அப்படி உன்னையும் நான் அறிவேன்’ என்ற தொனி அக்குரலில் தென்பட்டது. ‘‘இல்லை...’’ பதில் சொன்ன கரிகாலன் கடல் நீரில் நனைந்திருந்த தன் தலை சிகையைச் சிலுப்பி பிறை நிலவில் உலர்த்தினான்.

‘‘பிறகு?’’‘‘எந்த முன்னறிவிப்பும் இன்றி இரு வீரர்களுடன் மல்லைக் கடலில் கடலாட வந்த கதம்ப நாட்டு இளவரசரான உங்களைத் தடுத்து நிறுத்தியதற்காக!’’சொன்ன கரிகாலன் தன்னைப் போலவே நீரிலிருந்து வெளியே வந்திருந்த சிவகாமியைப் பார்த்தான். ‘‘காலம் திரண்டு வந்ததுபோல் இளவரசர் இரவிவர்மன் நம் முன் நிற்கிறார். வரவேற்பதுதான் பல்லவ நாட்டின் இயல்பு. வயதிலும் மூத்தவர் என்பதால் தலை வணங்கு சிவகாமி!’’ ‘‘தேவையில்லை...’’ கணீரென்று ஒலித்தது இரவிவர்மனின் குரல்.

‘‘சம அந்தஸ்துள்ளவர்கள் பரஸ்பரம் வணங்குவதில்லை..!’’கரிகாலனின் புருவங்கள் முடிச்சிட்டன. ‘‘புரியவில்லை...’’‘‘இதில் புரியாமல் போக என்ன இருக்கிறது கரிகாலா! எப்படி நீ எனக்கு தலை வணங்க வேண்டியதில்லையோ... அப்படி சிவகாமியும் வணங்கத் தேவையில்லை! பிறப்பாலும் குடும்பப் பாரம்பரியத்தாலும் நாம் மூவருமே சமமானவர்கள்தான்!’’‘‘என்ன சொல்கிறீர்கள் கதம்ப இளவரசரே?’’‘‘உண்மையை கரிகாலா! இவள் யாரென்று பல்லவ நாட்டு மக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.

உங்கள் மன்னர் பரமேஸ்வர வர்மனின் வளர்ப்பு மகள் என சற்றுமுன் வல்லபன் உன்னிடம் அறிமுகப்படுத்தி இருக்கலாம். இத்தனை நாட்களாக இவள் எங்கிருந்தாள் என்ற கேள்வி உனக்குள் தொத்தி இருக்கலாம். அப்படிப்பட்ட எந்த வினாக்களும் கதம்பர்களுக்கோ சாளுக்கியர்களுக்கோ இல்லை! சிவகாமியின் பிறப்பிலிருந்து இப்போது பல்லவ இளவரசரிடம் செய்தி சொல்ல உன்னுடன் இவள் புறப்பட்டிருப்பது வரை சகலமும் எங்களுக்குத் தெரியும்! இவள் செய்திருக்கும் சபதம் உட்பட!’’

இரவிவர்மன் இப்படிச் சொல்லி முடிக்கவும், தன் வாளை உயர்த்தி அவன் மீது சிவகாமி பாயவும் சரியாக இருந்தது. இருவர் மீதும் தன் பார்வையை கரிகாலன் பதித்திருந்ததால் உடனடியாக அவள் கரங்களைப் பிடித்து நிறுத்தினான். ‘‘தவறு சிவகாமி...’’‘‘எது? எதிரி நாட்டு சிற்றரசின் இளவரசர் பல்லவ நாட்டுக்குள் சுதந்திரமாக உலவுவதா?’’‘‘இல்லை...’’ கரிகாலனின் குரல் அழுத்தமாக ஒலித்தது.‘‘பிறகு?’’

‘‘உனக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படாமல் தடுப்பது என் கடமை! பிராமணர்களைக் கொல்லக் கூடாது என சாஸ்திரம் சொல்கிறது. இரவிவர்மர் சத்திரியரல்ல. பிராமணர். புலவர் தண்டியிடமிருந்து வந்திருக்கும் உனக்கு வரலாறு தெரிந்திருக்கும். என்றாலும் திரும்பவும் நினைவுபடுத்துகிறேன். ஒருவகையில் அர்த்த சாஸ்திரம் எழுதிய கெளடில்யரின் கதையேதான். என்ன, அதில் சந்திரகுப்தரை கெளடில்யர் அரசராக்கினார். இதில், தானே மன்னரானார்...’’ நிறுத்திய கரிகாலனின் முகம் உணர்ச்சியில் கொந்தளித்தது. சற்று நிதானித்தவன் தொடர்ந்தான்.

‘‘காஞ்சி கடிகையில் கல்வி கற்று வந்த மயூர சர்மன் என்ற பிராமணருக்கு ஓர் அவமானம் பல்லவர்களால் ஏற்பட்டது. அதற்குப் பழிவாங்க கதம்பர்களின் அரசரானார். குந்தள தேசத்தை ஆண்டார். ஆரம்பத்தில் பல்லவர்களுக்கு அடங்கியிருந்தவர்கள் பிறகு கங்க வர்மன் காலத்தில் தனியாட்சி பெற்றார்கள்...’’ ‘‘அதன்பிறகு இரு நூற்றாண்டுகள் வரை கதம்ப ராஜ்ஜியத்தை ஆண்டவர்கள் தங்களுக்கு கப்பம் கட்டிக் கண்டிருந்த சாளுக்கியர்களிடம் அரசைப் பறிகொடுத்து சிற்றரசாக சுருங்கினார்கள்...’’ கரிகாலன் ஆரம்பித்த சரித்திரத்தை இடைவெட்டி சிவகாமி முடித்தாள்.

‘‘சிற்றரசாக இருப்பது ஒன்றும் அவமானமில்லை சிவகாமி. நேற்று சாதவாகனர்களிடம் அடங்கி இருந்த பல்லவர்கள்தான் இன்று பெரும் நிலப்பரப்பை ஆள்கிறார்கள். நேற்று தொண்டை மண்டலத்தையும் ஆண்ட சோழர்கள் இன்று பல்லவர்களுக்குக் கட்டுப்பட்டு இருக்கிறார்கள். நாளை சோழர்களுக்கு அடங்கிய சிற்றரசாக பல்லவ நாடு மாறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை...’’ நீந்தியபடியே நெஞ்சை உயர்த்தி கம்பீரமாக அறிவித்தான் இரவிவர்மன்.

‘‘அப்படி கதம்பர்களும் இழந்த பெருமையை மீண்டும் பெற வேண்டும் என்பதற்காகத்தான் பல்லவர்களின் துறைமுகப் பட்டிணத்துக்கு ரகசியமாக வந்திருக்கிறீர்களா?’’‘‘இல்லை என்று சொன்னால் நம்பப் போகிறாயா அல்லது ஆம் என்று சொன்னால் ஏற்கப் போகிறாயா..? அவரவர் தேசம் அவரவருக்கு உயர்வானது சிவகாமி. இன்றைய நண்பர்கள் நாளைய பகைவர்கள். நிகழ்கால எதிரிகள் எதிர்காலத் தோழர்கள்.

மல்லைக் கடற்கரைக்கு இந்த நள்ளிரவில் இரு வீரர்களுடன் நான் வந்தது குற்றமென்றால், பல்லவ அரசரின் நன்மதிப்பைப் பெற்று அவர் குடும்பத்தில் ஒருத்தியாக ஊடுருவி, சபதம் என்ற பெயரில் எல்லோரையும் நம்ப வைத்து பல்லவ குலத்தையே வேரறுக்க காய்களை நகர்த்தி வரும் உனது செயலுக்கு என்ன பெயர்?!’’‘‘இரவிவர்மா..?’’‘‘அலைகளை மீறி இரையாதே சிவகாமி. பயந்து கட்டுப்பட நான் அரபுப் புரவி அல்ல. கதம்ப இளவரசன். பல்லவர்களைப் பழிவாங்க சாளுக்கியர்களுடன் இணைந்திருப்பவன். நேர்மையான எதிரி.

உன்னைப் போல் நம்பிக்கைத் துரோகி அல்ல!’’அடுத்த கணம் சிவகாமியின் வாள் இரவிவர்மனின் தலையை நோக்கி இறங்கியது. நியாயமாகப் பார்த்தால் கதம்ப இளவரசரின் மரணம் மல்லைக் கடலிலேயே சம்பவித்திருக்க வேண்டும். காயம்பட்டு தங்கள் ஆயுதங்களைப் பறிகொடுத்திருந்த இரு வீரர்களும் அப்படித்தான் நினைத்தார்கள். வீலென்று அலறவும் செய்தார்கள். ஆனால், நடக்கும் என்று நாம் நினைப்பது நடக்காமல் போவதும், நடக்கவே வாய்ப்பில்லை என்று நம்புவது நடப்பதும்தானே மனித வாழ்க்கை?

அதுவேதான் மல்லைக் கடலிலும் அப்போது நடந்தது. கரிகாலனின் வாள் உயர்ந்து சிவகாமியின் வீச்சைத் தடுத்தது. இவ்வளவும் இரவிவர்மனின் தலைக்கு மேல்தான் நடந்தது. என்றாலும் அசையாமல் நின்றான். தன்னைக் காத்ததற்காகக் கரிகாலனிடம் நன்றியும் சொல்லவில்லை. தன்னைத் தாக்க முற்பட்டதற்காக சிவகாமியிடம் பாயவும் இல்லை. ‘‘ஆத்திரக்காரிக்கு புத்தி மட்டு...’’ என்று மட்டும் அலட்சியமாக முணுமுணுத்தான்.‘‘இரண்டாவது முறையாக என்னைத் தடுக்கிறீர்கள் கரிகாலரே!

பிரம்மஹத்தி தோஷம் சூழ்ந்தாலும் பரவாயில்லை. அபாண்டமாக என்மீது குற்றம் சுமத்தும் இரவிவர்மனைத் தண்டிக்காமல் இங்கிருந்து நகரமாட்டேன்!’’ ‘கரிகாலா... நான் பொய் சொல்கிறேனா இல்லையா என்பதை நீயே ஆராய்ந்து அறிந்துகொள். இப்போது என்னிடம் பறித்துக் கொண்ட வாளைத் திருப்பிக் கொடுத்துவிட்டுத் தள்ளி நில். சிவகாமி யின் வீச்சுக்கு பதில் சொல்லிவிட்டு உன்னிடம் சிறைப்படுகிறேன்!’’

‘‘ஏற்கனவே சிறைப்பட்டுத்தான் இருக்கிறீர்கள் கதம்ப இளவரசே!’’என்ற கரிகாலன் தன் வாளால் சிவகாமியின் வாளைத் தட்டிவிட்டான். ‘‘பல்லவ மன்னர் மீது ஆணை. இனி வாளை நீ எடுக்கக் கூடாது...’’ கட்டளையிட்டவன், கரையிலிருந்து மூன்று படகுகள் தங்களை நோக்கி வருவதைக் கண்டான். ‘‘வீரர்களை அழைத்துக் கொண்டு வல்லபன் வருகிறான். நம்மை அவன் நெருங்குவதற்குள் சொல்லி விடுங்கள்...’’

‘‘எதை கரிகாலா?’’‘‘எதற்காக இங்கு வந்தீர்கள்?’’‘‘உனக்குத் தெரியாதா? நரசிம்மவர்ம பல்லவர் காலத்தில் வாதாபியை நீங்கள் எரித்ததற்கு பழிவாங்க திட்டமிடும் சாளுக்கிய மன்னர் எந்த பூர்வாங்க நடவடிக்கையும் எடுக்காமலா போர் முரசு கொட்டுவார்!’’‘‘அதற்காக கதம்ப இளவரசரையேவா அனுப்பி வைப்பார்?’’ ‘‘ஏன், இரவி வர்மன் வேவு பார்க்கக் கூடாது என ஏதேனும் சட்டம் இருக்கிறதா? பல்லவ இளவல் இராஜசிம்மன் எங்கிருக்கிறான் என்ற தகவல் அவனது உயிர் நண்பனான உனக்கு மட்டும்தான் தெரியும்.

இப்போது இந்த சாகசக்காரியுடன் அந்த இடத்துக்கு நீ செல்லப் போகிறாய். நீயோ வீராதி வீரன். சூராதி சூரன். அப்படிப்பட்ட உன்னைப் பின்தொடரும் பொறுப்பை சாதாரண வீரர்களிடம் எப்படி ஒப்படைக்க முடியும்? அதனால்தான் நானே சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் அனுமதியுடன் இங்கு வந்தேன். ஆனால்...’’ ‘‘என்னிடம் பிடிபட்டீர்கள்...’’ ‘‘அதற்காக ஜெயித்துவிட்டதாக நினைக்காதே! இந்த இரவி வர்மன் இல்லாவிட்டால்...’’

‘‘வேறொருவர் என்னைப் பின்தொடர்ந்து பல்லவ இளவல் இருக்கும் இடத்தைக் கண்டறிய முற்படுவார்... இதைத்தானே சொல்ல வருகிறீர்கள்? வருபவர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்று எனக்குத் தெரியும்...’’ என கரிகாலன் பதில் சொல்லி முடித்தபோது மூன்று படகுகளும் அவர்களைச் சூழ்ந்தன. கணித்தது போலவே வல்லபன் தலைமையில்தான் பத்து வீரர்கள் வந்திருந்தனர். அவனை நோக்கி மடமடவென்று கரிகாலன் உத்தரவிட்டான். ‘‘காயம்பட்ட இருவரையும் ஆதுரச் சாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துவிட்டு மல்லைச் சிறையில் அடை. கதம்ப இளவரசரை காஞ்சிக்கு அழைத்துச் செல்.

ஆனால், சிறையில் அடைக்க வேண்டாம். தனி மாளிகையில் வீரர்களின் கண்காணிப்பில் வைத்திரு. அரசருக்குரிய மரியாதை இவருக்கு குறைவின்றி வழங்கப்பட வேண்டும்...’’சரி என்பதற்கு அறிகுறியாக வல்லபன் தலையசைத்தான். ‘‘கரிகாலரே...’’ ‘‘என்ன வல்லபா?’’‘‘கரையிலிருந்து பார்த்துவிட்டு நாங்களாக இங்கு வரவில்லை...’’‘‘பிறகு?’’‘‘கட்டளைக்கு அடிபணிந்தே படகுடன் வந்தோம்...’’‘‘அனுப்பியது யார்?’’‘‘புலவர் தண்டி! கரையில் கூடாரமடித்துத் தங்கியிருக்கிறார்...’’

‘‘சரி. அவரைச் சந்திக்க நாங்கள் செல்கிறோம்...’’‘‘இல்லை...’’‘‘என்ன இல்லை?’’‘‘வந்து... கரிகாலரே... உங்களையும் சிவகாமியையும் உடனடியாக பல்லவ இளவல் இருக்கும் இடத்துக்குச் செல்லச் சொன்னார்...’’‘‘முடியாது வல்லபா. சிவகாமி குறித்து சில சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன...’’‘‘அதுகுறித்து கவலைப்பட வேண்டாம் என்றும், எக்காரணம் கொண்டும் சிவகாமியை சந்தேகப்பட வேண்டாம் என்றும்...’’‘‘புலவர் சொல்லச் சொன்னாரா?’’ ‘‘இல்லை. கட்டளையிட்டிருக்கிறார்!’’

கரிகாலன் திக்பிரமை பிடித்து நின்றான். சிவகாமியின் முகத்தில் பல்வேறு உணர்வுகள் தாண்டவமாடின. இதைப் பார்த்து இரவிவர்மன் வாய்விட்டுச் சிரித்தான். அத்துடன் தன் இடுப்பிலிருந்த சிறிய மூங்கில் குழாயை எடுத்து பலமாக ஊதினான். வெளியேறிய காற்று இசையாகப் பிரவாகம் எடுத்தது. அந்த இசை பல்லவ நாட்டின் தலையெழுத்தையே மாற்றப் போகிறது என்பதை அப்போது யாரும் அறியவில்லை.

(தொடரும்)

ஓவியம்: ஸ்யாம்