வாடி வாசல்!செய்தி
பொங்கல் பண்டிகை நெருங்குவதால், ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்பதற்காக வாடிப்பட்டி காளைகள் தயார் படுத்தப்படுகின்றன. இந்த வீர விளையாட்டை வேறு எந்தெந்த வகையில் பயன்படுத்தலாம்?

(பஸ்) படி வாசல்
பஸ் படிக்கட்டில் தொங்கி வீர(!)ப் பயணம் மேற்கொள்ளும் இளம் காளையர்களுக்கு ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவது ஜுஜுபி. எனவே இவ்விரு காளைகளையும் மோத விட்டு தினசரி விழா எடுக்கலாம். ஆனால், ஒரு கண்டிஷன். காளையை அடக்கும் காளையருக்கு மட்டும்தான் படிக்கட்டு பயண அனுமதி என்ற ரூல் வரவேண்டும்! இதற்காக, ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பிலும் வாடி வாசலுடன் கூடிய காளைகள் காத்திருக்கும். காளையை அடக்கியவர்களுக்கு மட்டும்தான் படிக்கட்டு பயணத்துக்கு டோக்கன் வழங்கப்படும். காளைகளால் தூக்கி எறியப்படுவர்கள் மட்டும்தான் மேற்கூரை பயணம் மேற்கொள்ள முடியும் என்ற கூடுதல் ரூலும் போடலாம். பஸ்ஸின் மேற்கூரையை நோக்கித்தான் காளைகள் எதிராளியைத் தூக்கி எறியும் என்பதால் மேற்கூரை ஹௌஸ் ஃபுல் ஆகிவிடும் வாய்ப்புகள் அதிகம்! 

செல்ஃபி வாசல்
‘ஒரு நாளைக்கு பத்து செஃல்பியாவது எடுக்காதவன் பைத்தியக்காரன்...’ என்ற புதுமொழியை உண்மையாக்கும் வெறியில் உயிரை பணயம் வைத்து குட்டிச் சுவர் முதல் செல்போன் டவர் வரை ஏறி நின்று செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் போடவில்லையென்றால் பலருக்கு தூக்கமே வருவதில்லை. இந்த மாதிரி விளையாடுபவர்களுக்கு ஜல்லிக்கட்டு விளையாட்டு ஒரு பொருட்டே இல்லை. ஆகவே, செல்ஃபி பிரியர்களால் தினமும் ஷூட் செய்யப்படும் செஃல்பிக்களில் குறைந்தது 33.3 சதவீதமாவது ஜல்லிக்கட்டு காளையுடன் மோதும் சீன்கள் இடம் பெற்றாகவேண்டும் என்று கலாசார ஒதுக்கீடு ரூல் போட வேண்டும்!

கொல்லை வாசல்
பெண் பார்க்கும் படலம் முடிந்ததும் ‘பொண்ணு பிடிச்சிருக்கு. அப்புறம் நீங்கதான் சொல்லணும்’ என பிள்ளை வீட்டு நாட்டாமை வாயைத் திறந்தாலே வரதட்சிணை, சீர்வரிசையைப் பற்றி நீட்டி முழக்கப் போகிறார் என பொருள் கொள்ளலாம். ‘பையன் மாசம் இருபதாயிரம் சுளையா சம்பாதிக்கறான். அதனால பொண்ணுக்கு 100 பவுன் (சேதாரம், செய்கூலி எக்ஸ்ட்ரா?), பையன் டிரெஸ்ஸுக்கு ரெண்டு லட்சம் (பையன் என்ன மோடி கோட்டா போடப்போறான்னு கேட்கணும்னு உதடுகள் படபடக்கிற மூவ்மென்ட் அது!), ஒரு டூ வீலர், பத்து பவுனில் கழுத்துக்கு செயின், கைக்கு பிரேஸ்லெட், மோதிரம்னு சிம்பிளா போட்டு கைல லட்சம் ரொக்கம்னா உங்க பொண்ணையும் சந்தோஷமா வச்சுக்குவான்..!’

இப்படி வேட்பு மனுவும் வாக்குறுதிகளும் பறக்கும்போதே உஷாராக வேண்டும். குடும்பப் புதையலை காட்டப்போவது போல் காரணம் சொல்லி மாப்பிள்ளையை தனியாக கொல்லைப்பக்கம் அழைத்து அங்கு கட்டப்பட்டிருக்கும் ஜல்லிக்கட்டு காளையைக் காட்ட வேண்டும். ‘எங்க குல வழக்கப்படி, நீங்க இந்த காளையை அடக்கி அதோடு உட்கார்ந்து ஒரு காப்பி சாப்பிடணும். ‘காபி வித் காளை’னு கல்யாணப் பத்திரிகையில் போட்டோ போடுவோம். காளையோடு மோதி ஜெயிச்சா உங்க நாட்டாமை கேட்ட சீர்வரிசை தருவோம்...’ என கெத்து காட்டலாம்.

ஜன்னல் வாசல்
பஸ்ஸில் ஜன்னல் சீட் பிடிக்க வெளியில் நிற்பவர்களிடையே நடக்கும் குடுமி பிடி சண்டை நம்மிடையே பிரசித்தி பெற்ற ஒரு வீர விளையாட்டு. இதனால் பஸ்ஸிலிருந்து இறங்க முடியாமல் மறுபடியும் புறப்பட்ட இடத்துக்கே பயணத்தை ரிபீட் செய்த பயணிகளின் சோக வரலாறுகளும் உண்டு. இதைத் தவிர்க்க காளையை அடக்குபவர்களுக்குத்தான் ஜன்னல் சீட்டுக்கு முன்னுரிமை என்ற ரூல் போட்டால் ஜன்னல் சீட் வெ(ற்)றி வீரர்கள், வீட்டில் கூட ஜன்னலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து காற்று வாங்க அஞ்சுவார்கள்!  

- எஸ்.ராமன்