WIFi குடைகள்!



‘‘புயலோ, இடியோ, சூறாவளியோ... மொபைல் மட்டும் கூடவே இருக்கணும்!’’இப்படித்தான் மனிதர்களின் நிலை மாறியிருக்கிறது. இந்த மனநிலையை குறிவைத்தே களமிறங்கி இருக்கிறது WiFi குடைகள்! “பொதுவா கேரளத்து மக்கள் என்னதான் ரெயின் கோட், ஜாக்கெட்னு வந்துட்டாலும் வீட்ல கலர்ஃபுல்லா பத்து குடைகளாவது வைச்சிருப்பாங்க. டிரெஸ்ஸுக்கு மேட்ச்சா குடைகளை பயன்படுத்தற வழக்கமும் அங்க உண்டு. காம்பஸ் குடை, விசில் குடை, ஹோல்டர் குடை, செல்ஃபி ஸ்டிக் குடைனு விதவிதமா பல குடைகளை அங்க பார்க்கலாம்.

இந்த வரிசைலதான் இப்ப WiFi குடைகளும் அறிமுகமாகி இருக்கு. பார்க்க சாதாரண குடை மாதிரிதான் இருக்கும். ஆனா, கைப்பிடில சில பட்டன்கள் இருக்கும். HAZ, John மற்றும் Popy மாதிரி சில நிறுவனங்கள் இதை ஆன்லைன்லயும் விக்கிறாங்க...’’ என அடுக்கிய சேட்டன்களும் சேச்சிகளும் தொடர்ந்து விழி மலர இதுகுறித்து விவரிக்கத் தொடங்கினார்கள். “எந்த டெக்னாலஜி அறிமுகமானாலும் உடனே சீனா, தைவான்ல இருந்து அதை இறக்குமதி செஞ்சு லோக்கல் பொருட்களை வைச்சு தயாரிக்கறது வழக்கம்! இதுவும் அப்படித்தான்.

அடிப்படை பேஸ் சீனா, தாய்லாந்துல இருந்து வந்துடும். அதை வைச்சு குடை தயாரிக்கறாங்க. இதனோட ஸ்பெஷல் என்ன தெரியுமா? WiFi குடைகளை எடுத்துக்கிட்டா இன்னொரு கைல மொபைலை பிடிச்சுக்க வேண்டிய அவசியமே இல்ல! டார்ச், தெர்மாமீட்டர், காம்பஸ்னு முதல்ல இருந்தது. இப்ப WiFi புகுத்திட்ட பிறகு Bluetooth, Music Player எல்லாம் ஆட்டோமெடிக்கா இன்ஸ்டால் ஆகிடுச்சு! மொபைலை எப்படி கார் மியூசிக் பிளேயர், அல்லது ப்ளூடூத் பிளேயர்களுடன் இணைக்கிறோமோ அப்படித்தான், அதே கான்செப்ட்தான் இங்கயும்.

குடைக்குக் கீழ இருக்கிற பவர் பட்டனை அழுத்தினா உங்கள் மொபைல் WiFi கனெக்டர் வரிசைல பெயர் காட்டும். அதை தேர்வு செஞ்சுட்டு மொபைலை பைக்குள்ள போட்டுக்கலாம்! பாடல்கள், எப்.எம்., இன்கமிங் கால்ஸ், GPS, நியூஸ்னு சகலமும் கைப்பிடிக்குள்ள அடங்கிடும். ஒரு கைல மொபைல், இன்னொரு கைல குடைனு திணற வேண்டியதில்ல!’’ என வாவ் பட்டியல்களை அடுக்குகிறார்கள். கேரளாவில் லட்சக்கணக்கில் விற்பனையான இந்த WiFi குடைகள் விரைவில் தமிழகத்துக்கும் வர இருக்கின்றன. ரூ.700களில் இருந்து விலை ஆரம்பம். இப்போதே வேண்டுமென்றால் ஆன்லைனில் வாங்கலாம்!

ஷாலினி நியூட்டன்