பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷனுக்கு யூகிசேதுவின் அசத்தல் ஐடியா!



யூகிசேது கம்பேக். ஒரு காலத்தில் திரையுலகிலும், சேனல்களிலும் கலக்கியவர். இப்போது என்ன செய்கிறார்? தேடினால், பரபரப்பே இல்லாமல் இதே இண்டஸ்ட்ரியில் அதே பிசியோடு ஓடிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் சினிமாவைப் பற்றிய ஆய்வு ஒன்றை சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்து, அதில் டாக்டரேட் பட்டமும் வாங்கியிருக்கிறார்!

இப்போது அதை ஒரு ஃபார்முலாவாக்கும் முயற்சியில் இறங்கியிருப்பவர், சத்தமே இல்லாமல் ஓர் ஆங்கிலப் படத்தை இயக்கி, நடித்து வருகிறார். ‘‘உலகெங்கும் ரிலீஸ் ஆகுற படங்களை கவனிச்சிருக்கேன். 1895ல இருந்து இப்ப வரை சினிமாவுல அதிகபட்சம் பத்து சதவிகித படங்கள்தான் பாக்ஸ் ஆபீஸ்ல வசூலைக் குவிச்சிருக்கு. மீதமுள்ள படங்கள் எல்லாமே தோல்விப் படங்களா அமையுது. இதைப்பத்தி யாராவது ஆய்வு செய்திருக்காங்களானு தேடிப் பாத்தேன். நம்ம ஆட்கள் ஒருத்தரும் செய்யல. வெளிநாட்டுல? அவங்க நம்மைவிட சூப்பர் சோம்பேறிகளா இருந்திருக்காங்க! அப்படியொரு ரிசர்ச் யாருமே பண்ணல! இதை செய்திருந்தா தோல்வி சதவிகிதம் குறைஞ்சிருக்கும்.

ஓடுமா... ஓடாதானு அந்தப் படம் ரிலீஸ் ஆனபிறகுதான் கணிக்கிறாங்க. இந்த சூழல்ல முதன் முறையா அந்த ஸ்கிரிப்ட் மற்றும் இதர உப தகவல்கள் ரெடியாகும் போதே வெற்றியை நிச்சயம் கணிக்க முடியும்னு என் ஆய்வுல சொல்லியிருக்கேன். இதற்குதான் முனைவர் பட்டம் கிடைச்சிருக்கு...’’ விறுவிறு பேச்சில், உற்சாகமாக படபடக்கிறார் யூகிசேது. ‘‘இந்த ஐடியாஸை இருபது  வருஷங்களுக்கு முன்னாடியே எழுதி முடிச்சுட்டேன். ஆனா, 2015லதான் சென்னைப் பல்கலைக்கழகத்துல சமர்ப்பிச்சேன். வெளிநாட்ல இருக்கிற மீடியா துறை நிபுணர்கள் அதைப் படிச்சு கேள்விகள் கேட்டாங்க. ஆதாரங்களோடு பதில் சொல்லி டாக்டரேட் வாங்கியாச்சு! இப்ப என் தீஸிஸை ஒண்ணு சேர்த்து அல்காரிதமா ரெடி பண்ணிட்டிருக்கேன்.

அதாவது, கோட்பாடுகளை ஃபார்முலாக்களா உருவாக்கி patent ரைட்ஸ் வாங்கப் போறேன். ஒருமுறை இதைப்பத்தி கமல்ஹாசன்கிட்ட சொன்னப்ப அவர் ஆச்சர்யமாகி, ‘நானே பேட்டன்ட் பண்ணிக்கட்டுமா?’னு கேட்டார். முதல்ல ஃபார்முலாவை ரெடி பண்றேன்னு சொல்லியிருக்கேன். ரிசர்ச்சுல உள்ள அஞ்சு பகுதிகள்ல ஒரு பகுதி லிட்ரேச்சர் ரிவ்யூ. இதுவரை இதை யாரும் ஆய்வு செய்ததில்ல. இதுல ஒரு திரைப்படத்துல உள்ளடக்கிய பல உப பாகங்கள், அத்தியாயங்களைக் கொண்ட அட்டவணை மாதிரி ஒண்ணு தயாரிச்சிருக்கேன். அந்த குறிப்பிட்ட உப பாகங்கள், சம்பந்தப்பட்ட படத்துல ப்ளஸ்ஸா... இல்ல மைனஸானு தெரிஞ்சுக்கலாம். இதை அடிப்படையா வைச்சு அந்தப் படம் ஓடுமா ஓடாதானு முன்னாடியே கண்டுபிடிச்சுடலாம்.

இந்த ரிசர்ச், ஹங்கேரில எடுக்கப்படற படத்துக்கும் பொருந்தும். செங்கல்பட்டு பக்கத்துல ரிலீஸ் ஆகற சினிமாவுக்கும் பொருந்தும். நம்ம ஊர் பக்திப் படங்கள், ஷகிலா படங்களுக்கும் உதவும்! ‘சரியா? தவறா?’னு பதில் சொல்ற மாதிரி டெம்ப்ளேட்டா 25 கேள்விகளைத் தயாரிச்சு அதுல எல்லாத்தையும் அடக்கியிருக்கேன். இதுல முதல் மூணு கேள்விகளுக்கு பதில் சொல்றதை வைச்சே அவங்க கதையோட சக்சஸ், ஃபெயிலியர் ரேட்டை ஈசியா சொல்லிட முடியும். இந்த முதல் மூணு கேள்விகள்ல பாஸ் ஆகாதவங்க மத்த கேள்விகள்ல நல்ல மார்க் வாங்கினாலும் பயனில்ல! எந்தவொரு படம் ஓடவும் அதுல ஐடென்டிஃபிகேஷன் முக்கியம்.

ஒரு நல்ல ஸ்கிரிப்ட்டுக்கு தேவையான ingredients-ஐ அந்த அட்டவணையைப் பார்த்து தெரிஞ்சுக்கலாம். என் ஆய்வுல உள்ள முதல் மூணு கேள்விகள்ல பாஸ் ஆகாத படங்கள்ல ஒண்ணு எது தெரியுமா..?’’ இடைவெளிவிட்டு கண்சிமிட்டியவர், சட்டென்று ‘குசேலன்’ என்றார்!  ‘‘தமிழ் சினிமால ‘மெட்டா சினிமா’ பெரிய விஷம். அதாவது சினிமாக்காரனைப் பத்தியே சினிமாவுல கதை பண்ணினா அது இங்க எடுபடாது. ஐடென்டிஃபிகேஷன் ப்ராப்ளம் வந்துடும். ‘குசேலன்’ கதைல க்ளைமாக்ஸ் முன்கூட்டியே தெரிஞ்சுடும். ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டாரா பார்த்துப் பழகிட்டோம். அவர் இன்னொரு பெயர்ல (அசோக்குமார்) நடிகரா வந்தா நம்ம மக்கள் ஏத்துக்க மாட்டாங்க.

அவரை அசோக்குமாரா பார்க்கறதா... இல்ல ரஜினியா பார்க்கறதா? இதுதான் ஐடென்டிஃபிகேஷன் பிரச்னை. அதே மாதிரி ‘தெற்கத்திக் கள்ளன்’, ‘தாவணிக் கனவுகள்’, ‘வெள்ளித் திரை’னு மெட்டா சினிமாவால பெரிய வெற்றி வாய்ப்பை இழந்த படங்கள் உண்டு. ஒருமுறை கமல்கிட்ட இதைப் பத்தி சொன்னேன். உடனே ‘அவ்வை சண்முகி’ மட்டும் எப்படி ஹிட் ஆச்சுனு கேட்டார். உடனே அதுல சினிமாக்காரன் என்பது Plotஆ... இல்ல Back Groundஆ..? அடிப்படைல அந்தப் படம் கணவன் - மனைவி - குழந்தை படம்தான். நடிகனைப் பத்தின கதை கிடையாதுனு பதில் சொன்னேன். இதே தியரிதான் ‘சர்வர் சுந்தரம்’ படத்துக்கும். இதுவும் நடிகனைப் பத்தின கதையில்ல.

ஒரு சர்வர் முட்டி மோதி வாழ்க்கைல ஜெயிக்கறதுதான் நாட். ஒடுக்கப்பட்ட, அடிவாங்கிய, நொந்து போன ஒருத்தன் வெற்றி பெறுறப்ப மக்கள் கைதட்டி ரசிப்பாங்க. தோல்வில இருந்து மீண்டு வர்றது எல்லாருக்கும் பிடிச்ச விஷயம். ஐடென்டிஃபிகேஷன்ல முதல் ingredient, காஸ்டிங். திருமணம் மாதிரி நிச்சயமா நட்சத்திரப் பொருத்தம் ஒவ்வொரு படத்துக்கும் பார்க்கணும்! ‘குணா’ கதையை மட்டும் கேட்டுட்டு அது ஓடிடும்னு சொல்லிடலாம். ஆனா, அதுல கமலே நடிச்சது நிச்சயம் தப்பான காஸ்டிங். ‘குணா’வுக்கு முன்னாடி அவர் நடிச்ச 200 படங்கள்லயும் அழகாதான் இருந்திருக்கார். அப்படிப்பட்டவர் திடீர்னு முகத்துல கரியைப் பூசி அழகில்லாம நடிச்சா நம்மாளுங்க ஏத்துக்க மாட்டாங்க.

அதுக்கு முன்னாடி அவர் அழகா நடிச்ச படங்கள்தான் மனசுல நிக்கும். வந்து வந்துபோகும். அதுவே ‘காதல் கொண்டேன்’ எடுத்துக்குங்க. கிட்டத்தட்ட ‘குணா’ நாட்தான். ஆனா, தனுஷ் ‘கா கொ’ல நடிச்சார். அதனால படம் சூப்பர் ஹிட்டாச்சு. அப்ப தனுஷ் புதுமுகம். பார்க்க சுமாரா இருக்கிற அவரை ஒரு பொண்ணு காதலிக்கலை என்ற லாஜிக்கை மக்கள் ஏத்துப்பாங்க. இதுவே பார்க்க அழகா இருக்கற கமலை ஒரு பொண்ணு காதலிக்க மறுத்தாள்னா நம்ம ஆடியன்ஸ் முகத்தைத் திருப்பி போய்க்கிட்டே இருப்பாங்க! அதே மாதிரி யார் இயக்குநர்? அதுல என்ன ப்ளஸ் இருக்கு? EVQ (Entertainment value quotient) அதுல இருக்குதா..? இதெல்லாம் கூட கவனிக்கணும்.

புரியிற மாதிரி சொல்றேன். இசைஞானி இளையராஜா சார், ஒரு EVQ. ‘பாகுபலி’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஒரு EVQ. அதாவது ஹீரோ, ஹீரோயின், கதை, திரைக்கதைனு எதுவும் சரியில்லைனாகூட அந்தப் படத்தை இவங்க ஓட வைச்சுடுவாங்க. இசைஞானி அப்படி எத்தனை படங்களை ஹிட்டாக்கி இருக்கார்? இசையாலயும் பாடல்களாலயும் எத்தனை படங்களை வாழ வைச்சிருக்கார்? அதே மாதிரி எஸ்.எஸ்.ராஜமெளலி இங்க ‘மெட்டா சினிமா’ எடுத்தாலும் ஓடும். இவங்க எல்லாம் விதிவிலக்கான ஆட்கள்...’’ என்று ஆச்சர்யப்படுபவர், ‘சினிமா ஒரு குறைபாடுள்ள ஊடகம்’ என்கிறார். ‘‘ஒரு டெஃபினிஷன் வைச்சிருக்கேன்.

The audience mean to say ‘cheat me pleasurably’! சந்தோஷமா எங்களை ஏமாத்துங்கனு ஜனங்க சொல்றாங்க; எதிர்பார்க்கறாங்க. மெஜிஷியன் மாதிரி மேஜிக் காட்டணும். அதாவது தன் காதுல இருந்து மேஜிக் செய்யறவர் பணத்தை வரவழைக்கணும். அதை எப்படி வேணும்னாலும் அவர் வரவழைக்கலாம். ஆனா, வரவைப்பது சூப்பர் ஃபீலா இருக்கணும்! பார்க்கிற எல்லாருக்குமே இது பக்கா ஃபிராடுதனம்னு தெரியும். பரவால்ல. அப்படிச்  செய்னு மக்கள் சொல்றாங்க. இதுதான் சினிமா! உன்னோட உன்னதத்தை EVQக்குள்ள அடக்கினா ஓகே. இல்லைனா நாட் ஓகே! இந்த சீக்ரெட் தெரியாம நாட்டைத் திருத்தறேன்... வீட்டைத் திருத்தறேன்னு கருத்துப் படம் பண்ணினா அது வேலைக்கு ஆகாது! சினிமாவுக்குள்ள நிறைய குறைபாடுகள் இருக்கு.

சுருக்கமா சொல்லணும்னா கருத்துப் படங்களுக்கு எதிரானதுதான் சினிமா! அப்ப கருத்துப் படங்கள் ஓடாதானு கேள்வி வரலாம். திராவிட இயக்கம் தீ மாதிரி பரவ ஆரம்பிச்ச காலத்துல ‘பராசக்தி’ ஜெயிச்சது. அதுவே அந்த கருத்தியல்கள் நாடு முழுக்க பரவி பிரபலமா இருந்தா..? ஒவ்வொருத்தருக்கும் ஓர் இயல்பு இருக்கு. அதே மாதிரி மக்களுக்குனு பொத்தாம் பொதுவா ஓர் இயல்பு இருக்கு. இது தனிப்பட்ட முறை. இதே மாதிரி சினிமாவுக்கும் ஓர் இயல்பு இருக்கு. இதை மீறினா கழுதைல ஏறி குதிரை ரேஸ்ல கலந்துக்கற மாதிரி ஆகிடும். ஆனா, கழுதையை குதிரைனு நம்ப வைச்சு ரேஸ்ல கலந்துக்கறதுதான் சினிமா! கழுதையை குதிரை மாதிரி ஓட்டறது ஃபிரான்ஸ்ல சாத்தியம்.

அங்க கழுதை ரேஸ்னு தனியா வைச்சிருக்காங்க. முன்னாடி கடிக்கும், பின்னாடி இடிக்கும்னு அவங்களுக்குத் தெரியும். நாலு சுவத்துக்குள்ள, இருட்டு அறைலதான் படம் பார்த்தாகணும். அங்க நூத்துக்கணக்குல சீட்டுகள் இருக்கும். விழா மாதிரி ஆடியன்ஸ் வந்து உட்காருவாங்க. இந்தக் கூட்டத்துக்கு ஒரு ரகசியத்தை சொல்லி செலிபிரேட் பண்ணப் போறோம். காசு கொடுத்து டிக்கெட் வாங்கறவங்க, அவங்க உட்கார்ற சீட்டுக்கு உரிமையாளர். அதாவது ஒரு ப்ராடக்டுக்கு ஓனர். மத்த வியாபாரம் மாதிரி சினிமா இல்ல. கொடுத்த காசுக்கு படம் நல்லா இல்லைனா பணத்தைத் திருப்பித் தரமாட்டாங்க. படத்துக்காக செலவழிச்ச இரண்டரை மணி நேரமும் வேஸ்ட்தான்.

இதுவொரு குறைனா இன்னொரு குறை ஒன் ரன்னிங்... ஒன் சிட்டிங். ரெண்டரை மணி நேரத்துல முதல் (ஓபனிங்), இடை (இன்டர்வெல்), கடை (கிளைமாக்ஸ்) சொல்லியாகணும். இந்தக் கால அளவு சிரமம். உலகத்துல வேற எங்கயும் இடைவேளை இல்லை என்பதும் இந்தியாவுல மட்டுமே இன்டர்வெல் உண்டுனு நினைவுல வைச்சுக்கறது நல்லது. ஆக, ‘ஃபர்ஸ்ட் ஹாஃப் நல்லா இருந்தது... செகண்ட் ஹாஃப் நல்லா இல்லை’ என்பது மாதிரி உளறல் இங்க அதிகம். உளறல்னு சொல்லக் காரணம், ‘செகண்ட் ஹாஃப் நல்லா இல்லை’னா அதுல கதையே இல்லைனு அர்த்தம்! ஆக, இவ்வளவு குறைபாடுகளோடுதான் இங்க படம் பண்ணியாகணும். இப்ப நெட்டுல சும்மா தட்டினா நாலெட்ஜ் வந்து கொட்டுது.

ஆக, தனக்கு அறிவு கிடைக்கணும்னு யாரும் தியேட்டருக்கு வரலை! தனக்கு தெரிஞ்சதையே காது கொடுத்து டைம் செலவழிச்சு திரும்பவும் தெரிஞ்சுக்க அவன் தயாரா இல்ல! சினிமா என்பது ஜட்டி, பனியன் மாதிரி ப்ளாட்ஃபார்ம்ல விக்கிற பொருள்னு புரிஞ்சுக்கணும். வியாக்யானங்கள், ஈர்க்காத விஷயங்கள்ல ரசிகர்கள் உட்கார மாட்டாங்க. ஆடியன்ஸை உட்கார வைக்கணும்னா, கதை வேணும்!’’ என்று சொல்லும் யூகிசேது, டாக்டர் பட்டம் வாங்கிய பிறகு சந்திக்கும் பிரச்னைகளைப் பட்டியலிட்டார். ‘‘தமிழ்நாட்ல நான் வாழறேன். ஆனா, தமிழ் சினிமாவுல இருந்து ஆக்கபூர்வமா விலகி பல வருஷங்களாச்சு. அதுக்கு பல காரணங்கள். என் கதைகள் திருட்டுப் போயிருக்கு.

200 நாட்களைத் தாண்டி ஓடின படங்கள்ல சிலது என் கதைகள். இந்தச் சூழல்ல ‘கதை’னு முதல் முதல்ல என் பேரு வந்த படம், ‘வில்லன்’. இதுக்காக டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு நன்றி. ஸ்கிரிப்ட் கன்சல்டிங் கேட்டு சில இயக்குநர்கள் வந்திருக்காங்க. அவங்க எனக்கு கொடுத்த சன்மானமும் ‘நன்றி’தான்! சிலர் ஸ்கிரிப்ட்டை நான் படிச்சுப் பார்த்து வேண்டாம்னு சொன்னதும் அதை டிராப் பண்ணிருக்காங்க. வேறு சிலர் தப்பை சுட்டிக்காட்டினா எரிச்சலாகறாங்க.  இங்க ஒரு ஆர்டிஸ்ட் கால்ஷீட் கொடுத்துட்டா, உடனே அவரை வச்சு படம் எடுக்க ரெடியாகிடறாங்க. இந்த இடத்துல ஆரம்பிக்குது சத்திய சோதனை.

இது தமிழக பிரச்னை மட்டுமில்ல... உலகம் பூரா இருக்கு! சென்னை திரைப்படக் கல்லூரில நான் கோல்ட்மெடலிஸ்ட். அப்ப, நான் இயக்கின ஷார்ட் ஃபிலிமுக்கு சத்யஜித்ரே இசையமைச்சார்! எங்க அப்பா நிறைய படங்களுக்கு பண உதவி செய்திருக்கார். அவரை மாதிரியே நானும் பிசினஸ்ல ஈடுபட ஆசைப்பட்டேன். நண்பர்களுக்காக சின்னத்திரை பக்கம் வந்தேன். நிறைய தமிழ்ப் படங்களோட சேட்டிலைட் உரிமைகளை வாங்கினேன். அதோட ரைட்ஸ் அக்ரிமென்ட் காப்பியும், அதுல இருக்கிற ஷரத்துகளும் இப்ப வரை அக்ரிமென்ட் போடறவங்களுக்கு பயன்படுது. அப்புறம் அதை வேற ஒருத்தருக்கு வித்துட்டேன். எப்பவுமே ஒரே பிசினஸ்ல இயங்க போர் அடிக்குது.

இப்ப, வின்டேஜ் கிளாசிக்ஸ் ரக படங்கள் நெகட்டிவ் ரைட்ஸ் எங்கிட்ட இருக்கு. அதாவது எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா நடிச்ச நாலு படங்கள்ல மூணு படங்கள்; ‘ஹரிதாஸ்’, ‘திருநீலகண்டர்’ இப்படி நூத்துக்கணக்கான படங்களோட நெகட்டிவ் ரைட்ஸை பாதுக்காக்கறேன். இந்த இடைப்பட்ட காலத்துல என்னை நடிக்கக் கேட்டு 150 படங்கள் வரை வந்திருக்கு. இதை மறுத்ததால பொருளாதார ரீதியா எனக்கு லாஸ்தான். ஆனா, சம்பாதிச்ச பெயரை கெடுத்துக்கக் கூடாதே! இப்ப ஓர் ஆங்கிலப் படத்தை நடிச்சு இயக்கறேன். ஒரு ஷெட்யூல் முடிஞ்சிருக்கு...’’ என்று புன்னகைக்கும் யூகியின் மனைவி பெயர், அம்ருதா. இவர்களுக்கு வாசவ் தாயுமானவன் என்ற மகனும், அனாசனா என்ற மகளும் உள்ளனர்.


மை.பாரதிராஜா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்