புதிய அவதாரம் எடுத்திருக்கும் ஹாலிவுட்! எதிரொலிக்க காத்திருக்கும் கோலிவுட்!
ஹாலிவுட்டில் அதிகார பலமும், பொருளாதார செல்வாக்கும் படைத்தவர் நடிகர் கெவின் ஸ்பேஸி. தனது அசாத்தியமான நடிப்புத் திறமைக்காக இரண்டு முறை ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்றவர். அவருக்கு வயது 58. விஷயம் இதுவல்ல. கடந்த நவம்பர் மாதம், அவர் நடித்த ‘All the Money in the World’ என்ற படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேலைகள் துரிதமாக நடந்துகொண்டிருந்தன. அப்போது அவர் மீது, ‘‘30 வருடங்களுக்கு முன் கெவின் ஸ்பேஸி என்னிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்துகொண்டார்.
அது இன்றுவரை என் மனதைப் பாதித்துள்ளது...’’ என்ற குற்றச்சாட்டை வைத்தார் நடிகர் அந்தோணி ராப். இதைத் தொடர்ந்து பல பாலியல் குற்றச்சாட்டுகள் கெவின் ஸ்பேஸியின் மீது தொடுக்கப்படுகின்றன. ‘இதெல்லாம் ஹாலிவுட்டில் சகஜமப்பா’ என்று நாம் நினைப்போம். ஆனால், நடந்தது வேறு. இப்போது ஹாலிவுட் அதிரடியாக புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதன் விஸ்வரூப நடவடிக்கைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் கண்களில் விரலைவிட்டு ஆட்டியிருக்கின்றன.
கெவின் ஸ்பேஸிக்கு வழங்கப்பட்ட தண்டனையே இதற்குச் சான்று. ‘All the Money in the World’ படத்தில் இருந்து கெவின் ஸ்பேஸி உடனடியாக நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக கிறிஸ்டோபர் ப்ளம்மர் என்ற வயதான நடிகர் ஒப்பந்தமானார். மட்டுமல்ல, ‘நெட் ஃப்லிக்ஸ்’ நிறுவனம் கெவினிடம் செய்திருந்த சீரியல் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இப்படி பலவிதங்களில் அவர் தண்டிக்கப்படுகிறார்; நிராகரிக்கப்படுகிறார். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான கெவின், ‘‘நான் ஓரினச்சேர்க்கையாளன். என் நெருங்கிய நண்பர்களுக்கு இது தெரியும். 30 வருடங்களுக்கு முன் என்னை அறியாமலே நடந்த அச்செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கிறேன்...’’ என்று டிவிட்டரில் அறிவித்தார்.
என்றாலும், கெவின் நடித்த காட்சிகளும் படத்தில் இருந்து முற்றிலுமாக நீக்கப்படுகின்றன. அவர் இடம்பெற்ற காட்சிகளில் எல்லாம் ப்ளம்மரை வைத்து ரீ ஷூட் செய்கிறார் இயக்குநர் ரிட்லி ஸ்காட். இதனால், திட்டமிட்ட பட்ஜெட்டைவிட சுமார் 64 கோடி ரூபாய் எகிறுகிறது. ரீ ஷூட்டில் நடித்த நடிகைக்கு சம்பளம் கொடுத்ததில் இன்னொரு பிரச்னை வெடித்தது. ஆம்; ரீ ஷூட்டில் நடித்த நடிகர் மார்க் வால்பெர்க்கிற்கு சம்பளம் 1.5 மில்லியன் டாலர். ஆனால், நடிகை மிச்செலி வில்லியம்ஸுக்கு ஆயிரம் டாலருக்கும் குறைவான சம்பளம். இத்தனைக்கும் மிச்செலி யின் நடிப்பு ‘கோல்டன் க்ளோப்’ விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
படம் வெளியான பிறகே இந்த விஷயம் வெளியில் கசிந்திருக்கிறது. இது ஹாலிவுட் நடிகைகளைக் கொந்தளிக்கச் செய்தது. நடாலி போர்ட்மேனிலிருந்து பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் சம்பள விஷயத்தில் பெண்களுக்கு நிகழும் அவலங்களைக் கடுமையாக பதிவு செய்தனர். வால்பெர்க்கையும் பொறிந்து தள்ளினர். அடுத்த சில நிமிடங்களில் வால்பெர்க் அந்த 1.5 மில்லியன் டாலரை ‘டைம்ஸ் அப்’ அமைப்புக்கு நன்கொடையாகத் தந்தார். வேலை செய்யும் இடங்களில் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களின் நலனுக்காக இயங்குகிறது ‘டைம்ஸ் அப்’.
கடந்த ஜனவரி மாதம் ஹாலிவுட்டைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நடிகைகள், நடிகர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இயக்குநர்கள் இணைந்து இந்த அமைப்பை ஆரம்பித்துள்ளனர். வேலையைப் பாதுகாக்கும் பொருட்டு தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை வாய் திறக்காமல் இருந்த ஹாலிவுட் நடிகைகள், இன்றைக்கு பொதுவெளியில் மனம் திறந்து பேசவும், அதற்கான எதிர்வினைகளை ஆற்றவும் துணிந்திருக்கின்றனர். இதற்குச் சான்றாக கடந்த அக்டோபர் மாதத்தில் பிரபல தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது 80க்கும் மேற்பட்ட நடிகைகள் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டைச் சொல்லலாம். இதன் விளைவாக உருவானதுதான் ‘#metoo’ என்ற ஹேஷ்டேக்.
இன்று உலகளாவிய பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமைகளைத் தைரியமாக இந்த ஹேஷ்டேக்கில் அம்பலப்படுத்தி வருகின்றனர். இப்படி பாலியல் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை, ஒரே வேலையைச் செய்யும் இருபாலருக்கும் சரிசமமான சம்பளம் என்ற ஆரோக்கியமான பல மாற்றங்களுக்கு விதை போட்டிருக்கும் ஹாலிவுட்டின் மீது ‘ஆஸ்கர் விருது கொடுப்பதில் கருப்பர் இனத்தைச் சார்ந்தவர்களும், பெண்களும், அமெரிக்கா அல்லாத மற்ற நாட்டைச் சேர்ந்தவர்களும் புறக்கணிக்கப்படுகின்றனர்’ என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாகவே இருந்துவருகிறது. இதனால் ஆஸ்கர் விருதின் மீதான எதிர்பார்ப்பு, கவர்ச்சி, மதிப்பு குறைந்துவிட்டது.
‘‘விருதைத் தேர்வு செய்யும் கமிட்டியில் உள்ள உறுப்பினர்களில் 95% பேர் வெள்ளையர்களாக இருக்கும்போது அங்கே நிறவெறி இல்லாமல் வேறு என்ன இருக்கும்..? கடந்த சில வருடங்களில் வெள்ளையர் அல்லாத எந்த நடிகர், நடிகைகளும் விருதைப் பெறவில்லை...’’ போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஸ்பைக் லீ, வில் ஸ்மித் உட்பட பல கருப்பின ஹாலிவுட் பிரபலங்கள் ஆஸ்கரைப் புறக்கணித்து வருகின்றனர். மட்டுமல்ல, 90 ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில் இதுவரைக்கும் ஐந்து பெண் இயக்குநர்கள் மட்டுமே சிறந்த இயக்குநர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றனர். அதில் கேத்தரின் பிக்லோவ் மட்டுமே ‘தி ஹர்ட் லாக்கர்’ படத்துக்காக விருதை வென்றிருக்கிறார்.
இவர் ‘அவதார்’, ‘டைட்டானிக்’ படங்களின் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூனின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. மட்டுமல்ல, இதுவரைக்கும் கருப்பினத்தைச் சேர்ந்த ஐந்து இயக்குநர்கள் மட்டுமே சிறந்த இயக்குநர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் யாருக்கும் விருது கொடுக்கப்படவில்லை. இப்படி பாலின பாகுபாடும், நிறவெறியும் தலைவிரித்தாடும் ஆஸ்கர் விருதில் இந்த ஆண்டு குறிப்பிட்ட சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அமெரிக்காவில் கருப்பர்களின் நிலையை அற்புதமாகச் சித்தரித்த ‘கெட் அவுட்’ படத்துக்காக சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்றிருக்கிறார் கருப்பினத்தைச் சேர்ந்த ஜோர்டான் பீலே.
சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதைப் பெறும் முதல் கருப்பரும் இவரே. சிறந்த இயக்குநருக்கான விருதுக்கும் பீலேவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. மட்டுமல்ல, டேனியல் கலூயா என்ற கருப்பின நடிகர் ‘கெட் அவுட்’டில் சிறப்பாக நடித்ததற்காக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. டீ ரீஸ் என்ற கருப்பின பெண் இயக்குநர் ‘மட்பவுண்ட்’ படத்துக்காக சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதுக்கும்; ரேச்சல் மோரிசன் என்ற பெண் ஒளிப்பதிவாளர் இதே படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டனர். சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் பெண்மணி ரேச்சல்தான்.
போலவே, ‘மட்பவுண்டி’ல் நடித்த மேரி ஜே பில்ஜே என்ற கருப்பின நடிகை சிறந்த துணை நடிகை, சிறந்த பாடலுக்கான விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார். ‘லேடி பேர்ட்’ படத்துக்காக சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை என்ற இரு பிரிவில் க்ரீட்டா ஜெர்விக் என்ற பெண் இயக்குநர் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார். இப்படி பெண்களும், கருப்பினத்தவர்களும் இந்த ஆண்டு ஆஸ்கர் விருதில் அதிகமாக கவுரவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் விருதைப் பெறாவிட்டாலும் வருங்காலத் தலைமுறைக்கு ஒரு நம்பிக்கையை அளித்துள்ளனர். குறிப்பாக ரேச்சல் மோரிசன் பெண்களாலும் தொழில்நுட்பத்தில் சாதிக்க முடியும் என்ற விதையைத் தூவியிருக்கிறார்.
சமீபத்தில் வெளியான ‘பிளாக் பேன்த்தர்’ என்ற ஹாலிவுட் படத்தில் ஒரேயொரு வெள்ளையரைத் தவிர்த்து முழுக்க கருப்பினத்தவர்களே நடித்திருந்தனர் என்பதை நினைவுகூர்வது நல்லது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஐந்து வருடங்களுக்கு முன் சின்னச் சின்ன ரோலில் கூட தலைகாட்ட வாய்ப்புக் கிடைக்காமல் இருந்தவர்கள்; வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளையர்களுக்கு இந்தப் படம் பிடித்ததா என்று தெரியவில்லை. ஆனால், உலகம் முழுவதும் இந்தப் படம் கொண்டாடப்பட்டிருக்கிறது என்பது அதன் வசூலில் தெரிகிறது.
கருப்பின மக்கள் தனியாகவே ஹாலிவுட் படங்களில் ஜொலிக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தந்திருக்கிறது ‘ப்ளாக் பேன்த்தர்’. ‘‘ஹாலிவுட்டில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை வெறும் கண்துடைப்பாக மட்டும் பார்க்க முடியாது. இது ஆரம்பம்தான். குறிப்பாக வெள்ளையர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாலிவுட்டில் சிறுபான்மையினரான கருப்பர்கள் மற்றும் பெண்களின் குரல்கள் வலுவடைந்துள்ளன. இதற்கு சமூக வலைத்தளங்கள் கை கொடுத்திருக்கிறது. முக்கியமாக கடந்த ஐந்து மாதங்களாக ஹாலிவுட்டில் நிகழும் மாற்றங்கள் புதிய அமெரிக்காவை வடிவமைத்து, அதன் கலாசாரத்தையும், வாழ்க்கை முறையையும் மாற்றியமைக்கப் போகிறது.
அமெரிக்காவில் நிகழும் மாற்றங்கள் உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்...’’ என்கிறார்கள் மானுடவியல் ஆய்வாளர்கள். குறிப்பாக ‘‘சினிமா போன்ற பொழுதுபோக்கு ஊடகங்களில் ஈடுபடும் பெண்களின் மீதான பார்வையையே ஹாலிவுட் மாற்றப்போகிறது...’’ என குறிப்பிடுகிறார்கள். ஹாலிவுட்டில் இருக்கும் பிரச்னைகளைவிட அதிகமாக கோலிவுட்டிலும் இருக்கிறது. இப்போது அங்கே ஏற்றப்பட்டிருக்கும் சுடர் காட்டுத்தீயைப் போல் கோடம்பாக்கத்திலும் பரவும் என உறுதியாக நம்பலாம்.
-த.சக்திவேல்
|