முதல் காதல்..! ரஜினியை மிரளவைத்த நடிகை லதா!



‘விர்ர்ர்ம்ம்ம்ம்ம்...’ என திசை கிழித்து பறந்த நீண்ட அலுமினிய பறவை அனைத்து நட்சத்திரங்களையும் வாரி அணைத்து மலேசியாவின் கோலாலம்பூருக்குப் பறந்தது நடிகர் சங்கத்தின் நட்சத்திர விழாவிற்காக! நடிகர் சங்கம், சன் டிவி, தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸுடன் இணைந்து வழங்கினார்கள். நடிகர்கள், நடிகைகள் அத்தனை பேரும் இயல்பான நட்பில் மிளிர்ந்தது காணக்கிடைக்காத காட்சி.

கடவுள் ஓவர்டைம் செய்து படைத்ததுபோல இருந்த காஜல், நிக்கி, அஞ்சலி, வரூ, கேத்ரீன், ரம்யா நம்பீசன் என இருந்த நடிகைகளின் அணிவகுப்பு... இந்தப் பெண்களுக்கு எல்லாம் ஒரு மாயம் உண்டே! அது தெரிந்தது. பார்க்க வந்த ரசிகர்களுக்கு முதல் ட்ரீட்டும் அதுதான்.

* நிஜமாகவே பேசப்பட வேண்டியது விஷால் - கார்த்தியின் கடும் உழைப்பு. சாப்பிடக் கூட நேரமில்லாமல் ஜூஸ் மட்டும் அருந்திக்கொண்டு ஆர்டர் பிறப்பித்து, வணக்கம் சொல்லி, கொஞ்சமாய் கடுமை காட்டி, ரசிகர்களுக்கு கை காட்டி நடந்துகொண்டே இருந்தார்கள். மலேசியாவின் வெயிலெல்லாம் அவர்கள் மேல்தான்.

* காற்றில் அலைபாய்ந்த கூந்தலை செல்லமாக அடக்கியபடி இருந்த காஜல் அகர்வாலைப் பார்த்ததும் கேலரி பக்கமிருந்து பறந்த விசில் காதை அடைத்தது. இத்தனைக்கும் அவர் உடுத்தியிருந்தது ஹோம்லி சேலை.

* சிவகார்த்திகேயன், சூரி, சதீஷ் கூட்டணியை பிரிக்க முடியாமல் ஒட்டிப்பிறந்த குழந்தைகள் மாதிரிதான் பார்க்க முடிந்தது. சூரி ஆங்கிலம் பேசியதில் மலேசிய மக்கள் ஆங்கிலம் மறந்தார்கள்.

* நட்சத்திர கிரிக்கெட்டும் நடந்தது. கார்த்தி, ஜீவா, விஜய் சேதுபதி, விஷால், சிவகார்த்திகேயன், அருண் விஜய் தலைமையில் ஆறு அணிகள் மோதின. அருண்விஜய், சிவகார்த்தி அணிகள் இறுதிப் போட்டிக்கு வர, பரபரப்பான கணங்களுக்குப் பிறகு அருண் விஜய்யின் ‘சென்னை சிங்கம்’ வென்றது.

* கிரிக்கெட் வீரர்களின் அறிமுக விழாவில் சரோஜாதேவி, விஜயகுமாரி, ஜெயசித்ரா, பாரதி, ஷீலா என ஆரம்பித்து பழைய கனவுக் கன்னிகள் அணிவகுக்க, நடிகர் சங்கம் அவர்களுக்கு முதல் மரியாதை செய்தது. இவர்கள் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை மறக்காமல் எனக்கு கொடுங்கள் என்று விஷாலிடம் பிரத்யேகமாகக் கேட்டுக்கொண்டார் ரஜினி.

* சாத்வீகமும், பரதமும் சரி விகிதத்தில் இணைந்து நடந்தது ஷோபனாவின் பரத நாட்டியம்.

* விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மேடையேறும் போதெல்லாம் எழுந்த கரவொலி அடுத்து வந்துவிட்ட வரிசையைச் சொன்னது.

* ஆண்ட்ரியாவின் பாட்டும், நடனமும் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். வரலட்சுமி மேடையில் போட்ட ஆட்டமும் நெடுநாளைக்கு மலேசிய மக்களின் மத்தியில் பேசப்படும்.

* விவேக், இமான் அண்ணாச்சி, சூரி, பிரேம்ஜி என களைகட்டியது ரகளை திருவிழா. மொட்டை ராஜேந்திரனைக் கலாய்த்த மிர்ச்சி சிவாவும் தன் பங்கில் நிறைவாக இருந்தார். தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் சினிமாவில் நடிப்பேன் என அறிவித்தது ஹைலைட்!

* ரஜினி, கமல் எங்கே எங்கே என ரசிகர்கள் தேடிக்கொண்டிருக்க, மைதானத்தின் நடுவே ஹெலிகாப்டரில் இறங்கி அசத்தல் என்ட்ரி கொடுத்தார்கள்.

* கமலின் டுவிட்டர் தமிழ், பிடித்த வசனம், ஆன்மிகம் இனி வருமா, அரசியல் எண்ணங்கள் என கேள்விகள் முன்வைக்கப்பட, அழுத்தமும் திருத்தமுமாக பதில் அளித்தார் கமல். ‘‘நான் யானையாக இருந்தாலும் மதம் பிடிக்காத யானையாக இருப்பேன்...’’ என்றது ஒரு சோற்றுப் பதம்.

* அடுத்து மேடை ஏறிய ரஜினியின் வார்த்தைகளில் ஆயிரம் அர்த்தங்கள். அதற்கு முன்னால் ரஜினியிடம் நடிகை லதா  அவரின் முதல் காதல் பற்றி கேட்ட கேள்வி ஸ்வீட் சர்ப்ரைஸ். கடந்து போன மிடில் கிளாஸ் வாழ்க்கை, கண்டக்டர் தினங்கள், நம்பிக்கைகள், வாழ்வை எதிர்கொள்ளும் விதமென பல கேள்விகளுக்குத் தாடையைத் தடவியபடி கவனமாக ரசித்து விடையளித்தார் ரஜினி.

* நட்சத்திரங்களின் களேபரங்கள், களைகட்டும் நடனங்கள், மனம் மயக்கும் பாடல்கள், மலேசியா கலைஞர்களின் கலைப் பதிவு, ரஜினி கமலின் நறுக் சுருக் கேள்வி - பதில்கள் பார்க்க, ரசிக்க காத்திருங்கள். இந்த ஜாலி கொண்டாட்டம் விரைவில் உங்கள் சன் டி.வியில். ப்ளீஸ் வெயிட்!

* சன் டிவி தன் பங்கிற்கு நடிகர் சங்கத்தின் அறக்கட்டளைக்கு ரூ.7.25 கோடிக்கான காசோலையை அளிக்க, மேலும் சன் நெட்வொர்க் சார்பில் ரூ.1.75 கோடி அளிக்கப்பட சங்க நிர்வாகிகளுக்கு பெரும் மகிழ்ச்சி.

- மலேசியாவிலிருந்து நா.கதிர்வேலன்
படங்கள்: மா.சதீஷ்குமார்