காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா-54

ஆச்சரியம். ஆனால், அதுதான் உண்மை. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பாப்லோவும், அவரது சகாக்களும், சம்பந்தப்பட்டோரின் குடும்பத்தாரும் தலைமறைவாகத்தான் திரிந்தார்கள். இந்த நெருக்கடியான சூழலிலும்கூட மெதிலின் கார்டெல் தன்னுடைய வழக்கமான போதை வியாபாரத்தை முன்பை விடவும் சிறப்பாகவே செய்து வந்தது. பாப்லோ அமைத்திருந்த விமானப்படையே இதற்குக் காரணம். தென்னமெரிக்க நாடுகளிலும் சரி, அமெரிக்காவிலும் சரி, ராடார் மூலமாக வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும் அதிகாரிகளுக்கு கணிசமாக லஞ்சம் கொடுத்து வந்தார்கள்.

எனவே சரக்கு தேவைப்படும் இடங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் சரியான நேரத்துக்கு சப்ளை செய்துகொண்டே இருக்க முடிந்தது. இறைக்கிற கிணறுதான் சுரக்கும் என்பார்கள். ஒரு பக்கம் பணம் கொட்டிக்கொண்டே இருந்தது. இன்னொரு பக்கம் பாப்லோ கண்ணை மூடிக்கொண்டு வாரி வாரி வழங்கிக் கொண்டே இருந்தார். ஓர் அரசாங்கமே மக்களுக்குச் செய்ய முடியாத அளவுக்கு ஏராளமான நலப்பணிகளை கொலம்பியாவுக்கு அவர் செய்திருக்கிறார். எண்பதுகளின் இறுதிக்காலம்தான் பாப்லோ, மரணத்தைத் தொட்டுத் தொட்டு மீண்டு கொண்டிருந்த காலம். அவர் எங்கு தங்கினாலும் அது மிகச்சரியாக ராணுவத்துக்கு ‘போட்டு’க் கொடுக்கப்பட்டது.

கொலம்பிய ராணுவத்தின் சீருடையில் அமெரிக்காவின் சிஐஏ அனுப்பிய கொலையாளிகளே கூட பாப்லோவைக் கொல்வதற்காக அலைந்து கொண்டிருந்தார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஏனெனில் பாப்லோவின் அமெரிக்க பார்ட்னர்களாக இருந்தவர்களில் சிலர் சிஐஏவின் ஆட்கள். இந்த உண்மையை அவர் அறிவதற்குள் எல்லாமே கையை மீறிப் போய்விட்டது. கொலம்பியாவில் மற்ற கார்டெல்களைவிட பாப்லோவும், காச்சாவும் நடத்திக் கொண்டிருந்த கார்டெல்களுக்குத்தான் அதிகளவிலான நெருக்கடி. பாப்லோ போதையுலகின் பேரரசன் என்றால், காச்சாதான் இளவரசன் என்று அமெரிக்கா திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தது.

இவர்களை உயிரோடோ அல்லது பிணமாகவோ பிடிப்பதற்காக கொலம்பிய அரசுக்கு அமெரிக்கா நவீன ஆயுதங்களையும், பணத்தையும் அளவில்லாமல் செலவிட்டுக் கொண்டிருந்தது. போதாக்குறைக்கு காலி என்கிற கொலைகார கார்டெல்லையும் தன்னுடைய கைப்பாவையாக வைத்துக்கொண்டு, அவர்களையும் பாப்லோ குழுவினர் மீதான வேட்டையில் ஈடுபடுத்தியது. கார்டெல்லின் வேட்டையில் காலி யதேச்சையாக மாட்டிவிட்டான். பாப்லோவின் சகா காச்சாவின் பதினேழு வயது மகன்தான் காலி. போலீஸிடம் ஒப்படைக்கப்பட்ட அவன் கடுமையான சித்திரவதைக்கு உள்ளானான். இரண்டு மாதங்கள் படுமோசமாக சித்திரவதை செய்யப்பட்டவனின் வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட வெளிப்படவில்லை.

அவனை ரகசியமாக ரிலீஸ் செய்தார்கள். ரிலீஸ் ஆனதிலிருந்தே, தான் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்ததை அறியாமல் காச்சாவின் மறைவிடம் நோக்கிப் போனான். காச்சாவின் கதை அதோடு முடிந்தது. டோலு என்கிற இடத்தில் காச்சா, அவருடைய மகன் மற்றும் அவனது குழுவினர் ஒட்டுமொத்த பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். காச்சாவின் இறுதி ஊர்வலத்தில் இருபத்தைந்தாயிரம் பேர் கலந்துகொண்டு அரசுக்கு எதிரான தங்களுடைய மனக் குமுறலை வெளிக்காட்டினர். காச்சாவின் மரணம் பாப்லோவையும், அவரது குழுவினரையும் மனரீதியாக மிகவும் பாதிப்படையச் செய்தது.

இந்தக் காலகட்டத்தில் பாப்லோ ஏராளமான நெருங்கிய நண்பர்களின், உறவினர்களின் மரணங்களைப் பார்த்து திக்பிரமை அடைந்த நிலையில் இருந்தார். தன்னுடைய கடந்தகால செயல்பாடுகளுக்கான தண்டனைகளை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு அவர் கிட்டத்தட்ட வந்திருந்தார். தன் ஒருவனுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்க மற்றும் கொலம்பிய அரசுகளால் துன்புறுத்தப்படுவது அவருக்கு சகிக்க இயலாத துன்பமாக இருந்தது. தான் சரணடையத் தயார். தன் மீதான விசாரணை கொலம்பியாவிலேயே நடைபெறவேண்டும். எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறையில் இருக்கத் தயார். ஆனால், அமெரிக்காவுக்கு, தான் நாடு கடத்தப்படக்கூடாது என்கிற நிபந்தனையில் மட்டும் உறுதியாக இருந்தார்.

கொலம்பியா அவருடைய நிபந்தனைகளை ஒப்புக் கொள்ளக்கூடிய நிலைமையில்தான் அமெரிக்கா உள்ளே புகுந்து ஆட்டையைக் கலைத்தது. குறிப்பாக 1987, ஜனவரி 13ம் தேதி நடந்த ஒரு சம்பவம்தான் பாப்லோவுக்கும், கொலம்பிய அரசுக்குமான நிரந்தர பகையை உறுதிப்படுத்தியது. அந்தச் சம்பவம் - மெதிலின் நகரில் பாப்லோ, தனக்கும் தன்னுடைய குடும்பத்தாருக்குமாக ஐந்து மாடிகள் கொண்ட நவீன வீடு ஒன்றை உருவாக்கி இருந்தார். ஐரோப்பிய கோட்டைகளைப் போல மிகவும் பாதுகாப்பான முறையில் உருவாக்கப்பட்ட இந்த வீட்டுக்கு மொனாக்கோ என்று பெயர் வைத்திருந்தார். கோடிக்கணக்கான டாலர்களைக் கொட்டி, மொனாக்கோவின் ஒவ்வொரு அங்குலமும் இழைத்து இழைத்து செதுக்கப்பட்டிருந்தது.

கொலம்பியாவிலேயே முதன்முறையாக செக்யூரிட்டி கேமிரா அமைக்கப்பட்டிருந்த கட்டடம் இதுதான். ஒரு தளம் முழுக்க உணவகம். மறு தளம் முழுக்க பாப்லோ குடும்பத்தார் தங்கிக் கொள்ள படுக்கையறைகள். இன்னொரு தளத்தில் சிலைகள், ஓவியங்கள் என்று அரிய கலைப்பொருட்கள். மற்ற இரு தளங்களும் அலுவலகப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் தப்பித்துக் கொள்ள ரகசிய அறைகளும் உருவாக்கப்பட்டிருந்தன. தன் கோட்டை என்று பெருமையாக மொனாக்கோவை சொல்வார் பாப்லோ எஸ்கோபார். இந்த கோட்டையின் மீதுதான் வெடிகுண்டு வீச்சு, அந்த விடியற்காலையில் நடத்தப்பட்டது.

சக்தி வாய்ந்த அந்த குண்டுவீச்சில் மொனாக்கோ பெரிதும் சேதமானது. குண்டு வெடித்தபோது பாப்லோவின் அம்மா உட்பட அவரது குடும்பத்தார் உள்ளேதான் இருந்தார்கள். கொலம்பியாவில் முதன்முறையாக நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் அதுதான். அரசாங்கம் அதுவரை குண்டு வீசியதே இல்லை. இந்த குண்டு வீச்சு சம்பவத்தை நடத்தியவர்கள் அமெரிக்காவின் கைப்பாவை கார்டெல்லான காலி ஆட்கள்தான் என்று பாப்லோ குழுவினர் குற்றம் சாட்டினார்கள். ஏனெனில் குண்டு வெடித்தபோது பாப்லோ தங்கியிருந்த பண்ணை வீட்டுக்கு ஒரு போன் கால் வந்தது.

பாப்லோதான் ரிசீவரை எடுத்தார். “பாப்லோ...” “நான் ரோட்ரிக்ஸ், காலி கார்டெல்...” “சொல்லு...” “உன் வீட்டில் குண்டு வீசப்பட்டதாக அறிந்தேன்...” பாப்லோவுக்கே அப்போதுதான் மொனாக்கோ மீது குண்டுவீச்சு நடந்தது தெரியும். தன் உணர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மவுனமாக இருந்தார். “நீயும் உன் குடும்பமும் நலமாக இருக்கிறீர்களா என்று விசாரிக்கத்தான் போன் செய்தேன்...” பதில் சொல்லாமல் போனை கட் செய்துவிட்டு மொனாக்கோவுக்கு ஓடினார் பாப்லோ. நல்ல வேளையாக யாருக்கும் உயிர்ச் சேதம் எதுவுமில்லை.அன்றிலிருந்துதான் உணர்ந்தார், தன்னுடைய எதிரிகள் அமெரிக்கா மற்றும் கொலம்பிய அரசுகள் மட்டுமல்ல, காலி கார்டெல்காரர்களும்தான் என்பதை.

எனினும் அரசாங்கங்களை நேரடியாக எதிர்க்க முனைந்த பாப்லோவால், முதுகில் குத்தும் இந்த கார்டெல் எதிர்ப்புகளை சமாளிக்க முடியவில்லை. இவர்களோடு சேர்ந்துதான் வணிகமும் செய்ய வேண்டியிருந்தது. தன்னுடைய எதிரிகள், இவர்களுக்கும்தான் எதிரிகள். அப்படியிருந்தும் தன்னை ஒழித்துக்கட்ட இவர்கள் முனைகிறார்கள் என்றால் துரோகிகள் ஆகிவிட்டார்கள் என்று பொருள். எதிரிகளிடமாவது பேச்சுவார்த்தை நடத்தலாம். துரோகிகளிடம் அதுவும் முடியாது. பாப்லோ, தன் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு, துரோகிகளை புல் பூண்டு முளைக்க முடியாத அளவுக்கு வேரறுக்காததுதான். காலி கார்டெல்லைத் தொடர்ந்து, வேறு சில சில்லறை கார்டெல்காரர்களூம் தங்களுடைய இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள அமெரிக்காவுக்கு அடிமைகளானார்கள்!

(மிரட்டுவோம்)
ஓவியம் : அரஸ்