காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா - 40

பனாமாவில் தங்களுக்கு கிடைத்த உல்லாச வாழ்க்கையில் மெய்மறந்து போயிருந்த பாப்லோ எஸ்கோபாரின் சகாக்கள், ‘நாம் ஏன் இங்கேயே தங்கி, தொழிலை நடத்தக்கூடாது? இனியும் கொலம்பியாவுக்குப் போய் உழைத்து கஷ்டப்பட வேண்டுமா?’ என்று நச்சரிக்கத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் இதற்கு மென்புன்னகை ஒன்றையே பதிலாகக் கொடுத்துக் கொண்டிருந்த பாப்லோ, ஒரு கட்டத்தில் கோபமாக பதில் சொல்லத் தொடங்கினார்.

“அட மூடர்களே. ஆயிரம் இருந்தாலும் நாம் இங்கே அகதிகள். நம்மிடம் பணம் கோடி கோடியாகக் கொட்டிக் கிடக்கிறது என்றுதான் இந்நாட்டின் சர்வாதிகாரி நம்மை இங்கே தங்க வைத்துக் கொண்டிருக்கிறான். நாம் தங்கும் ஒவ்வொரு நாளும் அவனுக்கு வாடகையாக எத்தனை கோடிகளைத் தருகிறேன் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா? நம் தாய்நாடு கொலம்பியா. செத்தாலும் அங்குதான் சாகவேண்டும். அதுதான் மரியாதை.

இங்கே நாம் வாழ்ந்து கொண்டிருப்பது தற்காலிக இளைப்பாறுதல். ஒரு டூருக்கு வந்தது போல நினைத்துக் கொள்ளுங்கள்...” வில்லனாக இருந்தாலும் பாப்லோவுக்கு தாய்நாட்டுப் பற்று அதிகம். அவர் விரும்பியபடியே கொலம்பியாவின் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தால், ஒருவேளை அந்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டிருக்கக்கூடும். மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை வழங்கியிருக்கவும் கூடும். துரதிருஷ்டவசமாக அது நடக்காமலேயே போய்விட்டது.

தேவையே இல்லாமல் வேறு நாடுகளில் சொத்து வாங்கிப் போடுவதை ஆரம்பத்திலிருந்தே பாப்லோ தவிர்த்து வந்தார். முதலீடு என்றால் அது கொலம்பியாவில்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் கொலம்பிய மக்களுக்கு பயன்படும் என்று கருதினார். ஒருவேளை தன்னுடைய சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டாலும் அது தன் தாய்நாட்டுக்குத்தான் போய்ச் சேரவேண்டுமே தவிர, வேறு நாடுகளுக்கு போய்விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

பனாமாவில் தங்கியபடியே தன்னுடைய ஸ்லீப்பர்செல்கள் மூலமாக கொலம்பிய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார் பாப்லோ. தங்கள் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளையும் விலக்கிக் கொள்வதாக இருந்தால் கொலம்பியாவுக்குத் திரும்பி கவுரவமான வாழ்க்கையை வாழத் தயாராக இருப்பதாக உறுதிமொழி கொடுத்தார். மேலும், கொலம்பிய அரசுக்கு அவர் முன்வைத்த ஆஃபர் ஒன்று அதிசயிக்கத்தக்கது.

அதாவது, அதுவரை கொலம்பியா, அமெரிக்கா மற்றும் உலகநாடுகளிடம் பட்டிருந்த அத்தனை கடன்களையும் தானே அடைத்துவிடுவதாகவும், கொலம்பிய மண்ணில் இனிமேல் போதைத்தொழில் நடக்காமல், கார்டெல்கள் அத்தனை பேரையும் விவசாயப் பண்ணை அமைக்கவும் செய்வேன் என்றார். அந்த வாக்குறுதியை நம்புவதே சிரமம். பாப்லோ மற்றும் மற்ற போதை கார்டெல்கள் திருந்தி வாழ்கிறோம் என்று சொல்லுவதைக்கூட ஒருவகையில் நம்பலாம். ஆனால், கொலம்பியாவின் ஒட்டுமொத்த கடன் சுமையைத் தீர்த்து வைக்கிறோம் என்று சொன்னது சாத்தியமற்றது என்று அரசுத் தரப்பில் கருதினார்கள்.

ஏனெனில் கொலம்பியாவுக்கு அப்போதிருந்த கடன் தொகை சுமார் பத்து பில்லியன் டாலராக இருந்தது. அதாவது இன்றைய இந்திய மதிப்பில் சுமார் அறுபத்தைந்தாயிரம் கோடி ரூபாய். ஒருவேளை பாப்லோ முயற்சியெடுத்து அவ்வளவு பணத்தைத் திரட்டி கடனை அடைத்தாலும் அது தேவையில்லை என்று நிராகரிக்குமாறு அமெரிக்கா அவசரம் காட்டியது. போதை கார்டெல்களுக்கும், கொலம்பிய அரசுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டு விடுமோ என்று அமெரிக்க அரசுக்கு அச்சம் அதிகரித்தது.

“அவர்கள் உங்கள் சட்ட அமைச்சரைக் கொன்றவர்கள். உலக அரங்கில் உங்கள் மானத்தை வாங்கியவர்கள். நினைவிருக்கட்டும்...” என்று அமெரிக்கா பகிரங்கமாகவே கொலம்பிய அரசை மிரட்டத் தொடங்கியது. ஆரம்பத்தில் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த கொலம்பிய அரசின் முக்கியப் புள்ளிகள் ஒவ்வொருவரும் அமெரிக்காவின் சிஐஏ அதிகாரிகளால் அன்பாக விசாரிக்கப்பட்டனர். எனவே, சமரசத்துக்கே இடமில்லை என்று கொலம்பிய அரசு அறிவித்து விட்டது.

இதையடுத்து அமெரிக்கா, பாப்லோ மற்றும் இதர கார்டெல் குழுவினருக்கு அடைக்கலம் கொடுத்து வந்த பனாமா சர்வாதிகாரி மேனுவல் நோரிகா மீது பார்வையை பதித்தது. அமெரிக்காவின் போதைத்தடுப்பு பிரிவு அதிகாரிகள், நோரிகாவை நேரில் சந்தித்துப் பேசினார்கள். நோரிகா அலுவலகத்திலேயே இருந்த தன்னுடைய உளவாளிகள் மூலம் இந்த நடப்புகளை லைவ்வாகவே தெரிந்துகொண்டார் பாப்லோ. இதற்கிடையே தொழிலுக்காக பாப்லோவின் சகாக்கள் பனாமாவில் இறக்கியிருந்த ஈத்தர் மற்றும் கோகெயின் ஆங்காங்கே பறிமுதல் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன.

‘ஸ்கெட்ச்’ போட்டுவிட்டார்கள் என்பதை உணர்ந்தவுடனேயே ரகசியமாக தன்னுடைய சகாக்களை வேறு வேறு நாடுகளுக்கு பார்சல் செய்யத் தொடங்கினார் பாப்லோ. ஸ்பெயினுக்கு சிலரும், பிரேசிலுக்கு சிலரும் அனுப்பப்பட்டார்கள். பாப்லோவும் அவரது குடும்பத்தினரும் எப்போதும் தப்பிச் செல்வதற்கு இரண்டு விமானங்களும், ஒரு ஹெலிகாப்டரும் தயாராக இருந்தன. பனாமா அதிபரோடு அத்தனை டீலிங்குகளையும் முடித்துவிட்டு, பாப்லோவைப் பிடிக்க வந்த அமெரிக்க அதிகாரிகளுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.

சத்தமே இல்லாமல் நிகரகுவா என்கிற சிறிய நாட்டுக்கு பறந்துவிட்டிருந்தார் பாப்லோ. கிளம்புகிற அவசரத்தில்கூட ஆயிரம் கிலோவுக்கு மேல் கோகெயினை அமெரிக்காவுக்கு வெற்றிகரமாகக் கடத்தி, அந்தப் பணத்தோடு தப்பிய அவரது சாமர்த்தியத்தை அமெரிக்க அதிகாரிகளே மெச்சிக் கொண்டனர். பாப்லோ தப்பிவிட்ட காண்டு, அமெரிக்காவை வெறிகொள்ளச் செய்தது. பாப்லோவின் ஸ்லீப்பர் செல்களாக கொலம்பியாவில் கவுரவமான தொழிலதிபர்களாக வலம் வந்து கொண்டிருந்தவர்களை வேட்டையாடத் தொடங்கினர். கொலம்பிய அரசாங்கமோ, இந்தப் பிரச்னைக்கும் தனக்கும் சம்பந்தமேயில்லை என்பதைப்போல தேமேவென்று வேடிக்கை பார்த்தது.

இந்த நடவடிக்கையில் முதல் பலி, பாப்லோ குடும்பத்தினருக்கு நெருக்கமான தொழிலதிபரான ஹெர்னான் பொதெரோ மொரினோ. மெதிலின் நகரின் பாரம்பரியமான செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர். அங்கே நட்சத்திர ஹோட்டல்களை நடத்திக் கொண்டிருந்தவர். தேசிய கால்பந்து அணியின் உரிமையாளர். போதை கடத்தல்காரர்களோடு முறைகேடான பண வர்த்தகம் வைத்திருந்ததாகக் கூறி, அமெரிக்கா இவரைக் கைது செய்தது. இத்தனைக்கும் இவர் கைது செய்யப்பட்டபோது போதை கடத்தல்காரர்கள் மீது அமெரிக்கா நேரடி நடவடிக்கை எடுப்பதற்கான ஒப்பந்தம்கூட கையெழுத்தாகியிருக்கவில்லை. கொலம்பிய சட்ட திட்டங்களுக்கு எதிராகவே மொரினோ மீதான நடவடிக்கை அமைந்தது.

பாப்லோ உள்ளிட்ட கார்டெல் முக்கியஸ்தர்களுக்கு எதிராக அப்ரூவர் ஆகிவிட்டால் விட்டுவிடுகிறோம் என்று மொரினோவுக்கு அமெரிக்க அதிகாரிகள் ஆசை காட்டினார்கள். “நீங்கள் என்னை சுதந்திரமாக விட்டுவிடுவீர்கள் என்பதை நம்புகிறேன். ஆனால், அப்ரூவர் ஆகிவிட்டால் பாப்லோ, உலகிலிருந்தே எனக்கு சுதந்திரத்தை பரிசளிப்பார்...” என்று கூறி மறுத்தார் மொரினோ. இதற்காக அவர் பிற்பாடு அமெரிக்காவில் இருபதாண்டு சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டியதாயிற்று.

நிகரகுவாவில் இருந்துகொண்டே பிசினஸ் செய்யும் முடிவுக்கு வந்திருந்தார் பாப்லோ. பேரி சீல் என்கிற பைலட் ஒருவர் மூலமாக சுமார் அறுநூறு கிலோ போதை மருந்தை அமெரிக்காவின் மியாமி நகருக்கு கடத்தினார். ஆனால் - சொல்லி வைத்தாற்போல சரக்கு அங்கே, போதைத் தடுப்பு அதிகாரிகள் மூலமாக சீல் செய்யப்பட்டது. எல்லா அரசாங்கங்களின் மேல்மட்டத்திலும் ஸ்லீப்பர் செல்களை வைத்திருந்த தன்னுடைய கார்டெல்லிலேயே அமெரிக்கா ஸ்லீப்பர் செல்களை வைத்திருக்கிறது என்பதை சற்று தாமதமாகதான் உணர்ந்தார் பாப்லோ.

அவருடைய நம்பிக்கைக்குரிய சகாவாக இருந்த பைலட் பேரிசீல், அமெரிக்காவின் கையாள் என்பது தெரிந்ததும் இடிந்து போனார். இந்த பேரிசீலின் கதைதான் சமீபத்தில் ‘American made’ என்கிற ஹாலிவுட் திரைப்படமாக வந்திருந்தது. பேரிசீல்  பாத்திரத்தில் டாம்க்ரூஸ் நடித்திருந்தார். தங்களுடைய அமெரிக்க போதை டீலரான முஸெல்லாவும் சிஐஏ அமைப்பு போலியாக உருவாக்கிய டான் என்பதையெல்லாம் பாப்லோ உணருவதற்கு முன்பாக வெள்ளம் தலைக்கு மேலே போய்விட்டது.

(மிரட்டுவோம்)

ஓவியம்: அரஸ்