எங்க லவ் ஸ்டோரில ஏகப்பட்ட ஆக்‌ஷன் ப்ளாக்ஸ் உண்டு!‘அழகு’ சீரியல் இயக்குநர் ஒ.என்.ரத்னம் சக்சஸ் ஸ்டோரி

ஹாலில் வொயிட் வித் பிஸ்கட் கலரில் பொசுபொசுவென நாய்க்குட்டி மிக்கி, தகதகவென மீன்கள் ஜொலிக்கும் ஃபிஷ் டேங்க், பால்கனி கூண்டுகளில்  வண்ணக்கிளிகள், லவ் பேர்ட்ஸ், க்யூட்டான வெள்ளை எலி... மினியேச்சர் வண்டலூராக இருக்கிறது இயக்குநர் ஒ.என்.ரத்னம் வீடு. சன் டிவியில் மெகா  ஹிட் அடிக்கும் ‘வாணி ராணி’ சீரியலின் முதல் 1200 எபிசோட்ஸை இயக்கியவர். இப்போது ரேவதி நடிக்கும் ‘அழகு’ சீரியலை இயக்கி வருபவர்.  ‘‘ஆக்சுவலா என் மனைவி பத்மாவதி, ஒரு pet lover. என்னடா இதுனுதான் ஆரம்பத்துல நினைச்சேன். ஆனா, பழகப் பழக நானும் பெட் லவ்வர்  ஆகிட்டேன்!’’ சிரிக்கிறார் ஒ.என்.ரத்னம். ‘‘சொந்த ஊர் பொள்ளாச்சி பக்கம் ஒடயகுளம்.

அப்பா நஞ்சப்ப கவுண்டர், விவசாயி. என் முழுப்பேரு நாகரத்னம். ஊர் பெயரையும், அப்பா பெயரையும் சேர்த்து ஒ.என்.ரத்னம்னு வைச்சுக்கிட்டேன்!  சின்னத்திரைக்குள்ள நான் அடியெடுத்து வைக்க விஜி மேடம்தான் காரணம். தொழில் கத்துக் கொடுத்த குரு சுந்தர் கே.விஜயன் சார். அவருக்கு அடுத்து  நான் பெரிதும் மதிப்பது ராதிகா மேடத்தை. ‘அண்ணாமலை’ சீரியல்ல நான் அசிஸ்டெண்ட். ‘செல்வி’ல இணை இயக்குநர். அவங்களோட ‘இளவரசி’,  ‘சிவசங்கரி’, ‘செல்லமே’ல எல்லாம் ஒர்க் பண்ணியிருக்கேன். ‘அண்ணாமலை’ அப்ப அவங்க சேர்ல உட்கார்ந்திருப்பாங்க. சீன் பேப்பரோட கீழ  உட்கார்ந்து படிச்சுக் காட்டுவேன். இயக்குநரானப்ப அவங்க முன்னாடி உட்கார யோசிப்பேன்.

‘இப்ப நீங்க டைரக்டர் ரத்னம்’னு அழுத்தி உட்கார வைப்பாங்க. ‘வாங்க போங்க’னு மரியாதையோட பேசுவாங்க. ‘வாணி ராணி’ எனக்கு பெரிய  விசிட்டிங் கார்ட். ராதிகா மேடத்தாலதான் இது சாத்தியமாச்சு..’’ நெகிழ்ந்தவர், தொடர்ந்தார். ‘‘ரொம்ப சாதாரண விவசாயக்குடும்பம். அம்மா  மயிலாத்தாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அண்ணன் உத்தரஞான சிவமும் விவசாயம்தான் பார்க்கறார். சின்ன வயசுலயே சினிமா ஆர்வம். பி.எஸ்சி  விலங்கியல்ல முதலாண்டு சேர்ந்ததுமே சினிமால பாட்டு எழுதணும்னு முடிவு பண்ணிட்டேன்! படிப்புல கவனம் செலுத்த முடியலை. ஆறு அரியர்ஸ்!  ‘சென்னைல போய் சாதிக்கப் போறேன்’னு வீட்ல சொன்னேன். அஞ்சு வருஷம் டைம் கொடுத்தாங்க.

‘அக்கா, தங்கைனு நமக்கு யாருமில்ல... நீ சம்பாதிக்கற காசை நீயே செலவழி. நிச்சயம் சாதிப்ப’னு அண்ணன் அனுப்பி வைச்சார்...’’ என்று சொல்லும்  ரத்னம், கார் கண்ணாடிகளுக்கு கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைப் பார்த்திருக்கிறார். ‘‘சினிமா கம்பெனிக்கு போனதுமே ‘உங்களுக்காகத்தான்  காத்திருக்கோம்’னு வெத்தலை பாக்கோட வரவேற்பாங்கனு நினைச்சேன்! இவ்வளவு பிக்கல், போராட்டங்கள் இருக்கும்னு அப்ப தெரியாது!  சினிமா  கம்பெனி கேட் வாசல் வரை போறதுக்கே ஒரு மாசமாச்சு. செக்யூரிட்டியை தாஜா செஞ்சு உள்ள போக அஞ்சு மாசங்களாச்சு. இந்தக் காலகட்டத்துல  வீட்ல இருந்துதான் பணம் அனுப்பிட்டிருந்தாங்க. இது சங்கடமா இருக்கவே கைச் செலவுக்காவது ஏதாவது வேலை பார்க்கணும்னு முடிவு செஞ்சேன்.

அப்ப ‘சன் கண்ட்ரோல் ஃபிலிம் வேலைக்கு ஆட்கள் தேவை’னு பேப்பர்ல விளம்பரம் பார்த்தேன். ஏதோ சினிமா கம்பெனி வேலைனு நினைச்சுதான்  அங்க போனேன்! காருக்கு கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டறதுனு தெரிஞ்ச பிறகு பின்வாங்கலை. வேலைல சேர்ந்தேன். மாசம் 750 ரூபா சம்பளம். ஒரு  மாசத்துக்கு அப்புறம்தான் அந்த கம்பெனி சரிதா மேடத்தோட தங்கை விஜி மேடத்துக்கு சொந்தமானதுனு தெரிஞ்சுது! ரூட்டு மாறலை... சினிமா  குடும்பத்துலதான் வேலை செய்யறோம்னு நிம்மதியானேன்! கூடவே நேரம் கிடைக்கிறப்ப எல்லாம் சினிமா சான்ஸ் தேடி அலைஞ்சேன். நாலரை  வருஷங்கள் ஓடியே போச்சு. விஜி மேடம் குடும்பத்துல ஒருத்தராவே ஆகிட்டேன்.

அவங்க வீட்டு சாவி, கடை சாவி, கார் சாவினு எல்லாம் என்கிட்ட இருக்கும். அந்தளவு உரிமை கொடுத்தாங்க. சினிமா ஆசைலதான் சென்னைக்கு  வந்தேன்னு அவங்ககிட்ட சொல்ல தயக்கமா இருந்தது. இதுக்கிடைல ஊருக்கு திரும்ப வரச் சொல்லி வீட்ல கூப்பிட ஆரம்பிச்சாங்க. ஊருக்கு  போறேன்னு சொல்லிட்டு வேலையை விட்டு நின்னேன். மனசு கிடந்து தவிச்சது. கடைசியா பஸ் பிடிக்கறதுக்கு முன்னாடி விஜி மேடத்தை போய்  பார்த்து தயங்கித் தயங்கி உண்மையை சொன்னேன். ‘இத்தனை நாள் கூடவே இருந்திருக்க... சொல்லியிருக்கலாமே? டைம் வேஸ்ட் பண்ணிட்டியே’னு  திட்டினாங்க. அப்ப அவங்க ‘அலைகள்’ சீரியல்ல நடிச்சிட்டிருந்தாங்க. ‘அசிஸ்டெண்ட்டா சேர்த்து விடறேன்’னு சொன்னாங்க.

எனக்கு பாட்டு எழுதத்தான் ஆசைனு சொன்னேன். சிரிச்சுகிட்டே டைரக்டரோட முக்கியத்துவத்தை புரிய வைச்சு, சுந்தர் கே.விஜயன் சார்கிட்ட உதவி  இயக்குநரா சேர்த்து விட்டாங்க. ‘அலைகள்’, ‘குங்குமம்’, ‘அண்ணாமலை’, ‘செல்வி’, ‘நம்ம குடும்பம்’னு அஞ்சு வருஷத்துக்கு மேல அவர்கிட்ட ஒர்க்  பண்ணினேன். ‘ஹோட்டல் வைக்கணும்னு முடிவு பண்ணிட்டா முதல்ல எச்சில் இலையை எடுக்க கத்துக்கணும்’னு என் குருநாதர் சுந்தர் கே.விஜயன்  அடிக்கடி சொல்லுவார். அதாவது எல்லா வேலையும் கத்துக்கணும்னு இதுக்கு அர்த்தம். இப்ப வரை அதை கடைப்பிடிக்கிறேன். அவரைச் சுத்தி  பத்தடிக்கு நெருப்பு தகதகக்கும்! ஆனாலும் ரொம்ப குணமானவர். ‘எம் புள்ளை’னு பாசம் காட்டுவார்.

சாரோட மனைவி காமினி சுந்தர், எனக்கு இன்னொரு அம்மா. என் சீரியலைப் பார்த்துட்டு சார் ஏதாவது திட்டினா... ‘அவர் சும்மா சொல்றார்... நீ  நல்லாதான் கொண்டு போயிருக்கே...’னு சமாதானப் படுத்துவாங்க...’’ என்று சொல்லும் ரத்னம், முதலில் இயக்கிய சீரியல் அனு ஹாசன் நடித்த ‘ரேகா  ஐ.பி.எஸ்’.  ‘‘இதுக்கு அப்புறம் பாலாஜி டெலிஃபிலிம்ஸுக்காக சன்டிவில வந்த ‘கண்மணியே’ இயக்கினேன். அப்புறம் 2009ல இருந்து ராதிகா  மேடத்தோட ராடன்ல ‘இளவரசி’, ‘சிவசங்கரி’,  ‘செல்லமே’னு பண்ணினேன். ‘வாணி ராணி’ ரொம்பவே ஸ்பெஷல்! பூஜை போட்டு தொடங்கினதுல  இருந்து 1200 எபிசோட்ஸ் வரை டைரக்ட் பண்ணினேன்.

முத்துச்செல்வன் சார்கூட ‘கேளடி கண்மணி’ ஒர்க் பண்ணும்போது ‘அழகு’ பண்ற வாய்ப்பு வந்தது...’’ சிரிக்கும் ரத்னம் காதல் திருமணம் செய்து  கொண்டவர்! ‘‘பத்மாவதியை செல்லமா ப்ரியானுதான் கூப்பிடுவேன். தூரத்து சொந்தம். ஒருவகைல அத்தை மகள். ரொம்ப வசதியானவங்க. 10  ஏக்கருக்கு தென்னந்தோப்பே அவங்களுக்கு இருக்கு. அசிஸ்டெண்ட் டைரக்டரா இருந்தப்ப ஒருமுறை ஊர்த் திருவிழாவுக்கு போயிருந்தேன். ப்ரியாவை  முதன்முதல்ல பார்த்தது அப்பதான். அந்தமுறை திருவிழாவுல எங்கம்மா பூவோடு எடுத்தாங்க. அவங்களுக்கு கை சுடுறப்ப அதை நான் வாங்கிப்பேன்.  இப்படி நாங்க வர்றப்ப என்னைப் பார்த்ததும் டக்குனு அத்தை பின்னாடி ப்ரியா போய் ஒளிஞ்சாங்க.

நேர நின்னு சிரிச்சுப் பேசியிருந்தா கூட கண்டுக்காம விட்டிருப்பேன்! ஆனா, வெட்கத்தோட மறைஞ்சு நின்னு என்னைப் பார்த்தப்ப அப்படியே ஃப்ளாட்  ஆகிட்டேன்! கண்டதும் காதல். நம்பர் கேட்க பயந்து விட்டுட்டேன். சென்னைக்கு நான் திரும்பினதும் திடீர்னு இவங்க கிட்ட இருந்து போன்...’’ என  ரத்னம் சொல்லும்போதே ‘‘பொய்... நீதான் அண்ணன் நம்பர் கேட்க போன் பண்ணின...’’ என பத்மாவதி இடைமறித்தார். ‘‘இல்ல... நீதான் அத்தைகிட்ட  என் நம்பரை வாங்கி பேசினே...’’ என ரத்னம் பதில் சொன்னார். இந்த செல்ல ஜாலி சண்டை முடிந்ததும் சிரித்தபடியே தன் காதல் கதையை ரத்னம்  விவரிக்க ஆரம்பித்தார். ‘‘எப்படியோ போன்ல பேசினோம். அப்புறம் ஒரு மாசத்துல ‘நாம கல்யாணம் பண்ணிக்கலாமா’னு இவங்ககிட்ட கேட்டேன்.

இதுக்கு இடைல எங்க காதல் இவங்க வீட்ல தெரிஞ்சு பிரச்னையாகிச்சு. இவங்க கிட்டேந்து செல்போனை பிடுங்கிட்டாங்க. ‘இனி போன் செய்யாத’னு  அத்தை என்கிட்ட கத்தினாங்க. அப்ப என் சம்பளம் மாசம் பதினெட்டாயிரம்தான். இவங்களோ வசதியான பொண்ணு. தவிர நான் சினிமால இருந்ததால  என் மேல அவங்க வீட்ல நல்ல எண்ணம் இல்லாம இருந்திருக்கலாம். ‘லட்சுமி’ சீரியல்ல அசோசியேட்டா இருந்த நேரம். மயூரா ஹோட்டல்ல கதை  விவாதம் போயிட்டிருந்தப்ப என் செல்லுக்கு ஒரு மெசேஜ் வந்தது. ‘பக்கத்து காட்டுக்காரங்க போன்ல இருந்து மெசேஜ் பண்றேன். தற்கொலை  செய்துக்கப் போறேன்’னு இவங்க எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தாங்க.

பதறிப் போய் இவங்க அப்பாவுக்கு போன் செஞ்சு ‘பத்மாவுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு... உங்களை சும்மா விட மாட்டேன்’னு சவுண்ட் விட்டேன்.  உடனே இவங்க இருந்த காட்டுக்குப் போய் பார்த்திருக்காங்க. அதுக்குள்ள மாத்திரை சாப்பிட்டு மயங்கிட்டா. உடனே பக்கத்துல இருந்த ஆஸ்பிடல்ல  சேர்த்தாங்க. அங்கயே பஞ்சாயத்து நடக்க ஆரம்பிச்சது. இவங்க அண்ணன், ரொம்ப பாசக்காரர். ஆனா, பாசத்தைக் கூட கோபமாதான் காட்டுவார்.  ‘வாணி ராணி’ல கூட அப்படி ஒரு கேரக்டர் இருக்கும். ஆஸ்பத்திரில மயக்கமா இருந்த இவங்க பக்கத்துலயே இருந்தவர், கண் விழிச்சதும் பளார்னு  கன்னத்துல அறைஞ்சு, ‘அவன்தான் முக்கியம்னா அவனையே கட்டிக்க’னு சொன்னார்! இதைக் கேட்டு இவங்க வீட்ல இருந்த எல்லாரும்  ஷாக்கானாங்க.

தகவல் கிடைச்சு எங்கப்பா கிட்ட இவங்களைப் பேசி முடிக்கச் சொன்னேன்...’’ என ரத்னம் முடிப்பதற்குள் ‘‘மீதிக் கதைய நான் சொல்றேன்...’’ என  மலர்ச்சியுடன் இடைமறித்த பத்மாவதி, தொடர்ந்தார்.  ‘‘ஒரு வழியா எங்களுக்கு மேரேஜ் ஆச்சு. அப்ப இவர் ஜாபர்கான்பேட்டைல நண்பர்களோட  தங்கியிருந்தாரு. கல்யாணமானதும் என்னை விடறதுக்கு எங்கண்ணன் வந்தார். இவர் ரூம் ‘காதல்’ பட பேச்சுலர் அறை மாதிரியே இருந்தது!  பொருட்கள், துணினு எல்லாம் அப்படி அப்படியே கிடந்தது. அழுக்குப் பாய், அழுக்குத் தலையணை, கிச்சன் பக்கம் பீர் பாட்டில்னு அந்த  அட்மாஸ்ஃபியரைப் பார்த்ததும் அண்ணன் கலங்கிட்டார்! ஏன்னா, காட்ல நாங்க மாட்டை கட்டி வைச்சிருக்கிற இடமே அந்த ரூமை விட பெருசா  இருக்கும்! அண்ணன் கலங்க... அதைப் பார்த்து இவரும் கலங்க... நான் அழுகையை கட்டுப்படுத்திக்கிட்டேன்.

அந்த வாழ்க்கை த்ரில்லிங்கா இருந்தது. என்னை அப்படி பார்த்துக்கிட்டார். 2008ல சென்னைல வெள்ளம் வந்தப்ப தண்ணிய தொறந்து விடப்  போறாங்கனு அறிவிப்பு வந்தது. அப்படி ஆச்சுனா ஜாபர்கான்பேட்டைல எங்க ரூம் வாசல் வரை தண்ணீர் வரும். அதனால மொட்டை மாடிக்குப் போய்  நைட்டு பூரா குழந்தையை கைல வைச்சுகிட்டு தூங்காம உட்கார்ந்திருந்தோம்!’’ அசைபோட்ட பத்மாவதியை அணைத்தபடி ரத்னம் தொடர்ந்தார்.  ‘‘மறுநாள் சுபா வெங்கட் மேம்கிட்ட இருந்து போன் வந்தது. ராடன்ல அவங்க கிரியேடிவ் ஹெட்டா இருந்தப்ப என் ஒர்க்கை பார்த்திருக்காங்க.

2008 சமயத்துல அவங்க பிரமிட் சாய்மீரால இருந்தாங்க. ‘ரத்னம்... அனுஹாசனை வச்சு ‘ரேகா ஐ.பி.எஸ்.’ சீரியல் ப்ளான் பண்ணிட்டோம். நீங்க  டைரக்ட் பண்ணுங்க!’னு சுபா வெங்கட் மேம் சொன்னதும் சந்தோஷமாகிடுச்சு! ‘இளவரசி’ டைரக்ட் பண்றப்ப கே.கே.நகர்ல சொந்த வீடு வாங்கினேன்.  ‘என் தங்கச்சி வந்த பிறகுதான் நீங்க டைரக்டரானீங்க’னு இவங்க அண்ணன் இப்பவும் கலாய்ப்பார்!’’ கண்சிமிட்டும் ரத்னம் - பத்மாவதி தம்பதியருக்கு  நவீனேஷ், சாய் ஆதர்ஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். ‘‘சுத்தி நல்லவங்க இருக்காங்க... சந்தோஷமா இருக்கோம்!’’ என்கிறார், என்கிறார்கள்!

மை.பாரதிராஜா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்