காட்ஃபாதர்



போதை உலகின் பேரரசன் - 36

- யுவகிருஷ்ணா

கொலம்பியா மக்களைப் பொறுத்தவரை போதைத்தொழிலை ஒரு பாவச்செயலாகப் பார்க்கவில்லை எனவேதான் அது தொடர்பான குற்றச்சாட்டுகள் வந்தபோதெல்லாம் பாப்லோ எஸ்கோபார் அவ்வளவாகக் கண்டுகொண்டதில்லை. ஏனெனில் சுமார் இரண்டு லட்சம் கொலம்பியர்களுக்கு அப்போது வேலைவாய்ப்பு இந்த தொழிலில்தான் கொட்டிக் கிடந்தது. மேலும், கொலம்பியாவில் தயாராகும் போதை மருந்து கொலம்பியர்களுக்கு விற்கப்படு வதில்லை. அவை அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளுக்குத்தான் ஏற்றுமதியானது. நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன, நம் மீது விழுந்து பிடுங்காதவரை சரியென்று இந்தத் தொழிலை அரசாங்கம் கண்டும் காணாமலும்தான் இருந்தது.

அரசாங்கத்தில் இருந்தவர்களுக்கும் கணிசமாகக் கட்டிங் வேறு கிடைத்துக் கொண்டிருந்தது இல்லையா? ஆனால், பாப்லோ அரசியலுக்கு வந்ததுமே இந்த விஷயத்தை பூதாகரமான பிரச்னையாக மாற்றினார்கள். குறிப்பாக சட்ட அமைச்சர் லாரா. பாப்லோவை மட்டுமின்றி ஒட்டுமொத்த போதை கார்டெல்களையும் வேரோடு பிடுங்கி எறியவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். போதைத்தொழிலுக்கு ஆதரவாக இருந்துதான் ஓர் அரசாங்கம் நடைபெற வேண்டும் என்கிற நிலைமையை கடுமையாக வெறுத்தார். உலக அரங்கில் இதனால் கொலம்பியாவின் மானம் கப்பலேறுவது அவருக்கு தர்மசங்கடமாக இருந்தது.

கொலம்பிய அரசியலில் ஆதிக்கம் செலுத்திய முப்பது பேருக்கு போதைத் தொழிலோடு தொடர்பு இருப்பது குறித்த விவரங்களை மக்கள் முன்பாக அம்பலப்படுத்தினார். தொடர்ச்சியாக போதைத்தொழில் தொடர்பான எதிர்மறையான எண்ணங்களை மக்களிடம் ஏற்படுத்தி வந்தார். சட்டபூர்வமான முறையில் கார்டெல்களுக்கு எப்படியெல்லாம் முட்டுக்கட்டை போட முடியுமோ அத்தனையையும் கச்சிதமாகச் செய்தார். மெதிலின் நகர் கார்டெல்களுக்கு சுமார் 300 சிறுவிமானங்கள் இருந்து வந்தன. பெரும்பாலானவை பாப்லோவுக்கு சொந்தமானவை. இவை மூலமாகத்தான் சரக்குகளை மற்ற நாடுகளுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த விமானங்களுக்கு கொடுக்கப்பட்ட லைசென்ஸ் அதிரடியாக திரும்பப்பெறப்பட்டது. லைசென்ஸ் கொடுத்த அரசு அதிகாரிகள் பலரும் சிறையில் தள்ளப்பட்டார்கள். கொலம்பியாவின் முக்கியமான விளையாட்டு கால்பந்து. மொத்தம் ஒன்பது அணிகள் அப்போது கோலோச்சிக் கொண்டிருந்தன. இதில் ஆறு அணிகள், போதை கார்டெல்களின் ஆதரவில் இயங்கிக் கொண்டிருந்ததை வெட்ட வெளிச்சமாக்கினார். போதைத்தொழில் என்பது வாழ்வுரிமை என்கிற கொலம்பியர்களின் இயல்பான எண்ணத்தை மாற்றுவதில் லாரா பெருமளவு வெற்றி பெற்றார் என்றே சொல்ல வேண்டும்.

 ‘உலகின் ஏதோ ஒரு மூலையில் வாழும் எவனோ ஒரு இளைஞனின் உயிரைக் குடித்து நாம் உயிர் வாழ வேண்டுமா?’ என்று உணர்ச்சி பூர்வமாக அவர் கேட்ட கேள்வி, சராசரி கொலம்பியன் ஒவ்வொருவனுக்கும் குற்ற உணர்வை ஏற்படுத்தியது. மெதிலின் நகர மக்களின் பெருவாரியான ஆதரவோடு தொழில் செய்துகொண்டிருந்த பாப்லோ எஸ்கோபார் சற்றும் எதிர்பாராத  ட்விஸ்ட் இது. அவர் அரசியலுக்கு வந்ததின் விளைவாகவே தங்கள் மீதெல்லாம் அரசு கோபம் கொண்டு நடவடிக்கை எடுக்கிறது என்று சக கார்டெல்காரர்களும் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டார்கள். யாருமே அசைக்க முடியாத போதை சாம்ராஜ்யத்தின் தலைமைப் பதவியில் வீற்றிருந்த பாப்லோவின் அஸ்திவாரத்தையே லாரா அசைத்துப் பார்த்தார்.

போதைத் தொழிலுக்கு எதிரான விழிப்புணர்வை அழுத்தமாக ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அத்தொழிலை முடக்குவதற்கான நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டார். எங்கெல்லாம் கோகெயின் பயிரிடப்படுகிறதோ, எங்கெல்லாம் கோகெயின் பவுடர் தொழிற்சாலைகள் இயங்குகின்றனவோ அங்கெல்லாம் ரெய்டு நடந்தது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல ஒரு பிரும்மாண்டமான ரெய்டு டிரான்குயிலேண்டியா என்கிற மிகப்பெரிய காட்டுக்குள் அமைந்திருந்த தொழில்ற்சாலைகளில் நடந்தது. மெதிலின் நகர் போதை கார்டெல்கள் அனைத்துக்குமே இங்கு தொழிற்சாலைகள் இருந்தன. காட்டுக்கு மத்தியில் அமைந்த பரந்து விரிந்த பெரிய தொழிற்சாலைகள்.

சுமார் 200 பேர் அந்த காட்டுக்குள்ளேயே குடும்பம் சகிதமாக வசித்து இரவும், பகலுமாக போதை மருந்து தயாரித்து வந்தார்கள். அந்த இடத்தை வான் மார்க்கமாக மட்டுமே அணுக முடியும். ஏனெனில் தொழிற்சாலைகள் இருந்த பகுதிக்கு அருகாமை சாலையே 250 மைல் தொலைவில் இருந்தது. டிரான்குயிலேண்டியா, கொலம்பியாவில் இருந்தாலும் பெரு, பொலிவியா நாடுகளுக்கும் சரக்கு அனுப்ப வாகான புவியியல்தன்மை கொண்டது. மாதத்துக்கு சுமார் 20 டன் அளவில் கோகெயின் இங்கே தயாரானது. அது 1984ம் ஆண்டு, மார்ச் மாதம். வானத்தில் திடீரென ஹெலிகாப்டர் சப்தம்.

வழக்கமாக அங்கே சிறு விமானங்கள்தான் வருவதுண்டு. மிக அரிதாக பாப்லோ போன்ற டான்கள்தான் ஹெலிகாப்டரில் வருவார்கள். அடுத்தடுத்து இரண்டு ஹெலிகாப்டர்கள் வானத்தில் வட்டமிடுவதைக் கண்டதுமே தொழிற்சாலைகளுக்கு பாதுகாப்பாக ஆயுதம் தாங்கி நின்றிருந்த காவலர்கள் பதட்டமடைந்தார்கள். அவை ராணுவ விமானங்கள் என்று அறிந்ததுமே வான்நோக்கி சுட ஆரம்பித்தார்கள். இவர்களது சுடும் எல்லைக்கு அப்பால் போன ஹெலிகாப்டர்களில் இருந்து கமாண்டோ வீரர்கள் பாராசூட் அணிந்து குதிக்க ஆரம்பித்தார்கள். மெஷின்கன் ஏந்திய அந்த வீரர்களுக்கு ஈவு, இரக்கம் சற்றுமில்லை. செடி கொடிகளில் சிறு அசைவு தென்பட்டாலும் சுட்டுக்கொண்டே முன்னேறினார்கள். தொழிற்சாலைகளை முற்றுகையிட்டு இலக்கின்றி சுட ஆரம்பித்தார்கள்.

ஈத்தர் என்கிற ரசாயனம்தான் கோகெயினை பவுடராக மாற்றுவதற்கு அடிப்படையான சமாசாரம். அப்போது ஈத்தருக்கு செம டிமாண்டு. ஆனால், போதைத் தொழிற்சாலைகளில் எப்படியோ ஈத்தரை இறக்குமதி செய்து ஸ்டாக் செய்து வைப்பார்கள். அந்த காட்டில் 12,000 டிரம்களில் நிரப்பப்பட்டிருந்த ஈத்தரை அப்படியே எரித்தனர் கமாண்டோக்கள். சுமார் பதினைந்து டன் கோகெயினும் எரிக்கப்பட்டது. கமாண்டோக்களால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள், படுகாயமடைந்தவர்கள் ஏராளம். அத்தனை பேரையும் அப்படியே விட்டுவிட்டு தங்கள் ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வந்த வழியே திரும்பினர். மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த இடம் எப்படி அரசாங்கத்துக்குத் தெரிந்தது என்பதுதான் கார்டெல் உரிமையாளர்களின் கவலையாக இருந்தது.

தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருக்கும் வாசகர்களுக்குத் தெரியும். இருபத்து மூன்றாவது அத்தியாயத்தின் இறுதியில் ஒரு ‘போக்கிரி’யை நாம் அறிமுகப்படுத்தியிருந்தோம் இல்லையா? அமெரிக்காவில் மெதிலின் கார்டெல்களின் போதைத் தயாரிப்புகளுக்கு ஏஜென்ஸி எடுத்து நடத்திக் கொண்டிருந்தாரே ராபர்ட் முஸெல்லா. அதற்குள் மறந்திருக்க மாட்டீர்கள். அவரேதான். அமெரிக்காவின் சிஐஏ, போதை மாஃபியாக்களைப் போட்டுத்தள்ள ஒப்புக்குச் சப்பாணியாக உருவாக்கிய போதை டான் அவர். ஒட்டுமொத்தமாக அனைத்தையும் இழந்த நிலையில்தான் முஸெல்லாவின் உண்மை சொரூபத்தை கொலம்பிய கார்டெல்கள் உணர்ந்தன.

அதற்குள் எல்லாமே கைமீறிப் போய்விட்டது. அரசியலுக்கு வந்துவிட்டதால் அடக்கி வாசித்துக் கொண்டிருந்த பாப்லோவின் சீற்றம், இந்த டிரான்குயிலேண்டியா ஆபரேஷன் காரணமாக எரிமலையாக வெடித்தது. எரிமலை மேலும் குமுறும் வகையில் மற்ற கார்டெல்காரர்கள் பாப்லோவை நெருக்க ஆரம்பித்தார்கள். “பாப்லோ, நீயாக இந்தப் பிரச்னைகளுக்கு முடிவு கட்டுகிறாயா அல்லது நாங்கள் பார்த்துக் கொள்ளட்டுமா?” கோபத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எப்போதுமே பாதகத்தில்தான் முடியும். பாப்லோவுக்கும் இது தெரியும். இருந்தும் அந்த முடிவை எடுத்துவிட்டார்.

(மிரட்டுவோம்)

ஓவியம்: அரஸ்