அப்பா பேரை கெடுத்துடாதேனு அம்மா சொல்வாங்க!
‘‘ஒரு கேமரா உமனா ஆகணும், ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர்னு பெயர் எடுக்கணும்... இப்படி எந்த கனவுகளும் இல்லாமதான் சினிமாவுக்கு வந்தேன். ஆனா, இதெல்லாமே எனக்கு கிடைச்சிருக்கு! எங்கண்ணன் கேமராமேன் அசோக்குமார் சார்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்தார். ஒருமுறை அண்ணன் கூட சாரும் எங்க வீட்டுக்கு வந்தார். என்னைப் பார்த்துட்டு ‘என்ன பண்றே’னு விசாரிச்சார். ‘சும்மா இருக்கேன்’னு சொன்னேன். ‘என்கிட்ட உதவியாளரா சேர்ந்துடு’னு சொல்லிட்டு போயிட்டார்! நாலரை வருஷங்கள் அவர்கிட்ட உதவியாளரா இருந்தேன்.
அந்த அனுபவத்துல கேமராஉமன் ஆனேன்...’’ கனிவும் பணிவுமாக பேசுகிறார் இயக்குநர் பி.ஆர்.பந்துலுவின் மகளும், ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஆர்.விஜயலட்சுமி. நீண்ட இடைவெளிக்குப் பின் ‘அபியும் அனுவும்’ படத்தை இயக்கியிருப்பதன் மூலம் மீண்டும் டைரக்டராகத் திரும்பி வந்திருக்கிறார். ‘‘அசிஸ்டென்ட்டா வேலை செய்த நாட்களை மறக்கவே முடியாது. ஒவ்வொரு நாளும் ‘நீ ஒளிப்பதிவாளரா ஆகலைனாலும் பரவால்ல. அப்பா பேரை கெடுத்துடாதே’னு அம்மா சொல்லுவாங்க. ஷூட் முடிய நைட் ரெண்டு மணி ஆகும்.
மறுநாள் காலை 6 மணிக்கு படப்பிடிப்பு இருக்கும். உதவியாளர்கள்தான் ஸ்பாட்ல எல்லா ஏற்பாடும் செய்யணும். ஸோ, ஆறு மணி ஷூட்டுக்கு அதிகாலை 4 மணிக்கு ஸ்பாட்ல இருப்போம். கடைசி ஆளா கிளம்பி, முதல் ஆளா வர்றது நாங்கதான். அசிஸ்டென்ட்ஸ் ரெண்டு மணிநேரம் தூங்கினாலே அது பெரிய விஷயம். கிளம்ப 10 நிமிஷங்கள் லேட்டானா கூட அம்மா டென்ஷனாகிடுவாங்க. ‘அப்பா பெயரை கெடுத்துடாதே’னு மறுபடியும் ஆரம்பிச்சிடுவாங்க. இப்படி கட்டுப்பாடோட வளர்ந்ததாலதான் பஞ்சுவாலிட்டிய எப்பவும் கீப் அப் பண்ண முடியுது! பாக்யராஜ் சார்தான் ‘சின்ன வீடு’ வழியா என்னை ஒளிப்பதிவாளரா அறிமுகப்படுத்தினாரு.
இப்ப மாதிரி அப்ப இன்டர்நெட், மொபைல், வாட்ஸ் அப் எல்லாம் இல்லாததுனால நான் கேமராஉமன் ஆனது பெரிய வைரல் நியூஸா ஆகலை! பிரிண்ட் மீடியாவுல என் ஒர்க்கை கவனிச்சு பாராட்டினாங்களே தவிர, பெண் ஒளிப்பதிவாளர்னு பிரிச்சுப் பேசலை. ‘குங்குமம்’ இதழ்ல ‘திங்கட்கிழமை காலை கல்லூரிக்கு சென்றது போல ஃப்ரெஷ்ஷாக ஒளிப்பதிவு இருந்தது’னு என்னை பாராட்டியிருந்தது இப்பவும் நினைவுல இருக்கு!’’ புன்னகைக்கிறார் பி.ஆர்.விஜயலட்சுமி.
‘பேஸ்கட்’ படத்துக்குப் பிறகு ஏன் சினிமாவில் இருந்து ஒதுங்கிட்டீங்க?
ஒதுங்கவே இல்ல. இங்கயேதான் இருக்கேன். அப்படி ஒரு படத்தை நான் இயக்கவே இல்ல. நான் டைரக்ட் செஞ்ச ஒரே படம், ‘பாட்டுப் பாடவா’தான். 22 படங்களுக்கு ஒளிப்பதிவு செஞ்ச பிறகு, ‘சரிகம’ நிறுவன பொறுப்புல சேர்ந்தேன். டிவி சீரியல்ஸ், மியூசிக், மூவி பிசினஸ்னு சுத்திச் சுத்தி இந்தத் துறைலதான் இயங்கிட்டிருக்கேன். இப்ப இந்த நிறுவனத்துலயே வைஸ் பிரசிடன்ட்டா ஆகிட்டேன்.
‘சரிகம’வின் யூட்லி ஃபிலிம்ஸ் சார்பா என்னையே ஒரு படம் இயக்கச் சொன்னாங்க. சந்தோஷமா களத்துல இறங்கிட்டேன். ‘அபியும் அனுவும்’ உணர்வுபூர்வமான காதல் கதை. உண்மைல நடந்த விஷயத்தை படமா பண்ணியிருக்கேன். என் எயிட்டீஸ் டைம் ஃப்ரெண்ட்ஸ் சுஹாசினி, ரோகிணி, பிரபு கூட மறுபடியும் ஒர்க் பண்ணியிருக்கேன்!
டொவினோ தாமஸ், பியானு புது காம்பினேஷனா இருக்கே?
தமிழ், மலையாளம்னு ரெண்டு மொழியிலயும் இந்தப் படம் வருது. இயல்பான ஜோடியா இருக்கணும்னு மெனக்கெட்டோம். டொவினோ தாமஸ் மலையாளத்துல ‘மாயநதி’, ‘கப்பி’னு கலக்கிட்டிருக்கார். கோவைலதான் படிச்சிருக்கார். சென்னைல ஒண்ணரை வருஷம் சாஃப்ட்வேர் துறைல வேலை பார்த்திருக்கார். தமிழ் பேசத் தெரியும். அவரோட ‘கப்பி’ பார்த்து வியந்திருக்கேன். அதேமாதிரிதான் பியா. ‘கோ’ல மிரட்டியிருப்பாங்க. ஆனா, ‘இனி தென்னிந்தியாவே வேண்டாம்’னு அவங்க நார்த்துல கவனம் செலுத்தறதா கேள்விப்பட்டு போன்ல தொடர்பு கொண்டு கதையை சொன்னேன்.
இம்ப்ரஸ் ஆகி, ‘நடிக்கறேன்’னு சொல்லிட்டாங்க. இப்படித்தான் இந்த காம்பினேஷன் அமைஞ்சது. ‘பாட்டுப்பாடவா’ல ஒளிப்பதிவும், டைரக்ஷனும் சேர்ந்து செஞ்சேன். இந்த தடவை படம் தொடங்கும்போதே, டைரக்ஷன் மட்டும் போதும்னு முடிவு பண்ணிட்டேன். அகிலன் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். நண்பர் உதயபானு மகேஸ் வரன் கதை, ஸ்கிரிப்ட் எல்லாம் சரிபண்ணிக் கொடுத்தார். இப்ப டைரக்ஷனை விட, நடிப்பில் அவர் பிசியா இருக்கார்.
மலையாளத்துலயும் படம் ரெடியாகறதால சந்தோஷ் சிவன் சார்கிட்ட சொன்னேன். ‘நானே நிர்வாகத் தயாரிப்பாளரா இருக்கேன்’னு சொல்லிட்டார். எடிட்டிங்கை என் கணவர் சுனில்நாயர் பண்ணியிருக்கார். தரண் இசையமைச்சிருக்கார். திறமையான பையன். பின்னணில பிரமாதப்படுத்தியிருக்கார். பியாவுக்கு டயலாக், நடிப்பு சொல்லிக் கொடுக்கற வேலையை சுஹாசினியும், ரோகிணியும் போட்டி போட்டு பார்த்துக்கிட்டாங்க!
இது லிவிங் டுகெதர் கதை... கேன்சர் ஜோடி கதைனு வெளியே டாக் இருக்கே..?
கேள்விப்பட்டேன். பியா மொட்டைத்தலையுடன் இருக்கிற போட்டோஸைப் பார்த்து இப்படி முடிவுக்கு வந்திருக்காங்க போல. ஆனா, இது வேற கதை. தமிழ் சினிமாவுக்கே புது ஜானர்னு சொல்லலாம்.
இசைஞானி இளையராஜா கூடதான் பெரும்பாலும் பயணப்பட்டிருக்கீங்க. இதுல மட்டும் ஏன் வேற இசையமைப்பாளர்?
‘பாட்டுப் பாடவா’வுக்குப் பிறகும் ராஜா சார் கூட பேசிட்டுதான் இருக்கேன். ‘சரிகம’ ஒர்க் விஷயமாவும் அடிக்கடி அவரை சந்திக்கறேன். ஆனா, இந்தப் படம் விஷயமா அவர்கிட்ட இன்னும் பேசலை. நிச்சயம் இசையமைக்க அவர் தயாராதான் இருப்பார். ஆனா, படத்துல மொத்தமே இரண்டு பாடல்கள்தான். இதுக்காக அவரைத் தொந்தரவு பண்ணணுமானு தயங்கினதுனாலதான் தரணை ஒப்பந்தம் செஞ்சோம்.
ஃபேமிலி...?
சின்ன குடும்பம். கணவர் சுனில்ஸ்ரீநாயர், எடிட்டிங் துறைல இருக்கார். மலையாளத்துல நிறைய படங்கள் ஒர்க் பண்ணிட்டிருக்கார். ஒரே பையன் ஹிருதை, ஸ்கூல் படிக்கறான். அவனுக்கு மியூசிக்ல ஆர்வம். ‘அபியும் அனுவும்’ல நான் இயக்குநரா திரும்பி வந்தது, எதிர்பாராம நடந்தது. இதே மாதிரி மறுபடியும் வாய்ப்பு வந்தா கண்டிப்பா அடுத்தடுத்து படங்கள் பண்ணுவேன்!
-மை.பாரதிராஜா
|