பெண்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் முள்முருங்கை கீரைஹோம் அக்ரி-5

வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு இரண்டு பங்கு செம்மண் அல்லது கரம்பை மற்றும் ஒரு பங்கு மக்கிய குப்பை (Compost), ஒரு பங்கு ஆற்று /  ஓடை மணல் சிறந்தது. இதனுடன் கூடவே ஒரு தொட்டிக்கு ஒரு கிலோ சுத்தமான மண்புழு உரம் சேர்த்துக் கொள்ளவும். வாய்ப்பு இருப்பவர்கள் 25  கிராம் அசோஸ்பைரிம், 25 கிராம் ஃபாஸ்போபாக்டீரியா சேர்த்துக் கொள்ளலாம். வடிகால் வசதியும், கலவை பொலபொலவென்று இருக்கிறதா என்பதை  உறுதிப்படுத்திக் கொள்வதும் அவசியம்.

தொட்டியில் மண் நிரப்பும் முன், அடிப்பாகத்தில் காய்ந்த சருகுகள் அல்லது தென்னை நார் கழிவுகள் அல்லது தேங்காய் நார் அல்லது சிறிய  குச்சிகளை இடலாம். இது நீர் எளிதாக வெளியில் செல்ல வழிவகுக்கும். Humic acid, Rock phosphate, Crusher dust, கரித்தூள், கடலை  புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு / இடித்த வேப்பங்கொட்டை, சிறிதளவு சாம்பல் இவைகளை சேர்த்துக் கொள்வது இன்னும் சிறப்பு.

முருங்கை:

முருங்கையின் மருத்துவ பலன்கள் குறித்து அனைவருக்கும் தெரியும். உண்மையில் இதை அமிர்தம் என்றே சொல்லலாம். வீட்டில் பால்கனி அல்லது  மாடித் தோட்டத்தில் வளர்க்கும் போது விதை மூலம் வளர்ப்பதே நல்லது. இதுவே எளிதும் கூட. ஒரு குழி / தொட்டிக்கு 4 விதை இட்டு நீர் ஊற்றி  வரவும். வளரும் கன்றில் இரண்டை நீக்கி தொட்டியிலோ அல்லது வெளிப்புறத்திலோ வைக்கலாம். பெரிய தொட்டியிலோ அல்லது தரையிலோ  வளர்க்கும் போது முருங்கை போத்தை (சிறிய கிளை) பயன்படுத்துவது நல்லது. இதற்கு நன்கு வளர்ந்த மரத்திலிருந்து 2 - 3 அங்குலம் அகலமுள்ள  ஒரு கிளையை 2 - 3 அடி நீளத்தில் வெட்டி, குறைந்தது ஒரு கணு மண்ணின் உள்ளே இருக்குமாறு ஊன்றி வைக்க வேண்டும்.

போத்தின் மறுமுனை காய்ந்து விடாமல் இருக்க சாணி கொண்டு மூடவேண்டும். விதை நட்டு இரண்டு மாதத்திலிருந்தே கீரை பறிக்கலாம். கூடவே  முருங்கைப் பூவையும் பறித்து கீரையோடு சேர்த்து சமைப்பது நல்லது. ஏனெனில் பூ விசேஷமான மருத்துவ பலன்கள் கொண்டது. ஒரு மரத்தில்  காய்க்கும் காய்கள் 10 - 15 குடும்பங்களுக்கு வரும். எனவே பூவை பறிப்பதன் மூலம் காய் எண்ணிக்கையை கட்டுப்பாட்டில் வைக்கலாம். சத்தம்  கேட்டால் முருங்கை நன்றாக வளரும்! எனவே வீட்டுக்கு வெளியே வாகனங்கள் செல்லும் இடங்களில் வளர்ப்பது கூடுதல் பலன் தரும்.

லச்சக்கொட்டை கீரை:

நஞ்சு கொண்டான் கீரை, நச்சுக் கொட்டை கீரை, நஞ்சுண்டான் கீரை, லச்ச கெட்ட கீரை எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த கீரையை  அழகுக்காகவே பலரும் வீடுகளில் வளர்க்கிறார்கள்! உண்மையில் இது உண்ணக் கூடியது. மிகக்குறைந்த பராமரிப்பில், எந்த தட்பவெப்ப நிலையையும்  தாங்கி இது வளரும். முருங்கை போன்றே இதையும் ஒரு சிறிய கிளை (போத்து) கொண்டோ கொட்டை மூலமாக கன்றாக வளர்ந்த பின்போ நடலாம்.

இது மூட்டு வலிக்கு சிறந்த மருந்து. உடலிலுள்ள விஷங்களை வெளிக்கொண்டு வரும் என்பதாலேயே இதை நஞ்சுண்டான் கீரை என்கிறார்கள். மற்ற கீரைகளைப் போல் இதையும் பாசிப் பருப்பு சேர்த்து பொரியலாகவோ, கூட்டாகவோ, துவையலாகவோ, சூப்பாகவோ பயன்படுத்தலாம். பெரிய  இலையாக இருப்பதால் நரம்புகளை நீக்கிய பிறகே பயன்படுத்த வேண்டும்.

முள் முருங்கைக் கீரை:

இதுவும் மரமாக வளரக் கூடியதுதான். இதையும் போத்து கொண்டு வளர்க்கலாம். மரத்தில் நிறைய முட்கள் இருப்பதால் முள் முருங்கை என்கிறார்கள்.  கல்யாண முருங்கை என்ற இன்னொரு பெயரும் இதற்குண்டு. கிராமங்களில் இதை வேலிப் பயிராக வளர்ப்பார்கள். மற்ற கீரைகளைப் போல  பொரியல், மசியல் செய்யாமல் இதை அடையாக சுட்டே சாப்பிடுவார்கள்.  

தோசை, இட்லி, பூரி மாவிலும் சேர்த்துக் கொள்ளலாம். பெண்களின் பிரச்னைகளை தீர்க்கும் அருமருந்து இதுவே. மாதவிடாய் வலிக்கு இதன் சாறை  தேனோடு கலந்து குடிக்கலாம். இடுப்பு கொழுப்பை (visceral fat) குறைத்து இடையின் அளவை இது கட்டுப்படுத்தும். குழந்தை இல்லாதவர்கள்  பலவிதமாக இந்தக் கீரையைப் பயன்படுத்தலாம். மாடு, ஆடுகளுக்கும் இதை தீவனமாகக் கொடுக்கலாம்.

அகத்தி:

இதையும் விதை மூலமாக மேற்கண்ட முறையில் வளர்க்கலாம். தவசி போல இதுவும் மரமாக வளரும். எனவே 4 - 5 அடி வளர்ந்ததும் வெட்டி விட  வேண்டும். வறட்சியைத் தாங்கி வளரும். ஒரு செடி (4 - 5 அடி வளர்ந்தது) 15 குடும்பங்களுக்கு உணவளிக்கும். இதுவும் ஆடு, மாடுகளுக்கு சிறந்த  தீவனமே. என்றாலும் அகத்தியை அடிக்கடி உண்ணக் கூடாது.

(வளரும்)
மன்னர் மன்னன்

தொட்டி மண் கலவை

செடியின் வளர்ச்சி, அதன் ஆரோக்கியம்,  அது தரும் பலன் இவை யாவுமே அது வளரும் மண்ணின் தன்மையைப் பொறுத்தது.  உயிருள்ள மண்ணாக  இருப்பது மிகவும் அவசியமானது. ’உயிர்’ என்று இங்கு நாம்  குறிப்பிடுவது நுண்ணுயிர்களின் செயல்பாடுகளை. இந்த மண்கலவை நுண்ணுயிர்கள்   உயிர் வாழத் தகுந்ததாக இருக்க வேண்டியது அவசியம். அதிகப்படியான மற்றும்  தேவையற்ற வேதிப்பொருட்கள் (உரங்கள், சுண்ணாம்பு, உப்புக்கள்),  மண்ணில்  ‘உயிர்’ இருப்பதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.

கேள்வி பதில்கள்

முந்தைய பகுதி ஒன்றில், நுண் பசுந்தழை மற்றும் கீரை பயிரிடும் போது பூச்சி கொல்லிகள் தடவிய விதைகளை உபயோகப் படுத்தக்கூடாது என்று  சொல்லியிருந்தீர்கள். இந்த விதைகளை எப்படி அடையாளம் காண்பது?
- சிவராஜன், தேனி

இந்த விதைகளின் நிறம் நீலம், சிவப்பு, பச்சை மற்றும் கருப்பு நிறத்தில் மாறியிருக்கும். பூச்சி மருந்துகளின் வாடையும் அடிக்கும். எனவே இயல்பான விதைகளின் நிறத்திலிருந்து இது மாறுபட்டிருக்கிறதா என்று பார்த்து பின் பயன்படுத்தவும். சில சமயங்களில் நுண்ணுயிரி  களையும் உபயோகப்படுத்துவார்கள். இது கருப்பு நிறத்தில் இருக்கும். மண் வாடை அடிக்கும். நுண்ணுயிரியால் நேர்த்தி செய்யப் பட்டிருக்கும்  விதைகள் பாதுகாப்பானவை.

நிலம் தயாரிக்கும் போதும், தொட்டி மண் கலவை தயாரிக்கும்போதும் ‘மக்கிய எரு’ என்று மிகவும் வலியுறுத்தி ஏன் சொல்கிறார்கள்? மக்காத எரு  சேர்த்தால் என்ன ஆகும்?
- ராஜேந்திரன், பிசிண்டி, காரியாபட்டி

மக்காத எருவில் பலவிதமான வேதி மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கும். இதனால் குவியலாக வைக்கும்போது வெப்பமாக இருக்கும்.  அமோனியா, மீத்தேன் போன்ற வாயுக்கள் வெளியாவதற்கான வாய்ப்புகளும் அதிகம். இதனாலேயே பச்சை குப்பையை (மக்காத எரு) இட முடியாது. இதற்கு மாறாக மக்கிய குப்பையில் இருக்கும் தாதுக்களையும் உரத்தையும் செடிகள் எளிதாக எடுத்துக்கொள்ளும். மேலும் மண்ணிலிருக்கும்  நுண்ணுயிரிகளும் வாழ இதுவே ஏற்றது. தவிர மண்ணோடு மண்ணாகி அதன் நீர் கொள்ளும் திறனை மேம்படுத்தி மண்ணை சற்று குளிர்விக்கும்.

சில விவசாயம் சேர்ந்த குறிப்புகளை பார்க்கும்போது தக்காளி, கத்திரி, வெண்டி போன்ற நாட்டுக் காய்கறிகளுக்கு குறிப்பிட்ட பட்டங்களில்  நாற்றங்கால் தயாரிக்க வேண்டும் என்றிருக்கிறது. இந்நிலையில் எல்லா காலங்களிலும் எல்லா காய்கறிகளும் நமக்கு எப்படி கிடைக்கின்றன?
- என்.பி.காளியப்பன், நாகப்பட்டினம்

இரண்டு விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்று, நாம் உண்ணும் காய்கறிகள் நம் பகுதியிருந்து மட்டும் வருவதில்லை. இன்று சென்னையில் வாங்கும் வெங்காயம் ஆஸ்திரேலியாவிலிருந்தோ, பாகிஸ்தானிலிருந்தோ வந்ததாக இருக்கலாம். திருச்சியில் கிடைக்கும்  தக்காளி கர்நாடகாவிலிருந்தோ, மிளகாய் ஆந்திராவிலிருந்தோ வந்திருக்கலாம். நம் நாட்டில் பலவிதமான தட்பவெப்ப நிலைகள் நிலவுகின்றன. எல்லா  காலங்களிலும் காய்கறிகள் கிடைக்க இதுவும் ஒரு காரணம். இரண்டாவது காரணம், வீரிய விதைகள். இவை பட்டங்களுக்கு அப்பாற்பட்டவை.