கரன்சி காரர்!



‘காசு, பணம், துட்டு, மணி, மணி...’ இது திரைப்படப் பாடல் மட்டுமல்ல, வாழ்க்கையும்தான். இதுதான் எதார்த்தம்.

வாழ்வாதாரத்துக்காக எல்லோருமே பணத்தைத் தேடி நடக்கிறோம், ஓடுகிறோம். இந்நிலையில் திருச்சியைச் சேர்ந்த யோகா பயிற்சியாளரான விஜயகுமார் பொழுதுபோக்குக்காக பணத்தைத் தேடி பயணப்படுகிறார்! ‘‘சொந்த ஊரே திருச்சிதான். அப்பா காலத்துல இருந்து இங்கதான் வாழ்ந்துட்டு இருக்கோம். என் மனைவி வழக்கறிஞரா இருக்காங்க. மகள் எட்டாவது படிக்கிறா. ஓட்ட காலணா பார்த்து வளர்ந்தவன். ஆமா. தாத்தா ஒரு தகரப் பெட்டில ஓட்ட காலணாக்கள், ஒரு பைசா, ரெண்டு பைசானு போட்டு வைச்சிருப்பார். அது என்னவோ தெரியலை, அந்த காசை சுண்டி விடறப்ப எழுகிற க்ளிங் சத்தம் ரொம்ப பிடிச்சிருந்தது! அதனாலயே அப்பப்ப அந்த தகர டப்பாவை எடுத்து பார்ப்பேன். அப்ப அதன் மதிப்பு எல்லாம் தெரியாது. மெல்ல வளர்ந்தேன். கல்லூரி படிப்பை முடிச்சேன்.

பலமுறை அந்த தகர டப்பாவை பழைய பேப்பர் கடைக்கு போட முயற்சி நடந்தது. பல காரணங்களைச் சொல்லி அதை தடுத்துட்டிருந்தேன். 20 வருஷங்களுக்கு முன்னாடி... அப்ப எனக்கு வயசு 24. ஓட்ட காலணா, நாணயங்கள் பத்தி எல்லாம் அப்பதான் தெரிஞ்சுது...’’ என்று சொல்லும் விஜயகுமார், இது தொடர்பாக ஆய்வே செய்துள்ளார். ‘‘நாணயங்களை சேகரிக்கிற கலையை ‘நுமிஸ்மேடிக்ஸ்’னு சொல்வாங்க. பல இடங்கள்ல பல பேர் நாணயங்களை சேகரிச்சுட்டும் வர்றாங்க. இதை எல்லாம் கேள்விப்பட்டதும் நாமும் ஏன் கலெக்ட் பண்ணக் கூடாதுனு தோணிச்சு. அப்படிதான் இந்த சேகரிப்பு ஆரம்பமாச்சு. ஆனா, இது அவ்வளவு சுலபமில்ல.

எல்லாவிதமான நாணயங்களையும் கலெக்ட் பண்றது கஷ்டம். இதையும் மீறி செய்யறப்ப அதுல ஒரு தனித்தன்மை இருக்கணும்னு நினைச்சேன். அதாவது ஆசிய நாணயங்கள்; தென்னிந்திய நாணயங்கள்; பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள்; சுதந்திர இந்திய நாணயங்கள்; காலனி ஆதிக்க நாணயங்கள்; சேர, சோழ, பாண்டியர் காலத்து நாணயங்கள்; மினிட் குறியீடு நாணயங்கள் (இதுல ஒவ்வொரு நாணயத்துலயும் டைமண்ட், நட்சத்திரம், புள்ளி மாதிரியான குறியீடுகள் இருக்கும்) இப்படி ஸ்பெஸிஃபிக்கா கலெக்ட் பண்ணத் தொடங்கினேன். இது செய்யறப்ப ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் தாள்களும் கிடைச்சது. இதையும் சேகரிக்கலாமேனு ஸ்பார்க் அடிச்சது.

அவ்வளவுதான், களத்துல இறங்கிட்டேன். இப்ப நம்மூர் பணத்தாள் மட்டுமில்ல... வெளிநாட்டு கரன்சிகளும் சேகரிக்கிறேன்...’’ என்று சொல்லும் விஜயகுமாரிடம் 200 நாடுகளின் கரன்சிகள் இருக்கின்றன! ‘‘இந்தியாவுல எப்பவும் ஒரு ரூபாய் நோட்டு ஸ்பெஷல்தான். ஏன்னா, இந்திய அரசால் வெளியிடப்படக் கூடிய பணம் இது மட்டும்தான். மத்த 5, 10, 20, 50, 100, 500, 2000 ரூபாய் நோட்டுகளை எல்லாம் ரிசர்வ் வங்கி வெளியிடறதால அதுல வங்கி ஆளுநர் கையெழுத்துதான் இருக்கும். கரன்சிகளை கலெக்ட் பண்ண ஆரம்பிச்சதும் பல பேர் தொடர்பு கிடைச்சது. அவங்க எல்லாருமே கரன்சி கலெக்டர்ஸ்தான். அவங்க உதவியோட வெளிநாட்டு நோட்டுகளை சேகரிக்க ஆரம்பிச்சேன்.

நண்பர்களோ, உறவினர்களோ வெளிநாட்டுக்கு போயிட்டு வர்றப்ப எனக்காகவே அந்தந்த நாட்டு கரன்சிகளை கொண்டு வருவாங்க. அதை இந்திய மதிப்புக்கு வாங்கிப்பேன். எப்படி இந்திய பணத்தாளை ரூபாய்னு சொல்றோமோ அப்படி ஒவ்வொரு நாட்டுலயும் டாலர், பவுண்ட், தினார், ரிங்கெட்னு ஒவ்வொரு பேரு இருக்கு. ஒவ்வொண்ணுக்கும் இந்திய மதிப்பு உண்டு. நம்ம நாட்ல ஒரு ரூபாய்ல ஆரம்பிச்சு இரண்டாயிரம் ரூபாய் வரை நோட்டுகள் அச்சடிக்கிறாங்க. ஆனா, ஜிம்பாப்வேல ஒரு ரூபாய்ல தொடங்கி கோடி, பில்லியன், டிரில்லியன் வரை பணத்தாள்கள் உண்டு! அவங்களோட டிரில்லியன் பணத்தாளைப் பார்த்து மிரண்டுட்டேன். பொதுவா இதுமாதிரி அதிக தொகையுள்ள பணத்தாளை பொருளாதாரத்துல வீழ்ச்சியடைகிற நாட்டுலதான் பார்க்க முடியும்.

இதையும் என் ஆய்வு வழியாதான் தெரிஞ்சுகிட்டேன்...’’ என்று சொல்லும் விஜய்குமார்தான் தமிழகத்தில் முதல் முறையாக நோட்டபிளி அமைப்பைத் தொடங்கியவர்.  ‘‘வங்கி பணத்தைச் சேகரிக்கிறவங்களை ‘நோட்டபிளி’னு அழைப்பாங்க. மொத்தம் 100 பேர் இதுல இருக்கோம். எங்களுக்குள்ள கரன்சிகளை பரிமாறிக்கிறோம். அதாவது பண்டமாற்றம் மாதிரி. ஒருத்தர்கிட்ட இல்லாத பணத்தாளை இன்னொருத்தர்கிட்டேந்து வாங்கி அவர்கிட்ட இல்லாததைத் தருவோம்...’’ என்று விளக்கியவர் தன் மனைவி, மகளையும் ‘கலெக்ட’ராக்கி இருக்கிறார்! ‘‘ஆரம்பத்துல ‘என்ன குப்பைகளை சேகரிக்கறீங்க’னு என் மனைவி கேட்டாங்க! அப்புறம் அவங்களுக்கு இதை புரிய வைச்சதும் தானும் பங்கேற்க தொடங்கினாங்க.

இப்ப எங்களைப் பார்த்து பொண்ணும் சேகரிக்கத் தொடங்கிட்டா. நாம பயன்படுத்தற ரூபாய் நோட்டுகள் எத்தனை வருஷங்கள் இருக்கும்னு தெரியாது. நம்ம நாடு சுதந்திரம் பெற்ற இந்த 70 வருஷங்கள்லயே ஏகப்பட்ட மாற்றங்கள் பணத்தாள்கள்ல ஏற்பட்டிருக்கு. ஆக, கரன்சி சேகரிப்பவர் ஒருவகைல மரபைக் காப்பாற்றுபவர்னு சொல்லலாம். இது வழியா உலக பொருளாதாரம் குறித்த சித்திரம் கிடைக்கும். அதனாலதான் எங்க அமைப்பு சார்பா கல்லூரிகள்ல விழிப்புணர்வு பிரசாரம் செய்யறோம், கண்காட்சி நடத்தறோம்...’’ என்கிறார் விஜயகுமார்.


ப்ரியா
படங்கள்: சுந்தர்