தமிழ் சினிமா சென்டிமென்ட்ஸ்!



- மை.பாரதிராஜா

தமிழ் சினிமாவில் டிரெண்டும் ரசனையும் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால், சென்டிமென்ட் மட்டும் மாறவே மாறாது என்பார்கள். இதில் உண்மையும் உண்டு. அப்படி ஆண்டாண்டு காலமாக இங்கே கடைப்பிடித்து வரும் சென்டிமென்ட்ஸ் குறித்து சினிமா ஆர்வலரும், திரைப்பட மக்கள் தொடர்பாளருமான பெரு.துளசிபழனிவேல், ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம், உதவி இயக்குநர் பாலசந்திரன் ஆகியோர் சுவாரஸ்யம் பொங்க பல தகவல்களைக் கொட்டினார்கள்.

* தியாகராஜ பாகவதர் தனது படங்களில், தான் மாற்றுத் திறனாளி வேடத்தில் நடிப்பது போல் பார்த்துக் கொள்வார். அப்படி அவர் நடித்த படங்கள் அத்தனையும் மெகா ஹிட் ஆகியிருக்கின்றன. ‘‘

* பீம்சிங்குக்கு ‘பா’ வரிசை இயக்குநர் என்றே பெயர். அவர் முதன்முதலில் இயக்கிய படம் ‘அம்மையப்பன்’. அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு ‘பாகப்பிரிவினை’, ‘பதிபக்தி’, ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘பாசமலர்’ என்று வரிசையாக ‘பா’ வரிசையில் டைட்டில் வைத்து ஹிட் அடித்தார்.

* எம்ஜிஆரின் ராசி எண் ஏழு. தனது கார்களின் எண்கள் எல்லாம் ஏழு வருமாறு பார்த்துக் கொள்வார். அவரது ஆரம்பகால படங்களில் எல்லாம் எம்.ஜி.ராம்சந்தர் என்றே டைட்டிலில் பெயர் வந்திருக்கும். எம்.ஜி.ராமச்சந்திரன் என்று டைட்டிலில் பெயர் வர ஆரம்பித்த பிறகே திரையுலகில் அவருக்கு அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்தது. அவரது ராசியான ஹீரோயின்கள் இரண்டே இரண்டு பேர்கள்தான். ஜெயலலிதாவுடன் 28 படங்களும், சரோஜாதேவியுடன் 26 படங்களும் நடித்திருக்கிறார்.

* ஏவி.எம். தயாரிக்கும் படங்களுக்கு ஸ்டூடியோவிலுள்ள மூன்றாவது ஃப்ளோரில்தான் பூஜை நடக்கும். தங்கள் ராசியாக இதை நினைத்தார்கள். காரணம், ஏவி.எம். ஸ்டூடியோ சென்னையில் வருவதற்கு முன் காரைக்குடியில் அவர்களின் ஸ்டூடியோ இருந்தது. இப்போதிருக்கும் ஸ்டூடியோவை தொடங்கியபோது மூன்றாவது தளத்தில்தான் அந்த காரைக்குடி ஸ்டூடியோ செட்டை உருவாக்கியிருந்தார்கள். அந்த சென்டிமென்ட் தொடர்கிறது,

* அதேபோல், ‘அ’வில் தொடங்கும், அதாவது ‘அம்மா’, ‘அப்பா’, ‘அண்ணா...’ என பெயர்கள், கேரக்டர்களுடன் ஆரம்பிப்பதும் வழக்கம். ஏவி.எம்.மில் உள்ள பழைய பிள்ளையார் கோயில் ரஜினிக்கு பிடித்தமானது. அவரது புதுப்படங்களின் பூஜை சென்டிமென்ட்டாக அந்தக் கோயிலில்தான் நடைபெறும். இப்போது புதுப்பிள்ளையார் கோயில்தான் இருக்கிறது.

* ஆடு, மாடு, யானை என்று விலங்குகளை வைத்து படமெடுப்பது ‘தேவர் ஃபிலிம்ஸ்’ சென்டி மென்ட். தேவர் தயாரித்த முதல் படமான ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தில் காளைமாடு நடித்திருக்கும். அப்போது முதல் விலங்கு சென்டி மென்ட் தொடர்ந்தது. அதேபோல தேவர் எடுக்கும் படங்களில் எல்லாம் ‘சக்சஸ்’, ‘வெற்றி’ என்ற டயலாக் நிச்சயம் இடம்பெறும். ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தில் தொடங்கி அவர்கள் தயாரித்த ரஜினி, கமல் படங்கள் வரை இது தொடர்ந்திருக்கிறது.

* இயக்குநர் ஹரியின் படங்களில் டைட்டில் கார்டில் அவரது பெயர் வரும்போது அதன் பின்னணியில் கோயில் கோபுரம் ஒன்று கண்டிப்பாக இடம்பெறும். காரைக்குடியில் ஒரு ஷாட்டாவது எடுத்துவிடுவார். அதே போல நாய்க்கும் சின்னதொரு முக்கியத்துவம் இருக்கும்.

* பழம்பெரும் தயாரிப்பாளர் கே.பாலாஜி தமிழில் நேரடியாக தயாரித்த ஒரே படம் ‘தங்கை’. அதன் பிறகு அவர் தயாரித்த படங்கள் பெரும்பாலும் இந்தி ரீமேக்தான். அவரது படங்களில் ஹீரோவுக்கு ராஜா என்றும், ஹீரோயினுக்கு ராதா என்றும் பெயர்கள் இருக்கும்.

* இயக்குநர் ஷங்கரின் ஒருசில படங்களைத் தவிர, மீதமுள்ள படங்களில் எல்லாம் கண்டிப்பாக ஃப்ளாஷ் பேக் ஒன்று இடம்பெறும்.

* சாய்பாபாவுக்கு உகந்த தினமான வியாழக்கிழமையில் தனது பட பூஜை, அறிப்புகள், ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு இருக்குமாறு அஜீத் பார்த்துக் கொள்வார். அதேபோல ‘வி’ வரிசையில் டைட்டில் அமைவதை அதிர்ஷ்டமாகக் கருதுவார். ‘வாலி’யில் தொடங்கி ‘வில்லன்’, ‘வரலாறு’, ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, இப்போது ‘விஸ்வாசம்’ வரை இது நீடிக்கிறது.

* இயக்குநர் ராமின் படங்களில் ஹீரோக்கள் தாடியுடன்தான் வலம் வருவார்கள். ‘கற்றது தமிழ்’ தொடங்கி இப்போது மம்மூட்டி நடிக்கும் படம் வரை ‘தாடி’ வளர்த்திருக்கிறார்கள்.

* மிஷ்கின் படங்களில் ‘இருட்டு’, ‘கால்ஷாட்’, ‘ஹீரோ தலையைக் குனிந்து கொண்டே பேசுவது...’ இடம்பெறும். அதே போல பிச்சைக்காரர், திருநங்கை, மனநலம் பாதித்தவர்கள் போன்ற எளிய மனிதர்கள் இரக்க குணம் மிகுந்தவர்களாக
வலம் வருவார்கள்.

* தான் இயக்கும் படங்களின் பாடல் காட்சியின்போதோ கிளைமாக்ஸிலோ ஒரு ஃபிரேமிலாவது தலைகாட்டுவது கே.எஸ்.ரவிக்குமாருக்கு பிடித்தமானது.

* கிரேசி மோகன் தனது பட ஹீரோயின்களுக்கு ஜானகி, மைதிலி என பெயர்கள் வைத்துவிடுவார். அதேபோல விசுவும், அவரது ஹீரோயினுக்கு உமா என பெயரிட்டிருப்பார்.

* மணிரத்னம் படங்களில் ட்ரெயின் ஷாட், மழை கண்டிப்பாக இடம்பெறும். அதேபோல ஒரு கேரக்டர் உயரமான இடத்தில் இருந்தும், இன்னொரு கேரக்டர் அதன் அடிவாரத்தி
லிருந்தும் கத்திப் பேசுவார்கள்.

* ஆள்மாறாட்டக் காட்சிகள் என்றாலே சுந்தர் சி.க்கு அல்வா சாப்பிடுவது போல. அவரது படங்களில் ஆள்மாறாட்டக்
காட்சிகள் நிச்சயம் இடம்பெறும்.

* ‘மின்னலே’வில் இருந்து இப்போது எடுக்கும் படங்கள் வரை ‘அமெரிக்கா’வைக் குறிப்பிட்டு விடுவது கவுதம்மேனனின் ஸ்டைல்.

* இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் படங்களில் அவரது சொந்த ஊரான ‘கள்ளக்குறிச்சி’ டயலாக்கிலாவது இடம்பெற்று விடும்.

* சீன்கள் ஷூட் பண்ணும்போதும் சென்டிமென்ட் கடைப்பிடிப்பது உண்டு. ஒருவர் பிணமாக நடிப்பதற்கு முன்னர் அவருக்கு எதுவும் நேரக்கூடாது என்பதற்காக தீபாராதனை காட்டிய பிறகே பிணமாக நடிக்க ஆரம்பிப்பார்கள். இப்படி ‘செத்து’ நடித்து பின்னர் அப்படியே ஷாட்டை முடித்துவிட மாட்டார்கள். படத்தில் இடம்பெறாவிட்டாலும் அவரைச் சிரிக்க வைத்து ஒருஷாட் எடுத்தபிறகே அடுத்த ஷாட்டுக்கு செல்வார்கள்.

படங்கள் உதவி: ஞானம்