பெரும் நஷ்டத்துக்குப் பிறகுதான் ஜெயிச்சேன்!



‘மெட்டி ஒலி’, ‘தென்றல்’, ‘அழகு’ சீரியல் ஸ்கிரிப்ட் ரைட்டர் சி.யூ.முத்துச்செல்வனின் சக்சஸ் ஸ்டோரி

‘மெட்டிஒலி’, ‘மேகலா’, ‘அழகு’ என குடும்ப உணர்வுகளை எதார்த்தத்துடன் பிரதிபலிக்கும் மெகா தொடர்களில் தன் தனித்துவமிக்க திரைக்கதை மூலம் கவனம் ஈர்த்தவர்; ஈர்த்து வருபவர் சி.யூ.முத்துச்செல்வன். அத்துடன் ‘முகூர்த்தம்’ மூலம் இயக்குநராகவும், ‘பிரியசகி’ வழியே தயாரிப்பாளராகவும் சின்னத்திரையில் பரிமாணங்கள் பல எடுத்தவர். ‘‘சினிமா ஆசைலதான் சென்னைக்கு வந்தேன். ஆனா, சீரியல்கள்தான் என்னை வாழ வைக்குது. உண்மையை சொல்லணும்னா சினிமாவை விட சீரியலுக்குதான் அதிக உழைப்பு தேவை. இங்க வேலை செய்யறதுல உண்மைலயே பெருமைப்படறேன். என் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் சன் டிவியும், ‘விகடன் டெலிவிஸ்டாஸு’ம்தான்.

16 வருட சின்னத்திரை வாழ்க்கைல 15 வருடங்கள் சன் டிவியோடதான் பயணப்பட்டிருக்கு...’’ மகிழ்ச்சியுடன் புன்னகைக்கிறார் முத்துச்செல்வன். ‘‘சொந்த ஊர் காரைக்குடி. அப்பா செல்லையா பேங்க்ல வேலை பார்த்தார். அம்மா உமையாள் வீட்டை கவனிச்சுக்கிட்டாங்க. எனக்கு நாலு அக்கா. நான் ஒரே பையன். மெக்கானிக்கல்ல டிப்ளமா சேர்ந்தேன். ஆனா, சினிமா ஆசைல அதை முடிக்கலை. சின்ன வயசுலேந்தே நிறைய புக்ஸ் படிப்பேன். அதுக்கு காரணம் எங்கப்பா. அப்புறம் வீட்டுப் பக்கத்துலயே லைப்ரரி இருந்தது. அதனால எப்பவும் புக்கும் கையுமாதான் இருப்பேன்...’’ என்ற சி.யூ.முத்துச்செல்வன் சென்னைக்கு வந்ததற்கான காரணம் சினிமாதான்.

‘‘சொந்த பந்தம், தெரிஞ்சவங்கனு சென்னைல யாருமே இல்ல. அதனால என் ஆரம்பக்காலம் முழுக்க போராட்டம்தான். நான் படற கஷ்டங்களைப் பார்த்து அப்பா அதிர்ந்துட்டார். ரிடையராகி வந்த பணத்தை அப்படியே என் கைல கொடுத்து ‘ஏதாவது தொழில் செய்... கஷ்டப்படாத’னு சொன்னார். சென்னைல எனக்கு பல லைட்மேன்ஸ் அறிமுகமாகி இருந்தாங்க. அவங்க கொடுத்த ஐடியாவுல சின்னதா ஒரு அவுட்டோர் யூனிட் ஆரம்பிச்சேன். பொருளாதார ரீதியா நல்லா போச்சு. ஆனா, இந்த சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்கலை. சினிமா வாய்ப்புக்காக நான் அலைஞ்சதால இன்னொருத்தரை நம்பி யூனிட்டை ஒப்படைச்சேன். அதுக்கு அப்புறம் எல்லாமே தலைகீழாகிடுச்சு.

தாங்க முடியாத அளவுக்கு நஷ்டம். சென்னைக்கு வந்த புதுசுல அனுபவிச்சதை விட இந்தக் காலகட்டம் கொடூரமா இருந்துச்சு...’’ சட்டென்று மவுனமானவர் சின்ன இடைவெளிக்குப் பின் தொடர்ந்தார். ‘‘இந்த நேரத்துல நண்பர் உதயராஜை சந்திச்சேன். ‘நம்ம திருமுருகன் சார் படம் டைரக்ட் பண்ணப்போறார். நம்ம ஊர்க்காரர்தான். போய்ப் பாரு’னு சொன்னார். திருமுருகன் சாரும் நானும் ஒரே ஊர்க்காரங்கதான். ஆனா, அதுக்கு முன்னாடி சந்திச்சதே இல்ல. உதயராஜ் சொல்லித்தான் அவரைப் போய்ப் பார்த்தேன். அப்ப அவர் ஒரு கம்பெனிக்கு கதை சொல்லி ஓகே வாங்கி படம் இயக்க ரெடியா இருந்தார். ஆனா, சில காரணங்களால அந்தப் படம் டேக் ஆஃப் ஆகல.

இதுக்குப் பிறகு அவர் சீரியல் பக்கம் கவனம் செலுத்தினார். தூர்தர்ஷனுக்காக திருமுருகன் சார் ஒர்க் பண்ணப்ப என்னையும் தன் கூட்டணில சேர்த்துக்கிட்டார். இதுதான் என் லைஃப்ல மிகப்பெரிய டர்னிங் பாயிண்ட். ‘விகடனு’க்காக அவர் ‘அக்‌ஷயா’, ‘ஆனந்த பவன்’, ‘பஞ்சவர்ணக்கிளி’னு வரிசையா சீரியல் இயக்கினார். அவர்கிட்ட அசிஸ்டென்ட் ஆன கொஞ்ச நாள்லயே எனக்கு அசோசியேட் புரொமோஷன் கொடுத்துட்டார். அப்புறம் ‘சத்யா’ இயக்கினப்ப என்னை வசனம் எழுத வைச்சார். இந்த டைம்லதான் அவருக்கு ‘மெட்டி ஒலி’ மெகா சீரியல் இயக்கற வாய்ப்பு வந்தது...’’ என்ற முத்துச்செல்வன், இத்தொடர் தன் வாழ்க்கையை எப்படி மாற்றியது என விவரித்தார்.

‘‘கமிட்டான கையோடு ‘‘மெட்டி ஒலி’க்கு நீங்கதான் திரைக்கதை எழுதணும்’னு திருமுருகன் சார் சொன்னார். ஷாக்காகிட்டேன். சினிமாவுக்கு ஸ்கிரிப்ட் பண்றது ஈசி. 60 - 70 சீன்ஸ் இருந்தா போதும். ஆனா, மெகா சீரியல் அப்படியில்ல. மாசத்துக்கு 100 சீன்ஸ் தேவை. ஒவ்வொரு நாளும் போரடிக்காம கொண்டு போகணும். வாரா வாரம் டுவிஸ்ட் அவசியம். நினைக்கிறப்பவே மலைப்பா இருந்தது. ‘என்னால முடியாதுனு நினைக்கறேன் சார்’னு மறுத்தேன். அவர் விடலை. ‘உங்களால முடியும்’னு ஊக்குவிச்சார். எழுதிப் பார்ப்போம்னு 50 சீன்ஸ் எழுதினேன். திருமுருகன் சார் தவிர பாஸ்கர் சக்தி, ‘கோலங்கள்’ திருச்செல்வம்னு நண்பர்கள்கிட்டயும் காட்டினேன். சொல்லி வைச்ச மாதிரி எல்லாரும் பாராட்டினாங்க.

என்னால எழுத முடியும்னு நம்பிக்கை தந்தாங்க. அப்படித்தான் சீரியலுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டரா மாறினேன். ‘மெட்டி ஒலி’ மறக்க முடியாத அனுபவம். திருமுருகன் சார், திருச்செல்வம், விக்ரமாதித்யன், சுந்தரமூர்த்தினு எல்லாருமே நெருக்கமான நண்பர்கள். தவிர பேச்சுலர்ஸ் வேற. முழுச் சுதந்திரத்தோட ஒர்க் பண்ணினோம். ‘மெட்டி ஒலி’ மெகா சக்சஸுக்கு அப்புறம் டைரக்டரா புரொமோஷன் ஆகி ‘முகூர்த்தம்’ சீரியல் இயக்கினேன். ஆனா, அது சரியா போகலை. மிகப்பெரிய அடி. ஸ்கிரிப்ட் பக்கமே கவனம் செலுத்துவோம்னு விக்ரமாதித்யன் இயக்கத்துல ‘மேகலா’வுக்கு திரைக்கதை எழுத ஆரம்பிச்சேன்...’’ பேசிக் கொண்டே வந்த முத்துச்செல்வனின் குரல் திடீரென தழுதழுக்க ஆரம்பித்தது.

காரணம், இவர் வாழ்க்கையில் இறங்கிய அடுத்த இடி. ‘‘சீரியல் டைரக்டரா ‘முகூர்த்தம்’ல அறிமுகமாகி நொந்து போயிருந்த நேரத்துல ஒரு பெரிய ப்ராஜெக்ட்டுக்கு எழுத வாய்ப்பு வந்தது. அதுக்காக என்னைத் தேடி வந்த மெகா தொடர்களை எல்லாம் வேண்டாம்னு சொன்னேன். இந்த டைம்ல அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமப் போச்சு. ஒரு நாள் இடைவெளில ஊருக்குப் போயிட்டு பஸ்ல திரும்பிட்டு இருந்தேன். அப்ப ‘உங்களை அந்த ப்ராஜெக்ட்ல இருந்து தூக்கிட்டோம்’னு போன் வந்தது...அப்படியே கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. வந்த வாய்ப்புகளை எல்லாம் அவசரப்பட்டு உதறிட்டோமோ... நிலையான வருமானம் இல்லாம சென்னைல என்ன பண்றது... இஎம்ஐ கட்டணுமே... வீட்டு வாடகைக்கு என்ன செய்ய..? எல்லா பிரச்னைகளும் மான்டேஜா கண் முன்னால போச்சு.

சரியா இந்த சமயத்துக்கு திரும்பவும் ஒரு போன். பேசினவர், ‘விகடன் டெலிவிஸ்டாஸ்’ எம்.டி சீனிவாசன் சார். ஆபீஸ் வரச் சொன்னார். சென்னைல பஸ் வந்து நின்னதும் அவரைப் போய்ப் பார்த்தேன். எஸ்.குமரன் இயக்கத்துல அவர் ஆரம்பிக்கப் போற ‘தென்றல்’ மெகா சீரியலுக்கு திரைக்கதை எழுத வாய்ப்பு கொடுத்தார். கை நிறைய அட்வான்ஸையும் திணிச்சார். ‘தென்றல்’ எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. கிட்டத்தட்ட 1400 எபிசோடுகள் ஒளிபரப்பான இந்தத் தொடர் சமயத்துலயே ‘அழகி’ சீரியல் எழுதவும் ‘விகடன் டெலிவிஸ்டாஸ்’ சான்ஸ் கொடுத்தது. இந்த நிறுவனத்துல ஒர்க் பண்றதே காலேஜ்ல படிக்கிற மாதிரி தான். டெக்னீஷியன்களுக்கு சமமா எம்.டி சீனிவாசன் சாரும், அவர் மனைவி ராதிகா மேடமும் வேலை செய்வாங்க. ஆக்சுவலா ராதிகா மேடம் பிரமாதமான கிரியேட்டர்.

எங்களுக்கு அவங்க சம்பளம், பெயர் எல்லாம் கொடுத்தாலும் Hidden Writer அவங்கதான். அவங்க ஜட்ஜ்மென்ட் எப்பவும் சரியா இருக்கும்...’’ என்ற முத்துச்செல்வன் எதார்த்தமும் இயல்பும், லாஜிக் மீறாத காட்சியமைப்புகளுமே தன் பாணி என்கிறார். ‘‘ஸ்கிரிப்ட்டை பரபரப்பாக்க க்ரைம் சீன்ஸை திணிக்கறதுல எனக்கு உடன்பாடில்லை. பொதுவா கதைகளை ஒரு கேரக்டர்ல இருந்து, இல்லைனா ஒரு நிகழ்வுல இருந்துதான் ஆரம்பிப்போம். இதுல எந்தளவுக்கு ரியாலிட்டியைப் பொருத்த முடியுமோ அந்தளவுக்கு கொண்டு வர முற்படுவேன். முடிஞ்ச வரைக்கும் நம்ப முடியாத ஏரியாவுக்குள்ள கதை டிராவல் ஆகறதைத் தவிர்த்துடுவேன்...’’ என்றவர், சீரியலில் திரைக்கதையும் வசனமும் வேறு வேறு என்கிறார்.

‘‘பெரும்பாலானவங்க திரைக்கதை எழுதறப்பவே வசனமும் சேர்த்து எழுதுவாங்க. ஆரம்பத்துலேந்தே இதை நான் தவிர்த்துடறேன். இந்த இரண்டையும் ஒருத்தரே எழுதினா சிங்கிள் கலர்தான் கிடைக்கும். அதுவே வசனத்தை இன்னொருத்தர் எழுதினா கூடுதல் சிறப்பு கிடைக்கும்னு நம்பறேன். பாஸ்கர் சக்தி, பா.ராகவன், மருதுசங்கர், எழில்வரதன், ஆனந்த்னு நல்ல ரைட்டர்ஸ் எனக்கு கிடைச்சாங்க. ஸ்கிரீன்ப்ளே எழுதுறதை விட டயலாக் கடினமான வேலை. அதனாலயே அந்தப் பக்கம் போறதில்ல!’’ என்று சொல்லும் சி.யூ.முத்துச்செல்வன் ‘கிளாசிக் மீடியா  என்டர்டெயின்மென்ட்’ என்ற சீரியல் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்துகிறார். இவரது மனைவி தமிழரசி அதை கவனித்துக் கொள்கிறார். ஒரே மகன், புகழ். ஐந்தாவது  படிக்கிறார்.

மை.பாரதிராஜா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்