1987ல் நடந்த உண்மைக் கதை!



தானா சேர்ந்த கூட்டம் ஸ்பெஷல்

சூர்யாவின் ரசிகர்களுக்கு இந்தாண்டு சர்க்கரை பொங்கல். பக்காவான ஃபெஸ்டிவல் ட்ரீட்டாக ‘தானா சேர்ந்த கூட்டம்’ கூடியிருக்கிறது. டிரெயிலரிலேயே, ‘போலீஸுங்க எல்லாம் நிறைய பாத்தாச்சுங்க சார்.. நமக்கு அப்படியே வேற ட்ராக்...’ என ஃப்ரெஷ் லுக்கில் அள்ளுகிறார். ‘‘கடவுள் அருள் எனக்கு நிறைய இருக்கு. இதுக்கு முன் நான் இயக்கின ரெண்டு படமுமே பண்டிகைகள்லதான் வந்திருக்கு. முதல் படம், ‘போடா போடி’ தீபாவளி ரிலீஸ். அடுத்தது ‘நானும் ரவுடி தான்’ ஆயுத பூஜைக்கு வந்துச்சு. இப்ப சூர்யா சாரோட ‘தானா சேர்ந்த கூட்டம்’.

இதுக்கு காரணமே எங்க தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சார்தான். படம் ரெடியானதும் பார்த்துட்டு, ‘கலகலன்னு ஒரு ஃபெஸ்டிவல் மூட் கிரியேட் பண்ற படமா வந்திருக்கு. பொங்கலுக்கு வர்றது பொருத்தமா இருக்கும்’னு ஹேப்பியானார்!’’ ஹைதராபாத்தில் படத்தின் புரொமோஷன் விறுவிறு... சென்னையில் ரிலீஸ் பரபர... இடையே அமைதியும், தன்னடக்கமுமாகப் பேசுகிறார் விக்னேஷ் சிவன்.

‘நானும் ரவுடிதான்’, அடுத்து மறுபடியும் விஜய்சேதுபதிக்குதானே கதை ரெடி பண்ணியிருந்தீங்க..?
ஆமா. அவர் கூட ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ தொடங்கறதா இருந்தது. அந்தப் படம் டேக் ஆஃப் ஆகறதுக்கு முன்னாடி ஞானவேல்ராஜா சார் மூலமா சூர்யா சாரை சந்திக்கற சந்தர்ப்பம் கிடைச்சது. அப்பதான் இந்தியில் வந்த ‘ஸ்பெஷல் 26’ படத்தை பண்ணலாம்னு முடிவாச்சு. அது 1987ம் ஆண்டு உண்மையில் நடந்த ஒரு இன்ஸிடென்ட். இந்திப் படத்திலிருந்து ஒரு நாட் மட்டும் எடுத்துட்டு, நிறைய விஷயங்களை மாத்தியிருக்கேன். சூர்யா சாரும் அதுக்கான முழு சுதந்திரத்தை கொடுத்தார்.

படத்துல நிறைய நட்சத்திரங்கள் இருக்காங்க. கார்த்திக் சார், செந்தில் சார், நந்தா, பிரமானந்தம், தம்பிராமையா, ரம்யாகிருஷ்ணன்,கீர்த்திசுரேஷ், சத்யன், ஆர்.ஜே.பாலாஜினு ஒவ்வொரு ஃபிரேமிலும் கலகலனு பெரிய கூட்டம் இருக்கு. 1987ல நடக்கற கதை. ஸோ, ஒரு பீரியட் ஃபிலிமுக்கான ஒர்க் இருக்கும். அன்றைய அண்ணா சாலையை செட் போட்டு எடுத்தோம்.

என்ன சொல்றார் சூர்யா?
அவரை மாதிரி ஒரு சீனியர் ஆக்டரை இயக்கற வாய்ப்பு கிடைச்சதே பெரிய பாக்யம். ஒரு மாஸ் ஹீரோவை இயக்கும் போது பிரஷ்ஷர் நிறைய இருக்கும்னு நினைச்சேன். ஆனா, முதல் நாளே அவர் ஃப்ரெண்ட்லினு புரிஞ்சிடுச்சு. ஒவ்வொரு ஷாட்டுக்கும் கட் சொல்ற வரை பெர்ஃபெக்‌ஷனுக்கு மெனக்கெடுவேன். அதே மாதிரி அவரும் இருந்தார். நாங்க பாடல் ஷூட் போகும் போது நிறைய சிரமங்களை சந்திச்சோம்.

ஷூட் போவோம். மறுநாள் பெப்சி யூனியன் ஸ்டிரைக்னால படப்பிடிப்பு தடைபடும். சில நாள் கழித்து மறுபடியும் அதே பாடல் ஷூட் போனா, செட்டை ரீ ஒர்க் பண்ண வேண்டிய சூழல் இருக்கும். அங்க ரெண்டு நாள் ஷூட் போகும்போதே, மூணாவது நாளும் இண்டஸ்ட்ரி ஸ்டிரைக் வந்திடுச்சு. இப்படி பிராக்டிகல் சிரமங்கள் எல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள்.

படத்துல பெரிய கூட்டமே இருக்கே..?
கதைக்குத் தேவையா இருந்தது. ‘நவரச நாயகன்’ கார்த்திக் சாரோட ஒர்க் பண்ணினது கோல்டன் மொமன்ட். ஸ்பாட்டுல நம்மளையும் பாசிட்டிவ் எனர்ஜியா ஃபீல் பண்ண வச்சிடுவார். அதே மாதிரி படத்துல வரும் வயதான ஒரு கேரக்டருக்கு செந்தில் சார்கிட்ட பேசினோம். பொதுவா பழைய ஆட்கள்னா, ‘அந்தக் காலத்துல நாங்க அப்படி.. .இப்படி..’னு எதாவது சொல்லிட்டே இருப்பாங்க. செந்தில் சார் ஜெம். தான் உண்டு, தன் வேலை உண்டுனு இருந்தார்.

சூர்யா சாருக்கு ஜோடியா கீர்த்தி சுரேஷ் நடிச்சிருக்காங்க. படத்துல அவங்க கேரக்டருக்கு பெயரே கிடையாது. அப்படி ஓர் அழகான கேரக்டர். டெக்னிக்கலாவும் நல்ல டீம் அமைஞ்சிருக்கு. என் நண்பர் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். எப்பவும் எனக்கு சப்போர்ட்டா இருக்கற அனிருத் இசையமைச்சிருக்கார். நான் கஷ்டப்பட்டப்ப எனக்கு உதவினவர் அவர். அனிருத் இசை, இதிலும் பிரமாதமா வந்திருக்கு.

நீங்க எழுதின பாடல்கள் எல்லாமே ஹிட் ஆகிடுது. இயக்குநர் விக்னேஷ் சிவன் - பாடலாசிரியர் விக்னேஷ்சிவன்... யாரை உங்களுக்கு பிடிக்கும்?
ரெண்டு பேரையுமே. நான் இயக்காத படங்களையும் கூட என் படமா நினைச்சுதான் எழுதுவேன். போன வருஷம் ‘விக்ரம் வேதா’வுல நான் எழுதின ‘கருப்பு வெள்ளை...’ செம ஹிட் ஆகியிருந்தது. பொதுவா பேனாவால எழுதுற எந்த வேலையா இருந்தாலும் எனக்கு பிடிக்கும். ரொம்ப பிடிச்ச வேலையும் சினிமாதான். கரும்பு தின்ன கூலியும் இங்கதான் கொடுக்கறாங்க. சினிமா தவிர கொஞ்சம் நேரம் கிடைச்சா, முன்னாடியெல்லாம் கிரிக்கெட் விளையாடுவேன். இப்ப வீட்ல அம்மா, தங்கை குழந்தைகளோடு பொழுது போக்கறேன்.

நயன்தாரா கேள்வி இல்லாமல் பேட்டி நிறைவடையாது..!
ஓ..! ‘அறம்’ பார்த்தேன். தரமான, அருமையான படம். பெண்களுக்கு முக்கியத்துவமான கதைகளை தொடர்ந்து தைரியமா தேர்ந்தெடுத்து பண்றாங்க. மக்களும் அவங்களை சினிமாவில் நல்லதொரு உயரத்தில் வச்சு அழகு பார்க்கறது சந்தோஷமா இருக்கு. ‘அறம்’ மாதிரி தொடர்ந்து நல்ல படங்கள் நிறைய அவங்களுக்கு அமையணும்! 

- மை.பாரதிராஜா