அம்சவேணியின் சாமர்த்தியம்
“உங்கொம்மாதான் எங்கிட்ட இந்த ஒருவருசமாவே கேட்டுட்டே இருக்குது மஞ்சு, இந்த மாதிரி எம்புள்ளைய நீ கட்டிக்கிறியா செல்வம்? அப்படின்னு! நானும் யோசனை பண்ணிப் பார்த்துட்டு நேரா உங்கிட்டயே ஒரு வார்த்தை கேட்டுப்போடலாம்னுதான் கேக்குறேன். என்னெக் கட்டிக்கிறியா மஞ்சு?” செல்வம் விஜயமங்கலத்தில் மேக்கூர்க்காரன். சொந்தமாக தறிக்குடோன் வைத்திருக்கிறான். குடோனில் ஒரு டஜன் தறிகள் இரவு பகலென்று ஓடிக் கொண்டிருக்கிறது. அப்பா காலமாகி எழு வருடங்களுக்கும் மேலாகி விட்டது. குடோனை ஒட்டி இருந்த வீட்டில் இவனும் இவன் அம்மாவும் மட்டும்தான்.
குடோனில் தார் போட நான்கு வருடங்களாகவே வந்து கொண்டிருக்கும் அம்சவேணியின் ஒரே மகள்தான் மஞ்சு. அம்சவேணியும் மேக்கூர்தான். இரண்டு வருடங்களுக்கும் முன்பாக செல்வத்தின் அம்மா மகனுக்கு ஒரு கல்யாணத்தை முடித்து விடவேண்டுமென்று சொந்தபந்தங்களிடம் சொல்லி வைத்திருந்தும் எதுவும் நடக்கவில்லை. போக செல்வத்திற்கு மெதுவாக முன்நெற்றியில் அவன் அப்பா முருகவேலைப் போன்றே முடிகள் காணாமல் போய்க் கொண்டிருந்தது அம்மாவிற்கு கவலையாய் இருந்தது. செல்வத்தின் அம்மாவின் கவலைகளை அவ்வப்போது காதுக்குள் போட்டுக் கொண்ட அம்சவேணிக்கு திடீரெனத்தான் அந்த யோசனை மனதில் எழுந்து விட்டிருந்தது.
ஐந்தாறு வருடங்களாகவே குடிக்கு மட்டுமே சம்பாதித்து வயிறு முட்ட குடிக்கும் கணவனால் இனி எந்த பிரயோசனமும் இல்லைதான். இத்தனைக்கும் அம்சவேணியின் அம்மாவின் சொல்படிதான் செந்திலை இருபத்தி ஐந்து வருடம் முன்பாக வலை விரித்து விழச்செய்து கட்டிக் கொண்டாள். ஊரே அவள் சாமர்த்தியத்தை அப்போது பேசிற்று. தறிக்கு அப்போது வேலைக்குச் சென்று வந்து கொண்டிருந்த செந்திலின் வாழ்வில் எந்த முன்னேற்றமுமில்லை. அவன் சொந்தமாக நான்கு தறிகளையேனும் போட்டு அதற்கு முதலாளியாகவுமில்லை. இன்னமும் வாரக் கூலிக்குத்தான் போய் வந்து கொண்டிருக்கிறான்.
அம்சவேணியின் வாழ்வில் மட்டும் என்ன அதிசயம் நடந்து விட்டது? இதுவரை மேக்கூரில் இருந்த அனைத்து தறிக்குடோனுக்கும் தார் போட போய் வந்து விட்டாள். கடைசியாக செல்வத்தின் குடோனில்தான் நான்கு வருடமாக சென்று வந்து கொண்டிருக்கிறாள். வீட்டில் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என பெற்ற மஞ்சு பத்தாவதோடு படிப்பை முடித்துக் கொண்டாள். மஞ்சுவிற்கு அப்பா செந்திலின் சிவந்த நிறம். பெண்பிள்ளைகள் எல்லாரும் அப்பா செல்லம் என்ற வழக்கம் எதுவும் மாறாமல் மஞ்சு அப்பாவின் மேல் உயிரையே வைத்திருந்தாள். அப்பா அவளுக்கு நண்பனும் கூட. அப்பாவிடம் பிடிக்காத விசயம் என்றால் அது குடி ஒன்றுதான்.
எவ்வளவோ முறை மஞ்சு அப்பாவிடம் சொல்லிப் பார்த்து விட்டாள். செந்தில் அப்போதைக்கு போதையில் மண்டையை ஆட்டுவதோடு சரி. பனியன் கம்பெனி ஒன்றிற்கு மஞ்சுவை வேலைக்கு அனுப்பி விடும் முடிவில் அம்சவேணி இருந்த போது செந்தில் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ‘‘மகளுக்கு என்ன சம்பாதிச்சு வச்சிருக்கே?” என்று அம்சவேணி செந்திலைக் கேட்டபோது, “இருக்குதுடி” என்றான். அம்சவேணிக்கு தெரியாதா... அவனிடம் ஒன்றுமில்லையென! ஆனாலும் சத்தமில்லாமல் மகள் பேரில் வங்கியில் ஏதாவது போட்டு வைத்திருக்கிறானா? என்று ஊர் முழுதும் வீடு வீடாய்ப் போய் அலசிப் பார்த்து விட்டு ஓய்ந்து விட்டாள்.
ஆனாலும் அவளுக்கு தன் கணவன் ஊரின் ஒதுக்குப் புறத்தில் நெட்டைக் கோபுரத்திற்கு அருகே குழிபறித்து பானையில் நகைகளைப் பதுக்கி வைத்திருக்கிறானோ? என்ற சந்தேகம் இருந்து கொண்டுதான் இருந்தது. நல்ல சம்பாத்தியத்தில் சொந்தத்தில் ஒரு பயலும் இல்லையென்ற கவலை அம்சவேணிக்கு இருந்து கொண்டேயிருந்தது. போக எப்படி விசாரித்தாலும் பயல்கள் குடிகாரப் பயல்களாகவே இருப்பது கவலையளித்தது. மஞ்சு பூப்போன்றவள். அவளுக்கு ஒரு குடிகார மாப்பிள்ளையையா பார்த்து கட்டி வைப்பது? இதற்கும் அம்சவேணியின் அம்மாதான் திரியைப் பற்ற வைத்தது.
அம்மாவின் சொல்லைக் கேட்டுத்தான் ஏற்கனவே தன் வாழ்க்கையை இழந்த வருத்தமும் கூடிக்கொண்டதால் முதலாக காதில் வாங்கிக் கொள்ளவில்லை அம்சவேணி. இருந்தும் யோசித்துப் பார்க்கையில் செல்வத்திற்கு குடிப்பழக்கமில்லை, கெட்ட சகவாசங்கள் இல்லையென்பது தெரியவந்தது. செவ்வாய்க்கிழமை மதியமாக சம்பளத் தொகையை இவளுக்குத் தர ஆபீஸ் அறையில் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தவனிடம் மெதுவாக ஆரம்பித்தாள் விசயத்தை. ஒரு வருட காலத்திற்குப் பிறகு அது வேலை செய்தது. அம்சவேணிக்கு அக்காள்கள் இரண்டு பேர். இருவருமே பிள்ளைகளோடும் கணவரோடும் மேக்கூரில்தான் பிழைக்கிறார்கள்.
பிறந்த ஊரிலேயே கணவனையும் கூட்டி வந்து பிழைப்பது சிலருக்கு மட்டுமே சாத்தியம். அக்காள்களின் உதவி அம்சவேணிக்கு இருந்தது. “அந்த சொட்டெ மண்டெ செல்வான் என்னம்மா என்னெ வந்து கட்டிக்கிறியான்னு கேக்கான்? மண்டையிலயே போட்டிருப்பேன் ஒரு கொட்டுக்கா!” மஞ்சு அம்மாவிடம் சொன்ன போது, திட்டம் தவிடு பொடியாகி விடுமோவென அஞ்சி அக்காள்களின் உதவி நாடினாள். அக்காள்கள் மஞ்சுவுக்கு ஒரு வாரமாக எடுத்துச் சொல்லி சம்மதிக்க வைத்தார்கள்.
“ஊருக்குள்ள எல்லாரும் குடிகாரப் பயலுங்களா இருக்காங்கடி மஞ்சு! சூதானமா பொழைக்கிற வழியப் பாரு! செல்வத்துக்கு என்ன கொறச்சல்? அவனைக் கட்டிக்கிட்டீன்னா நீயும் குடோனுக்கு ஓனரம்மா ஆயிடுவடி!” மஞ்சு தன்னை ஒரு தறிக்குடோன் எஜமானியம்மாவாக நினைத்துப் பார்த்தாள். பட்டுச்சேலையில் குடோனை வலம் வருவதாக நினைத்துப் பார்த்தாள். அது அழகாக இருந்தது. திட்டம் சரியாகக் கூடி வந்த ஓர் இரவில் சந்தைக்கடையருகே இரண்டு மாருதி வேனுடன் காத்திருந்தான் செல்வம். அம்சவேணி தன் அக்காள்களுடனும் மஞ்சுவுடனும் அவசரமாய் வந்து வேனில் ஏறிக் கொண்டாள். இரண்டு வேன்களும் சீனாபுரம் மலைக்கோயிலுக்கு விரைந்து செல்கையில் மணி இரவு மூன்று.
சொல்லி வைத்தது போன்றே காரியங்கள் துரிதமாக நடந்தேறின. அதிகாலை நான்கு மணியளவில் செல்வம் மஞ்சுவின் கழுத்தில் தாலி கட்டினான். கையோடு மஞ்சுவைக் கூட்டிக் கொண்டு ஊட்டிக்குச் செல்வதாக திட்டம். செல்வம் தன் புதிய அலைபேசி எண்ணை அத்தை அம்சவேணிக்கு கொடுத்தான். “ஊருக்குள்ள அலம்பல் ஓஞ்ச பிறகு சொல்லுங்க... அப்புறம் வர்றோம்!” மகளுக்கும் மருமகனுக்கும் கையசைத்து விடை கொடுத்தாள் அம்சவேணி. அக்காள்களுடன் வேனில் ஏறிக்கொண்ட அம்சவேணி, “சீக்கிரம் வண்டிய மேக்கூருக்கு உடுங்கொ ட்ரைவரே! எம்பட வீட்டுக்காரன் எந்திரிக்கறதுக்குள்ள நானு ஊடு போவணும்...” என்றாள்.
“எனக்கு தெரியாதா உம்பட ஊட்டுக்காரனை? நேத்து பத்து மணிக்கிதான் எங்கூட குடிச்சுட்டு இருந்தாப்ல! ஆமா அத்தன குடிக்கறாப்ல அதெப்படி டிவிஎஸ்சை ஸ்டார்ட் பண்ணி வீடு வந்துடறாப்ல?” “குடிச்சுக் குடிச்சு கொடலு வெந்து கெடக்குதுங்க ட்ரைவரே! சித்த சீக்கிரம் உடுங்க வண்டியெ!” அம்சவேணி வீடு வந்து சேலையை மாற்றிக் கொண்டாள். செந்தில் “டேய் எவண்டா? டேய்...” என்று தூக்கக் கலக்கத்தில் சத்தமிட்டபடி திரும்பிசுவர் பார்த்து படுத்தவனைத் திருப்பி எழுப்பி கூப்பாடு போட்டாள் அம்சவேணி. “யோவ்! நம்ம மஞ்சுவக் காணமய்யா! நீ என்னடான்னா தூங்கீட்டு கிடக்கே? எவன் இழுத்துட்டு ஓடுனானோ தெரியலியே... யக்கா! யம்மா! எம்பட நெஞ்சு மேல பாறாங்கல்லத் தூக்கிப் போட்டுட்டு போயிட்டாளே சண்டாளி!”
-வா.மு.கோமு
என் பெயர் இந்தியா!
கேரளாவைச் சேர்ந்த கால்பந்து வீரர் சி.கே.வினீத், அண்மையில் அழகிய குழந்தைக்கு தந்தையானார். அது மேட்டர் அல்ல; குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் மதம் என்ற இடத்தில் NIL என எழுதி பதிந்துள்ளதுதான் வைரல் விஷயம். ‘‘என் மகனுக்கு தேவையெனில் பின்னாளில் அவன் விரும்பியபடி மதத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டுமே!’’ என்று சொல்லி லைக்ஸை குவித்துள்ளார் வினீத்.
இன்ஸ்டாகிராமில் இந்தியர்கள்!
சினிமாவிலும், விளையாட்டிலும் கடந்தாண்டு அதிக ரசிகர்களைக் கவர்ந்திழுத்ததற்காக தீபிகா படுகோன் மற்றும் விராட் கோலி ஆகியோரை இன்ஸ்டாகிராம் தன் இணையதளத்தில் கவுரவித்துள்ளது. தீபிகாவிற்கு 2.2 கோடி ரசிகர்களும், விராட்டிற்கு 1.9 கோடி ரசிகர்களும் இந்த கவுரவத்தை தங்களின் தலைவன், தலைவிக்கு பெற்றுத்தந்துள்ளனர்.
டெஸ்லாவுக்கு ஹாய் சொன்ன பசு!
அமெரிக்காவின் கான்சாஸைச் சேர்ந்த டெரக் கிளைகென்பெர்க் என்ற விவசாயி, தன் பசுப் பண்ணையிலிருந்து விண்வெளியிலுள்ள மிதக்கும் டெஸ்லா காருக்கு ஹாய் சொல்லியிருக்கிறார். எப்படி? 300 பசுக்களை ஒன்றாக நிறுத்தி ஹாய் என்ற வார்த்தையை உருவாக்கித்தான். பசுக்களின் மூலம் இப்படி கலைப்படைப்புகளை உருவாக்குவது டெரக்கின் ஹாபி!
|