சேவக்கட்டு!தமிழரின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டுகளுக்குப் புகழ் பெற்ற மண், மதுரை. ஜல்லிக்கட்டு முதல் சேவக்கட்டு வரை எல்லாவகை விளையாட்டுகளும் இப்போதும் உயிர்ப்போடு விளையாடப்படுகின்றன. ஜல்லிக்கட்டு தெரியும். அது என்ன சேவக்கட்டு? சேவல் சண்டைதான் சேவக்கட்டு. மாட்டுக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் போட்டி ஜல்லிக்கட்டு என்றால் சேவலுக்கும் சேவலுக்கும் இடையே நடக்கும் மோதல் சேவல் சண்டை.

இந்த சேவல் சண்டையில் கத்திப்போர், வெப்போர் என இரண்டுவகைகள் உள்ளன. சண்டையில் சேவல்களின் கால்களில் கூர்மையான கத்திகள் கட்டப்பட்டு மோதவிடப்படுவது கத்திப் போர். அந்த கத்தியுடன் சண்டையிடும் சேவல்கள் ஒன்றுக்கொன்று ஆக்ரோஷமாக மோதுகின்றன. ஏதோ ஒரு சேவல் மீது கத்தி பட்டு அது மரணிக்கின்றது.

அவ்வாறு போட்டியில் பங்குபெற்ற எதிர் சேவலை சண்டையிட்டு கொலை செய்த சேவலின் உரிமையாளருக்கு தோல்வியுற்று இறந்து போன சேவலும் அதனுடன் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், இம்மாதிரியான போட்டிகளில் ஆபத்தான ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதால் ‘கத்திப்போர்’ சேவல் சண்டைகளுக்கு நாளடைவில் தடை விதிக்கப்பட்டு இப்போது ஒரு சில இடங்களில் மறைமுகமாக அச்சண்டை நடைபெற்று வருகிறது.

சேவல் சண்டையில் மற்றொரு போட்டி ‘வெற்றுப் போர்’ சேவல் சண்டை. உயரத்திற்கேற்ப ஜோடி போட்டு சேவல்கள் களத்தில் அனுமதிக்கப்படுகின்றன. ஒரு மணி நேரம் வரை அவை கடுமையாகச் சண்டையிடுகின்றன. அதில் கால் மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் குடிக்க இடைவேளை கொடுக்கப்படுகிறது. ஒரு மணிநேரம் சேவல்கள் சண்டையிட்டு அதில் ஏதாவது ஒன்று போட்டிக்களத்தை விட்டு வெளியே சென்றுவிட்டால் அது தோல்வியடைந்ததாக அறிவிக்கப்படுகிறது.

இரு சேவல்களும் சரிக்குச் சரியாக நின்று இறுதி வரை களத்தினை விட்டு வெளியே ஓடாமலோ அல்லது மயங்காமலோ சண்டையிட்டால் அப்போட்டி ‘டிரா’ என நடுவரால் அறிவிக்கப்படுகிறது. வெப்போர் சேவல் சண்டையில் இன்னொரு வகையும் உள்ளது. அது ‘நாக்அவுட்’. அச்சண்டையில் 10க்கு 10 அளவில் ஒரு வட்டம் வரைந்து சரிக்கு சரியாக உயரம்கொண்ட இரு சேவல்கள் களமிறக்கப்படும். இதற்கு இடைவேளை இல்லை.

இறுதிவரை எந்த சேவல் தொடர்ந்து சண்டையிட்டு போராடுகிறதோ அது வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.  மயக்கமடைந்தாலோ பந்தயக்களத்தை விட்டு வெளியே சென்றாலோ அச்சேவல் தோற்றதாக அர்த்தம். இப்படி நடைபெறும் சேவல் சண்டைகளுக்கு விழா ஏற்பாட்டாளர்களால் ரூ.500 முதல் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு அதற்கு ஈடாக வெற்றி பெற்ற சேவல்களுக்கு அண்டா, பானை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன.

அதே நேரத்தில் இச்சேவல் சண்டையின்போது களத்தில் 1,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பந்தயம் கட்டப்படுகிறது. சமயங்களில் கவுரவத்துக்காக சொத்துக்களையே பந்தயம் கட்டியவர்கள்கூட உண்டு. ‘‘எங்கள் பகுதியில் பெரும்பாலான வீடுகளில் சண்டைச் சேவல்கள் வளர்க்கப்படுகின்றன. சாதரணமாக நவதானியங்கள் கொடுத்து சேவல்களை வளர்க்கிறோம்.

போட்டி நடைபெறுவதற்கு 20 நாட்களுக்கு முன் சேவல்களை முழுமையாக ஒரு ராணுவ வீரர் போருக்குத் தயாராவது போல் தயார்படுத்துவோம். அதற்காக சண்டையின்போது சேவல்களுக்கு மூச்சு வாங்காமல் இருக்க நாள்தோறும் அதிகாலை சேவல்களை நீர்நிலைகளில் நீந்தவிட்டு நீச்சல் பயிற்சி வழங்குவோம். காலை உணவாக பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு, அத்திப்பழம், செர்ரிப்பழம், தக்காளி, பேரீச்சம்பழம் மற்றும் பச்சை முட்டையின் வெள்ளைக்கரு கலந்து கொடுப்போம். மதியம் அவித்த முட்டையில் வெள்ளைக் கருவும், ரொட்டியும் கொடுப்பதுண்டு.

இரவில் 21 வகை நவதானியங்களைப் பொடியாக அரைத்து அதனை முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து பதமாக ரொட்டியாக சுட்டுக் கொடுப்போம். இப்படி முழுமையாக 20 நாட்கள் சேவலுக்குத் திடாகத்திரமான உணவுகளை வழங்கி போட்டிக்காகத் தயார் செய்வோம். அப்படி தயார் செய்யப்பட்ட சேவல்களை அதன் உயரத்துக்கு நிகரான சேவலுடன் களம் காண விடுவோம். சண்டையில் போட்டியிட்டு எங்கள் சேவல் வென்றால் அதுதான் எங்களுக்கு கவுரவம்...’’ என்கிறார் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த நவீன்.

- ம.சண்முகராஜா

வேடசந்தூர் சண்டைச் சேவல்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதிகளில் சண்டை சேவலை அதிக அளவில் வளர்த்து வருகின்றனர். ‘‘சண்டைக்கு வளர்க்கும் சேவல்களை 1000 ரூபாயில் தொடங்கி ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனர். இதில் தை மாதம் வருகிறபோது சண்டைக்கு எனப் பயன்படுத்தும் வகையில் உள்ள சேவல்களை ரூ. 50,000க்கும் மேல் விலை கொடுத்து வாங்கிச் செல்வார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர், எரியோடு, கூம்பூர், அரவக்குறிச்சி அருகில் உள்ள பூலாவலசு உள்ளிட்ட இடங்களில் மிகப்பெரிய அளவில் சேவல் சண்டைகள் நடப்பது வழக்கம்.

கோழிகள் குஞ்சு பொறித்த இரு மாதங்களில் கோழியிடம் இருந்து தனியாகப் பிரித்து வளர்க்கத் தொடங்க வேண்டும். நோய் தாக்குதலைத் தவிர்க்க மாதம் ஒருமுறை ஊசி போட வேண்டும். ஓராண்டு முடியும் நிலையில் சண்டைக்குப் பயன்படுத்த வேண்டும் என்றால் சேவலுக்குத் தொடர்ந்து நீச்சல் பயிற்சி கொடுக்க வேண்டும். அதே போன்று வாரம் ஒரு முறை மற்ற சேவல்களுடன் சண்டைப் பயிற்சியும் கொடுக்கப்படுகிறது.

கம்பு, மக்காச்சோளம், கேப்பை, நிலக்கடலை, வறுகடலையை உண்ண  கொடுக்கின்றனர். சண்டைக்குக் கொண்டு செல்வதற்கு ஒரு மாதம் முன்பி லிருந்து  பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்துக் கொடுக்க வேண்டும். நாட்டுச்சேவல், சங்ககிரிச் சேவல், பேடு சேவல், மயில்  சேவல், வள்ளுவன் சேவல், கரு சேவல், வெள்ளைச் சேவல், காக சேவல், பச்சைச்  சேவல்.. என சண்டைச்சேவலில்  பலவகைகள் உள்ளன.

இதில் நாட்டுக்கோழியில் மற்றொரு வகையான  பெருவடை கோழியில் இருந்து வரும் சேவல்களை நல்ல வளர்ப்புமுறை இருந்தால்  சண்டைக்கு அதிக அளவில் பயன்படுத்துவார்கள். வீடுகள், தோட்டங்களில் சண்டைச் சேவல்களை வளர்க்கும்போது ஓர்  ஆள் கூடவே இருப்பது போல் இருக்கும். புதிய ஆட்கள் வந்தால்  விநோதமாக சத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கும். அவ்வளவு உஷாரானவை...’’ என்கிறார்கள் கிராம மக்கள்.

- வேடசந்தூர் மணிமாறன்