கொடிவீரன்



பாசத்தில் பரிமளிக்கும் அண்ணன் - தங்கையின் கதையே ‘கொடிவீரன்’.தற்கொலை செய்துகொண்ட தாயின் இறுதிக் கணத்தில் பிறந்த குழந்தையை ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கிறார் சசிகுமார். தங்கையின் மனம் கோணாமல் பார்த்துக் கொள்வதிலும், அண்ணன் மேல் பிரியத்தைக் கொட்டுவதிலும் இரண்டு பேருக்கும் கடும்போட்டி. சாமியாடியான சசி மேல் ஊரே மரியாதை வைத்திருக்கிறது. அருள்வாக்கு கூறும்போது தங்கையின் வாழ்க்கையில் கல்யாணத்தின்போது சிக்கல் நேரும் என்கிறார். அதே தங்கைக்கு கல்யாணம் செய்து முடிக்க, ஊர் ரவுடி பசுபதி அவருக்கு ஏற்பட்ட பிரச்னைகளில் சசியின் மேல் ஏகத்துக்கும் கோபப்படுகிறார். தன் தங்கையின் வாழ்க்கையை சசி காப்பாற்றினாரா, தன் காதலையும் கை மீறிப் போகாமல் பாரத்துக் கொண்டாரா என்பதே பின்கதை சுருக்கம்.

வரிசையாய் கிராம சென்டிமென்ட்டில் குறிவைக்கும் டைரக்டர் முத்தையாவிற்கு இது அண்ணன் - தங்கை முறை. கிராமத்தில் மறக்கடிக்கப்பட்ட சடங்குகளையும், பழக்க வழக்கங்களையும் நகர்த்தியிருக்கிற விதம் அவரது பாணி. இதிலும் கூர்மையாகச் சொல்லிவிடுகிற சடங்கு முறைகள் பார்க்க புதுசு. வழக்கம்போல் இதுமாதிரியான கேரக்டர் சசிகுமாருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. உள்ளே இறங்கி பின்னி எடுக்கிறார். தங்கையின் பாசத்தில் அச்சுபிசகாமல் நிமிர்ந்து நிற்கிறார். ஒவ்வொரு தடவையும் பசுபதி அவரை நெருங்கி எச்சரிப்பதும், நூலிழையில் விலகுவதுமாக இறுதியான பெரும் மோதலுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்.

அதிரடி நாயகனாகவும், பாசத்தைக் கொட்டித் தீர்க்கும் அண்ணனாகவும்  நிறையவே வித்தியாசம் காட்டுகிறார். இறங்கி அடிக்கும் காட்சியில் திமிறும் உடற்கட்டு, ஆவேசம் எல்லாவற்றையும் நம்ப வைக்கிறது. எப்போதாவது நேரம் கிடைக்கும்போது மகிமாவை வெட்கப்பட்டுக் கொண்டே காதலிக்கவும் செய்கிறார். கொஞ்சம் குட்டி தேவதை என்றாலும் மகிமா நிஜமாகவே அழகு! கவர்ச்சி யென போய்விடாமல் இருக்கிற நேர்த்தியிலேயே மனம் அள்ளுகிறார். பாசமலர் தங்கைக்கு பச்சரிசி பற்களின் சிரிப்போடு சனுஷா கனகச்சிதம். பூர்ணா தன் அண்ணனுக்காக மொட்டை போடும் காட்சிகள் கலங்க வைத்து, கண்ணீர் சொரியச் செய்கிற இடங்கள்.

விறைப்பும் முறைப்புமாக போகிற கதையில் பாலசரவணன் எளிமையாக, சிரமம் இன்றி சிரிக்க வைக்கிறார். ஒன்றுக்கு நான்கு வில்லன்கள் என்றாலும், அனுபவம் சேர்ந்த பசுபதியே தேர்வாகிறார். பல இடங்களில் முத்தையா வசனத்தில் மிளிர்ந்தாலும், ஆளுக்கு ஆள் பன்ச் வசனம் பேசுவதை தவிர்த்திருக்கலாம். இயக்குநர் விக்ரம் சுகுமாரன் கிராமத்தின் முரட்டு வார்ப்பு. என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்களில் குளுமை சேர்த்து, பின்னணியில் தொடர்ந்து பதட்டம் தருகிறது. கிராமத்தின் அத்தனை அழகிலும், மீன்பிடி கிளைமேக்சையும் துடிப்பாக கண்களுக்குக் கடத்துகிறது எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு.

அரிவாள் எடுத்துரைக்கும் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம். ஒவ்வொரு அண்ணன் தங்கையின் பாசமும் நெகிழ்வுதான். அத்தனை பாசத்தையும் தொடர்ந்து அடுக்கிக் கொண்டே இருந்திருக்க வேண்டுமா? எந்த யூகத்திலும் மீறாத கதையம்சத்தில் நம்மை உட்கார வைக்கிறார்கள் சரி. அதுவே அளவுக்கு மீறினால்... கிராமத்து சென்டிமென்ட்டில் வெடிக்கிறான் ‘கொடிவீரன்’.

- குங்குமம் விமர்சனக்குழு