நல்லுறவு!



செய்தி:
நல்லுறவு ஏற்படுத்த பொதுமக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், வணிக வளாகங்கள், பூங்காக்கள், கடற்கரைகள் போன்ற பகுதிகளில் காவல்துறையின் இசைக்குழுக்கள் மூலமாக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்!
- இந்த ஐடியாவை வேறு எங்கெங்கு பயன்படுத்தலாம்?

காதலுக்கு மரியாதை

பீச்சில் காதல் செய்யும் ஜோடிகளின் செல்போனை பிடுங்கி அதில் இருக்கும் வீடியோக்களை தோண்டி எடுத்து ஆய்வு செய்வது போல் ஜொள்ளு விடாமல் நட்புணர்வோடு அந்த ஜோடிகளுடன் போலீசார் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம்! இப்படி எடுக்கப்பட்ட செல்ஃபியை அந்த காதல் ஜோடிகள் கட்டாயம் தங்கள் முகநூலில் பதிவேற்ற வேண்டும் என்று ரூல் போட்டால் கடற்கரையில் காதல் ஜோடிகள் அமர மாட்டார்கள்! இதுபோக நல்ல காதல் / கள்ளக் காதல் ஜோடிகளைக் கண்டறியும் ஸ்பெஷல் மோப்ப சக்தி நாயுடன் போலீசார் பீச்சில் ரோந்து வரலாம். கள்ளக் காதல் ஜோடி என்றால் உடனே அந்த நாய் பாய்ந்து குதறிவிடும் என்பதால் கடற்கரைப் பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்டார்கள்!

தானா சேர்ந்த கூட்டம்

ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டுபவர்களை டிராஃபிக் போலீஸ்காரர்கள் கூட்டமாகத் துரத்தி, லத்தியை அம்பாக எய்து பிடித்து மக்களின் விரோதத்தை சம்பாதிப்பதற்கு பதிலாக - ‘சொடக்கு மேல சொடக்கு போடுது...’; ‘ஆலுமா டோலுமா...’; ‘வாடா மாப்பிள்ள வாழைப்பழ தோப்புல...’ மாதிரியான பாப்புலர் பாடல்களுக்கு நடு ரோட்டில் போலீசார் நடனமாடலாம். இந்த நாட்டியத்தைப் பார்க்க கூட்டம் கூடும். நின்று வேடிக்கை பார்க்கும் டூ வீலர் ஆட்களில் யாரிடம் ஹெல்மெட் இல்லையோ அவர்களை கப்பென்று பிடித்து ஃபைன் போடலாம்! தப்பி ஓட நினைப்பவர்கள் மீது நயன்தாரா படம் போட்ட அம்பை எய்து பிடிக்கலாம்!

தனி ஒருவன்

பார்க்கில் தனியாக உட்கார்ந்து தனக்குத் தானே பேசிக்கொண்டிருக்கும் நபர்களுடன் நட்புணர்வை வளர்க்க, அங்கு மண்டியிருக்கும் புதர்களில் ஓடி, ஒளிந்து ‘திருடன் போலீஸ்’ விளையாட்டை அவர்களுடன் காவலர்கள் விளையாடலாம்! போலீசார் ஒளியும் புதர்களில் நிஜத் திருடர்கள் இருந்தால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள்! இதைத் தவிர்க்க ஸ்பெஷல் புதர்களை உருவாக்கலாம்! இந்த விளையாட்டுகளில் வேண்டுமென்றே போலீஸ் விட்டுக் கொடுத்து தனி ஒருவனை எப்பொழுதும் ஜெயிக்க வைத்து நட்புணர்வை வளர்க்கலாம்!

முதல் மரியாதை

பொதுமக்கள் புகார் கொடுத்தால்தான் போலீசுக்கு வேலை என்பதால் ஒருவர் புகார் கொடுக்க ஸடேஷனுக்குள் நுழையும்போதுபேண்ட் வாத்தியத்துடன் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்று, புகாரின் தன்மைக்கு ஏற்ப பரிசுகள் கொடுத்து மகிழ்வித்து நல்லுறவை வளர்க்கலாம். இதுவரை சந்தித்திராத நூதன மோசடிகள் சம்பந்தமான புகார்களை அளிப்பவர்களுக்கு டிவி, மிக்ஸி, கிரைண்டர் போன்ற பரிசுகளை ஸ்பான்சர்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யலாம்.

பக்கத்து வீட்டுக்காரி புதிதாக வாங்கியதாக அக்கம் பக்கத்தில் அறிவித்து பீற்றிக்கொள்ளும் சேலையின் விலையில் சந்தேகம் உள்ளது; நான் கணவனுடன் வெளியே கிளம்பும்போது எங்களுக்குக் குறுக்கே ஓடும்படி  வீட்டுப் பூனையை மாமியார் விரட்டுகிறார்; நான் பார்க்கும் சீரியலில் கொலையாளி ஒளிந்திருக்கும் இடம் எனக்குத் தெரியும்போது போலீசுக்குத் தெரியாமல் மாதக்கணக்கில் ஏன் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்... போன்ற தெறிக்க விடும் மொக்கை புகார்கள் ஏராளமாகக் குவியும்.

இதைத் தவிர்க்க முடியாது. ஏனெனில், நட்புறவை வளர்க்க வேண்டுமே! எனவே, போலீஸ் ஸ்டேஷன் வாசலில் திருவிழா போல் டீ மற்றும் பக்கோடா கடைகள், பீடா கடைகள்,  வளையல் கடைகள், ஜோசிய மையங்கள், ரங்க ராட்டினம் ஆகியவை பெருமளவில் முளைத்து ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாவதை எண்ணி இதைத் தாங்கிக் கொள்வதைத் தவிர காவலர்களுக்கு வேறு வழியில்லை!

எஸ்.ராமன்