மீன லக்னம் கூட்டு கிரகங்கள் சேர்க்கை தரும் யோகங்கள்



வேத இதிகாசங்களில் ஆர்வமும், தீவிர ஈடுபாடும் இருக்கும் மீன லக்னக்காரர்கள் ஆர்வக் கோளாறால் சில விஷயங்களில் முந்திரிக் கொட்டையாக முந்துவார்கள். ஆனால், லக்னக்காரர்கள் விமர்சனங்களை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொள்வார்கள். எதிர்மறையான விஷயங்களைக் கூட வரட்டும் என்றிருப்பார்கள். எல்லா விஷயங்களுக்கும் ஒரு மாற்று வைத்திருப்பார்கள். குரு உங்களின் லக்னாதிபதியாக இருப்பதால், இந்த குருவே தனத்திற்கு அதிபதியாகவும் இருப்பதால் பணத்தின் பின்னால் ஏன் ஓட வேண்டும் என்று நினைப்பார்கள். எங்கேனும் நல்ல உள்ளங்கள் தென்பட்டால் வாரி அணைத்துக் கொள்வார்கள்.

உங்களுக்கு செவ்வாய், சந்திரன், குரு போன்றவர்கள்தான் யோகத்தை அருளுபவர்களாக இருக்கிறார்கள். உங்களின் சொந்த ஜாதகத்தில் இவர்கள் எப்படியிருந்தாலும் உங்களுக்கு உதவுவார்கள். முதலில் செவ்வாயைப் பார்ப்போம். தன, குடும்ப, வாக்கு ஸ்தானம் மற்றும் பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் இடத்திற்கு அதிபதி யாக இவரே விளங்குகிறார். உங்களின் பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியாக சந்திரன் வருகிறார். உங்களுக்கு குழந்தை பிறந்தவுடனேயே சட்டென்று வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.

இவர்கள் வளர்பிறைச் சந்திரனில் பிறந்திருந்தால் அமானுஷ்ய சக்தியும், தெய்வீகத் தன்மையும் அதிகமாக இருக்கும். பள்ளத்தை தேடி வெள்ளம் பாய்வதுபோல விஷயங்களைத்தேடி உங்கள் மனம் ஓடிக் கொண்டிருக்கும். தனுசு குருவைச் சேர்ந்தவர்கள் பொட்டில் அடித்தமாதிரி பேசுவார்கள். மீன குரு இதமாக, பதமாக, பக்கம் பார்த்துப் பேசுவார்கள். பிடித்துவிட்டால் தலைமீது வைத்துக் கொண்டாடுவார்கள். தாக்கியும் பேசுவார்கள், தூக்கியும் பேசுவார்கள். இப்படிபட்ட மீன லக்னத்தில் பிறந்த பெரும் பிரபலங்களின் ஜாதகத்தை கொஞ்சம் பார்ப்போம். ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் ஒன்றிணையும்போது ஏற்படும் ரசவாதத்தையும் அறிந்து கொள்ளலாம்.

முதலில் புரட்சியாளரான சேகுவாரா அவர்களின் ஜாதகத்தை எடுத்துக் கொள்வோம். லக்னத்திலிருந்து நான்கு வீடுகளிலும் கிரகங்கள் வரிசையாக அமர்ந்திருக்கின்றன. லக்னாதிபதி குருவோடு பூர்வ புண்ணியாதிபதியான சந்திரன் அமர்ந்திருப்பது தன் இனத்திற்காகவும், மக்களுக்காகவும் அவரை போராடச் செய்தது. மூன்றாம் இடமான தைரிய ஸ்தானத்தில் சுக்கிரனும் ராகுவும் அமர்ந்திருந்ததால் மிதமிஞ்சிய துணிவோடு சிங்கமே அஞ்சும் அளவிற்கு இருந்தார். 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார்.

நான்காமிடத்தில் சூரியனும் புதனும் ஒன்று சேர்ந்திருப்பது புதாத்திய யோகமாகும்.  பெரும் படையைக் கூட சர்வ சாதாரணமாக தலைமையேற்று நடத்திச் செல்லும் நிர்வாகத் திறனை அளித்தது. அதுபோல ஆறுக்குரிய சூரியன் நாலில் அமர்ந்ததாலேயே அரசாங்கத்தை எதிர்த்து தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்துரைக்க முடிந்தது. செவ்வாய் வீட்டில் குருவும், குரு வீட்டில் செவ்வாயும் அமர்ந்து பரிவர்த்தனை யோகமடைகிறார்கள்.  புரட்சிக்கும் போராட்டத்திற்கும் உரிய செவ்வாய் வீட்டில் குரு அமர்ந்ததாலேயே பெரும் புரட்சியாளராகவும் விஸ்வரூபமெடுத்தார்.

கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார். தன்னைக் கொல்ல வந்தவனைப் பார்த்தும் “ஒரு நிமிடம் பொறு. நான் எழுந்து நிற்கிறேன், பிறகு என்னைச் சுடு...” என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார். ஆயுட்காரகனான சனியும், ஆயுட்காரகன் நின்ற வீட்டதிபதியான செவ்வாயும் பாதகாதிபதியான புதனின் நட்சத்திரங்களான கேட்டையில் அமர்ந்ததாலேயே செவ்வாய் தசையின் இறுதிப்பகுதியான முப்பத்தொன்பதாவது வயதில் இறக்க நேரிட்டது. இரண்டாவதாக மகாகவி ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் ஜாதகத்தைப் பார்ப்போம். குருவும் சந்திரனும் பரிவர்த்தனை யோகம் பெற்று அதில் குருவானவர் கடகத்தில் உச்சம் பெற்றதாலேயே மிகப் பெரிய ராஜயோக ஜாதகமாக இது அமைந்தது.

இவ்வாறு குரு உச்சம் பெற்றதாலேயே மகாத்மா காந்தியே இவரை ‘குருதேவ்’ என்று பணிவோடு அழைத்தார். இந்த அமைப்பே உலகின் மிகப்பெரும் விருதான ‘நோபல் பரிசை’யும் பெற்றுத்தந்தது. கவியோன் என்று சொல்லக்கூடிய சுக்கிரன் வாக்கு ஸ்தானமாகிய இரண்டாமிடத்தில் படைப்புக் கிரகமாகிய புதனோடு அமர்ந்ததாலேயே கவிதை, கட்டுரை, காவியமெல்லாம் இயற்ற முடிந்தது. புதன் வீட்டில் செவ்வாயும், செவ்வாய் வீட்டில் புதனும், குரு வீட்டில் சந்திரனும், சந்திரன் வீட்டில் குருவென நான்கு கிரகங்களும் பரிவர்த்தனை பெற்றதால்தான் நாடே எழுந்து நிற்கும் தேசிய கீதத்தை இயற்றினார்.

சனி ஆறிலும், ராகு பத்திலும் இருப்பதாலேயே வண்ணங்கள் மூலம் தன் எண்ணங்களை வெளிப்படுத்தும் ஓவியராகவும் விளங்கினார். மூன்றாவதாக ஜெனரல். ஏ.எஸ்.வைத்தியா அவர்களின் ஜாதகத்தைப் பார்ப்போம். இவர் நாட்டின் 13வது தலைமை ராணுவ அதிகாரியாவார். 1984ம் ஆண்டு ஜூன் மாதம் ‘Blue star operation’ நடத்தினார். இந்தியாவிலிருந்து பஞ்சாப் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து காலிஸ்தான் நாடாக அறிவிக்கக்கோரி நடந்த தீவிரவாதப் போராட்டத்தை இவர் ஒடுக்கினார். லக்னத்திற்கு ஏழாமிடம் போருக்கான இடம். அந்த ஏழாம் வீட்டிற்குரிய புதன் பத்தாமிடத்தில் அமர்ந்ததால்தான் போரை வழிநடத்தும் திறமை இருந்தது.

ராணுவ கிரகமான செவ்வாய், தியாக கிரகமான குருவின் நட்சத்திரமான விசாகம் 4ம் பாதத்தில் அமர்ந்து, அவரோடு ஆயுட்காரகனான சனிபகவானும் சேர்ந்திருந்ததால்தான் உயிரையும் துச்சமாக நினைத்து தேச ஒற்றுமைக்காக பெரிய போருக்கு நிகரான ஒரு களத்தில் பங்கெடுக்க முடிந்தது. நான்காவதாக ஆங்கிலோ - பிரெஞ்ச் பில்லியனர் சர் ஜேம்ஸ் மைக்கேல் கோல்டுஸ்மித் அவர்கள், சனியின் ஆதிக்கமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார். அனைத்து கிரகங்களும் நான்கு வீடுகளுக்குள் அமர்ந்திருக்கின்றன. இதனாலேயே ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக வரமுடிந்தது.

லாப ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருப்பதாலேயே பெரும் தனவானாகவும் இருந்தார். மீன லக்னத்திற்கு பன்னிரெண்டாம் இடத்தில் சூரியன், புதன், ராகு மூவரும் மறைந்து விபரீத ராஜ யோகத்தை அருளியிருக்கிறார்கள். இந்த லக்னத்திற்கு புதன் பாதகாதிபதி. சுக்கிரன் அஷ்டமாதிபதி. சூரியன் ஆறாம் அதிபதி. இவர்கள் அனைவருமே நல்ல வேளையாக பன்னிரெண்டில் அமர்ந்திருக்கின்றனர். பூர்வ புண்ணியாதிபதியான சந்திரன் லக்னத்தில் அமர்ந்திருப்பதாலேயே எந்த தொழிலைச் செய்தாலும் தொடர்ந்து செய்ய முடிந்திருக்கிறது. லக்னாதிபதி குரு தன, பூர்வ புண்ணியாதிபதி செவ்வாயாகிய இரண்டு கிரகங்களும் ஆறில் மறையக் கூடாது. ஆனால், மறைந்து விட்டார்கள்.

அதேநேரத்தில் வக்கிரமானதால் தீமையான பலன்களைத் தராமல் விபரீத ராஜயோகத்தை அளித்திருக்கின்றன. ஏனெனில், இரு எதிர்மறை கிரகங்கள் கேதுவோடு இவ்வாறு சேர்ந்ததாலேயே நினைத்துப் பார்க்க முடியாத செல்வ வளத்தோடு திகழமுடிந்தது. இறுதிக் காலத்தில் பத்திரிகை வெளியீட்டாளராகவும் இருந்தார். கும்பத்தில் நான்கு கிரகங்கள் இருப்பதாலேயே அதாவது சனி வீட்டில் இருப்பதால் அச்சு இயந்திரத் துறையில் பெரும் வெற்றியைப் பெற முடிந்தது. குருவும் சூரியனும் சமசப்தமாக பார்ப்பதால் அரசியலிலும் கோலோச்சி நிற்க முடிந்தது. கூட்டுக் கிரகங்களைப்பற்றி ‘கர்க்க ஹோரை’ எனும் நூல் விரிவாகப் பேசுகின்றது.

இவற்றில் கூட்டுக் கிரகங்களின் பலம், பலவீனம் குறித்தெல்லாம் விவரமாக பதிவு செய்யப்பட்டுள்ளன ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் ஒன்று சேரும்போது கிரகங்களைப் பொறுத்தளவில் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ ஏதேனும் பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும். எப்போதுமே நேர்மறைப் பலன்களையே கொடுக்கும் என்று சொல்ல முடியாது. கிரக யுத்தங்களின் காரணமாக அவ்வப்போது எதிர்மறை பலன்களையும் அளித்தபடிதான் இருக்கும். இவ்வாறு எதிர்மறை பலன்கள் ஏற்படும்போது அச்சம் கொள்ளாது துணிவோடு பிரச்னைகளை சமாளிக்க நிச்சயம் ஆலயங்கள் நமக்கு உதவும்.

இந்த மீன லக்னத்திற்கு பட்டாபிஷேக கோலத்தோடு இறைவன் வீற்றிருக்கும் தலத்தை தரிசித்தால் மிகமிக விசேஷமான பலன்களைப் பெறலாம். அப்படிப்பட்ட ஒரு ஆலயமே கும்பகோணம் ராமஸ்வாமி கோயிலாகும். மூலஸ்தானத்தில் பட்டாபிராமனாக ராமச்சந்திர ஸ்வாமியும், சீதாப்பிராட்டியும் ஒரே சிம்மாசனத்தில் அமர்ந்திருந்து ராஜ்யபரிபாலன திருக்கோலத்தில், சாளக்கிராம திருமேனியாக சேவை சாதிக்கிறார். கம்பீரத்தோற்றம். இடதுகாலை மடக்கி மற்றொருகாலை பூமியில் தொங்கவிட்டிருக்கும் அழகு காணுதற்கரியது. சீதாப்பிராட்டியார் அருளமுதம் பெருக்கி ஸ்ரீராமனிடம் விநயமாக நம் குறைகளை எடுத்துக்கூறுகிறார்.

அருகேயே சத்ருக்னன் ராம அண்ணாவிற்கு வெண்சாமரம் வீசும் காட்சி வேறெங்கும் காணக்கிடைக்காத அற்புதம். லக்ஷ்மணாழ்வார் ஸ்ரீராமரின் கோதண்டத்தை கையில் ஏந்திக்கொண்டு, அஞ்சலி ஹஸ்தமாக கைகூப்பிக்கொண்டு நிற்கிறார். அவருக்குப் பக்கத்திலேயே பரதாழ்வார் வெண்குடை சமர்ப்பித்துக் கொண்டு நிற்கிறார். ராம சேவகனாக, ராம தாசனாக, அனைத்தையும் ராம சொரூபமாக பார்க்கும் ஆஞ்சநேயஸ்வாமி இத்தலத்தில் ஆச்சரியமான முறையில் சேவைசாதிக்கிறார். இக்கோயில் கும்பகோணம் நகரத்தின் மையத்திலேயே அமைந்துள்ளது.

(முற்றும்) 
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ஓவியம்: மணியம் செல்வன்